Wednesday, 29 July 2015

ரமணஜோதி110

ரமணஜோதி 110

அருணாசலனின் விபூதி

     யாருமறி யாதென் மதியினை மருட்டி
      யெவர்கொளை கொண்ட தருணாசலா !
‘யாருக்கும் தெரியாமல் என் புத்தியை பேதலிக்க வைத்து யார் என்னை உன் ஆளுகைக்குள் கொண்டு வந்தார்கள், அருணாசலா?’ என்று பகவான் இந்த சுலோகத்தில் கேட்கிறார்.
“மதியை மருட்டி” –புத்தியை பேதலிக்க வைத்து என்று கூறும்பொழுது பகவான் மற்றுமொரு முறை ‘நிந்தாஸ்துதி” பாணியை கையிலெடுத்துக் கொள்கிறார்.
அருணாசலனின் ஆளுகைக்கு உட்படுவது எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக் கூடிய ஒரு செயல்.அப்படியிருக்கும்பொழுது மனதை-மதியை மருட்டி என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை; பொருந்தவும் பொருந்தாது. ஆகவே இது நிந்தாஸ்துதியின் வகைப் படும்.
‘யாருமறியாமல்” என்று பகவான் ஏன் சொல்ல வேண்டும்?
ஏற்கனவே பகவான் கூறியுள்ளார்,
ஐம்புலக் கள்வ ரகத்தினிற் புகும்போ
     தகத்தினீ யிலையோ வருணாசலா
ஆகவே அகத்தில் அருணாசலன் இருந்து கொண்டு தானிருக்கிறான்; நாம் தான் தெரிந்து கொள்வதில்லை.அவன் வெளியிலிருந்து வருவதில்லை; நாமும் அவனைத் தேடி எங்கும் போக வேண்டாம்.
தூசி படிந்த கண்ணாடி போலுள்ளது நமது உள்ளம். தூசியை துடைத்தெறிந்து விட்டால் நம் உருவம் நன்றாகத் தெரியும் .’நான் யார்” என்பது புரியும்.
இதைத் தான் கீதாச்சாரியன் கீழ்க்கண்டவாறு கூறுகிறாண்:
     நாத்த்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு:!
     அக்ஞானேனாவ்ருதம் ஞானம் தேன முஹ்யந்தி ஜாதவ: !!
                     ப்.கீ. அத் 5 சுலோ 15
யாருடைய பாப புண்ணியத்தையும் பரமாத்மா பொருட்படுத்துவதில்லை ஞானம் அக்ஞானத்தால் மூடப்பட்டிருக்கிறது. ஆதலால் ஜீவாத்மாக்கள் மயக்கமடைகிறார்கள்.
எங்கும்  நிறைந்துள்ள ஆகாயத்தை மேகங்கள் நிரந்தரமாக மறைத்து விடுவதில்லை. அதன் மீது பஞ்சபூதங்களில் மற்ற நான்கு பூதங்களும் நிலை கொள்கின்றன.ஆனால் அந்த நான்கு பூதங்களின் தோஷங்கள் ஆகாயத்தை பாதிப்பதில்லை. மண்ணில் ஒழுகும் நீரும், நீர் ஒழுகும் மண்ணும், மாசுறலாம். ஏன் காற்று கூட மலினப்படலாம்.அக்னி புகை மண்டலத்தை உண்டு பண்ணலாம். ஆகாயம் சிறிது காலத்திற்கு நீறு பூத்த நெருப்பாக மறைந்திருக்கலாம்.ஆனால் மேகம் விலகும் பொழுது, சாம்பல் காற்றில் பறந்து போகின்ற பொழுது நிர்மலமான ஆகாயம் வெளிப்பட்த்தான் செய்யும்.
அது போல் இந்திரியங்களின் உந்துதலால் ஏற்படுகின்ற பாசபந்தங்கள் எனும் வலையில் சிக்கி ஜீவாத்மாக்கள் செய்யும் செயல்கள் எதுவும் பரமாத்மாவை பாதிப்பதில்லை. நம்முள்ளே ஒளிந்து கொண்டிருக்கின்ற நான் –‘பிரம்ம்ம்” கறைபடாமல் இருந்துகொண்டேயிருக்கும்.அவரவர் நேரம் வரும்பொழுது –பிராரப்தம்’ – முடியும்பொழுது தானே வெளிப்படும்.
மேலும் பகவான் கிருஷ்ணர் கீதையில் கூறுவார்:
     ஞானேன து த்தக்ஞானம் யேஷாம் நாசிதமாத்மன: !
     தேஷ்மாதித்யவஜ்ஞானம் ப்ரகாசயதி த்த்பரம் !!
                அத் 5 சுலோ 16
ஆத்மஞானம் அக்ஞானத்தை அழிக்க வல்லது. ஆத்ம ஞானம் சூரியனைப் போன்றது.சூரியன் எழும்பொழுது இருள் தானே விலகிவிடும்; இருப்பன தெளிவாகத் தெரியும்.உள்ளது ஒன்றே என்பதால் அந்த நிஜமான ‘நான்’ நன்றாக கண்ணுக்குப் புலப்படும். ஆகவே ஆத்ம ஞானமே பிரம்ம ஞானம் என்றும் சொல்ல்லாம்
இந்த பிரம்ம ஞானத்தை எப்படி அடைய முடியும்? கீதாச்சாரியன் சொல்லுகிறான்:
இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்பே ஸ்திதம் மன: !
நிர்தோஷம் ஹி ஸம்ம்ப்ரஹ்ம தஸ்மாத்ப்ரஹ்மணிதேஸ்திதா: !!
                அத் 5 சுலோ 19
மனதை சம நிலையில் உறுதிப்படுத்தியவர்களால் இம்மையிலேயே இயற்கையை வென்று பிரம்மத்தை காணமுடியும்.பிரம்ம்ம் தோஷமற்றதாக இருப்பதாலும் ஸமனிலையுடையதாலும் அதில் அவர்களால் நிலைத்து நிற்க முடியும்.
மனவிருத்தியால்த் தான் பிறப்பு-இறப்பு விருப்பு-வெறுப்பு, பிரியம் அப்பிரியம் என்று மாயாவசப்பட்டு பிரபஞ்சத்தில் உழல வேண்டியுள்ளது.
பிரம்மத்தைக் கண்டுவிட்டால் மனோவிருத்தி நிலைத்து சம் நிலை அடைந்து விடும்.
அப்படிப்பட்ட பிரம்ம்ம் சர்வ வியாபி; சர்வத்தின் உற்பத்தி ஸ்தானம்.
பகவான் கிருஷ்ணர் சொல்லுவார்:
          அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்த்தே !
          இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமன்விதா: !!
                     ப்.கீ அத்.10 சுலோ 8
    
