Tuesday, 5 May 2015

ரமணஜோதி 105

ரமணஜோதி 105

அருள் மை--1


                   மைமய னீத்தருண் மையினா லுனதுண்
                   மைவச மாக்கினை யருணாசலா
“மிகவும் கடுமையான மயக்கத்திலாழ்ந்திருக்கும் என்னை உனது அருள் எனும் மாயா மையினால் உணர்த்தி உண்மையின் வசம் ஒப்படைத்து விட்டாயருணாசலா,” எங்கிறார் பகவான் இந்த சுலோகத்தில்.
இந்த சுலோகத்தின் மூலம் பகவன் நமக்கு மூன்று விஷயங்களை ஞாபகப் ப்டுத்துகிறார்.
·         நாம் கடுமையான மயக்கத்திலிருக்கிறோம்
·         அந்த மயக்கம் நீங்க வேண்டுமென்றால் அருணாசலனின் அருள் வேண்டும்
·         மயக்கம் நீங்கும்பொழுது நாம் அறியும் உண்மை நிலையில் நிரந்தரமாக நிற்க வேண்டும்
முதலில்  மாயா மயக்கம் என்பதை சிறிது உள்ளே நுழைந்து பார்ப்போம்.
·         மயக்கம் என்றால் என்ன?
·         யாருக்கு மயக்கம்?
·         மயக்கம் ஏன் உண்டாகிறது?
·         மயக்கம் உண்டானால் அதன் விளைவுகள் என்ன,என்ன?
·         மயக்கத்திலிருந்து ஏன் விடு பட வேண்டும்?
·         எப்படி விடுபடுவோம்?
உலகிலுள்ள புராதனமான தத்துவ சாஸ்திரங்களில் முதன்மையாவை உபனிஷ்த்துக்கள் தான் என்று வரலாற்று வல்லுனர்கள் ஒருமனதாக ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.
உபனிஷத்துக்கள் எல்லாம் ஒரே சத் விஷயத்தை தான் விளக்குகின்றன.
கருத்து வேற்றுமைகளெல்லாம் பிற்காலங்களில் தோன்றியசாரியர்களுக்குள் ஏற்பட்டது தான்.
பல கருத்துக்கள் பிற்காலத்தில் கூறப்பட்டதென்றாலும் அவைகளை கூறியவர்களும் மிகவும் சிறந்த ஞானிகளாகவிருந்தாலும், ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை.
ஸ்த்யம் அல்லது உண்மைக்கு ஒரு உருவம் தான் இருக்க முடியும்.
இந்த ஒரே ஒரு உண்மையை எப்படிக்கண்டு பிடிப்பது?
பலர் அவர்கள் காணுகின்ற பௌதிக பிரபஞ்சத்தை உண்மை என்று விளம்புகிறார்கள். மற்று சிலர் உண்மையைத் தேடி போகின்ற பொழுது அனுபவப்படுகின்ற சில காட்சிகளைக் கண்டு மனம் பேதலித்து அவை தான் சத்யம் என்று நம்புகிறார்கள்; விளம்புகிறார்கள்.
இனிமேல் போவதற்கு வழியொன்றுமில்லை; தெரிந்து கொள்வதற்கொன்று மில்லை என்ற நிலை வரும் வரை தேடலை தொடர வேண்டியது அவசியம்.
உபனிஷத் காலத்திற்கு பின் வந்த ஆசாரியர்கள் எல்லோரும் இந்த கருத்து வேறுபாடுகளை சமன்வயப் படுத்த முயன்றிருக்கிறார்கள்.
எல்லாவற்றிலும் ஒரே சத் விஷயம் தான் பிராகாசிக்கின்றது என்று எல்லா உபனிஷத்துக்களும் தத்துவார்த்த அடிப்படையிலும்,யுக்திவாதத்திற்கு ஏற்றாற்போலும் விளக்கியிருந்தாலும் கூட இந்தசத்தை புரிந்துகொள்வதற்கு சிரவண்மும் மனனமும் மட்டும் போதாது; அதை சுயமாக அனுபவிந்து உணர்ந்தால்த் முடியும்.
‘எல்லாம் ஒன்றே’ என்ற அடிப்படை உண்மையை மற்னது ஜடப்பொருள்களை ஆதாரமாகக் கொண்டு உளவாகும் புத்தி பேதலிப்புக்களுக்கு ஆட்பட்டு மனிதர்கள் சம்சாரமெனும் கடலில் மேலும் மேலும் மூழ்கி துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறார்கள்; சாந்தியை இழக்கிறார்கள்.
இந்த சங்கடத்திலிருந்து நம்மை விடுவிக்க பரமேசுவரன் அனுப்பி வைத்தவர்கள் தான் ஆசாரிய சிரேஷ்டர்கள்.இந்த குருக்கள் யாரும் உபனிஷத்துக்கள் கூறியுள்ள பரமார்த்த சத்யத்திலிருந்து கிஞ்சித்தும் வேறுபட்டதில்லை; அவர்களால் வேறுபடவும் முடியாது. அப்படி யாரேனும் கூறினால் அவர்களது நம்பகத்தன்மை கேள்வுக்குறியாகும்.
சுருக்கமாக இந்த ஆசாரியர்களைக் குறித்து தெரிந்துகொள்வோம்; ஏற்கனவே தெரிந்திருந்தால் அதை இன்னொரு முறாய் உறுதிப்படுத்திக்கொள்வோம்.

