Tuesday, 5 May 2015

ரமணஜோதி 107

ரமணஜோதி 107

சன்யாசியின் அடையாளங்கள்-மொட்டைத்தலையும் கவியுடையும்?

         
               மொட்டை யடித்தெனை வெட்ட வெளியினீ
                   நட்டமா டினையென் னருணாசலா

இந்த சுலோகத்தில் நாம் கவனத்தில்க் கொள்ளவேண்டியது இரண்டு சொற்றொடர்களை. ஓன்று: “ மொட்டையடித்தெனை”; இரண்டு: வெட்ட வெளியினீ நட்டமாடினை”
‘மொட்டையடிப்பது” சன்னியாசிகளின் ஒரு சம்பிரதாயம்.பகவான் ரமணர் திருவண்ணாமலைக்கு வந்து சிறிதுகாலம் கழித்து மொட்டையடிக்கப் பட்டார்..பகவானின் முதல் க்ஷவரத்தைக் குறித்து சூரி நாகம்மா என்ற ரமண பக்தை ‘ஆசிரமத்திலிருந்து கடிதங்கள்’ என்ற தனது நூலில் ருசிகரமான தகவல்களை தந்துள்ளார்.’மொட்டையடிப்பதன் த்த்துவார்த்தத்தை பார்க்கும் முன் சூரி நாகம்மையாரின் கடித்த்தைப் பார்ப்போம்.
 அந்த அம்மையார் பகவான் அவர்களிடம் கூறியதை பகவானின் வார்த்தைகளிலேயே எழுதியுள்ளார். ஆகவே நானும் அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேண்.
பகவான் சொல்கிறார்:
“நான் இந்த ஊருக்கு( திருவண்ணாமலக்கு) வந்த பிறகு நாலு மாதங்கள் வரை ஸ்னானமில்லை,ஒன்றுமில்லை.அருணாசலேசுரர் கோயில் பிரகாரத்தில் இருந்து கொண்டிருந்த போது ஒரு நாள் பொன்னுசாமி என்கிற ஒரு பக்தனின் மனைவி வந்து சட்டென்று இழுத்துக் கொண்டுபோய் உட்கார வைத்து ,சீயக்காயினால் தலை முழுவதும் தேய்த்துக் குளிப்பாட்டினாள்.அடிக்கடி வந்து போய்க்கொண்டிருப்பாள்.அது போலவே அப்போதும் வந்திருக்கிறாளென்று நினைத்தேன்.ஆனால் வரும்போதே எல்லாம் தயார் செய்துகொண்டு வந்திருக்கிறாள். அது தான் நமக்கு முதல் ஸ்னானம்”.
அம்மையார் கேட்டார்கள்:” அதற்குப் பிறகு தினமும் ஸ்னானம் செய்தீர்களா?”
“ஊஹும்;எங்கே ஸ்னானம்? குளிப்பாட்ட யார்? குளிக்கிறது யார்?அதற்கு பிறகு சுமார் ஒருவருஷத்திற்கு மேலே இப்படியே போனது.கொஞ்சகாலம் குருமூர்த்தத்தில் இருக்கும்பொது ரொம்பப் பேர் வருவதில்லை.அதனால் தொந்தரவு இல்லாமலிருந்த்து.அங்கேயும் மீனாக்ஷி என்று ஒருத்தி எப்போதாவது ஆகாரம் கொண்டு வந்து கொடுப்பாள்.ஒரு  நாள் அவள் ஒரு பானை கொண்டு வந்து தண்ணீர் காய்ச்சினாள்.எதற்காகவோ என்று நினைத்தேன். ஒரு கூடையிலிருந்து எண்ணை, சீயக்காய்,முதலியவைகளை எடுத்து வைத்து,” வாங்க, சாமீ’ என்று அழைத்தாள்.நான் நகரவில்லை.அவள் சும்மா இருப்பாளா? என்னைக்  பிடித்து இழுத்துக் கொண்டு போய் உட்கார வைத்து  உடம்பு பூராவும் எண்ணெய் தேய்த்து விட்டு சீயக்காய் போட்டுக் குளிப்பாட்டினாள்.முடிந்ததும் சடை போட்டிருந்த தலையின் சடைகள் பிரிந்து சிங்கத்தின் பிடரி மாதிரித் தொங்க ஆரம்பித்தது. அது இரண்டாவது ஸ்னானம். இதெல்லாம் நடந்த பின் தான் பழனிச்சாமி வந்தான்.