Wednesday, 22 April 2015

அஷ்டாவக்கிர மணிகள்


2015



ஹரிஹர சர்மா



[அஷ்டவக்கிர மணிகள்]





மணி 1
ஓசை 3

நரைத்த தலை முடி முதிர்ச்சியின் அடையாளமன்று


 

 நரைத்த தலை முடி முதிர்ச்சியின்  அடையாளமன்று. வாழ்ந்த வருடங்களோ நரைத்த முடியோ ,ஒருவரிடமுள்ள தனமோ, உயர் பதவியிலுள்ள சொந்த பந்தங்களோ,ஒருவரை பெரிய மனிதனாக்குவதில்லை. யார் அறிவில்/ ஞானத்தில் சிறந்து விளங்குகிறானோ அவனே பெரியவன்
.அஷ்டாவக்கிரர்

ககோடகனுக்கும் ஸுஜாதாவிற்கும் பிறந்த குழ்ந்தை   நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது.
குழந்தை பிறந்ததால் குடும்பத்தை பரமரிப்பதற்கு கூடுதலாக தனம் தேவைப் பட்டது.
அரசர் ஜனகர் வேதங்களிலும் வேதாந்தங்களிலும் மிகவும் ஈடுபாடுள்ளவர். அவரது வித்வத் சபையில் நிறைய வேத விற்பன்னர்களும் பண்டிதர்களும் ஆதரிக்கப்பட்டு வந்தார்கள்.
ககோடகன் அரசரிடம் சென்று தன் அறிவுத் திறைமையால் தனம் சம்பாதித்து வரலாம் என்று தீருமானித்தாண்.சுஜாதாவும் சரியென்றாள்..
நடந்ததோ வேறுமாதிரி. ஜனகருடைய வித்வத் சபையில் வந்தி என்ற ஒரு பேரறிஞர் இருந்தார்.அவரை வாதத்தில் தோற்கடித்தால்த் தான் மன்னரிடம் பரிசு பெறமுடியும். தோற்றுப் போனாலோ வந்தி தோற்றவரை தண்ணீரில் மூழ்கடித்து கொன்று விடுவார்.
ககோடகன் போனவன் போனது தான். திரும்பி வரவேயில்லை.

அஷ்டாவக்கிரன் உத்தாலக முனிவரின் மகன் ஸ்வேதகேதுவுடன் வளர்ந்து வந்தான். உத்தாலகரும் அஷ்டாவக்கிடரனை தன் சொந்த மகனைப் போலவே வளர்த்து வந்தார். அஷ்டாவக்கிரன் உத்தாலகர் தான் தன் தந்தை என்று நம்பி விட்டான். அவனிடம் யாரும் உண்மையை விளக்கி கூறவுமில்லை
அவனுக்கு பன்னீரண்டு வயதுள்ள பொழுது ஒரு நாள் அஷ்டாவக்கிரன் உத்தாலகரின் மடியில் அமர்ந்திருந்தான். அப்பொழுது அங்கு வந்த ஸ்வேதகேது அஷ்டாவக்கிரனை தன் தந்தையின் மடியிலிருந்து தள்ளிவிட்டு விட்டு, இது உன் தந்தையல்ல’ என்று கூறிவிட்டான்.
அதன் பின்  தன் தாயிடமிருந்து உண்மையைத் தெரிந்துகொண்ட அஷ்டாவக்கிரன் ஜனகரின் அரசவைக்குச் சென்று வந்தியை தோற்கடித்து பழிக்கு பழி வாங்குவேன் என்று கிளம்பி சென்று விட்டான்.
அரசனை காண்பதற்காக மிதிலாபுரி வந்து சேர்ந்த அஷ்டாவக்கிரன் நகர வீதிகள் அலங்கரிக்கப் பட்டு ஜனங்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருப்பதை கண்டான். யாரும் வீதியில் நடமாடவில்லை.அஷ்டாவக்கிரன் வீதியிலிறங்கி நடக்க ஆரம்பித்தான். அரச சேவகர்கள் தடுத்தார்கள்; மன்னர் போன் பிறகு தான் போக முடியும் என்று சொன்னார்கள். அரசனும் பரிவாரங்களும் நெருங்கி விட்டார்கள்; ஒதுங்கி   நிற்குமாறு செவகர்கள் அஷ்டாவக்கிரனை வற்புறுத்தினார்கள்.
அஷ்டாவக்கிரன் உரத்த குரலில் பதிலிறுத்தான்,” வேதம் படித்தவர்களும் அந்தணர்களும் அரசனின் முன்னால் போக அனுமதியுண்டு.அதுதான் நமது கலாச்சாரம்;பண்பாடு “ என்று கூறினான்.சேவகர்கள் குழம்பிப் போனார்கள்.இதைக் கேட்டுவிட்ட ஜனகனோ,” அந்த சிறுவன் சொல்வது சரிதான் ;அவனைப் போகவிடுங்கள்.” என்று உத்தரவிட்டான்.
இது அஷ்டாவக்கிரனுக்கு கிடைத்த முதல் வெற்றி.