வேத வியாசர்

இப்படிப்பட்ட ஆசாரியர்களில் முதன்மையானவர் வேத வியாசர்.மஹாபாரதம், ஸ்ரீமத் பாகவதம்,பிரம்ம சூத்திரம் முதலிய கிரந்தங்களை இயற்றிய வேத வியாசன் அத்துவைத தத்துவத்தைதான் அங்கீகரித்துள்ளாரா என்று சந்தேகிப்பவர்கள் இன்னும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர்களுக்கு நாம் ஒன்றை மட்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.
ஸ்ரீமத் பாகவதத்தின் இரண்டாம் அத்தியாயத்தில் ஸூதன் முகாந்திரம் நமக்கு வியாசர் கூறும் கீழ்க்கண்ட சுலோகத்தை சுட்டிக்காட்டுவோம்;

            வதந்திதத்த்ததுவ வித:

            தத்துவம் யத் ஞானமத்வயம்

            ப்ரம்மேதி பரமாத்மேதி

            பகவானிதி சப்த்யதே

                ஸ்ரீ பா 2-11
     யாரெல்லாம் தத்துவத்தை கண்டறிந்துள்ளார்களோ  அவர்கள் அதை அத்துவைத ஞானம் என்றழைக்கிறார்கள்.இந்த அத்துவைத ஞானத்தை தான் பிரம்மம்,பரமாத்மா, பகவான் என்றெல்லாம் சொல்லுகிறார்கள்.

ஸ்ரீ கௌடபாதாசாரியர்

உபனிஷததுக்கள் எடுத்துரைத்த நித்திய சத்தியமான அத்துவைத சித்தாந்த்திற்கு ஒரு பலமான் அடித்தள்மும்,கட்டமைப்பும் நல்கியது ஸ்ரீ கௌடபாதாசாரியர் எனும் மஹா மேதை.அவர் உபனிஷத் தத்துவமான அத்துவைதத்திற்கு பகுதறிவை அடிப்படையாக கொண்டதும் அனுபவத்தை ஆதாரமாககொண்டதுமான விளக்கங்களை அவர் இந்த உலகீற்கு அளித்தார்.இவர் ஆதி சங்கர பகவத் பாதாளின் குருவுமாவார்.  முக்கியமாக அவர் இயற்றிய மாண்டூக்கிய காரிகை எனப்படும் மாண்டூக்கிய உபனிஷத்துக்கான வியாக்கியானங்கள் மிகவும் பிரபலமானது.