அதற்குப் பிறகு தான் முறையாக எல்லாம் ஆரம்பித்தது.?இங்கே முடி வெட்டிக்கொண்ட்தைப் பற்றிச் சரித்திரத்தில் இருக்கிறதில்லையா? இரண்டாவது க்ஷவரம் ஒன்றரை வருடத்திற்குப் பின் நடந்தது.அப்போது தலை மயிரெல்லாம் சடையாக பின்னிக்கொண்டு சின்ன சின்ன கற்களும்  மண்ணும் அதில் சேர்ந்து மிகவும் பாரமாக இருந்த்து.நகங்கள் எல்லாம் நீண்டு வளர்ந்து பார்க்கப் பயங்கரமாக இருப்பேன்.பிறகு எல்லோரும் என்னை மசியப் பண்ணி முடிவெட்ட ஏற்பாடு செய்தார்கள்.மொட்டையடித்த பிறகு தலை இருக்கிறதா இல்லையா என்று தோன்றியது.இப்படியும் அப்படியும் ஆட்டி ஆட்டிப் பார்த்து,’ஆ, இருக்கு’ என்று நினைத்துக் கொள்வேன். அவ்வளவு பாரம் குறைந்து விட்ட்து.” என்றார் பகவான்.
பகவான் ஒரு குழந்தையைப் போல் இந்த சம்பவங்களை விவரித்துள்ளார். எந்த தத்துவ விளக்கமும் அளிக்கவில்லை. காவி வஸ்திரம் தரிப்பதிலோ மற்ற ம்பிரதாயங்களிலோ பகவானுக்கு ஈடுபாடு இருந்ததாக தெரியவில்லை.
பகவான் விரூபாக்ஷ குகையில் தங்கியிருதபொழுதுசாஸ்திரியார் ஒருவர் சிருங்கேரி மடத்திலிருந்து பகவானைக் காண வந்திருந்தார்.வெகு நேரம் பகவானிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு ஊருக்கு போகும் முன் பகவானிடம் வேண்டினார்:” சுவாமி,எனக்கு ஒரு விண்ணப்பம்.நிறைவேற்ற வேண்டும்.”என்றார்.
பகவான் “என்ன?” என்று கேட்க சாஸ்திரியார் தொடர்ந்தார்:” தாங்கள் பிராம்மணராக பிறந்ததால் சாஸ்திரோக்தமாக தீக்ஷை பெற்றுக்கொள்ள வேண்டாமா? இது பழைய காலத்திலிருந்தே வந்த ஆசாரமல்லவா?இதெல்லாம் தங்களுக்கு தெரிந்தது தான்.நான் சொல்ல வேண்டியது என்ன இருக்கிறது? எங்கள் குரு பரம்பரையில் தங்களையும் சேர்க்கவேண்டுமென்றிருக்கிறது.ஆகையால் பகவான் அனுமதித்தால் எங்கள் மடத்திலிருந்து சகல சாமக்ரியைகளுடனும் இங்கே வந்து தீக்ஷை கொடுக்கிறோம்.தங்களுக்கு காவி வஸ்திரம் பூராவாகக் கட்ட இஷ்டமில்லையென்றாலும் போகட்டும்.இந்த கௌபீனத்தையாவது காஷாயமாகத் தரித்தால் நல்லதென்று பிரார்த்திக்கிறேன்.” என்ற் சொல்லிவிட்டு மலையிறங்கி சாப்பிட செல்வதாக சொல்லிவிட்டுச் சென்றா அந்த சாஸ்திரியார்.
காவி வஸ்திரம் அல்லது காஷாயம் அக்னியின் பிரதீகம்.சன்யாசம் எடுத்துக்கொண்டவர்கள் ‘தான்’ எனும் அஹந்தையை விட்டொழித்து விட்டதற்கடையாளமாக தலையை முண்டனம் செய்து கொள்வதும் ஆசைகளை  நெருப்பிலிட்டு எரித்துவிட்டதற்கு அடையாளமாக காவியுடை அணிவதும் சனாதன தர்ம ஆசாரம்.ஆனால் பகவானோ சாதாரண இந்துமத கோட்பாடுகளில் அடங்காதவர். வெளித்தோற்ற சின்னங்களில் ஈடுபாடில்லாதவர்.
திடீரென பகவான் முன் ஒரு வயோதிகர் வந்து நின்றார்.அவரிடம் ஒரு மூட்டை இருந்தது.அவர் அந்த மூட்டையை பகவான் முன் வைத்து விட்டு “ சுவாமி,நான் ஸ்னானம் பண்ணி விட்டு வந்து விடுகிறேன்.இந்த மூட்டையை சற்றே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாரமல் சென்றுவிட்டார்.
அவர் சென்றதும் பகவானுக்கு மூட்டைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. மூட்டையில் மேலாக இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் பகவான்.அது “அருணாசல மாஹாத்மியம்” என்ற சம்ஸ்கிருத நூல்.புத்தகத்தை திறந்ததுமே ஸ்தல மகிமையைப் பற்றின கீழ்க்கண்ட சுலோகம் பகவான் கண்ணில்ப் பட்டது.
           யோஜன த்ரயமாத்ரேஸ்மின் க்ஷேத்ரே நிவஸதாம் ந்ருணாம் !
           தீக்ஷாதிகம் விணப்பஸ்து மத்ஸாயுஜ்யம் மமாக்ஞ்யா !!
அருணாசல மாஹாத்மியம் பூர்வார்த்தம் அத் 4 சுலோ 25“
“இந்த அருணாசல க்ஷேத்ரத்திற்குமூன்று யோஜன தூரத்திற்குள்இருப்பத்தினாலு மைல்களுக்குள் வசிப்பவர்களுக்கு தீக்ஷாதிகள் இல்லாமலயே என் ஆக்ஞ்சை படி சாயுஜ்யம் கிடைப்பதாக
சாஸ்திரிகள் உணவு முடிந்து வந்ததும் பகவான் இந்த சுலோகத்தை காண்பித்தார். சாஸ்திரிகள் சிறந்த அறிஞ்சராக இருந்ததால் பகவானின் உள்ளத்தைப் புரிந்துகொண்டு சிருங்கேரி சென்று அன்று பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ நரசிம்மபாரதியிடம் தெரிவித்தார். ஆசாரியாளும் பகவானின் அபிப்ராயத்தை புரிந்து கொண்டு மேற்கொண்டு இந்த விஷயத்தில் முய்ற்சிகள் ஏதும் மேற்கொள்ள வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
இதன் மூலம் பகவான் நமக்கெல்லாம் தெரிவித்ததெல்லாம் சம்பிரதாய சடங்குகளையும் வெளியடையாளங்களையும் விட மேலானது உள்ளார்ந்த மனோ நிக்ரகம் தான் என்பதாகும்.
மேற்சொன்ன சுலோகத்தை பகவான் அருணாசல ஸ்துதி பஞ்சகத்தில் கீழ்க்கண்டவாறு மொழி பெயர்த்துள்ளார்.
                   யோசனை மூன்றா மித்தல வாசர்க்-
                   காசறு தீக்கை யாதியின் றியுமென்
                   பாசமில் சாயுச் சியம்பயக் கும்மே
                   யீசனா மென்ற னாணயி னானே.
ஆனால் பகவான் ‘மொட்டையடித்தல்’ எனும் சம்பிரதாயச் சடங்கை நினைவு கூர்ந்து சொல்லுகிறார், “அருணாசலா, நீ என்னை மொட்டை அடிக்க வைத்தாய்” அதாவது அருணாசலன் பகவானின் சிறுவயதிலேயே மனோ நிக்ரகம் செய்து ஞானத்தை அளித்தார்.
இந்த இடத்தில் பகவான் மனோ நிக்ரகத்தைக் குறித்தும் வாசனா  நாசத்தைக்குறித்தும் கூறியுள்ளதைச் சற்றுப் பார்ப்போம்.பக்தர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பகவானிடம் கேட்ட கேள்விகளையும் அதற்கு பகவான் அளித்த பதில்களையும் அடிப்படையாகக்கொண்டு சில கருத்துக்களை தொகுத்து  கொடுத்துள்ளேன்.
: ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கு தடையாக உள்ளவை  மனதின் வாசனைகள்தான் மனதில் சேகரித்து வைக்கப்படும் விகார விசாரங்களே வாசனைகளாகும்.முன்சன்மங்களில் நாம் செய்த கர்ம பலங்களினால் இவை நாம் பிறக்கும் பொதே நம்முடன் வருகின்றன.வாசனைகள் முற்றிலும் அற்றுப் போன நிலையே நமது அடிப்படை நிலை.அதுவே நிரந்தரமான சுத்தசைதன்ய நிலை.
 எல்லோருக்கும் நாசமற்ற-நிரந்தரமாயுள்ள ஆன்மாவைத் தெரியும்.அந்த தெளிவு எப்பொழுதும் நமது உள்ளில் உறங்கி கிடக்கிறது. நாம் சிரஞ்சீவி என்ற அந்த உண்மையறிவினால்த் தான் எத்தனை முறை மரணத்திற்கு  சாட்சியம் வகித்திருந்தாலும் தனக்கு மட்டும் மரணம் கிடையாது என்று மனிதன் நம்புகிறான்.ஏனென்றால் அது தான் உண்மை.நசிப்பதெல்லாம் இந்த உடல் தான் என்று அவனது அந்தராத்மாவிற்குத் தெரிகிறது.ஆனால் அவனது உடல் நாசத்தை நெருங்கும்பொழுது அவனுக்கு ‘நானுக்கும்;’ உடலிற்குமுள்ள வேற்றுமை மறந்து போய்விடுகிறது.அவன் குழம்பிப்போகிறான். இந்த மனக்குழப்பம் தீரவேண்டும்.அது நசிக்கும்; இடையில் வந்தது இடையிலேயே போகவேண்டும்.இந்த மனக்குழப்பம் ‘அஹம்’ ஜனித்தவுடன் உண்டாகிறது.’மமாகாரம்’ இல்லாதாகிவிட்டால் இந்த மயக்கம் இல்லாதாகிவிடும்.இந்த அஹத்தை தலையிலிருந்து இறக்கிவைப்பதைத் தான் மொட்டையடிப்பது குறிக்கிறது.
ஒரு முறை ஞானம் ஏற்பட்டுவிட்டால் அது ஸ்திரமாவதற்கு நிலைப்பதற்கு கால அவகாசம் தேவை.ஞானம் அல்லது ஆன்மாவைப் பற்றின அறிவு என்பது நம்மில் சுயமாகவே உள்ளது.அது வாசனைகளால் மூடப்பட்டிருக்கிறது;எப்படி தலை முடி நம் தலையை மூடியுள்ளதோ அது
போல்.நீறுபூத்த   நெருப்பு போல் நமது உள்ளறிவு வாசனைகளால் மூடப்பட்டு உயிருடன் இருக்கிறது. அதை உயிரூட்ட முடியும்.வாசனைகளை ஊதி அகற்ற வேண்டும்.
வாசனைகள் தமோ ரஜோ குண இயக்கத்தினால் உண்டாகின்றன. வாசனைகள் அழியும்பொழுது சத்துவ குணம்- நமது ஆன்மாவின் இயற்கை-வெளிப்பட்டு சுயம் பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பித்துவிடும். அந்த பிரகாசத்தில் சித் எனும் அம்பரத்தில் –ஆகாயத்தில் ஆனந்தம் துள்ளி விளையாடும். இந்த சிதாகாசத்தைத்தான் பகவான் வெட்ட வெளி என்று வருணிக்கிறார். வெட்ட வெளியென்றால் எந்த ஒரு மறையும் இல்லாத, தடங்கல் ஏதுமில்லாத பரந்து விரிந்து எல்லையில்லாத ஒளிவெள்ளமான பிரதேசம்.அது தான் சிதாகாசம். அது நம்மில் மட்டும் அல்ல, எல்லா ஜீவராசிகளிலும் பரந்து விரிந்து கிடக்கிறது. அதைக் காண வேண்டுமென்றால் காண்பவன்,காணும் பொருள் என்ற வேற்றுமை அற்றுப் போகவேண்டும்.அதற்கு அகந்தை அழியவேண்டும். அகந்தை அழியவேணுமென்றால் ‘நான் யார்’ என்று விசாரித்தறிய வேண்டும்.இது தான் பகவானின் உபதேச சாரம்


No comments:

Post a Comment