அவன் அரசவையை வந்தடைந்தான்.
அரசவையில் அவனுக்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. அரண்மனையின் வாயிற்காப்போன் அவனை உள்ளே விட மறுத்து விட்டான். அது மட்டுமல்ல உள்ளே சென்றவர்களின் கதி என்னவாயிற்று என்று விளக்கிக் கூறினான். மேலும்,அரசவை சிறுவர்களுக்கானதல்ல; அறிவாளிகளுக்கும் முதிர்ந்தவர்களுக்கும் தான்,  என்றான்.
அப்பொழுது அஷ்டாவக்கிரன் சொன்னான், “யார் முதிர்ந்தவர்கள்? தலை முடி நரைத்தவர்களெல்லாம் முதிர்ந்தவர்களில்லை. நரைத்த தலை முடி முதிர்ச்சியின் அடையாளமன்று. வாழ்ந்த வருடங்களோ நரைத்த முடியோ ,ஒருவரிடமுள்ள தனமோ, உயர் பதவியிலுள்ள சொந்த பந்தங்களோ,ஒருவரை பெரிய மனிதனாக்குவதில்லை. யார் அறிவில்/ ஞானத்தில் சிறந்து விளங்குகிறானோ அவனே பெரியவன்.ஆகவே என்னை உள்ளே விடு. இல்லையென்றால்  நான் இவ்வாறு கூறினேன் என்று உங்கள் மன்னரிடம் போய் சொல்லுங்கள்.”
அரண்மனைக் காவலர்கள் வேறு வழியில்லாமல் அரசனிடம் சென்று அஷ்டாவக்கிரன் கூறியதை தெரிவித்தார்கள்.
மன்னர் ஜனகன் “ வரச் சொல்.” என்று அனுமதி வழங்கினான்.
இவ்வாறு அஷ்டவக்கிரன் தனது அறிவுத் திறைமையினாலும் பிடிவாதத்தினாலும்  அரசவைக்கு வந்து சேர்ந்தான்.
இது அவனது இரண்டாவது வெற்றி.

அஷ்டாவக்கிரன் அரசவையில் பிரவேசித்த பொழுது அங்கு அமர்ந்திருந்த பண்டிதர்கள் உச்சஸ்தாயியில் சிரித்தார்கள்.மன்னன் கூட சிறு புன்னகை புரிந்தான். அஷ்டாவக்கிரன் அவர்களை விட உரக்கச் சிரித்தான்.
மன்னனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.அஷ்டாவக்கிரனைப் பார்த்து கேட்டான்:” பாலகா, என்னால் சபையோர் சிரித்ததை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீ என் சிரித்தாய்?”
அஷ்டாவக்கிரன் நேராக மன்னரைப் பார்த்துக் கேட்டான்:” மன்னா, உன்னை நான் வணங்குகின்றேன்.உன் மீது மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன்.ஆனால் இங்கு வந்த் பிறகு அது தவறோ என்று தோன்றுகிறது.”
மன்னனுக்கு சற்றே கோபம் வரத் துவங்கியது.
சற்றே உரத்த குரலில் கேட்டான்:” இப்பொழுது அந்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் ஏனோ பங்கம் விளைந்தது.? சொல் பாலகா.”
“ மன்னர் மன்னா, சொல்கிறேன். ஆனால் அதற்கு முன் சபையோர்  நான் இங்கு வந்ததும் ஏன் சிரித்தார்கள் என்று கூற முடியுமா?”
மன்னர் சொன்னார்,” உன் உருவத்தைப் பார்த்து சிரித்ததாக எண்ணுகிறேன்.அவர்கள்  செய்தது தவறு தான்.”
“ மன்னர்மன்னா, அவர்களை விட நீ பெரிய தவறு செய்துள்ளாய்; இவர்களை போன்ற தோல் வியாபாரிகளை வைத்துக் கொண்டு வித்துவத் சதஸ் நடத்துகிறாயே, உன்னை நினைத்து தான்   நான் சிரித்தேன்.”
மன்னர் ஜனகர் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார்.
“ தோல் வியாபாரிகளா? எனது சபையிலுள்ள வித்துவான்களும் பண்டிதர்களும் மிகவும் மரியாதைக்குரியவர்கள். அவர்களை கேவலமாக பேசினால் மன்னிக்க மாட்டேன்.சிறுவா, நீ கூறியதற்கு சரியான வீளக்கம் அளிக்காவிட்டால்,கடும் தண்டனைக்குரியவனாவாய்.”
“ மன்னர் என்னை மன்னிக்க வேண்டும். ஒருவனது வெளித்தோற்றத்தை வைத்து அவனை மதிப்பிடுவர்களை தோல் வியாபாரி என்று கூறாமல் எப்படி கூற முடியும்? தோல் வியாபாரிகள் தான் ஒரு மிருகத்தைப் பார்த்தால் இதன் தோல் எதற்கு பயன் படும் என்று எடை போடுவார்கள்.
நிஜமான மதிப்பு வெளித்தோற்றத்தில் இல்லை; உள்ளே இருக்கின்ற சைதன்யத்திலுள்ளது என்று தெரியாத இவர்களை பண்டிதர்கள் என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?
நூறு குடத்தில் நீர் நிரப்பிவிட்டு அவைகளில் தெரியும் ஆகாயம் எல்லாம் ஒன்றே என்பதை அறியாத இவர்களை வித்துவாங்கள் என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? உன் சிம்மாதனத்தின் மேல் பகுதி ஆறு வளைவுகளை கொண்டதாக இருக்கிறது.அதன் மேலேயுள்ள ஆகாயமும் வளைவுள்ளதாக ஆகிவிடுமா?இப்படிப்பட்ட அறிவாளிகளை சபையில் வைத்துக் கொண்டிருக்கிறாயே என்றூ கண்டபோது எனக்கு சிரிப்பு வந்தது; சிரித்தேன்”.

ஜனகன் மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானான்.இந்த சிறுவயதிலேயே இவ்வளவு அறிவா? என்று வியந்தான்.இவன் சாதாரண சிறுவனல்ல என்று புரிந்து கொண்டு போட்டியில் பங்கு கொள்ள அஷ்டாவக்கிரனை அனுமதித்தான்.

No comments:

Post a Comment