Tuesday, 5 May 2015

ரமணஜோதி 108

ரமணஜோதி 108

மோகம் தவிர்


                                      மோகந் தவிர்த்துன் மோகமா வைத்துமென்
                                                மோகந்தீ ராயென் னருணாசலா

“ இகலோக வஸ்துக்களின் மீதுள்ள என் மோகத்தையெல்லாம் விட்டு விட்டு உன் மீது மட்டும் பற்று வைத்து, என் ஆசைகளையெல்லாம் நாசமடையச் செய்துவிடு, அருணாசலா.” என்கிறார் பகவான் இந்த சுலோகத்தில்.
பௌதிக வஸ்துக்களின் மீதுள்ள மோகம் தான் நமது சகல விதமான துன்பங்களுக்கும் காரணம்.அந்த மோகத்திற்கோ ‘அகம்” எனும் போதம் தான் காரணம்.இந்த ‘அகம்காரமோ வாசனைகளால் மூடப்பட்ட சத் தமோ ரஜோ குணங்களின் உந்துதலால் உளவானவை. வாசனைகளையும் இந்திரிய   சுகங்களின் மீதுள்ள மோகத்தையும்  ஒழித்து விட்டால் நமது சித் சத் மாத்திரமாகிவிடும்.அப்படி ஆவதற்கு நமது சித்திற்கு ஒரு பிடிமானம் வேண்டியுள்ளது.அந்த பிடிமானம் தான் அருணாசலன் மீதுள்ள பக்தி அல்லது மோகம். அந்த மோகம் வந்து வந்து போகின்ற மோகமாக இருக்க்க் கூடாது. அது ஸ்தாயியான மோகமாகயிருக்க வேண்டும்.அதனால்த் தான் பகவான் ஜபதபங்களையும் தியானங்களையும் தாற்காலிகமான சாந்தி தரக்கூடியவை என்கிறார் .அவை நிரந்தர சாந்தியை தரா என்கிறார்.
.
          கவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:
                        அனன்யாஸ்சிந்தயந்தோ மாம் யேஜனா:பர்யுபாசதே
                             தேஷாம் நித்யாபியுக்தானாம் யொகக்ஷேமம் வஹாம்யஹம்
                                                          [/கீ அத் 9 சுலோ 22
                             சர்வதர்மான் பரித்யஜ்ய மாமேஜம் சரண்அம்வ்ரஜ
                             அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:!
                                                          ப.கீ அத் 18 சுலோ 66  
இந்த இரு சுலோகங்களின் மூலம் பரமாத்மா நமக்கு சொல்வதென்னவென்றால்,யாரொருவன் என்னில் எல்லாவற்றையும் அர்பித்துவிட்டு என்னில் ஐக்கியமாகிறானோ,அதாவத் எவனொருவனுக்கு எந்தவொரு மோஹமுமில்லாமலுள்ளthO அவனுக்கு நான் கடன் பட்டவனாகிறேன். அந்தக் கடனை அவனுக்கு முக்தி அளிப்பதன் மூலம் தீர்க்கிறேன்.
சர்வ தர்ம பரித்யஜ்யஎன்ற  பதம் பலரால்பல விதமாக வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது இதன் அர்த்தம் எல்லா தர்மங்களையும் விட்டால் மட்டுமே முக்தி என்று பொருள் பட் வியாக்கியானம் செய்துள்ளார்கள்.
இதன் சரியான பொருள் கர்ம பலன்களில் மோஹம் இல்லாமல் எவனொருவன் கர்மங்களை இயற்றுகிறானோ அவனுக்கு முக்தி கிட்டும்;
பகவான் ரமணர் ,நீ அங்கேயே இரு” என்பார்.நீ இருந்த இடத்திலிர்ந்துகொண்டே உனது தர்மங்களையும் கர்மங்களையும் செய்துகொண்டே ஆத்மசாக்ஷாத்காரம் அடையமுடியும்.எந்த கர்மத்தையும் தியாகம் செய்யவேண்டாம்.கர்மத்தின் மீது—கர்ம பலத்தின் மீதுள்ள பற்றுதலை விட்டாலேபோதும்.அவ்வாறு பற்றற்ற கர்மங்களை இயற்றுபவன் ஆத்மா சாக்ஷாத்காரத்திற்கு தகுதியுடையவனாகிறான்.
இப்படிப்பட்ட மனோ நிலையை நாம் எப்படி அடைய முடியும்?.கர்ம பலங்களின் மீது பற்றின்மை உண்டாக வேண்டுமென்றால் ‘வைராக்கியம்’ உண்டாக வேண்டும்; ‘வைராக்கியம்’ உண்டாக வேண்டுமென்றால் ‘விவேகம்’ உண்டாக வேண்டும்.’விவேகம் எப்படி யுண்டாகும்? ‘கூர்மதி’ படைத்தவர்களுக்கு மட்டும் தான் விவேகம் கைக்கிட்டும்.’கூர்மதி ‘படைத்திருந்தால் மட்டும் போதாது; அதை பயன்படுத்தி நம் உள்ளமெனும் ஆழ்கடலுக்குள்   நுழைந்து ‘நான் யார்’ என்று தெரிந்து தெளிந்து கொள்ள வேண்டும்.
இந்த நித்யமான உண்மையை பகவான் ரமணர் தனது ‘உள்ளது நாற்பது’ நூலில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:
எழும்பு மகந்தை யெழுமிடத்தை நீரில்
விழுந்த பொருள் காண வேண்டி---முழுகுதல்போற்
கூர்ந்தமதி யாற்பேச்சுமூச்சடக்கிக் கொண்டுள்ளே
யாழ்ந்தறிய வேண்டு மறிபிணம்போற்---றீர்ந்துடலம் .
                        உ.நா சுலோ 28
விவேகம் என்றால் ‘நான்’ என்று ஒன்றில்லை;அல்லது எல்லாமே நான் தான். என்ற ஞானம் .அந்த ஞானம் பெற வேண்டுமென்றால் ‘நான்; எங்கிருந்து எழுகின்றது என்பதை அறிய வேண்டும்.நீரில் ஒரு பொருள் விழுந்து விட்டால் அதை கரையிலிருந்தவாறு தேடினால் கிடைக்காது.நீரினில் இறங்கி, மூழ்கி த் தேட வேண்டும். முத்துக்குளிப்பவர்கள் கடலினுள் மூழ்கி முத்துச் சிப்பியை கண்டெடுக்கிறார்கள்.நீரினுள் இறாங்கும்பொழுது மூச்சை அடக்கி ஏகாக்கிர சிந்தனையுடன் ஒரு முனைப்பாக  முத்துச் சிப்பியை தேட வேண்டும்,அதற்கான விவேகத்தை பகவான் ‘கூர்மதி’ எங்கிறார்.
இதே அர்த்தம் கீழ்க்கண்ட சுலோகத்திலும் காணலாம்:
                             காமியத்து அழுந்தி இளையாதே
                             காலர் கை படிந்து மடியாதே
காமிய கர்மங்களில் ஈடுபட்டால், வீணாக நம் சக்தியை விரயம் செய்தவர்களாகிறோம். காலனின் பாசத்தின் வலயத்தில் சிக்கி கொள்கிறோம்.இறப்பு-பிறப்பு எனும் சுழற்சியிலிருந்து விடுதலை பெறமாட்டோம்.
இதே கருத்தை பகவான் திரும்பத் திரும்ப கூறுவார்,. உள்ளது நாற்பது 23 ஆம் சுலோகத்தில் கூறுவார்:
                             நானென்றித் தேக நவிலா துறக்கத்து
                             நானின்றென் றாரு நவில்வதில்லை—நானொன்
                             றெழுந்தபி னெல்லாமெழுமிந்த நானெங்
                             கெழுமென்று நுண்மதியா லெண்ண—நழுவும்
28வது சுலோகத்த்தில் கூர்மதி; இங்கு நுண்மதி.’’நான்; என்ற எண்ணம் உறக்கத்தில் தோன்றுவதில்லை; ஆகவே நமக்கு உறக்கத்தில் பிரச்சினையெதுவுமில்லை; விழித்தெழுந்து விட்டால் இந்த உடல் தான் ‘னான்’ என்ற எண்ணம் உண்டாகிறது..இதை தெரிந்து கொண்டு விட்டால்; ‘உடலும் நானும் ஒன்று என்ற எண்ணம் தான் எல்லபிரச்சினைகளுக்கும் காரணம் என்று புரிந்து கொண்டுவிட்டால்—அதற்கான நூண்மதி’ பெற்றுவிட்டோமென்றால் மோகங்கள் அஸ்தமித்து விடும்.அந்த மோகனனுடன் நாம் லயிப்பது எளிதாகிவிடும்.
இதையே திருமூலர் திருமந்திரமாக தருகிறார்:
                             போற்றி இசைத்தும் புகழ்ந்தும் புனிதன் அடி
                             தேற்றுமின் என்னும் சிவனடிக்கே செல்வம்
                             மாற்றியதென்று மௌஅலுற்ற சிந்தையை
                             மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே
                                                                                    எல்லா செல்வங்களும் பரமனால் சிருஷ்டிக்கப்பட்டவை.ஆகவே எல்லாவற்றையும் அவனுக்கு அர்ப்பணித்து விட்டு இகப்பொருள் மோகத்தை விட்டு விட்டு பரமன் மீது பற்று வையுங்கள். ஒரு மோகத்தை இன்னொரு மோகத்தால் தான் முறியடிக்க முடியும். பௌதிகபொருள்களின் மீதுள்ள மோகத்தை மாற்றி அரூணாசலன் மீது மோகம் வைத்தால் ஆத்மசாக்ஷாத்காரம் அடைய முடியும்.

                                                            

ரமணஜோதி 107

ரமணஜோதி 107

சன்யாசியின் அடையாளங்கள்-மொட்டைத்தலையும் கவியுடையும்?

         
               மொட்டை யடித்தெனை வெட்ட வெளியினீ
                   நட்டமா டினையென் னருணாசலா

இந்த சுலோகத்தில் நாம் கவனத்தில்க் கொள்ளவேண்டியது இரண்டு சொற்றொடர்களை. ஓன்று: “ மொட்டையடித்தெனை”; இரண்டு: வெட்ட வெளியினீ நட்டமாடினை”
‘மொட்டையடிப்பது” சன்னியாசிகளின் ஒரு சம்பிரதாயம்.பகவான் ரமணர் திருவண்ணாமலைக்கு வந்து சிறிதுகாலம் கழித்து மொட்டையடிக்கப் பட்டார்..பகவானின் முதல் க்ஷவரத்தைக் குறித்து சூரி நாகம்மா என்ற ரமண பக்தை ‘ஆசிரமத்திலிருந்து கடிதங்கள்’ என்ற தனது நூலில் ருசிகரமான தகவல்களை தந்துள்ளார்.’மொட்டையடிப்பதன் த்த்துவார்த்தத்தை பார்க்கும் முன் சூரி நாகம்மையாரின் கடித்த்தைப் பார்ப்போம்.
 அந்த அம்மையார் பகவான் அவர்களிடம் கூறியதை பகவானின் வார்த்தைகளிலேயே எழுதியுள்ளார். ஆகவே நானும் அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேண்.
பகவான் சொல்கிறார்:
“நான் இந்த ஊருக்கு( திருவண்ணாமலக்கு) வந்த பிறகு நாலு மாதங்கள் வரை ஸ்னானமில்லை,ஒன்றுமில்லை.அருணாசலேசுரர் கோயில் பிரகாரத்தில் இருந்து கொண்டிருந்த போது ஒரு நாள் பொன்னுசாமி என்கிற ஒரு பக்தனின் மனைவி வந்து சட்டென்று இழுத்துக் கொண்டுபோய் உட்கார வைத்து ,சீயக்காயினால் தலை முழுவதும் தேய்த்துக் குளிப்பாட்டினாள்.அடிக்கடி வந்து போய்க்கொண்டிருப்பாள்.அது போலவே அப்போதும் வந்திருக்கிறாளென்று நினைத்தேன்.ஆனால் வரும்போதே எல்லாம் தயார் செய்துகொண்டு வந்திருக்கிறாள். அது தான் நமக்கு முதல் ஸ்னானம்”.
அம்மையார் கேட்டார்கள்:” அதற்குப் பிறகு தினமும் ஸ்னானம் செய்தீர்களா?”
“ஊஹும்;எங்கே ஸ்னானம்? குளிப்பாட்ட யார்? குளிக்கிறது யார்?அதற்கு பிறகு சுமார் ஒருவருஷத்திற்கு மேலே இப்படியே போனது.கொஞ்சகாலம் குருமூர்த்தத்தில் இருக்கும்பொது ரொம்பப் பேர் வருவதில்லை.அதனால் தொந்தரவு இல்லாமலிருந்த்து.அங்கேயும் மீனாக்ஷி என்று ஒருத்தி எப்போதாவது ஆகாரம் கொண்டு வந்து கொடுப்பாள்.ஒரு  நாள் அவள் ஒரு பானை கொண்டு வந்து தண்ணீர் காய்ச்சினாள்.எதற்காகவோ என்று நினைத்தேன். ஒரு கூடையிலிருந்து எண்ணை, சீயக்காய்,முதலியவைகளை எடுத்து வைத்து,” வாங்க, சாமீ’ என்று அழைத்தாள்.நான் நகரவில்லை.அவள் சும்மா இருப்பாளா? என்னைக்  பிடித்து இழுத்துக் கொண்டு போய் உட்கார வைத்து  உடம்பு பூராவும் எண்ணெய் தேய்த்து விட்டு சீயக்காய் போட்டுக் குளிப்பாட்டினாள்.முடிந்ததும் சடை போட்டிருந்த தலையின் சடைகள் பிரிந்து சிங்கத்தின் பிடரி மாதிரித் தொங்க ஆரம்பித்தது. அது இரண்டாவது ஸ்னானம். இதெல்லாம் நடந்த பின் தான் பழனிச்சாமி வந்தான்.அதற்குப் பிறகு தான் முறையாக எல்லாம் ஆரம்பித்தது.?இங்கே முடி வெட்டிக்கொண்ட்தைப் பற்றிச் சரித்திரத்தில் இருக்கிறதில்லையா? இரண்டாவது க்ஷவரம் ஒன்றரை வருடத்திற்குப் பின் நடந்தது.அப்போது தலை மயிரெல்லாம் சடையாக பின்னிக்கொண்டு சின்ன சின்ன கற்களும்  மண்ணும் அதில் சேர்ந்து மிகவும் பாரமாக இருந்த்து.நகங்கள் எல்லாம் நீண்டு வளர்ந்து பார்க்கப் பயங்கரமாக இருப்பேன்.பிறகு எல்லோரும் என்னை மசியப் பண்ணி முடிவெட்ட ஏற்பாடு செய்தார்கள்.மொட்டையடித்த பிறகு தலை இருக்கிறதா இல்லையா என்று தோன்றியது.இப்படியும் அப்படியும் ஆட்டி ஆட்டிப் பார்த்து,’ஆ, இருக்கு’ என்று நினைத்துக் கொள்வேன். அவ்வளவு பாரம் குறைந்து விட்ட்து.” என்றார் பகவான்.
பகவான் ஒரு குழந்தையைப் போல் இந்த சம்பவங்களை விவரித்துள்ளார். எந்த தத்துவ விளக்கமும் அளிக்கவில்லை. காவி வஸ்திரம் தரிப்பதிலோ மற்ற ம்பிரதாயங்களிலோ பகவானுக்கு ஈடுபாடு இருந்ததாக தெரியவில்லை.
பகவான் விரூபாக்ஷ குகையில் தங்கியிருதபொழுதுசாஸ்திரியார் ஒருவர் சிருங்கேரி மடத்திலிருந்து பகவானைக் காண வந்திருந்தார்.வெகு நேரம் பகவானிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு ஊருக்கு போகும் முன் பகவானிடம் வேண்டினார்:” சுவாமி,எனக்கு ஒரு விண்ணப்பம்.நிறைவேற்ற வேண்டும்.”என்றார்.
பகவான் “என்ன?” என்று கேட்க சாஸ்திரியார் தொடர்ந்தார்:” தாங்கள் பிராம்மணராக பிறந்ததால் சாஸ்திரோக்தமாக தீக்ஷை பெற்றுக்கொள்ள வேண்டாமா? இது பழைய காலத்திலிருந்தே வந்த ஆசாரமல்லவா?இதெல்லாம் தங்களுக்கு தெரிந்தது தான்.நான் சொல்ல வேண்டியது என்ன இருக்கிறது? எங்கள் குரு பரம்பரையில் தங்களையும் சேர்க்கவேண்டுமென்றிருக்கிறது.ஆகையால் பகவான் அனுமதித்தால் எங்கள் மடத்திலிருந்து சகல சாமக்ரியைகளுடனும் இங்கே வந்து தீக்ஷை கொடுக்கிறோம்.தங்களுக்கு காவி வஸ்திரம் பூராவாகக் கட்ட இஷ்டமில்லையென்றாலும் போகட்டும்.இந்த கௌபீனத்தையாவது காஷாயமாகத் தரித்தால் நல்லதென்று பிரார்த்திக்கிறேன்.” என்ற் சொல்லிவிட்டு மலையிறங்கி சாப்பிட செல்வதாக சொல்லிவிட்டுச் சென்றா அந்த சாஸ்திரியார்.
காவி வஸ்திரம் அல்லது காஷாயம் அக்னியின் பிரதீகம்.சன்யாசம் எடுத்துக்கொண்டவர்கள் ‘தான்’ எனும் அஹந்தையை விட்டொழித்து விட்டதற்கடையாளமாக தலையை முண்டனம் செய்து கொள்வதும் ஆசைகளை  நெருப்பிலிட்டு எரித்துவிட்டதற்கு அடையாளமாக காவியுடை அணிவதும் சனாதன தர்ம ஆசாரம்.ஆனால் பகவானோ சாதாரண இந்துமத கோட்பாடுகளில் அடங்காதவர். வெளித்தோற்ற சின்னங்களில் ஈடுபாடில்லாதவர்.
திடீரென பகவான் முன் ஒரு வயோதிகர் வந்து நின்றார்.அவரிடம் ஒரு மூட்டை இருந்தது.அவர் அந்த மூட்டையை பகவான் முன் வைத்து விட்டு “ சுவாமி,நான் ஸ்னானம் பண்ணி விட்டு வந்து விடுகிறேன்.இந்த மூட்டையை சற்றே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாரமல் சென்றுவிட்டார்.
அவர் சென்றதும் பகவானுக்கு மூட்டைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. மூட்டையில் மேலாக இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் பகவான்.அது “அருணாசல மாஹாத்மியம்” என்ற சம்ஸ்கிருத நூல்.புத்தகத்தை திறந்ததுமே ஸ்தல மகிமையைப் பற்றின கீழ்க்கண்ட சுலோகம் பகவான் கண்ணில்ப் பட்டது.
           யோஜன த்ரயமாத்ரேஸ்மின் க்ஷேத்ரே நிவஸதாம் ந்ருணாம் !
           தீக்ஷாதிகம் விணப்பஸ்து மத்ஸாயுஜ்யம் மமாக்ஞ்யா !!
அருணாசல மாஹாத்மியம் பூர்வார்த்தம் அத் 4 சுலோ 25“
“இந்த அருணாசல க்ஷேத்ரத்திற்குமூன்று யோஜன தூரத்திற்குள்இருப்பத்தினாலு மைல்களுக்குள் வசிப்பவர்களுக்கு தீக்ஷாதிகள் இல்லாமலயே என் ஆக்ஞ்சை படி சாயுஜ்யம் கிடைப்பதாக
சாஸ்திரிகள் உணவு முடிந்து வந்ததும் பகவான் இந்த சுலோகத்தை காண்பித்தார். சாஸ்திரிகள் சிறந்த அறிஞ்சராக இருந்ததால் பகவானின் உள்ளத்தைப் புரிந்துகொண்டு சிருங்கேரி சென்று அன்று பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ நரசிம்மபாரதியிடம் தெரிவித்தார். ஆசாரியாளும் பகவானின் அபிப்ராயத்தை புரிந்து கொண்டு மேற்கொண்டு இந்த விஷயத்தில் முய்ற்சிகள் ஏதும் மேற்கொள்ள வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
இதன் மூலம் பகவான் நமக்கெல்லாம் தெரிவித்ததெல்லாம் சம்பிரதாய சடங்குகளையும் வெளியடையாளங்களையும் விட மேலானது உள்ளார்ந்த மனோ நிக்ரகம் தான் என்பதாகும்.
மேற்சொன்ன சுலோகத்தை பகவான் அருணாசல ஸ்துதி பஞ்சகத்தில் கீழ்க்கண்டவாறு மொழி பெயர்த்துள்ளார்.
                   யோசனை மூன்றா மித்தல வாசர்க்-
                   காசறு தீக்கை யாதியின் றியுமென்
                   பாசமில் சாயுச் சியம்பயக் கும்மே
                   யீசனா மென்ற னாணயி னானே.
ஆனால் பகவான் ‘மொட்டையடித்தல்’ எனும் சம்பிரதாயச் சடங்கை நினைவு கூர்ந்து சொல்லுகிறார், “அருணாசலா, நீ என்னை மொட்டை அடிக்க வைத்தாய்” அதாவது அருணாசலன் பகவானின் சிறுவயதிலேயே மனோ நிக்ரகம் செய்து ஞானத்தை அளித்தார்.
இந்த இடத்தில் பகவான் மனோ நிக்ரகத்தைக் குறித்தும் வாசனா  நாசத்தைக்குறித்தும் கூறியுள்ளதைச் சற்றுப் பார்ப்போம்.பக்தர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பகவானிடம் கேட்ட கேள்விகளையும் அதற்கு பகவான் அளித்த பதில்களையும் அடிப்படையாகக்கொண்டு சில கருத்துக்களை தொகுத்து  கொடுத்துள்ளேன்.
: ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கு தடையாக உள்ளவை  மனதின் வாசனைகள்தான் மனதில் சேகரித்து வைக்கப்படும் விகார விசாரங்களே வாசனைகளாகும்.முன்சன்மங்களில் நாம் செய்த கர்ம பலங்களினால் இவை நாம் பிறக்கும் பொதே நம்முடன் வருகின்றன.வாசனைகள் முற்றிலும் அற்றுப் போன நிலையே நமது அடிப்படை நிலை.அதுவே நிரந்தரமான சுத்தசைதன்ய நிலை.
 எல்லோருக்கும் நாசமற்ற-நிரந்தரமாயுள்ள ஆன்மாவைத் தெரியும்.அந்த தெளிவு எப்பொழுதும் நமது உள்ளில் உறங்கி கிடக்கிறது. நாம் சிரஞ்சீவி என்ற அந்த உண்மையறிவினால்த் தான் எத்தனை முறை மரணத்திற்கு  சாட்சியம் வகித்திருந்தாலும் தனக்கு மட்டும் மரணம் கிடையாது என்று மனிதன் நம்புகிறான்.ஏனென்றால் அது தான் உண்மை.நசிப்பதெல்லாம் இந்த உடல் தான் என்று அவனது அந்தராத்மாவிற்குத் தெரிகிறது.ஆனால் அவனது உடல் நாசத்தை நெருங்கும்பொழுது அவனுக்கு ‘நானுக்கும்;’ உடலிற்குமுள்ள வேற்றுமை மறந்து போய்விடுகிறது.அவன் குழம்பிப்போகிறான். இந்த மனக்குழப்பம் தீரவேண்டும்.அது நசிக்கும்; இடையில் வந்தது இடையிலேயே போகவேண்டும்.இந்த மனக்குழப்பம் ‘அஹம்’ ஜனித்தவுடன் உண்டாகிறது.’மமாகாரம்’ இல்லாதாகிவிட்டால் இந்த மயக்கம் இல்லாதாகிவிடும்.இந்த அஹத்தை தலையிலிருந்து இறக்கிவைப்பதைத் தான் மொட்டையடிப்பது குறிக்கிறது.
ஒரு முறை ஞானம் ஏற்பட்டுவிட்டால் அது ஸ்திரமாவதற்கு நிலைப்பதற்கு கால அவகாசம் தேவை.ஞானம் அல்லது ஆன்மாவைப் பற்றின அறிவு என்பது நம்மில் சுயமாகவே உள்ளது.அது வாசனைகளால் மூடப்பட்டிருக்கிறது;எப்படி தலை முடி நம் தலையை மூடியுள்ளதோ அது
போல்.நீறுபூத்த   நெருப்பு போல் நமது உள்ளறிவு வாசனைகளால் மூடப்பட்டு உயிருடன் இருக்கிறது. அதை உயிரூட்ட முடியும்.வாசனைகளை ஊதி அகற்ற வேண்டும்.
வாசனைகள் தமோ ரஜோ குண இயக்கத்தினால் உண்டாகின்றன. வாசனைகள் அழியும்பொழுது சத்துவ குணம்- நமது ஆன்மாவின் இயற்கை-வெளிப்பட்டு சுயம் பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பித்துவிடும். அந்த பிரகாசத்தில் சித் எனும் அம்பரத்தில் –ஆகாயத்தில் ஆனந்தம் துள்ளி விளையாடும். இந்த சிதாகாசத்தைத்தான் பகவான் வெட்ட வெளி என்று வருணிக்கிறார். வெட்ட வெளியென்றால் எந்த ஒரு மறையும் இல்லாத, தடங்கல் ஏதுமில்லாத பரந்து விரிந்து எல்லையில்லாத ஒளிவெள்ளமான பிரதேசம்.அது தான் சிதாகாசம். அது நம்மில் மட்டும் அல்ல, எல்லா ஜீவராசிகளிலும் பரந்து விரிந்து கிடக்கிறது. அதைக் காண வேண்டுமென்றால் காண்பவன்,காணும் பொருள் என்ற வேற்றுமை அற்றுப் போகவேண்டும்.அதற்கு அகந்தை அழியவேண்டும். அகந்தை அழியவேணுமென்றால் ‘நான் யார்’ என்று விசாரித்தறிய வேண்டும்.இது தான் பகவானின் உபதேச சாரம்


ரமணஜோதி 106

 

 

 

 

ரமணஜோதி 106

அருள் மை-2

மைமய னீத்தருண் மையினா லுனதுண்
          மைவச மாக்கினை யருணாசலா

நாம் கடந்த மடலில் மேற்கண்ட சுலோகத்தின் வாச்சியார்த்தத்தை பார்த்தோம். அப்படி பார்க்கும் பொழுது சில கேள்விகளை எழுப்பினோம். அந்த கேள்விகளின் பதில்களை தேடும் முன்னோடியாக அத்துவைத வேதாந்தந்த்தின் தோற்றம் குறித்தும் அதன் ஆசாரியர்கள் குறித்தும் குறிப்பாக கௌட பாதரின் மாண்டூக்கிய வியாக்கியனத்தை சிறிது விசகலனம் செய்தோம். மடலின் முடிவில் நம்முடைய காலமான பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் தோன்றி நமக்கு வழிகாட்டிய மஹான்களிடையே பகவான் ரமண மஹரிஷியின் உபதேசங்களைக் குறிப்பிட்டோம். அவரின் உபதேசங்களின் விவரங்களை இந்த மடலில் பார்ப்போம்.
ஆத்மா சத் சித் ஆனந்த மானது; சஞ்சலமற்றது; அது சுத்த சைதன்னியம்; அதை ஆவரணம் செய்துள்ள இருளை –அஞ்ஞானத்தை போக்கி விட்டோமென்றால் அதுவே முக்தி-ஆத்ம சாக்ஷாத்காரம்; என்று பகவான் ஆணித்தரமாக கூறியுள்ளார்.கூறியது மட்டுமல்ல நடமாடும் ஜீவன்முக்தராக வாழ்ந்தும் காட்டினார்.
கடந்த மடலில் நமது சித் ஆனது மனமாகி ஜடப்பொருள்களோடு தொடர்பு கொள்ளும்பொழுது நமக்கு பௌதிக அனுபவங்கள் ஏற்படுகின்றன; அவை இன்பகரமாகவும் இருக்கலாம்; துன்பகரமாகவும் இருக்கலாம்; எப்படியிருந்தாலும் அவை தாற்காலிகமானது தான்; க்ஷண நேரத்தில் தோன்றி மறையக் கூடியவை; அவை ஜாக்ரத்தில் ஸ்தூல பௌதிகப் பொருள்களோடு சம்பந்தப் படும் பொழுதும்,சொப்னாவஸ்தையில் சூக்ஷ்ம தலத்தில் பௌதிகப் பொருள்களோடு கர்மேந்திரியங்களின் தொடர்பில்லாமல் ஏற்படுகின்றபொழுதும் நமக்கு ஏற்படுகின்ற அனுபவங்கள் தாற்காலிகமானது தான் என்று சொன்னோம்.
அப்படியென்றால் ‘சித்’ தான் மனமா? என்ற கேள்வியெழலாம்.இல்லை, அப்படியில்லை.ஆத்மாவின் மித்யையான ஒரு அவதாரம் அது. அஞ்ஞானம் எனும் அவித்யையால் ஆவரணம் செய்யப்படும்பொழுது ஏற்படும் நிலை அது. ஆத்மாவினாலே உருவாக்கப் பட்ட ஆவரணம் அது. எவ்வாறு சூரியனால் நீர் ஆவியாகி மேகமாகி அந்த மேகங்கள் சூரியனையே மறைக்கின்றதோ அது போல் சத்சித்தால் உளவாக்கப்பட்ட அவித்யை எனும் ஆவரணம்-மறை- அந்த சித்தையே மறைத்து நமக்கு பௌதிக அனுபவங்களை உளவாக்குகிறது. அஞ்ஞான மறை என்றால் அறிவீனம் என்று பொருள் கொள்ளக் கூடாது; பௌதிக பொருள்கள் குறித்துள்ள அறிவு தான் அவித்யை எனப்படுகிறது.

இந்தக் கருத்தை சிறிது ஆழமாக அலசிப் பார்ப்போம்.
 நமது ‘மனம்’ என்பது சிந்தனைகள்-விசாரங்களின் சேகரங்களே. சிந்தனைகள்-விசாரங்கள் என்றால் மனம் எதை சங்கல்பித்து,அதற்கு உருவமும் பெயரும் கொடுத்து  அதற்கு விகார,குணப் பூச்சுக்களை பூசி தானே அந்த விகாரங்களுக்கு அடிமையாகி இன்பபடுவதோ துன்பப் படுவதோ ஆன அனுபவங்களை சிருஷ்டிக்கின்றனவோ அவையே சிந்தனைகள்-விசாரங்கள். கரும்பு இனிக்கும்; பாகற்க்காய் கசக்கும் என்பது போன்ற எண்ணங்களை சங்கல்பித்து, சந்தோஷிக்கிறது, அல்லது துக்கிக்கிறது.
இதற்கு சரியான உதாரணம் கயிறில் பாம்பைக் கண்ட ஜீவனின் அனுபவம் தான். இருட்டில் கயிறைக் காணும் பொழுது ஜீவாத்மா அதை பாம்பு என்று நினைக்கின்றது அப்படி நினைக்கின்றபொழுது பாம்பைக் கண்டால் என்ன பயம் ஏற்படுமோ அதே பயம் நம்முள் உண்டாகிறது.நாக்கு குழறுகிறது,உடம்பு வியர்க்கிறது. அந்தக் கயிறைக் கண்டபொழுது ஏற்படுகின்ற விகாரமானது நம் மனதின் கற்பனையால் உருவானது. கயிறில் பாம்பை சிருஷ்டிக்கின்றது மனம். யாராவது விளக்கை எடுத்து வந்து அது பாம்பல்ல, கயிறு தான் என்று நிரூபிக்கும்பொழுது நமது பயம் விலகி மற்ற விகாரங்களுக்கு இடம் கொடுக்கிறது.
அதே போல் நம் வீட்டு கதவை யாரோ தட்டுகிறார்கள்; போய் திறக்கிறோம்; அங்கு நிற்பவரைப் பார்க்கும்பொழுது எங்கோ எப்பொழுதோ பார்த்த ஒருவரின் ஞாபகம் நம் உள் மனதில் எழுகிறது; நம்மை அறியாமல் அவர் மீது வெறுப்பு உளவாகிறது; அந்த வெறுப்பின் காரணமாக நம்  நாவிலிருந்து தடித்த வார்த்தைகள் வெளிவருகின்றன;முன் பின் தெரியாத ஒருவரிடம் நமக்கு விரிசலுள்ள உறவு முளைக்கிறது.
ஒரு இளைஞன் ஒரு யுவதியைப் பார்க்கிறான்; விரும்ப ஆரம்பிக்கிறான்;அவனது தாய்-தந்தையர் ;தோழர்கள் எல்லோரும் “இவளைப் போய் எப்படி விரும்பினாய்” என்று கேட்கிறார்கள். பதிலில்லை; மனம் செய்யும் சித்து விளையாட்டு.
இப்படி நினைவலைகள் நம்மில் உளவாகுவத்ற்கு முன்னோடியாக—அல்லது முதல் படியாக நம்மில் உளவாவது ‘ நான்” என்ற எண்ணம் தான். அதன் பிறகு அந்த “நான்” தனக்கு வெளியில் பார்க்கும்பொழுது தான் மற்ற நினைவுகள் உண்டாகின்றன.’நான்’ உருவான பிறகு உண்டாகின்ற நினைவுகள் எழுகின்றன, அழிகின்றன; ஆனால் ‘நான்’ என்ற எண்ணம் மட்டும் ஸ்தாயியாக இருந்து கொண்டே இருக்கிறது, இந்த முதல் எண்ணம் ஜாக்ரத்தில் கர்மேந்திரியங்கள் வழியாகவும் சொப்னத்தில் ஞானேந்திரியங்கள் வழியாகவும் செயலாற்றி மேலும் மேலும் எண்ணங்களை உற்பத்தி செய்கின்றது.
ஆகவே மனம் என்பது ‘நினைப்பவனையும்’ நினைப்பவைகளையும்’ ஒரே நேரத்தில் பிரதிபலிக்கின்றது.
இந்தக் கருத்தை பகவான் ரமணர் தனது ‘உபதேச உந்தியாரில்’ எவ்வளவு அழகாக சொல்கிறார் பாருங்கள்:
      எண்ணங்க ளேமனம் யாவினு நானெனு
           மெண்ணமே மூலமா முந்தீபற
           யானா மனமென லுந்தீபற
                உ.உ சுலோ 18
 ‘நான்’ எனும் எண்ணம் எழுந்த பிறகு தான் ‘நான் ஆண்’, நான் பெண்’  ;நான் வக்கீல், நான் மருத்துவர்” என்றெல்லாம் தோன்ற ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் ‘நான் யார்’ என்ற கேள்வியே கேட்காமல் இந்த ‘உடல் தான்  நான்’ என்ற குழப்பமான எண்ணம் தோன்றுகிறது. ஆகவே உடலுக்கு ஏற்படுகிற இன்பங்கள் துன்பங்கள் ‘நானுக்கு’ ஏற்பட்டதாக  நினைப்பு தோன்றுகிறது.
ஒரு உடலுடன் தன்னை சொருமித்து பார்க்க துவங்கிவிட்டால் அந்த உடம்பிலிருந்து மாறுபட்டவை- வேறுபட்டவையெல்லாம் ‘நானல்ல’ என்ற எண்ணம் உண்டாகிறது. அப்படி நம் உடம்பிலிருந்து வேறுபட்டவைகளுக்கு ரூப நாமங்கள் வழங்குகிறோம்; அவைகளை நன்றாக இருக்கிறது; நன்றாக இல்லை;என்ற குண விசேஷங்களை சார்த்துகிறோம்,நாம் சார்த்துகின்ற குணவிசேஷணங்கள் நம்மில் ஏற்படுத்துகின்ற தாக்கத்தால் நமது எண்ணங்களும் விருப்பு வேறுப்புகளாக உருவெடுக்கின்றன.
மனம் என்பது இவ்வாறு இரு கூறுகளாக உளது; முதலில் சுத்த சைதன்யமான ஆத்மா; அதன் மீது அஞ்ஞானமாகின்ற மறை விழும்பொழுது ஏற்படுகின்ற எண்ணக்குவியல்களாலான மனம் இன்னொன்று. இவை ஒன்றுக்கொன்று மாறுப்பட்டு-பரஸ்பர விரோதமாகவும் உள்ளன,
“உள்ளது நாற்பது’ நூலில் பகவான் இதை விளக்குகிறார்:
           சடவுடனா நென்னாது சச்சித் துதியா
           துடலளவா நானோன் றுதிக்கு---மிடையிலிது
           சிச்சடக்கி ரந்திபந்தஞ் சீவனுட்ப மெய்யகந்தை
           யிச்சமு சாரமன மெண்ணென்னே---விச்சை
           உருப்பற்றி யுண்டா முருப்பற்றி நிற்கு
           முருப்பற்றி யுண்டுமிக வோங்கு===முருவிட்
           டுருப்பற்றுன் தேடினா லோட்டம் பிடிக்கு
          முருவற்ற பேயகந்தை யோர்வாய்--- கருவாம்
                           உ.நா சுலோ 24-25
எந்த எண்ணமில்லாத சத் சித்  தான் ‘நான்” என்று நமது ஆத்மா சொல்லுவதில்லை, ; அதே போல் ‘சித்’ இல்லையேல் இந்த உடம்பும் ‘நான்’ என்று கூறுவதற்கில்லை.சத் சித் எழுவது மில்லை பிறப்பதுமில்லை; அது இருக்கிறது அவ்வளவு தான்;
நிர்விகாரமான, நிச்சலமான சித்திற்கும் சைதன்யமே இல்லாத இந்த உடம்பிற்கும் நடுவில் ஒரு உறவு ஏற்பட்டு “நான்” உதிக்கின்றது.இந்த உறவை முன்னொரு மடலில் சித்-சட பந்தனம் என்று குறிப்பிட்டிருந்தோம் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.இந்த உறவு மூலம் ஸூக்ஷ்ம சரீரத்திற்கு காரணமான ’அகம்’ ஜனிக்கிறது. அகம் மேற்கொண்டு மனோ ருபமாக பிரபஞ்சத்தை சிருஷ்டித்து அதில் ஆழ்ந்து விடுகிறது.
இந்த ‘அகம்’ ஒன்றிலிருந்து மற்றொன்றை உருவாக்கி அதைப் பற்றிக் கொண்டு வளம் கொழிக்கிறது;ஒரு உடல் உபயோகமில்லாதாகும்பொழுது இன்னொரு உடலைப் பற்றிக்கொள்கிறது. ஆனால் இந்த’ நான் யார்’ என்ற கேள்வி கேட்டு விட்டாலோ அந்த அகந்தை பேய் ஓட்டம் பிடித்து விடும்.ஏனென்றால் ‘அகந்தைக்கு’ உண்மையான அஸ்த்தித்வம் கிடையாது. பொய்யான மாயாவி அது. ‘யார் நீ’ என்று கேட்டு விட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் மறைந்து விடும்.
இதையே ‘உபதேச உந்தியாரிலும்’ பகவான் கூறியுள்ளார்:
           மனத்தி னுருவை மறவா துசாவ
     மனமென வொன்றிலை யுந்தீபற
     மார்க்க நேரார்க்குமி துந்தீபற
உ உ 17
மனம் என்றால் என்ன என்று இடைவிடாமல் விசாரித்தால் மனம் என்று ஒன்று கிடையாது என்று தெரிய வரும்; எல்லாமே ஒன்று தான் என்று புரியும். இப்படி விசாரித்தறிவதே எல்லோருக்கும் நேரான வழி எங்கிறார் பகவான்.
உபதேசவுந்தியாரில் இருபதாம் சுலோகத்தில் மீண்டும் பகவான் கூறுகிறார்:
           நானொன்று தானத்து நானாநென் றென்றது
                தானாகத் தோன்றுமே யுந்தீபற
                தானது பூன்றமா முந்தீபற
                     உ உ 20
‘நான் யார்” விசாரித்தால் “பொய்மை நானும்’ “சத்ய நானும்” லயித்து ஒன்றாகும்பொழுது சத் சித் தானாகவே தோன்றும்; அது தான் பூரணமானது;எல்லையற்றது; அத்துவைதமானது என்று விளங்கும்.
இதையே “ஆன்ம வித்தை” எனும் நூலிலும் பகவான் விளக்கியுள்ளார்:
          
