Sunday, 5 July 2015

ரமணஜோதி 112

ரமணஜோதி 112

வாயில் மண்


                             யவனென் வாயின் மண்ணினை யட்டி
                        யென் பிழைப் பொழித்த தருணாசலா !
“ யார் என் வாயில் மண்ணை போட்டு என் பிழைப்பை இல்லாதாக்கியது அருணாசலா? நீ செய்திருந்தால் ஏன் செய்தாய் அருணாசலா?” என்கிறார் பகவான் இந்த சுலோகத்தில்.
‘ கிருபாக்கடல்’, குற்றமறுத்து குணமாய் பணித்தாளுகின்ற’ ஈன்ற அன்னையின் அன்பை விட மிகுதியான அன்புடைய, ஔவை போல் அன்பு செலுத்துகின்ற அருணாசலன் என்றெல்லாம் புகழ்ந்துரைத்துவிட்டு இந்த சுலோகத்தில் பகவான் அருணாசலன் தன் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டிருப்பான் என்று சந்தேகிப்பாரா?
நிச்சயம் அப்படியிருக்க முடியாது.
நாம் வாய் வழியாக உணவருந்துவதால் உடல் வளருகிறது. அதே போல் மனதில் எழுகின்ற விசார- விகார சித்த விருத்திகளுக்கு தீனி வேண்டுமல்லவா? அதற்கான உணவு நமது பஞ்சேந்திரியங்களின் மூலம் கிடைக்கிறது. கண் மூலம் காணுகின்ற காட்சிகள், காதுகளால் கேட்கின்ற ஒலிகள்,க்ராணேந்திரியமாகப்பட்ட  நாசியினால் கிடைக்கின்ற கந்தங்கள்(மணம்)
, த்வக்கினால் கிடைக்கின்ற ஸ்பரிச் சுகங்கள், னமது புலங்களுக்கு தீனி என்கிறார் பகவான் இந்த சுலோகத்தில்
.வஞ்சப்புகழ்ச்சி அல்லது  நிந்தாஸ்துதி எனும் வகையைச் சேர்ந்த்து இந்த சுலோகம்.
ஐம்புலக்கள்வர்கள் அகத்தில் புகுந்தால்த் தானே சாந்தி நஷ்டப்பட்டால் நாம் நாமல்லாதாகிவிடுகிறோம். நமது அடிப்படை சொரூபம் சாந்தமானது; தெய்வீகமானது.
தெய்வீகம் என்றால் என்ன? பகவத் கீதையை சற்றே பார்ப்போம்.
              அபயம் ஸத்வஸம்சுத்திர்க்னானயோகவ்யஸ்திதி:!
              தானம் தமஸ்ச யக்ஞஸ்சஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம் !!
                                ப.கீ அத் 16 சுலோ1
தெய்வீக குணங்கள் என்ன என்ன என்று பகவான் கிருஷ்ணர் விளக்குகிறார்.
அபயம்--- பயமில்லாதிருத்தல்
ஸத்வசம்சுத்தி—உள்ளத் தூய்மை
ஞானயோக வ்யவஸ்த்திதி---ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல்
தானம்—கொடை
தம:-----புறக்கரணங்களை அடக்குதல்
யக்ஞ---யஜனம் செய்தல்—யாகம் செய்தல்
ஸ்வாத்யாய:----ஸஸ்திரம் கற்பது
தப:---தவம் செய்தல்
ஆர்ஜவ--- நேர்மை
இதில் முதல் குணத்தை  எடுத்துக்கொள்வோம். பயமின்மை –பயம் ஏன் உண்டாகிறது?
நாம் விரும்புவது கிடைக்காமல் போய் விடுமோ என்ற ஆதங்கத்திலிருந்து எழும் பயம்.
அது கிடைத்துவிட்டாலும் நம்மிடம் நிரந்தரமாக தங்கியிருக்குமோ இருக்காதோ என்ற பயம்.
கிடைக்காமல் போனால் நம் நிலைமை என்னவென்ற பயம்.
கிடைத்தாலும் போதுமென்ற அளவிற்கு கிடைக்குமா என்ற பயம். ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்ற பொன் மொழி நமக்கு ஞாபகத்தில் இருப்பதே இல்லை.
நாம் வேண்டாதது நம்மை வந்து சேர்ந்து விடுமோ என்ற பயம்.அப்படி வந்து சேர்ந்து விட்டால் அதிலிருந்து விடுபடுவோமா என்ற பயம்.
நாம் விரும்பியது நாம் விரும்பாதவனுக்கு போய் சேர்ந்து விடுமோ என்ற பயம்
நாம் விரும்பாதவர்களுக்கு  நாம் விரும்பாத்து ஏன் நிகழ மாட்டேன் என்கிற ஆதங்கம்; அதிலிருந்து எழுகின்ற மனக்கவலை’
நடந்து போனால் கல் தடுக்கி விழுந்து விடுவோமோ என்ற பயம்.மழை பெய்து நாம் நனைந்து விடுவோமோ என்ற பயம்