நான் எல்லாவற்றின் பிறப்பிடம்; என்னிலிருந்து தான் ஸர்வமும் விரிவடைகின்றன.
 அதே அத்தியாயத்தில் பகவான் கூறுவார்:
          அஹமாத்மா குடாகேச ஸர்வபூதாசயஸ்தித: !
          அஹமாதிஸ்ச மத்யம் ச பூதானாமந்த ஏவ ச: !!
                     சுலோ 20
எல்லா உயிர்களின் உள்ளத்திலும் வசிக்கும் ஆத்மா நானே;உயிர்களின் ஆதியும், இடையும் அந்தமும் நானே.
அப்படியிருக்கின்ற பிரம்மத்திற்கு, பரமாத்மாவிற்கு நம்மை ஆட்கொள்ளுவதற்கு என்ன சிரம்ம்?
யாருமறியாமல் நம் மனதை மருட்டி, அதன் விருத்தியை நிறுத்தி நிஷ்கிரியமாக்கி சமன் நிலை படுத்துவது முடியாத காரியமா? அது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டியதுமில்லை.அது நம்மிலியே அடக்கம் . இதெல்லாம் தெரியாதவரா பகவான் ரமணர்! தெரிந்தே பரமனின் –அருணாசலனின் விபூதியை விவரிக்கிறார் பகவான்:
    
     யாருமறி யாதென் மதியினை மருட்டி
          யெவர்கொளை கொண்ட தருணாசலா !


No comments:

Post a Comment