Sunday, 22 March 2015

ரமணஜோதி 102

ரமணஜோதி 102

அவித்யா நிர்மார்ஜனம்


          மூக்கிலன் முங்காட்டு முகுரமா காதெனைத்
          தூக்கி யணைத்தரு ளருணாசலா
“முக்கில்லாதவன்—குறைபாடுள்ளவன்-முன்னால் முகம் பார்க்கும் கண்ணாடியை காண்பித்தால் அவன் அழகாய்விடமாட்டான்.அவனது குறை நீங்கி விடாது.அது போல் அவித்யை எனும் மாயையால் ஆவரணம் செய்யப்பட்டுள்ள ஜீவன்களிடம் நீ அவித்யையில் மூழ்கியிருக்கிறாய்; உன்னால் முக்தியடைய இயலாது என்று சொல்வதில் என்ன பயனும் இல்லை;ஆகவே அருணாசலா, எனது அவித்யை நீக்கி ஆத்மசாக்ஷாத்காரம் அடைவதற்கு அருள்வாய்” என்று பகவான் உருக்கமாக வேண்டுகிறார் இந்த சுலோகத்தில்.
அவித்யை நீங்குவதற்கு என்ன வழி?
ஒரு முறை பங்களூரிலிருந்து ஆசிரமத்திற்கு வந்த ஒரு பக்தர் பகவானிடம் கேட்டார்: “சுவாமி, முக்தி பெற எவ்விதமாக தியானம் செய்ய வேண்டுமென்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன்;ஆதலால் சாதனா மார்க்கம் என்னவென்று தாங்கள் அனுக்கிரகித்து என்னை கரையேறச் செய்யவேண்டும்”
“நீ இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார் பகவான்.
“ ஒன்றும் செய்யவில்லை;சுவாமி. அதனால்த் தான் எப்படித் தியானம் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.”” என்றானவன்.
“ தியானம் எதற்கு செய்ய வேண்டும்? முக்தியென்றால் என்ன? எதை சாக்ஷாத்கரிக்க வேண்டும்? இந்த எண்ணம்.உனகெப்படி வந்தது.?” என்று கேள்விகளாக அடுக்கிக் கொண்டே போனார் பகவான்.
பகவானிடம் சமீபத்திலிருந்து பக்தி செலுத்திவந்த ஆசிரம வாசிகள் சொல்லுவார்கள், ‘பகவானிடம் யாரும் ஏதோ நாமும் கேள்வி கேட்க வேண்டுமே என்பத்ற்காக கேள்வி  கூடாது. அப்படிக் கேட்டூவிட்டால் சுலபமாக தப்பித்துக் கொள்ள முடியாது.பகவான் கேட்கின்ற பதில் கேள்விகள் அப்படியிருக்கும்”
அந்த பங்களூர் பக்தருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை“. அவனைப் பார்த்த பகவான்,’அவனை ஏதோ ஒன்று வாட்டுகிறது என்று புரிந்துகொண்டு விட்டார். கருணைனிறைந்த தாயுள்ளம் கொண்ட பகவான் மீண்டும் தொடர்ந்தார்
“எண்ணங்களையெல்லாம் விலக்கிக் களைவதற்காக குலதெய்வத்தின் மீது மனதை நிறுத்தித் தியானிப்பதோ அல்லது ஸ்வரூபமாகிய ஆத்மாவின்மீது மனதை வைத்து ஆத்ம விசாரம் செய்வதாலோ வெளி விஷயங்களெல்லாம் படிப்படியாக விலகி தியானம் ஒன்றே நிலைத்து நிற்கும். தியானம் தனியாக செய்யத் தேவையில்லை .தானாகவே தியானம் ஸ்திரமாக நிலைத்து விடும் .எது இருக்கிறதோ அதுவே தியானம். வெளி விஷயங்களை விடுவதே முக்தி. முக்தியை ‘பெறுவது’ என்று ஒன்றில்லை.மனதை சலனமறச் செய்வதற்குத் தான் பிராணாயாமம் போன்ற வழிகளை சொல்லியிருக்கிறார்கள். பிராணாயாமம் என்றால் வெளியே அலையும் மனதை அகமுகமாக்கி நிறுத்துவது தான் .சற்று மூச்சை அடக்கினால் மனம் உள்ளே நிற்கிறது. ஜபதபங்களுக்கெல்லாம் முன்னாலேயே பிராணாயாமம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள் .மூச்சை சற்று அடக்குவதால் ஆன்ம விசாரணைக்கு அனுகூலமாக இருக்கும்.இஷ்ட தேவதா தியானமோ அல்லது ஆத்ம தியானமோ செய்தால் மூச்சு தானாகவே அடங்குகிறது.அப்படி செய்ய செய்ய ,அந்த தியானமே ‘தான்’ என்று நிலையாகிறது.அந்த நிலையில் தியானம் செய்பவனென்றும் செய்யப்படுவனென்றும் இரண்டில்லை. எல்லாம் இயற்கையாக ஒருவனுடைய ஸ்வரூபமாகி விடுகிறது.”
