ரமணஜோதி 114
யார் பயன் பெற்றுள்ளார்?
லாப நீ யிகபர லாபமி லெனையுற்று
லாபமென் நுற்றனை யருணாசலா
எல்லோருடைய பரமமான இலட்சியமும் பரமனை அடைவதுதான். .வைஷ்ணவமாகட்டும்
சைவமாகட்டும் எல்லா மதங்களின் நோக்கமும் ஒன்றே .இந்த இகலோக பிராரப்தங்களிலிருந்து
விடுதலை வேண்டும்;.பரமனிடம் லயித்து நித்தியமான ஆத்ம சாந்தி பெற வேண்டும் என்பதே
ஜீவாத்மாக்களின் ஒரே இலட்சியம். வழிகள் தான் மாறுபடுகின்றன. உன்னையடைந்து விட்டால்
பரமானந்தம் கிடைத்து விடும் அதற்கு மேல் பெறுவதற்கொன்றுமில்லை. ஆகவே நீ தான் அறுதியான
உறுதியான லாபம். அவ்வாறிருக்க நீ உன் பரம காருண்யத்தை என் மீது செலுத்தி என்னை உன்
வசப்படுத்தி என்ன பயன் பெறுவாய்? என்கிறார் பகவான் ரமணர்.
சுயம்பிரகாசமான பரமனுக்கு மேற்பட்டதொன்றுமில்லை.இந்தக் கருத்தை பகவான்
கிருஷ்ணர் கீதையில் இங்கனம் கூறுவார்:
ந மே பார்த்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷுலோகேஷு கிஞ்சன !
நானவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச
கர்மாணி !!
‘பார்த்தா, மூவுலகிலும் எனக்கு செய்ய வேண்டிய கர்மங்கள் ஒன்றுமில்லை;அடையாத
ஒன்று இனிமேல் அடைவதற்குமில்லை; இருந்தும் கர்மம் ஆற்றிக் கொண்டேயிருக்க்றேன்”
பரமனின் ஒரே கடமை எல்லோரிடமும் கருணை காண்பிபதும், எல்லோரிடமும் நீக்கமற
நிறந்திருப்பதும் தான். பரமனிடம் லயித்து ஆத்மசாக்ஷாத்காரம் பெறும் வரை எல்லா
ஆத்மாக்களும் குறையுள்ளவையே. யாரும் எல்லா பேறும் பெற்று விட்டோம் என்று மன
நிறைவும் அடைய முடிபவதுமில்லை.
அப்படிப்பட்ட குறைகள் நிறைந்த என்னை அடைந்து அடைவதற்கு ஒன்றுமேயில்லாத நீ என்ன
பலன் காணப்போகிறாய் ,அருணாசலா? இதுவல்லவோ “ஓங்காரப்பொருளாகிய, ஒப்புயர்வில்லா “உன்
கருணை?என்று பகவான் வியக்கிறர்.
இதையே மாணிக்கவாசகரும் கூறினார்,” நீ
எனக்கு அளித்திருப்பது சர்வ வல்லமை பொருந்திய உன்னை; பெற்றுக்கொண்டிருப்பதோ இந்த அஞ்ஞானியான
என்னை? இருவரில் யார் பயன் பெற்றுள்ளார் என்பதையும் நீயே அறிவாய். முடிவில்லா
ஆனந்தானுபூதியை பெற்றுள்ள நானல்லவோ பாக்கியம் செய்தவன்?”
No comments:
Post a Comment