ரமணஜோதி 1
ஜோதி உதயம்
உலகில் நடப்பவையெல்லாம் ஒரு சக்கரத்தின் சுழற்சிதான்.
இந்த உண்மை மறக்கப்படும்போது அல்லது மறைக்கப் படும்போது நினைவூட்டும் முகத்தாய் புதிய புதிய குருமார்கள் தோன்றுகிறார்கள்.
கௌடபாதர்,ஆதிசங்கரர்,ராமானுஜர்,பகவான் ரமணர்,ராமகிருஷ்ண பரமஹம்சர்.முதலியோர் அப்படித் தோன்றியவர்கள் தான்.எந்த ஒரு குருவும் புதிதாக ஒரு தத்துவத்தை கண்டு பிடிப்பதில்லை.புதிதாக ஒரு கடவுளையும் சிருஷ்டிப்பதும் இல்லை.இந்த நிதர்சன தத்துவத்திற்கு மாறாக நான் தான் கடவுள் என்று யாராவது கூறியிருந்தால் அவர்களை நம்புவது சிறிது கவலைக்குரிய விஷயம். சில நேரங்களில் பக்தகோடிகள் தங்களது அதிகப்படியான குரு பக்தியின் காரணமாக- ஆர்வமிகுதியால் குருவை கடவுளாக்குவதும் உண்டு.அதுவும் அடிப்படையான சத்யத்திற்கு புறம்பானது தான்.
கௌடபாதர் மாண்டுக்ய உபனிஷதின் வாயிலாக அத்வைத சித்தாந்திற்கு அடித்தளம் அமைத்தார்.
ஆதி சங்கரர் அத்வைத சித்தாந்திற்கு விரிவான பாஷ்யங்கள் இயற்றினார்.
பகவான் ரமணர் இவர்களிலிருந்து மாறுபட்டு தனது முப்பது வருடத்திற்க்கும் மேலான மௌனத்தின் மூலமும் அதற்குப் பின் பேசிய சிறிய சிறிய விளக்கங்களின் மூலமும் இந்த உலகிற்கு வழிகாட்டினார்.
அவரின் முக்கியமான வழிகாட்டுதல்
' நான் யார்’ என்ற விசார மார்க்கம் தான்.
அவர் தனது இகலோக வாழ்வில் ஒரே ஒரு முறை தான் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்றுள்ளார்.
ஏனென்றால் பகவான் தன்னிலிருந்து வேறுபட்ட ஒன்று இருக்கிறது என்று நினைக்கவில்லை.
.
உதயம்
.
ஜோதிப் பிழம்பாகிய ஈஸ்வரன் உலகத்தையெல்லாம் தன் அருட்சக்தியால் இயக்கி ஐந்தொழிலும் செய்து ஆட்டுவதைத் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தால் காட்டும் அற்புத நாளான ஆருத்ரா தரிசன திருநாளில் ரமண ஜோதியெனும் பெருமான் திருச்சுழி என்னும் தலத்தில் சுந்தரம் ஐயர் என்ற பெரியவருக்கும் அழகம்மை என்ற அன்னையருக்கும் இரண்டாம் குமாரராக 1879-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி இரவு1 மணிக்கு உதித்தார்.வெங்கடராமன் என்ற பெயரால் சிறு வயதில் அழைக்கப்பட்ட அவர் தனது பதினாறாவது வயதில் அந்த பரப்பிரம்மத்தின் கருணையால் ஈர்க்கப்பட்டு அருணாசலமெனும் திரு அண்ணாமலையில் குடியேறினார்..முப்பது வருட மௌனத் தவத்திர்க்குப் பின் அவர் உலகிற்க்கே வழி காட்டும் ஜோதியாக ஆனார்.ரமண மஹிரிஷி என்ற பெயரில் உலகுக்கே வெளிச்சமானார்.
கார்த்திகை. மாதம் கார்த்திகை திருநாளில் ஜோதிமலையாகிய அருணாசலதின் முடியிலே ஜோதியை ஏற்றுகிறார்கள்.
உயிருள்ள ஜோதியாகத் திகழ்ந்த ரமண பகவான் அந்த மலையின் அடிவாரத்தில் ஜோதியாக இருந்தார்.
No comments:
Post a Comment