ரமணஜோதி 109
மௌனம் யாது?
மௌனியாய்க் கற்போன் மலராதிருந்தான்
மௌனமிதாமோ வருணாசலா
“ பாறை போல் வாய் மலர்ந்து ஒன்றுமே அருளாமலிருந்தால்,இது உனக்கு அழகோ,
அருணாசலா? இந்த மௌனம் உனக்கேற்றதா,அருணாசலா?” என்று பகவான் கேட்கிறார்.
, பகவான் முன்னொரு சுலோகத்தில் அருணாசலமே தனது குரு என்றும் அந்த அருணாசலம்
கிருபையின் மொத்த உருவம் என்று கூறியது நமக்கு ஞாபகம் இருக்கும்.
குற்றமுற் றறுத்தெனைக் குணமாய் பணித்தாள்
குருவுரு வாயொளி ரருணாசலா !
அ..மண.மாலை சுலோ
19
அருணாசலம் தான் பகவான் ரமணரின் குரு என்று இதிலிருந்து அர்த்தமாகிறது.
அருணாசலம் எனும் மலை ‘குருவுருவாய்” ஒளிர்ந்து கொண்டிருக்கும்.ஆனால் அது மௌனமாக
இருக்கும்.அந்த அருணாசலம் தனது ஒளியினால் நமது குறைகளையெல்லாம் அழித்து நம்மை
குணவாங்களாக்கிவிடும். அப்படிப்பட்ட அருணாசலமோ
கிரியுரு வாகிய.கிருபைக் கடலே
என்று பகவான் 17 வது சுலோகத்தில் கூறியுள்ளார்.
இப்படி மௌனமூர்த்தியான மலை தான் குரு என்று கூறும் பகவான் ‘மௌனத்திற்கு பல
சந்தர்ப்பங்களில் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு முறை பேச்சின் நடுவில் பகவான், “ சங்கரர் தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தை
மூன்று பிரிவுகளாக பிரித்து எழுதியிருக்கிறார். தக்ஷிணாமூர்த்தியை ஸ்தோத்திரம்
செய்யவேண்டுமென்று சங்கல்பித்து கொண்டார்.ஆனால் ஔனத்தை என்னவென்று துதிப்பார்?
ஆதலால் சிருஷ்டி, ஸ்திதி, லயங்களைப் பிரித்துச் சொல்லி, இவையெல்லாவற்றிற்கும்
விலக்ஷணமான (வேறுபட்ட) தக்ஷிணாமூர்த்திக்கு நமஸ்காரம் என்று ஸ்தோத்திரம் செய்தார்.
இதைவிட மௌனத்தைத் துதிப்பது எப்படி?” என்றார்.
எவ்வளவு அருமையான விளக்கம்! மௌனம் ஸ்திதி,சிருஷ்டி, நாசம் (லயனம்)
எல்லாவற்றிற்கும் அப்பாற்ப்பட்ட நிச்சலனமான ஒரு நிலை.
அதே சம்பாஷணையில் பகவான் ‘ மௌனம் என்பது ஆத்மஸ்புரணையே!” என்றும் கூறினார்.
ஆன்மாவின் ஸ்புரணை ஏற்பட்டால் சலனங்கள் அற்றுப் போகின்றன.அங்கு பேரமைதி நிலவும்.
பகவான் சொல்வார் ,” மௌனம் என்று சொல்லிக்கொண்டே தாங்கள் சொல்ல வேண்டியதை
எழுதிக் காட்டுகிறார்கள்.அதெல்லாம் வியவகார மில்லையா?( மௌனமாகாது).”
“ வெளியிலிருந்து ஏற்படுகின்ற இடையூறுகளைப் போக்கடிப்பதற்கு ஒருவர் வாங் மௌனம்
அனுஷ்டிக்கலாம்.ஆனால் அது தான் யதார்த்தமான மௌனமென்று அவர் நினைத்து
விடக்கூடாது.மௌனம் என்றாலே இடையறாத பேச்சுத் தான். அதை அடைவது என்றில்லை. அது
எப்போதுமுள்ளது. அதை மறைக்கின்ற சித்த விருத்திகளை களைந்தெறிய வேண்டுமே தவிர, அதையடைவதற்கு
முயற்சி வேண்டியதில்லை”.
