Friday, 23 October 2015

ரமணஜோதி 123 ஆத்மபோதமே அருள்

ரமணஜோதி 123

ஆத்மபோதமே அருள்

                  
அருணையென் றெ ண்ணயா நருட்கண்ணி பட்டேனுன்
                    நருள்வலை தப்புமோ வருணாசலா
                   சிந்தித் தருட்படச் சிலந்திபோற் கட்டிச்
                             சிறையிட் டுண்டனை யருணாசலா
“நான் மனதால் அருணாசலனை நினைத்தவுடனையே, நான் அவன் வலையில் விழுந்து விட்டேன். இதிலிருந்து நான் தப்பிக்க இயலுமோ அரூணாசலா?” என்று பகவான் இந்த முதல் இரண்டு அடிகளில் அங்கலாய்க்கிறார். அருணாசலனின் அருள் எப்பொழுதும் எங்கும் உள்ளது. நாம் அதை அறிந்து கொண்டு விட்டால், அந்த அருளுக்கு பாத்திரமாய் விடுவோம்; பிறகு அதிலிருந்து மீள நாம் விரும்ப மாட்டோம்.அப்படி அருணாசலனின் அருள்வலையில் புகுவதற்கு சிறிது காலம் பிடித்தாலும் பிடிக்கலாம்.
சாதாரணமாக, மீனவன் வலையில் சிக்கிய மீன் அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று கவலைப்படும். அருணாசலனின் அருள் வலையில் சிக்கினவரோ அதிலிருந்து மீள முயலமாட்டார். வலையில் சிக்கிய மீன் சுதந்திரத்தை இழக்கிறது; அருணாசலனின் அருள் வலையில் சிக்கிய ஜீவாத்மாக்களோ விடுதலை
( மோக்ஷம்- முக்தி) பெறுகிறது.
அருணாசலன் தன் வலையை எங்கும் விரித்து நமக்காக காத்திருக்கிறான்; நாம் தான் கண்டுகொள்வதில்லை.பிரம்மம்—அந்த சுத்த சைதன்யமான சத் சிதானந்தன் எல்லோர் உள்ளிலும் குடி கொண்டிருக்கிறான்; அதை தெரிந்து கொள்ளாமல், நாம் அதைத் தேடி ஊரெல்லாம் அலைகிறோம்.பட்டினத்தார் கூறியது போல், ‘ உன்னை நாடி நாடு நகரமெல்லாம் அலைந்தேன்; நீ என்னுள்ளே இருப்பது தெரியாமல்.”
நம்மை சுற்றியிருக்கும் மாய வலையை அறுத்து எறிந்து விட்டு, நாம் அருணாசலனின் அருள்வலையில் சிக்கவேண்டும்; அப்பொழுது தான் நமக்கு நிஜமான விடுதலை கிடைக்கும்.அல்லது அந்த மாயவலையில் சிக்காமல் அருணாசலனின் பாதாரவிந்தங்களில் சரண் அடைய வேண்டும்.
இதைத் தான் பகவான் ரமணர் அக்ஷர மணமாலையின் மூன்றாவது சுலோகத்தில் சொன்னார்:
                   அகம்புகுன் தீர்த்துன் னககுகை சிறையா
                             யமர்வித்த தென்கொ லருணாசலா
நீ என்னுள் புகுந்து என்னை சிறை பிடித்து உன் அகக்குகைக்குள் சிறை வைத்தாய்’ என்கிறார்.
இதே கருத்தை அடுத்த இரண்டு வரிகளில் இன்னும் விளக்கமாக கூறுகிறார்:
‘நான் உன்னை எண்ணி எண்ணி, சிலந்தி போல் நீ பின்னிய வலையில் சிக்கிக்கொள்கிறேன்.சிலந்தியின் வலை அதன் உடலிலிருந்தே வருகிறது; அது போல் உன் அருள் வலையும் ஜீவாத்மாக்களின் உள்ளிலிருந்தே வருகிறது.அப்படிப்பட்ட வலையில் சிக்கிக் கொண்டால் நமக்கு விடுதலை கிடையாது. நாம் அழிந்து பரமாத்மாவுடன் லயித்து விடுகிறோம்.இந்த லயனத்திற்கு தான் நாம் படுகின்ற கஷ்டமெல்லாம்.
இந்த இரு சுலோகத்தின் மூலம் பகவான் கூறுவது என்னவென்றால் ,’’ ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இரண்டல்ல; ஒன்றே தான்; இந்த ஞானம் பெற்று விட்டோமென்றால், அந்த ஞானவலையில் சிக்கிகொண்டோமென்றால் , நமக்கு நிரந்தர விடுதலை தான்”
இன்னொரு விதத்தில் பார்த்தோமேயானால் என்றுமே நாம் முக்தர்கள் தான்.அதை நாம் தெரிந்து கொள்வதில்லை அவ்வளவு தான்.அந்த போதம்-ஞானம் இல்லாமல் நம்மைச் சுற்றி நாமே ஒரு வலை பின்னிக்கொள்கிறோம்.ஒரு பிரபஞ்சத்தை சிருஷ்டித்துக் கொள்கிறோம்.அந்த மாயா பிரபஞ்சத்திலுள்ள மற்ற ஜீவராசிகளிடமும், ஜீவனில்லாத ஏனைய பொருள்களுடனும் பந்தத்தை ஏற்படுத்திக்கொள்கிறோம்.அந்த பந்தங்களே பந்தனமாக மாறிவிடுகிறது.