கௌடபாத தரிசனம்

மாண்டூக்கிய உபனிஷத்தை அடிப்படையாகக் கொண்டு கௌடபாதர் பிரபஞ்சானுபவத்தை நாலு பகுதிகளாக வகுத்திருக்கிறார். அவரது வியாக்கியானம் பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த நாலு பகுதிகளை, ஜாக்ரத், சொப்னம்,சுஷுப்தி, துரீயம் என்று அவர் அழைத்துள்ளார்.இந்த நாலு அவஸ்தைகளைக்குறித்து நாம் ஏற்கனவே ஒரு மடலில் பார்த்தோம். இங்கு சற்று வித்தியாசமான கண்ணோட்ட்த்தில் பார்ப்போம்.
இதில் முதல் மூன்று நிலைகளை-அவஸ்தைகளை பௌதிகாவஸ்தைகள் என்றும் நாங்காவது அவஸ்தையை சத்யாவஸ்தை என்றும் ஞானிகள் அழைக்கிறார்கள்.         
முதல் மூன்று அவஸ்தைகள் எல்லா ஜீவராசிகளும் தினமும் அனுபவித்து வருகின்ற அவஸ்தைகள் தான். நான்காவது அவஸ்தை ஞானிகளின் சுத்த சித்திற்கு மட்டும் தான் கிடைக்கும்.
முதல் மூன்று அவஸ்தைகளிலும் மனிதர்கள் ஏதாவதொரு பௌதிக பொருளை சார்ந்து இயங்குகிறார்கள்.அவையை அவித்யாமண்டலம் என்றும் கூறுவார்கள். ஆனால் துரீயாவஸ்தை மட்டும் எதையும் சார்ந்து நாம் இருக்க மாட்டோம்.
முதல் மூன்று அவஸ்தைகளை சிறிது அலசுவோம்.

ஜாக்ரத்

விழித்திருக்கின்ற நிலை தான் ஜாக்ரத் என்று நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஜாக்ரத் அவஸ்தையில் நமக்குண்டாகின்ற அனுபவங்கள் எல்லாம் ஸ்தூலவஸ்துக்களை ஆதாரமாக உளவாகின்றது.
நம்முடைய ஸ்தூல கர்மேந்திரியங்கள் வழியாக வெளிப்படும் நம்து மனம் வெளியிலுள்ள ஸ்தூல வஸ்துக்களை உள்கொள்ளுவதன் மூலம் சில தாக்கங்களை நம்மில் ஏற்படுத்துகின்றது.
சித்-ஜட கிரந்தி மூலம் ஏற்படுகின்ற அனுபூதி அல்லது அனுபவங்கள் இரண்டு விதத்தில் வெளி ஸ்தூல வஸ்துக்களை ஆதாரமாகக் கொண்டுள்ளது.முதலில் நமது சித்-மனம்- புத்தி ஸ்தூலரூபத்திலுள்ள பஞ்சேந்திரியங்களின் மூலம் நமது விகார-விசாரங்கள் வெளிப்படுகிறது.அந்த விகார-விசாரங்கள் அனுபவங்களாக மாறுவதற்கு வேறு வெளி ஸ்தூல வஸ்துக்கள் வேண்டியுள்ளது. ஆனால் இந்த ஸ்தூல வஸ்துக்களெல்லாம் ஜடங்கள் தான்.
சித் இந்த ஜடப் பொருள்களிலிருந்து பின் வாங்கினால் அந்த ஜடப் பொருள்களின் இருப்பே( existence) இல்லாதாகிவிடும்.