“ சிரவண மனமாதிகள் பாஹ்யம்,ஆந்தரம் என்று இரு வகை.ஆந்தர சிரவண மனனங்கள் மனம்
பக்குவம் அடைந்து ஸ்புரிக்க வேண்டும்.”
“ எப்பொழுதும் ஹ்ருதய குகையில் ‘அஹம்,அஹம்’ என்று பிரகாசிக்கும் ஆத்ம
ஸ்புரணையை அறிவதே ஆந்தர சிரவணம்.அதிலேயே நிலையாக நிற்கப் பழகிக் கொள்வது ஆந்தர
மனனம்.’நான்’ தானாக நிற்பது நிதித்யாசம்.”
மேற்கூறிய பகவானின் கருத்துக்கள் பகவான் அருளிச்செய்த ‘ஹ்ருதய குஹர மத்யே’
எங்கிற சுலோகத்தில் தெளிவாக கூறியுள்ளார்:
ஹ்ருதய குஹர மத்யே கேவலம் ப்ரஹ்ம மாத்ரம்
ஹ்யஹ மஹமிதி ஸாக்ஷாத் ஆத்ம ரூபேண பாதி !!
ஹ்ருதி விச மனசா ஸ்வம் சின்வதா மஜ்ஜதா வா !
பவன சலன ரோதாத் ஆத்மனிஷ்டோ பவ த்வம் !!
“இதயமாம் குகையின் நடுவில் ஏகப் பொருளாக பிரம்மம் ,”நான்,நான்” என ஆத்ம ரூபமாக ஒளிர்கிறது.மனதினால் தன்னையெண்ணி இதயத்துள் சென்றோ, மூச்சையடக்கி அதனால் மனதை இதயத்தினுள் சூழ்ந்திட செய்தோ, இதயத்துள் ஆத்மாவில் நிஷ்டமாவாய்” எங்கிறார்
பகவான்.
‘நான்’ பூரணமாக சரணகதி அடைவது தான் மௌனம்;அங்கு பூரண சாந்தி
நிலவுகிறது.’மௌனம்’ என்பதை வார்த்தைகளால் வியாக்கியானிக்க முடியாது..மௌனத்தில்
எந்த சிந்தையும் கிடையாது.நிச்சலனமான மௌனத்தை நிலை பெறச் செய்ய முடியும் என்றால்
அது தான் முக்தி.
ஆதி குருவான தக்ஷிணாமூர்த்தி மௌனத்தையே தனது உபதேச மொழியாகக் கொண்டிருந்தார்.
பகவான் ரமணரௌம் அதே வழியில் தோன்றியவர்.
பகவானிடம் பக்தர் ஒருவர் கேட்டார்: “ மௌனம் எப்படி சக்தி வாய்ந்த உபதேச
மொழியாக முடியும்?”
பகவான் ஞானியொருவன் எந்த குகையில் உட்கார்ந்திருந்தாலும் அவரிடமிருந்து
வருகின்ற ஆன்மீக அலைகள் எல்லோரையும் அவரிடம் ஈர்க்கும்.அவர் ஒன்றும் பேச வேண்டியதே
இல்லை.குருவேன்பவர் ஆன்மீக ஒளியைக் காண்பிப்பவர்.மௌனத்திலிருந்து தான் பேச்சு
உளவாகிறது. பேச்சு என்பது மௌனம் சிந்தனையாகி வார்த்தைகளாக உருப்பெறுவது. மௌனத்தின்
பேரக்குழந்தைகளே பேச்சு. பேரக்குழந்தைகளுக்கே இவ்வளவு சக்தியிருக்குமென்றால்
பாட்டானாருக்கு எவ்வளவு சக்தியிருக்கும்?
ஸ்வாமி விவேகானந்தர் கூறியுள்ளார்,” மௌனம் தான் சக்திவாய்ந்த பிரார்த்தனை”
என்று..
No comments:
Post a Comment