அந்த பந்தங்களை என்று நாம் அறுத்து எறிகிறோமோ அன்று நமக்கு போதம்-ஞானம் உண்டாகிறது. நாம் முக்தர்களாகிறோம்
இதைத்தான் அஷ்டவக்கிரரும் கூறுகிறார்:
     ஆத்மாஞானாஜ்ஜகத்ததி ஆத்மஞானாத்ன பாசதே!
ரஜ்வத்ஞானாதஹிர்பாதி தஜ்ஞானாத்பாசதே!!
ஆத்மாஞானாத்-----ஆத்மாவின் உண்மை ஸ்வரூப ஸ்வபாவத்தை தெரியாமல் இருத்தல்
ஜகத் பாஸி------------பிரபஞ்சம் தோன்றுகிறது
ஆத்மஞானாத்----------ஆத்ம சொரூபத்தை அறிதல்
ஆத்மாவின் உண்மை சொரூபத்தை அறியாததால் இந்த பிரபஞ்சம் தோன்றுகிறது.அந்த ஆத்ம போதம் உண்டாகிவிட்டால் பிரபஞ்சம் மறைந்து விடுகிறது.
. உபனிஷத்களிலும் இந்த கருத்து விஸ்தரித்து சொல்லப்பட்டுள்ளது.
ஈசாவாஸ்ய உபனிஷத் ஆரம்பிப்பதே இந்த கருத்துடன் தான்:
                   ஈசாவாஸ்யமிதம்சர்வம்  யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்
இந்த உலகில் நாம் காண்கின்ற எல்லா பிரபஞ்ச சிருஷ்டியிலும் ஈசுவரன் வியாபித்துள்ளான் ஆகவே எல்லாமே ஒரே பிரம்மம்  தான்
அதே உபனிஷத்தின் நான்காம் சுலோகத்தில் கூறப்பட்டுள்ளது இன்னும் தெளிவாக உள்ளது:
                   அனேஜதேகம் மனஸோ ஜவீய
                        நைனத்தேவா ஆப்னுவந் பூர்வ்மர்ஷத் !
                   தத்தாவதோஅன்யான்அத்யேதி
                             திஷ்டத்தஸ்மின்னபோ மாதரிச்வாததாதி!!
அனேஜத்—இந்த ஆத்மா  சலனம்ற்றது
ஏகம்--------ஒன்றே(எல்லோருள்ளும்)
இந்த சலனமற்ற ஆத்மா இந்திரியங்களுக்கப்பாற்பட்டது, மனதை விட வேகமாக சஞ்சரிக்கக் கூடியது,ஆனால் ஏகமாக எல்லோருள்ளும் இருக்கக் கூடியது. இருந்தும் ஜீவாத்மாக்களின் அனுபவங்கள் ஏன் மாறுபடுகின்றன என்றால் அது முன்சன்ம பிராரப்தங்களின் அடிப்படையில் நிர்னயிக்கப்பட்டுள்ளதால்.
மேலும் ஈசாவாஸ்யம் கூறுகிறது:
                   யஸ்து ஸர்வாணி பூதானி ஆத்மன்யேவானுபஸ்யயதி !
          ஸர்வபூதேஷூ சாத்மானம் ததோ ந விஜுகுப்ஸதே !!
யாரொருவன் அனைத்து உயிரினங்களிலும்தன்னைக் காண்கின்றானோ,தன்னில் எல்லா உயிரினங்களையும் காண்கின்றானோ, அவன் போதமடைந்தவனாகிறான்; யாரையும் அவன் நிந்தனை செய்ய மாட்டான்.
கைவல்ய உப்னிஷத்திலும் மேற்கூறிய கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன..
14 ஆம் சுலோகத்தில் கீழ்க்கண்டவாறு  கூறப்பட்டுள்ளது.
          யத் பரம் ப்ரம்மாஸர்வாத்மா
                   விஸ்வாஸ்யாயதனம் மஹத்
          ஸூக்ஷ்மத் ஸூக்ஷமதரம் நித்யம்
                   தத் த்வம் ஏவ த்வம் ஏவ தத் !
ஆத்மா என்பது பரமாத்மாவே தான்;அதுவே எல்லோர் உள்ளிலும் இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தின் ஆதாரமே அந்த ஆத்மா தான்.அது நித்தியமும் அணுவிலும் சிறியதும்,ஆக இருகிறது.அதுவே நீயாக் இருக்கிறாய்; நீயே அதுவாக இருக்கிறாய்.
23 ஆம் சுலோகத்தில் தெளிவாக சொல்லப் பட்டிருக்கிறது.
एवम् विदित्वा परमाथ्मा-रूपम्
गुहाश्यम् निषकलमड्विटीयम्.!
समस्त साक्षीम् सदस्द्विहीनम्
प्रयाति सुद्ढम् परमात्मरूपम् !!
     ஏவம் விதித்வா ப்ரமாத்மரூபம்
          குஹாஸ்யம் நிஷ்கலம்த்விதீயம்
          ஸமஸ்த ஸாக்ஷீ ஸதஸத்விஹீனம்
          ப்ரயாதி சுத்தம் பரமாத்மரூபம்
இப்படிப்பட்ட போதம்பெறுவது தான் பரமனின் அருள் போலும். சாதகர்கள் நீண்டகாலம் சாதகம் செய்து பெறுகிறார்கள்; பக்தர்கள் பகவானின் சரண கமலங்களில் அடைக்கலம் ஆவதின் மூலம் போதம் பெறுகிறார்கள்.
அருள் என்பது பெரிய தத்துவச் சொல் அல்ல;அது உண்மை நிலைகுறித்து நமக்கு ஏற்படுகின்ற போதம் தான்

இந்த சத்தியத்தை நான் யார் என்ற விசார மார்க்கம் வழியாக நாம் உணர வேண்டும் இது தான் பகவானின் உபதேச சாரம்

No comments:

Post a Comment