சொப்னாவஸ்தை

சித் ஸ்தூல உலகிலிருந்து பின்வாங்கி தந்தான ஒரு சூக்ஷ்ம உலகில் இயங்கும்பொழுது சொப்னாவஸ்தை உளவாகின்றது.இந்த நிலையில் சித்திற்கு எந்த ஒரு ஸ்தூல வஸ்துவின் தாங்குதலும் தேவைப்படுவதில்லை. இந்த சொப்னானுபவங்கள் எல்லாம் நம்து உள்ளிலுள்ள இதயத்தில் ஏற்படுகின்றன. ஸ்தூலமான கர்மேந்திரியங்களின் உபயோகம் தேவையில்லாவிட்டாலும்  ஸூக்ஷ்மமான ஞானேந்திரியங்களின் ஆதரவு தேவைப்படுகிறது.கண் மூடியிருந்து நாம் காண்கிறோம்;செவிகள் இயங்கவில்லையென்றாலும் ஒலி கேட்கின்றோம்; நாசி வேலை செய்யவில்லையென்றாலும் நாற்றங்களை உணருகிறோம்.இது எவ்வாறு உள்வாகின்றன என்பதற்கு ஆயிரமாயிரம் விளக்கங்கள் கொடுத்தாலும் இந்த அனுபவங்களின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.மனோ சங்கல்பங்களோ முன் வாசனைகளோ இந்த சொப்னானுப்வங்களை உளவாக்கியிருக்கலாம்; ஆனால் அந்த அனுபவங்கள் ஒரு ஸூக்ஷ்ம தலத்தில் நடக்கிறது என்பதில் இரண்டு அபிப்பிராயத்திற்கு இடமில்லை.அங்கு ஸ்தூல வஸ்துக்களுக்கு இடமில்லை.மேலும் சொப்னாவஸ்தையிலிருந்து விழித்தெழும்பொழுது சொப்னத்தில் ஏற்பட்ட்தெல்லாம் மித்யானுபவம் என்பது தெரிய வரும்.
அதேபோல் ஜாக்ரத் அவஸ்தையிலிருந்து விழித்து எழும்பொழுது நமக்கு புரியும் ஜாக்ரத் அவஸ்தானுபவங்களும் மித்யை தான் என்று.

சுஷுப்தி 

சுஷுப்தியில் ‘சித்’தை ஒரு விதமான சூன்யம் சூழ்ந்துகொள்கிறது.அந்த சூன்யத்தில் சித் பூராவாக நிச்சலமாகி விடுகிறது.சூக்ஷ்ம்மும் ஸ்தூலவுமான எந்த வஸ்துவும் கிடையாது.எந்த அனுபூதியும் அனுபவமும் கிடையாது.ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து விடுகிறோம்.பரம சாந்தியனுபவப்படுகிறது.’சித்’ அனுபவிக்கும் பரம சாந்தி உறக்கத்திலிருந்து விழித்து எழும்பொழுது நாம் அனுபவித்த பரம சாந்தி ஞாபகத்திற்கு வருகிறது என்பதிலிருந்து நம் சுஷுப்தியில் ‘சித்’ விழித்துக் கொண்டிருந்த்து என்பது தெரிகிறது. அந்த சூன்யமும் பரம சாந்தியும் தான் ‘சித்’தின் இயற்கை. சுஷுப்தியிலிருந்து வெளி வரும்பொழுது ஸ்தூலமும் சூக்ஷ்முமான எல்லா பிரபஞ்சமும் உயிர்த்தெழுகின்றன.

துரீயம்

மேற்கூறிய மூன்று பௌதிக தலங்களிலும் புத்தி அல்லது பிரக்ஞசா இயங்குகிறது.முதல் இரண்டு தலங்களில் ஸ்தூல சூக்ஷ்ம வஸ்துக்களை சார்ந்திருக்கிறது.மூன்றாவது நிலையில் எந்த சார்பும் இல்லாம் நிச்சலமாக நிலை கொள்கிறது.
பிரக்ஞ்சா அல்லது சித் எந்த சார்பும் இல்லாமல்,சுத்த சித்தாக மாறுகின்ற நிலை தான் துரீயம்.
கௌடபாதர் துரீயாநுபவத்தைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்:

            நிவ்ருத்தே: சர்வதுக்கானம்

            ஈசான: ப்ரபுரவ்ய்ய:

            அத்வைத: சர்வபாவானாம்                               

            தேவஸ்துர்யோவிபு: ஸ்ம்ருத:

                                    மாண் 1-10
எல்லா துன்பங்களும் இல்லாதாகி எல்லா பாவங்களும் ஒன்றாகி, தானாகவே பூரணமாய் அந்த சித் எல்லாவற்றின் நாயகனாக விளங்குகிறது.