அப்படி நனைந்து விட்டால் உடல் நலம் பாதிக்கப்படுமோ என்ற பயம்.
இபடி எதற்கெடுத்தாலும் பயம்.
பயம் நமது சித்த விருத்திக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த பயம் என்கிற விகாரம் ‘நான்’ என்பது ‘இந்த தேகம் தான்’ என்கின்ற நினைப்பிலிருந்து உளவாகிறது.அந்த் நினைப்பு நீங்கி உண்மையான ‘நான் யார்’ என்ற் புரிந்து கொள்ளும்பொழுது பயம் நீங்கிவிடும்.அதற்கு அருணாசலன் அருள் வேண்டும்.
இரண்டாவது குணமான உள்ளத் தூய்மை ‘நான் யார்’ என்ற ஞானத்துடன் தொடர்புடையது.உள்ளத்தால் யாருக்கும் தீங்கு நினைக்காத குணம் எப்பொழுது நமக்கு கிடைக்கும்? ‘நானும் பிரம்மம்;’ மற்றவையும் பிரம்மம் என்கின்ற தெளிவு ஏற்படும்பொழுது நாம் யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டோம்.எனென்றால் மற்றவர்களுக்கு தீங்கு என்றால் நமக்கும் தீங்கு தானே? அப்படி தீங்கு நினைக்காவிட்டால் நமக்கு மனக் கலக்கம் உண்டாகாது ; சாந்தி கிடைக்கும்.
ஞானயோக வ்யவஸ்திதி: ‘நான் யார்’ என்று தெரிந்து தெளிந்து அதே நிலையில் நிலைத்து நிற்கின்ற திறன். இதுவும் தெய்வீக குணமே.
தானம்: பிறருக்கு கொடுப்பதற்கு தயார் நிலை. தனக்கு இல்லையென்றாலும் பிறருக்கு உதவுகின்ற மனம். ‘தனக்குப் போக தானம்’ என்று நாம் திருத்திக்கொண்டுள்ளோம் இன்று. தனக்குப் போகவும் தானம் கிடையாது என்பது பலரது குணம்.தனக்கு இன்றைய தேவைக்கு மட்டும் போதாது; நமது ஏழு தலைமுறைக்கும் சேர்த்து வைக்க வேண்டும்; அதற்கு பின் தான் தானம் என்பது இன்றைய நிலை.இதுவே அசாந்திக்குக் காரணம்.
தம: புறக்கரணங்களை அடக்கும் திறன் வேண்டும்.அது இல்லையென்றால் தெய்வீக குணம் இல்லை என்று பொருள்.
யஜனம் செய்தல் என்றால் பிறருக்கு தீங்கு விளைவிக்கின்றவைகளை ஞானாக்னியில் அர்ப்பித்து  நம்மை நாமே புடம் போடவேண்டும். நம்மிடம் உள்ள பொருள்களையெல்லாம் பிறர் நலனுகாக ஹோமிக்க வேண்டும்.
ஸ்வாத்யாய என்றால் நல்லவைகளை கற்று தவம் செய்ய வேண்டும். கற்றவைகளை மற்றவர்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.
இந்த தெய்வீக குணங்களையெல்லாம் ஆர்ஜவமாக செய்ய வேண்டும்.ஆர்ஜவம் நேர்மை; உள்ளொன்று வைத்து புறமொண்று பேசாமல் மட்டுமல்ல செய்யாமலுமிருக்க வேண்டும்.
இந்த தெய்வீக குணங்களுக்கு எதிர்மறையானது  அசுர குணங்கள் . அவை யாவை. கீதாச்சாரியன் சொல்லுகிறான்:
          தம்போ தர்போஅபிமான்ஸ்ச க்ரோத: பாருஷ்யமேவ:ச: !
          அக்ஞானம் சாயிஜாதஸ்ய பார்த்த ஸம்பதமாஸூரிம்!!
                           ப்.கீஅத் 16 சுலோ 4
பகட்டும் இறுமாப்பும், தற்பெருமையும் சினமும், கடுமையும், அக்ஞானமும் அசுரகுணங்கள்.ஒழுக்கத்தில் தான் சிறந்தவனாக காட்டிக்கொள்ளுதல், ஆடை ஆபரணங்களைக்கொண்டு தான் சிறந்தவனாக காட்டிக்கொள்ளுதல்,தான் தான் அறிவில் சிறந்தவன் என்று காட்டிக்கொள்ளுதல்,இவையெல்லாம் அசுர குணங்கள். சிந்திதித்துப் பார்த்தோமேயானால் இவையின் உறைவிடம் ‘தான்’ என்ற  நினைப்பு தான் என்று புரியும்.இந்த ‘தான்’ அல்லது ‘நான்’ நிஜமான நானல்ல; அது ஒரு மாயை; அஞ்ஞானத்திலிருந்து எழுவது என்று புரியும்.
எல்லாமே   ‘நான் ’தான் என்ற அஹம்பாவம் தான் ஆசுர குணம் என் கிறார் கிருஷ்ண பகவான்.