எவ்வளவு எளிதான விளக்கம்!
பகவான் இன்னொரு பக்தரிடம் கூறினார்:” பாருங்கோ,ஈஸ்வரன் என்றோ ,ஆத்மா என்றோ எந்த பெயரில் அழைத்தாலும் அவன் எங்கும் எப்பொழுதும் கண்கூடாகவே உள்ளான்..அவன் முன் வபந்து நிற்பானென்று எதிர்பார்க்கிறார்கள்.என்ன செய்வது?அவனில்த் தான் நாமிருக்கிறோம்,ஆனாலும் அவனை எங்கே எங்கேயென்று தேடுகிறோம்.இந்த நான் என்கிற துளி அகந்தை பண்ணுகிற விஷமத்தனம் இத்தனையும்.”என்றார்.
எவ்வள்வு பெரிய தத்துவத்தை எவ்வள்வு எளிமையாக சொல்லியிருக்கிறார் பகவான்.
இதே கருத்தை அஷ்டாவக்கிர முனிகள் ஜனகருக்கு உபதேசம் செய்கின்ற பொழுது சொல்கிறார்,” ஜனக, நீ ஏற்கனவே முக்தனாகத் தான் இருக்கிறாய்.ஆனால் நீ பந்தனத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாய். அந்த நினைப்பு தான் பந்தனம்.அந்த நினைப்பை விட்டொழி, நீ முக்தனாகிவிடுவாய்”.
                   முக்தாபிமானி முக்தோஹி பத்தோபத்தாபிமானியபி
                   கி வதந்தீஹ சத்யேயம் யா மதிஹ: ஸா கதிர்பவேத்
                           அ.வ் கீ சுலொ 11
பகவத் கீதையில் 12 ஆம் அத்தியாயத்தில் பகவான் கிருஷ்ணர் இவ்விஷயம் குறித்து விளக்குகிறார்:
                   மய்யாவேஸ்ய மனோ யே மாம் நித்யயுக்தா உபாசதே !
                   ஸ்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா: !!
                                ப. கீ அத்த்.12 சுலோ 2
யாரொருவன் என்னிடத்தில் மனதை வைத்து சிரத்தயுடன் என்னை உபாசிக்கிறானோ அவனிடம் நான் இருப்பேன் என்கிறார் கிருஷ்ணர். மனம் ஒருமுகமாக பகவானிடம் நிலைத்து நிற்க வேண்டும்.பகவான் என்பது யார்? நம்முள்ளேயிருக்கும் ஆன்மா தான்.அது புரியாவிட்டாலும் சகுண பிரம்மமாக நமது இஷ்ட தெய்வத்தில் மனதை நிலைக்க செய்தால் வெளி விஷயங்களில் நமக்குள்ள நாட்டம் குறையும்.
இந்த தெய்வத்தைதான் தியானிக்க வேண்டும் ;அந்த தெய்வத்தைத் தான் தியானிக்க வேண்டும் என்பதில்லை.இதை கிருஷ்ணர் கீதையின் ஏழாம் அத்தியாத்தில் தெளிவு படுத்தியுள்ளார்.
                   யோ யோ யாம் யாம் தனும் பக்த:ஸ்ரத்தயார்சிதுமிச்சதி !
                   தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம் !!
எந்தெந்த பக்தன் எந்தெந்த தேவ வடிவத்தை சிரத்தையோடு அர்ச்சிக்க விரும்புகிறானோ,அந்த விருப்பம் நிறைவேற நான் துணையாயிருப்பேன் “ என்கிறான் கிருஷ்ணன் இந்த சுலோகத்தில்.
தேவை  பக்தி; வெளி விஷயங்களை விடுதல்.எந்த ஒரு வடிவத்தைக் கற்பனை செய்து கொண்டாலும் கடவுளுக்கு சம்மதமே.
எட்டாம் அத்தியாயத்தில் எட்டாம் சுலோகத்தில் பகவான் கூறுவார்:
                   அப்யாஸயொகயுக்தேன சேதஸா நான்யகாமினா!
                   பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்த்தானுசிந்த்யன்  !!
பார்த்தா, வெளி விஷயங்களில் மனதை செலுத்தாமல்,என்னை நினைத்து ஒருமுகமாக தியானம் செய் நீ சுயம் பிரகாசமான அந்த பரம புருஷ்னை காண்பாய். தொடர்ந்து தியானம் செய்து வந்தால் தானாக வெளி விஷயங்கள் அடங்கி மனம் ஒருமுகப்பட்டு நம்முள்ளேயுள்ள பிரம்மத்தை காண்போம் என்பது இதன் பொருள். இதையே தான் பகவான் ரமணரும் அந்த பங்களூர் பக்தனுக்கு கூறினார்.
இதேமதிரியான ஒரு வேண்டுகோளை எழுத்தச்சனும் ‘ஹரி நாம கீர்த்தனத்திலும்’ முன் வைக்கிறாற்.
                   ஆனந்தசின்மயஹரே! கோபிகாரமணா!
                   ஞானென்ன பாவமது தோண்ணாய்கவேணமிஹ
                   தோன்னுன்னதாகிலகிலம் ஞானிதென்னவழி
                   தோன்னேணமே வரத !யனம:!
நித்ய சாந்தியை அளிக்கும் நாராயணா, எனக்கு நான் எனும் அஹந்தை உண்டாகாமலிருக்க வேண்டும்;அப்படியே உண்டானாலும்,நானே அகிலம் (உலகம்-பிரபஞ்சம்) என்ற வெளிப்பாடு உண்டாகணுமே” என்கிறார் இந்த கவிஞர்.
இந்தமாதிரியான ஞானத்தை எனக்கு அளிப்பாய்,அருணாசலா; இல்லையேல் .என் வாழ்வு இருள் சூழ்ந்ததாகிவிடும். எனக்கு முக்தி கிடைக்காது என்று சொல்லும் பகவான் ரமணர், நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளையும் அந்த பங்களூர் பக்தனுக்கு அளித்த உபதேசம் மூலம் வழங்கியுள்ளார்.


ரமணஜோதி 101

ரமணஜோதி 101


சித்-ஜட பந்தன்


                முடியடி காணா முடிவிடுத் தனைநேர்
                     முடிவிடக் கடனிலை யருணாசலா
“நான் தான் இந்த சரீரம்” என்ற எனது மயக்கத்தை தீர்த்து, இந்த உடலுடன் என்னை கட்டிப்போட்டிருக்கும் அந்த முடிச்சை அவிழ்த்து அந்த பந்தனத்திலிருந்து விடுவித்த பிறகு தாய்க்கு சமானமான நீ என்னை ஆதியும் அந்தமும் இல்லாத அந்த பிரம்மத்துடன் இணைக்க மாட்டாயா? அது உன் கடைமை அல்லவா, அருணாசலா,?” என்கிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்.
இந்த சுலோகத்தின் மூலம் பகவான் சொல்லுகின்ற கருத்துக்கள் மூன்று:
·         சித் எனப்படும் ஆன்மா பௌதீக சரீரத்துடன் தாதாத்மியம் அடையும் பொழுது நாம் அவித்யையால் மூடப்படுகிறோம்.
·         இந்த சித்-ஜட(உடல்)  முடிச்சை அந்த அருணசலனின் அருளோடு மட்டும் தான் அவிழ்க்க முடியும்.
·         அந்த பந்தம் அற்றுப் போன பிறகு அதே நிலையில் நிலைத்திருந்தால்-பந்தமற்ற  நிலையில்- தொடர்ந்திருந்தால் தான் நாம் பூரண முக்தியடைய முடியும்.அதற்கும் அருணாசலன் அருள் வேண்டும்.
‘முடிச்சு’ என்பது நமது லௌகீக வாழ்விலும் பல சதர்ப்பங்களில் பயன்படுகிறது. கௌமார பிரயத்தை அடைந்த ஒரு ஆண்மகனை யஞோபவீத தாரணம் மூலம் பிரம்மத்துடன் இணைக்கிறோம்.அது ஒரு விதமான முடிச்சு.
பிரம்மசரிய ஆசிரமத்திலிருந்து  கிரஹஸ்தாசிரமத்தில் பிரவேசிக்கும் ஆண் பெண்ணின் கழுத்தில் திருமங்கல்யம் என்ற சரடைக் கட்டி மூன்று முடிச்சு போடுகிறான். அவனும் அவளும் கைகளை இணைத்து பாணிக்கிரகணம் செய்துகொள்வது இன்னொரு முடிச்சு. அம்மி மிதித்து,அருந்ததி பார்த்து அக்னியை ஏழ்முறை வலம் வரும் சப்தபதி எனும் சடங்கை நடத்தி முடிக்கும் பொழுது அந்த ஆண்மகனும் கால்கட்டு போடப்பட்டவனாகிறான்.
ஹிந்து திருமணம் நிறைவேறுவது மணமகன் மணமகளின் கால் கட்டை விரலை பிடித்து ஒவ்வொரு அடிக்கும் ஒரு வாக்குறுதியை தந்து மண முடிச்சை உறுதிப் படுத்தும்பொழுது தான்.
ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்பொழுதும் கூறும் மந்திரங்களும் மிகவும் பொருள் பொதிந்தவை.
·         முதல் அடி எடுத்து வைக்கும்பொழுது மணமக்கள் உறுதி எடுத்துக்கொள்கிறார்கள்: நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு வளமான குடும்பத்தை அமைடுவோம்;அந்தக் குடும்பத்தின் மகிழிச்சிக்கும் வளைமைக்கும் உகந்த எல்லா செயல்களிலும் ஈடுபடுவோ,; அதற்கு குந்தகம் விளைவிக்கின்ற எந்த செயலிலும் ஈடுபடமாட்டோம்.
·         வளமான ஆரோக்கியமான பொதீக-லௌகீக வாழ்விற்கும் சுத்தமான மானசீக வளர்ச்சிக்கும்,முழுமையான ஆன்மீக வாழ்விற்கும் நாங்கள் வழி வகுப்போம்.