ஸ்ரீ சங்கர பகவத் பாதர்

இவ்வாறு உபனிஷத்துக்களால் உலகிற்களிக்கப்பட்ட அத்துவைத சித்தாந்த்தை கௌடபாதர் யுக்தியுக்தம் வாதிட்டு தெளிவு படுத்தினார். இருந்தாலும் இந்த தத்துவம் பல விதமான சம்பிரதாய சடங்குகளிடையே சிக்கி சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.அதை சாமானியர்களுக்கும் புரியும் படியும் எளிதாக கடைபிடிக்க ஏதுவுமான வியாக்கியானங்களை நமக்கு அளிக்க அவதாரமெடுத்தார் ஸ்ரீசங்கர பகவத் பாதர். அவர் பாரத தேசம் முழுவதும் கால்னடையாகவே சஞ்சரித்து மக்களுக்கு அத்துவைத சித்தாந்த்தை விளக்கி கூறினார்.
ஜாதி மத வித்தியாசங்களை விலக்கி எல்லோருக்கும் அத்துவைதத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தார் ஆதி சங்கரர்.இந்த பிரபஞ்சத்துக்கெல்லாம் ஒரே ஆதாரம் அத்துவைதமான போத சொரூபம் தான் என்றும் இந்த பிரபஞ்ச சிருஷ்டிகளெல்லாமே எதையுமே சார்ந்திராத சத் ரூபமான போதத்திலிருந்து உண்டானது தானென்றும் அதை ஆதாரமாகக் கொண்டுதான் உலகில் அவை தொடர்ந்து இருந்து வருகின்றது என்றும் ஆதி சங்கரர் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபித்தார்.   

சத்தாசித்சுகரூபமேவஸததம்னாஹம்

நேதம்வாபிஜகத் ப்ரத்ருஷ்டமகிலம் மித்யே- திஜானீஹிபோ !

                        யத்ப்ரோக்தம் கருணாவசாத்த்வயிமயாதத்ஸ-                                                                                                            த்யமேதத்ஸ்ஃபுடம்

                        ஸ்ரத்தஸ்வானகசுத்தபுத்திரசிசேன்மாத்ரா-

                                                                        ஸ்துதே சம்சய: !

“இங்கு எப்பொழுதும் சத்சிதானந்தம் மட்டும் தான் உலது;நானோ, நீயோ யாரும் இல்லை;அது போல் இந்த பிரபஞ்சமும் நாம ரூபங்களில் பலதாக தென்பட்டாலும், சத்சிதானந்தத்தை தரிசித்து விட்டால் எல்லாம் கதிரவனைக்கண்ட பனிபோல் மறைந்து போகும்.இதை உன்னிடமுள்ள கருணையினால் கூறுகிறேன்;இது சத்யம்; உள்ளங்கை நெல்லிக்கை போல் தெளிவானது குழந்தாய்; உன் மனம் தெளிவாக இருந்தால் இதை காது கொடுத்துக் கேள்;எந்த சஞ்சலமும் வேண்டாம்.” எங்கிறார் ஆதி சங்கரர்.

ரமண மஹரிஷி

பதினெட்டு –பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் அதாவது நம்மில் பலரும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற இந்த காலத்தில் அவதரித்த ரமண மஹரிஷி, ராமகிருஷ்ண பரம ஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர்  முதலியோர் இந்த குரு பரம்பரையில் வந்தவர்கள்; அவர்களுக்கே உரித்தான தனிப் பாணியில் வாழ்ந்து காட்டி அத்துவைத சித்தாந்த்தை நிரூபித்துக் காண்பித்தவர்கள்.
முக்கியமாக பகவான் ரமணர் அதிகம் பேசாமல் மௌனத்தை தன் மொழியாக தெரிந்தெடுத்து நவீன தக்ஷிணாமூர்த்தியாக வாழ்ந்து நமக்கு வழிக்காட்டியவர்.

பகவான் ரமணர் சித் ஜட பந்தங்களால் நமக்கு ஏற்படும் மயக்கங்களும் அதற்கான மருந்தையும் குறித்து என்ன கூறியிருக்கிறார் என்பதை அடுத்த மடலில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment