Saturday, 29 August 2015

ரமணஜோதி 118

ரமணஜோதி 118

ஞானம்-அக்ஞானம்-அன்யதா ஞானம்


     வாவென் றகம்புக்குன் வாழ்வரு ளன்றேயென்
      வாழ்விழந்தேந் தேனரு ளருணாசலா
“நீ வா என்றழைத்தவுடன் நான் உன்னுள் ஐக்கியமாகிவிட்டால் என்னையே இழந்தவனாகி விடுகிறேன்.அது உன் அருளேயருணாசலா” என்று பகவான் இந்த சுலோகத்தில் சொல்லுகிறார்.
இன்னொரு விதத்தில் சொல்லப் போனால், ‘ வா என்று நான் அழைத்தேன்; நீ என்னுள் வந்து பிரேகவேசித்தாய்; நான் இல்லாமலாகிவிட்டேன்.அதுவும் உன் அருளே அருணாசலா”
நான் யார் என்று விசாரித்தறிந்து நானே பிரம்மம் என்ற வெளிப்பாடு உண்டாகின்ற பொழுது ‘நான்’ இல்லாமலாகிவிடும். அஹம் நாசமடையும் பொழுது ஆத்மா பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுகிறது என்கிறார் பகவான்
இன்னும் சற்றே ஆழ்ந்து சிந்தித்தோமென்றால் ஒன்று புரியும் எல்லா ஜீவன்களும் சுதந்திரத்திற்க்காக—முக்திக்காக ஏங்குகின்றன. அடுத்தவன் நம்மை விட பெரிதாக வளர்ந்து நம்மை கீழ்ப்படுத்திவிடுவானோ என்ற பயத்தின் விளைவாக ஆயுதங்களை உற்பத்தி செய்து சேகரித்து வைக்கின்றான் மனிதன். ஒவ்வொரு நாடும்.அதே போல் ஒவ்வொரு மனிதனும் நாளைக்கு மற்றொருவனிடம் கையேந்தி நிற்க வேண்டி வந்து விடுமோ என்ற அடிப்படை அச்சத்தின் விளைவாக தன தான்யங்களை சேர்த்து வைக்க முயலுகிறான். எடற்காக்? நமக்கு யாரையும் அண்டிப் பிழைக்கவேண்டி வரக்கூடாது; அதனால் ஏற்படக்கூடிய அசாந்தி உண்டாகக் கூடாது; என்பதற்காக. ஆனால் எவ்வளவு சொத்து சேர்ந்தாலும் எவ்வள்வு பலசாலியாக இருந்தாலும் அவன் எதிர்பார்க்கின்ற சாந்தியும் ஆனந்தமும் கிடைப்பதில்லை, அந்த முயற்சிகளிலிருந்து கிடைக்கின்ற திருப்தியும் சந்தோடமும் அனித்தியம் என்று அவன் உணருவதில்லை.
ஆனால் உண்மையான சந்தோடமும் சாந்தியும் தன்னிடமுள்ள பொருள்களை தியாகம் செய்யும்பொழுது தான் கிடைக்கும் என்று அவன் புரிந்து கொள்வதில்லை.
திருவாரூரில் குடிகொண்டுள்ள ஈசுவரனுக்கு தியாகேசன் என்று பெயர். அவனுக்கு அந்த பெயர் எப்படி வந்தது? தேவர்களும் அசுரர்களும் பாலாழியை மந்தர பர்வதத்தை மத்தாகவும் வாசுகி எனும் சர்ப்ப ராஜாவை கயிறாகவும் எடுத்துக்கொண்டு கடைந்தபொழுது ஆலகால விஷம் முதலில் கொப்புளித்து வந்தது. அதைக் கண்டு தேவர்களும் அசுரர்களும் ஓடினார்களும் பரமசிவன் அவர்களை காப்பதற்காக தன் ஜீவனுக்கு ஏற்படக்கூடிய பேரபாயத்தைக் கூட பொருட்படுத்தாமல் ஆலகாலத்தை விழுங்க தயாரானார்.அந்த தியாக உணர்வினால் அவர் தியாகேசன் என்றழைக்கப்படுகின்றார்.