இந்த தெய்வ்-அசுர குணங்களை அடுத்த சுலோகத்தில் கீதை விவரிக்கிறது:
          தவீ ஸம்பத் விமோக்ஷாய நியந்தாயாஸூரி மதா: !
          மா சுச: ஸம்பதம் தைவீமபிஜாதோஸி பாண்டவ:!!
                           ப.கீ அத் 16 சுலோ 5
தெய்வீக குணங்கள் மோக்ஷத்தை அளிக்க வல்லவையாகவும்,அசுர குணங்கள் மேலும் மேலும் பந்தங்களை உளவாக்குகின்றனவையாகவும் இருக்கின்றன.
அசுரகுணங்கள் நிறைந்தவர்கள் அறிவிலிகளாகவும்,ஆத்மாவை அறியாதவர்களாகவும் ,அதன் விளைவாக கொடுஞ்செயல்கள் புரிபவர்களாகவும் ஆகவே இந்த சமஷ்டி லோகத்திற்கும் தீங்கு விளைவிப்பவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது கீதை
          ஏதாம் த்ருஷ்டிமவஷ்டப்ய நஷ்டாத்மானோஅல்ப்புத்ய:!
          ப்ரபவந்த்யுக்ரகர்மாண்: க்ஷயாய: ஜகதோஅஹிதா:!!
                      ப.கீ அத் 16 சுலோ 9
அவர்கள் நிறைவேறாத நெடுங்காமம் உடையவர்களாகவும்,ஆடம்பரத்திலும் தற்பெருமையிலும் அதீத பிடிப்புடையவர்களாகவும்,எப்பொழுதும் கெட்ட எண்ணங்களா பீடிக்கபட்டவர்களாகவும் இருப்பார்கள்
              காமமாசரித்ய துஷ்பூரம் தம்பமானமதான்விதா: !
          மோஹாத் க்ருஹீத்வாஅஸத்க்ரஹான் ப்ரவர்தந்தேஅசுசி வ்ரதா: !!
                                ப.கீ. அத் 16 சுலோ.10
அவர்கள் கணக்கிலடங்கா பாசக்கயிறுகளால் கட்டப்பட்டு அளவற்ற பந்தங்களில் சிக்கி காமக்குரோத வசப்பட்டு, ஆசைகளை நிறைவேற்றுவதற்காக செல்வம் தேடிச்சென்று ஏமாற்றத்திற்க்குள்ளாகி வேதனைப்படுவார்கள்.
                   ஆசாபாச்சதைர்பத்தா: காமக்ரோதபராயணா: !
                   ஈஹந்தே காமபோகார்த்தமன்யாயேனார்த்தஸஞ்சாயான்ன் !!
                                     சுலோ 12
                   அஹங்காரம் பலம் தர்பம் காமாம் க்ரோதம் ச ஸம்சரிதா:!
                   மாமாத்மபரதேஹேஷு ப்ரத்விஷந்தோஅப்யஸூயகா: !!
                                           சுலோ 16
அஹங்காரம், பலம், இறுமாப்பு, காம்ம் குரோதம் இவைகளினால் அலைக்கழிக்கப்பட்டு தன்னிலும் பிறரிலும் பிரம்மத்தை காண இயலாதவர்களாக அசுர குணம் படைத்தவர்கள் ஆகிறார்கள்.
இப்படிப்பட்ட குணங்களை வளர்ப்பது நமது புலனகளை அடக்க இயலாமையும், புலங்களுக்கு தீனியாக அமைகின்ற நமது ஆசாபாசங்களும் தான்.அந்தகுணங்கள் நரக வாயில்களை திறந்து வைக்கின்றன. அந்த நரக வாயில்களை மண்ணிட்டு அடைத்து இப்படிப்பட்ட அசுரகுணங்களின் பிழைப்பை ஒடுக்கி நம்மை ஆத்மபோத்த்தின் வழியில் னட்த்திச்  செல்லுகின்ற அருணாசலனை விளித்து ப்பகவான் கேட்கிறார்.”இப்படி என் பிழைப்பில் மண்ணை யார் அள்ளிப் போட்ட்து? உன்னையன்றி யார் இந்த காரியத்தை செய்ய முடியும்?”
                   ஒருவனா முன்னையொளிட்தெவர் வருவா
ருன்சூ தேயிது வருணாசலா !
உண்மையில் பகவான் அருணாசலனுக்கு நன்றி தான் சொல்கிறார். ஆனால் ‘நிந்தா ஸ்துதி” அல்லது ‘ வஞ்சப்புகழ்ச்சி” எனும் பாணியை கையிலெடுத்துக்கொண்டிருக்கிறார். அருணாசலனின் அருளால் மட்டுமே அசுர குணங்களை ஒழித்து தெய்வீக குணத்தை நாம் பெற முடியும்; அப்படி பெற்றால் மட்டுமே ஆத்ம ஸாக்ஷாத்காரம் அடையமுடியும் என்று சுட்டிக் காட்டுகிறார் பகவான்.
           

No comments:

Post a Comment