ஊனா ருடலிதுவே நானா மெனுனினைவே
           நானா நினைவுகள்சே ரோர்நா ரெனுமதனா
           னானா ரிடமெதென்றுட் போனா நினைவுகள்போய்
           நானா னெனக்குகையுட் டானாய் திகழுமான்ம---
                ஞானமே; இதுவே மோனமே; ஏக வானமே;
                           இன்பத்  தானமே
                                     ஆ.வி சுலோ 2
“ஊனால் உருவான—சதைப் பிண்டமான உடல் தான் நான்” என்ற ஒரு மெல்லிய கயிற்றில்த் தான் நமது எல்லா எண்ணங்களும் நினைவுகளும் கட்டப் பட்டிருக்கின்றன. ஆகவே இந்த எண்ணம்—அதாவது ‘இந்த பூதவுடல்தான் நான்” என்கின்ற எண்ணம் எங்கிருந்து உண்டானது, எப்படி உண்டானது ,உண்மையான ‘நானின்’ இருப்பிடம் யாது என்று ஆராய்ந்தால் நமது எண்ணங்களெல்லாம் மாயமாய் மறைந்து விடும்.அப்பொழுது தெரியும் அந்த ஞானக்குகையில் சுத்த சைதன்னியமான சித் ஒளிர்ந்துகொண்டிருக்கும். இதுவே மௌனம். இதுவே துவிதமில்லாத ஒன்று; இதுவே அந்தமில்லாத சாந்தியின் இருப்பிடம்
ஆனால் இப்படி ‘நான் யார்” எனது இருப்பிடம் எது” என்று விசாரிதறிவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு அருணாசலனின் அருள் வேண்டும்.அருணாசலனின் அருள் எனும் மாய மை கிடைத்துவிட்டால் நமது அத்துவிதமான, நித்ய சாந்தி அளிக்க்க் கூடிய சித்தை ஆவரணம் செய்துள்ள மறைத்துள்ள மேகபடலங்கள் மறைந்துவிடும், நாம் மாயா மயக்கத்திலிருந்து விழித்துக்கொள்வோம்.அந்த “அருள் மை” வேண்டி பகவான் நம் சார்பில் பிரார்த்திக்கிறர் அக்ஷரமண மாலையின் இந்த சுலோகத்தில்.
மைமய னீத்தருண் மையினா லுனதுண்
          மைவச மாக்கினை யருணாசலா