நாம் பஸ்ஸில் போகின்ற பொழுது நமக்கு வசதியாக ஒரு இருக்கை கிடைத்தது என்று வைத்துக் கொள்வோம்.நமதருகில் ஒரு கால் முடியாத வயோதிகர் நிறு கொண்டு வருவதை பார்க்கின்றோம்.நம் மனதுள் ஒரு போராட்டம். நமது மனசாட்சியின் குரல் அவருக்கு நமது இருக்கையை விட்டுக்கொடுக்க தூண்டுகிறது .நமது சுயனல விரும்பியான மனது ‘ நாம் விட்டுக் கொடுப்போம்; அவரும் உடகார்ந்து வருவார்; அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்று விடுவார்; வேறொருவர் அந்த இருக்கையிலமர்ந்து விடுவாற்; நாம் ஏமாளியாகி கடைசி வரை நின்று கொண்டே வர வேண்டியது தான்”. என்று வாதாடுகிறது.
சுயநலவாதம் வென்று நாம் வசதியான பயணத்தை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று படுத்து உறங்க முயலும் பொழுது நமது மன சாட்சி விழித்துக் கொண்டு, “நாம் தவறு செய்து விட்டோம்’ என்று குத்திக்காட்ட ஆரம்பிக்கும். சாந்தியை இழந்து, உறக்கத்தையும் இழந்து தவிப்போம்.’தாற்காலிகமான வசதிக்காக ஒரு வயோதிகரை கஷ்டத்துக்குள்ளாக்கிவிட்டோமே’ என்று சங்கடப் பட நேரிடும்
நேர்மாறாக இருக்கையை அவருக்கு விட்டுக்கொடுத்து விட்டு சற்று நேரத்திற்கு கஷ்டபட்டுக்கொண்டு பயணித்து விட்டு வீட்டுக்கு வந்தால் சாந்தியும் நல்ல உறக்கமும் கிட்டும்.தாற்காலிக சுகத்தை தியாகம் செய்ததினால் நமக்கு கிடைக்கின்ற சாந்தி அலாதியானது.
இவ்வள்வு ஏன்? எல்லோருமே விரும்புவது சுஷுப்தியை, நி.ம்மதியான உறக்கத்தை. உறக்கத்தில் நம்முடன் பதவி, பெயர், புகழ், சொத்து, செல்வம் எதுவும் இல்லை.ஏன்? நம் உடல் கூட இருப்பது தெரியாது. அப்பொழுது—ஒன்றுமே இல்லாத பொழுது  பரமானந்தம் கிடைக்கிறது.
எல்லாவற்றையும் தியாகம் செய்தவர்களை நாம் மஹாத்மா என்கிறோம்.
மற்றெல்லா ஜீவராசிகளும் இயற்கை—பிரகிருதி—யோடு இணக்கமாக வாழும்பொழுது மனிதன் மட்டும் இயற்கையை பணிய வைக்கவேண்டும்; வெற்றிக்கொடி நாட்டவேண்டும் என்று முயன்று தோல்வியை தழுவுகிறான்; அசாந்தியை தேடிக்கொள்கிறான்.
ஆனால் எந்த விதமான செயற்கையான ஆயுதங்களும் இல்லாமல், வெறும் குடிசைகளில் வாழ்ந்துகொண்டு கொண்டு இயற்கையில்  கிடைக்கின்ற காய்கனிகளிலும் சூரிய கிரணங்களை அனுபவித்து இயற்கயான காற்றை சுவாசித்துக்கொண்டு விசார மார்க்கத்தில் சஞ்சரித்து நித்திய சாந்திக்கான மார்க்கங்களை  நமக்கு எடுத்துரைத்த பாரத தேசத்து முனிகளை- மஹரிஷிகளை நாம் மஹாத்மா என்று சொல்வதில் என்ன தவறு?
அவர்கள் இயற்கையை வென்றவர்கள்; பீரங்கிகளோ அணு ஆயுதங்களோ இல்லாமல் தாங்கள் பெற்ற ஞானத்தின் மார்க்கமாக.
 இந்த ப் பற்றி பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார்.
     வீதராகபயக்ரோதா மன்மயா மாமுபாஸ்ரீதா:!
   பஹவோ ஞானதபஸா பூதா மத்பாவமாகதா: !!
                ப.கீ அத் 4 சுலோ 10
ஆசை,அச்சம், சினம் நீங்கியவர்களாக என் மயமாய், என்னை அடைக்கலம் புகுந்து, ஞானதபசால்  புனிதர்களாய் என் இயல்பை எய்தினவர் பலர்.
இஹலோக சுகபோகங்களையெல்லாம் தியாகம் செய்துவிட்டு பரமனோடு ஐக்கியமானவர்கள் ஞானிகள்; அவர்கள் பரபிரம்மமே ஆகிவிடுகிறார்கள்
பகவத் கீதையில் தெய்வீக குணங்களை விவரிக்கும்பொழுது கிருஷ்ணர் கூறுவார்:
          அஹிம்ஸா ஸத்யமக்ரோதஸ்த்யாக: சாnதிரபைசுனம்!
     தயா பூதேஷ்வலோலுப்தவம் மார்தவம் ஹ்ரீரசாபலம்!!
                                ப்.கீ.அத்.16 சுலோ 2
யாரையும் ஹிம்சிக்காமல்—மனஸா வாசா கர்மணா- ஹிம்ஸிக்காமல்-இருப்பது, உண்மையாக இருப்பது, கோபப்படாமல் இருப்பது, தியாகம்செய்வதற்கான மனம், சாந்தி,அபைசுனம்-கோள் பேசாமல் இருப்பது,,மற்ற ஜீவராசிகளிடம் கருணையுடன் செயலாற்றுவது, பௌதிகசுகபோகங்களில் இச்சையற்று இருப்பது இனிமையும் மென்மையுமாக வர்த்தித்தல்,சபலமின்மை இதெல்லாம் தான் தெய்வீக குணங்கள் என்று பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்.
நாம் ஏன் மற்றவர்களுக்கு-மற்ற ஜீவராசிகளுக்கு தீங்கு செய்கிறோம்? அவை நம்மிலிருந்து வேறானவை;அவை நம்முடையதோ தெய்வத்தினுடையதோ அமசமில்லை என்ற எண்ணம் மேலோங்கும்பொழுது தீங்கு செய்கிறோம்.எல்லா ஜீவராசிகளும் நம்முடைய—பிரம்மத்தினுடைய அம்சம் தான் என்று நாம் உணர்ந்து விட்டால் நமக்கு நாமே தீங்கு இழைத்துக்கொள்ள மாட்டோமல்லவா?
நமக்கு ஏன் மற்றவர்களிடம் கோபம் வருகிறது? நாம் விரும்பும் பொருள் கிடைக்காத பொழுது நமக்கு கோபம் வருகிறது. நாம் வேண்டின பொருள் இன்னொருவருக்கு கிடைக்கும் பொழுது கோபம் வருகிறது. கோபம் நமது இச்சை மறுக்கப்படும்பொழுது வருகிறது ராகத்தை- இச்சையை தியாகம் செய்து விட்டால் பற்ற்ற்று இருந்து விட்டால் ஏமாற்றம் உண்டாகாது; கோபமும் உண்டாகாது.
பகவான் பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயத்தில் கூறியதை இங்கே நினைவு கூருவது நல்லது.. சுலோகம் 62- 63
த்யாயதோ விஷயான்பும்ச: சங்கஸ்தேஷூபஜாயதே !
ஸங்காத் ஸஞ்சாயதே காம: காமாத் க்ரோத: அபிஜாயதே !!  
க்ரோதாத்பவதி ஸம்மோஹ:சம்மோஹாத்ஸ்ம்ரிதிவிப்ரம: !
ஸ்ம்ரிதி-ப்ரமாசாத்புத்தினாசோ புத்தினாசாத்ப்ரணஸ்யதி !!
பொருள்களை நினைப்பதால் அவைகளின் மீது பற்றுண்டாகிறது.பற்று ராகமாக-ஆசையாக பரிண்மிக்கிறது.ஆசை நீறைவேறாத பொழுது சினமாக உருவெடுக்கிறது.
சினம் மனத்தை பேதலிக்க செய்கிறது; நம்மால் சரியான முடிவெடுக்க முடியாமல் போகிறது;அப்படிப்பட்ட குழம்பிப் போன மன  நிலையிலிருந்து
மறதி எனும் வியாதி, அதிலிருந்து புத்தி நாசம் பிறகு சர்வனாசம் சம்பவிக்கிறது.
ஆக எல்லாவற்றிற்கும் காரணம் ‘மற்ற’ பொருள்களின் மீது நமக்குண்டாகும் பற்று தான்.           
 “நான்’ என்பது பிரம்ம்மே ; என்னையின்றி வேறொன்றில்லை” என்ற ஞானம் நமக்கு உண்டானால் “மற்ற” என்ற உணர்வு அற்றுப் போய்விடும்; பாசமும் அற்றுப் போய்விடும்.
ஆனால் நம்முடைய உண்மையான சொரூபமான பிரம்மம் முப்பரிமாணமாக நமக்கு காட்சியளிக்கிறது. காண்பவன்,காண்கின்றபொருள், காணுகின்ற செயல் என்ற முப்பரிமாணத்தினால் ஒரே பொருள் நமக்கு இந்த பிரபஞ்சமாக காட்சியளிக்கிறது. இது நம்முடைய அக்ஞானத்தினால் தான்.அக்ஞானத்தின் காரணமாக இந்த பரஸ்பர பந்தம் உளவாகிறது.
இது அக்ஞானம் என்று கூறுவது தவறு. இதுவும் ஒரு ஞானமே.இதை நமது முன்னோர்கள் “அன்யதா ஞானம் என்று கூறினார்கள்.. ஒரே பொருளை பலதாக காண்பது, கயிறை பாம்பாக காண்பது, கடல் சிப்பிகளை வெள்ளியாக காண்பது, நல்லவர்களை கெட்டவர்களாக காண்பது இதெல்லாம் அன்யதா ஞானம் தான்.
ஆகவே தான் பகவத் கீதையின் 16 ஆம் அத்தியாயம் இரண்டாம் சுலோகத்தில் கிருஷ்ண பகவான் “அபைசுனம்” என்றொரு வார்த்தையை உபயோக படுத்தியுள்ளார்.
“பைசுனம்” பிறரைப் பற்றி புறம் பேசுதல் என்று பொருள். மற்றவர்கள் என்னசெய்கிறார்கள் என்பதில்த்தான் லௌகீக மனிதர்களின் பார்வை.
அடுத்தவர்களைப் பற்றி யோசிக்காமல் இருப்பது “அபைசுனம்”.
இந்த குணம் தெய்வீகமானது.
ரமண பகவான் ‘பைசுன” குணத்தை பலமுறை பக்தர்களிடம் கண்டித்து பேசியுள்ளார்.
ஒரு முறை ஒரு பக்தர் பகவான் சன்னிதியில் பகவானின் உபதேசங்களை செவிக்கொள்ளாமல் தூங்கிவிடுவார், இதைக் கண்ட இன்னொரு பக்தர் பொறுத்து பொறுத்து பார்த்தார். ஒரு  நாள் பகவானிடம் உறங்குகின்ற பக்தரை சுட்டிக்காட்டி, ‘பகவான் அவரை கண்டிக்க வேண்டும்” என்று வேண்டினார்.
“ அப்படியா சங்கதி! எத்தனை நாளாக இப்படி செய்கிறார்?” என்று பகவான் வினவினார்.
“ நான் நாலு நாளைக்கு முன் வந்தேன். அன்றிலிருந்து இப்படித்தான் செய்கிறார். வர வேண்டியது; உட்கார வேண்டியது.பகவான் பேச்சை ஆரம்பித்த்தும் உறங்க ஆரம்பித்து விடுகிறார்.”
“நீர் எதற்கு ஓய் வந்திருக்கிறீர்? மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நோட்டமிடவா? இல்லை என் பேச்சைக் கேட்பதற்கா? அவரவர்கள் வேலையை பார்க்கணும். மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டுப் போகட்டும் .உமக்கு என்ன ஓய் நஷ்டம்?”
கேள்வி கேட்ட பக்தருக்கு தன் தவறு புரிந்த்து.
இதே  போல் ஹிடலரைக் குறித்து ஒரு பக்தர் கேள்வி கேட்டார்.
பகவான் சொன்னார்,” மற்றவர்களைப் பற்றி அபிப்ராயம் சொல்ல  நான் யார்? அவரவர்களுக்கு விதிக்கப் பட்ட கருமங்களை அவரவர்கள் செய்கிறார்கள். அதில் மற்றவர்கள் கருத்து சொல்வது சரியாகாது”
மஹாபாரத்த்தில் துரியோதனன் துர்குணங்களைக்கொண்டவன்; சாமானிய மனிதர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானவன். அவன் மரிக்கும் தறுவாயில் கிருஷ்ணர் அவன் அருகில் சென்றார். அப்பொழுது துரியோதன்ன் கிருஷ்ணனிடம் கேட்டான்,” கிருஷ்ணா, நான் எனக்கிட்ட கருமத்தை நன்றாக செய்தேன?”
துரியோதனன் பாண்டவர்களுக்கும் முன்னால் சுவர்க்கத்தை அடைந்த்தாக மஹாபாரதத்தின் முடிவில் கூறப்படுகிறது.
ஆகவே முக்தியென்றால் என்ன என்பதை சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.
முக்தி என்பது பௌதிக-லௌகீக வஸ்துக்களிடம்  நமக்குள்ள பற்றுதலை விடுதலே ஆகும்.அப்படி விடுவதற்கு, நம்முடைய உண்மையான சொரூபம் அத்வைதமான பிரம்ம்மே என்று உணர வேண்டும்.காண்பவன், காண்ப்படும் பொருள், காட்சி என்ற ‘த்ரிபுடி” அக்ஞானத்தை விட வேண்டும்.
இது அக்ஞானமேயல்ல; இதுவும் ஒரு விதமான ஞானமே. இது தான் அன்யதா ஞானம் என்பது.ஒரு பொருளை மற்றொன்றாக காண்பது. ஒன்றை பலதாக காண்பது என்பதைத் தான் அன்யதா ஞானம் என்கிறார்கள்.இதன் அழிவு தான் முக்தி. முக்தியென்பது எல்லாம் ஒன்றே என்ற ஞானம் அடைவதே.
ஆகவே தான் வேதங்களில் “தரதி சோகமாத்மவித்”—எவனொருவன் ஆத்மாவின் உண்மையான சொரூபத்தை அறிகிறானோ அவன் சோகமயமான சம்சாரசாகரத்தை கடந்தவனாகிறான் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் கூறியுள்ளார்கள்,” ப்ரம்மவித் ப்ரம்மைவ பவதி” என்று.
பிரம்ம்மத்தின் உண்மையான சொரூபத்தை அறிந்தவன் பிரம்ம்மாகவே ஆகிவிடுகிறான்.
இதையே தான் பகவான் ரமணர்,ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள சுலோகத்தில் கூறியுள்ளார்,’’ நீ என்னுள் வந்து சேரும்பொழுது நானில்லாமலாகி விடுகிறேன்” என்று
வாவென் றகம்புக்குன் வாழ்வரு ளன்றேயென்
      வாழ்விழந்தேந் தேனரு ளருணாசலா


     

No comments:

Post a Comment