·         தர்மத்தின் அடிப்படையில் நாங்கள் வாழ்விற்கு வேண்டிய பொருள் ஈட்டுவோம் ( தர்மார்த்த காம மோக்ஷ என்ற ரிஷிவாக்கியத்தின் பொருள் இந்த மூன்று உறுதி மொழிகளில் உரைக்கப் பட்டுள்லது.0
·         நாங்காவது அடி எடுத்து வைக்கும் பொழுது அவர்கள் உற்தி மொழி எடுத்துக்கொள்கிறார்கள்: நாங்கள் ஒருமித்து நித்திய சாந்தி கிடைப்பதற்கும் ஞானம் அடைவதற்கும் ஒருவர் மீது மற்றவர் வைக்கும் அன்பும் நம்பிக்கையும் பழுதுபடாமல் இருப்பதற்கும் ஒருவர் மீது மதிப்பும் மரியாதையும் வைது வாழ்வோம்.
·         ஆரோக்கியமான,நாணயமான,தைரிய சாலிகளான சந்ததியை பெற்றெடுத்து வம்சத்தை வளர்ப்போம்.( இங்கு காமத்திற்கு இடமில்லை.”)
·         ஆறவது உறுதி மொழி மூலம் மன அடக்கம், இந்திரிய (புலன்) அடக்கம், ஆன்ம சாக்ஷாத்காரம் வேண்டி அவைகளின் மூலம் நீண்டகால சாந்தியுடனான மஇல்வாழ்க்கையை உறுதி கூறுகிறார்கள்.
·         ஏழாவது அடி எடுத்து வைக்கும்பொழுது அவர்கள் ஒருவருக்கொருவர் விசுவாசமாகவும் அன்புடன் வாழ்ந்து நல்ல் கணவன் மனைவியாகவும் நண்பர்களாகவும் வாழ்வோம் என்று சூளுரைக்கிறார்கள்.
இப்படிப்பட்ட லௌகீக முடிச்சுக்கள் எத்தனையோ நம் இஹலோக பந்தங்களை உறுதிப் படுத்துகின்றன.அம்மாதிரி அவிழ்க்கப் படக்கூடாத முடிச்சுக்கள் என்று சமூகம் அங்கீகரித்தும் இருக்கிறது.
இப்படிப்பட்ட அவிழ்க்க கூடாத முடிச்சுக்கள் மன சாந்தியை குலைக்காமல் இருக்க வேண்டுமென்றால், ஆரம்பத்தில்கூறிய சித்—ஜட முடிச்சை அவிழ்த்து சத் சித்-ஆனந்தத்தை அனுபவிக்க தயாராக வேண்டும்.
இந்தக்கருத்தை இன்னும் சற்று ஆழ்மாக விளக்குகிறார் பகவான் ரமணர் தன்னுடைய  ‘உள்ளது நாற்பது “ என்ற நூலில்.
                   சடவுடனா னென்னாது சச்சித் துதியா
                   துடலளவா நானொன் ற்திக்கு--- மிடையிலிது
                   சிச்சடக்கி ரந்திபந்தஞ் சீவனுட்ப மெய்யகந்தை
                   யிச்சமு சாரமன மெண்ணென்னே-விச்சை
                           உ.நா சுலோ 24
ஜடமான நமது உடல் “நான் தான் நான்” என்று கூற இயலாது. இந்த உடலிற்கு உயிர் கிடையாது.அதற்கு ஞானேந்திரியங்களையொ கர்மேந்திரியங்களையொ இயக்கவதற்கான சக்தி கிடையாது. நித்ய சத்திய பொருளான ஆன்மாவோ நிர்விகாரமும் சங்கல்பங்களும் இல்லாதது.ஆகவே அதுவும் “நான் தான் நான்” என்று கூற முடியாது. பிறகு நான் எனும் அஹந்தை எங்கிருந்து முளைக்கிறது.? பகவான் சொல்லுகிறார்  நித்தியமான நிர்விகாரமான,நிராகாரமான சித்திற்கும் உயிர்பெறாத ஜடத்திற்கும் நடுவில் இடைப்பட்ட நிலையில் ஒரு முடிச்சு விழுகிறது;அதை பகவான் சித்-ஜட கிரந்தி என்று கூறுகிறார்.இந்த முடிச்சு விழுந்தவுடன், நான் ,எனது,, பொன்ற அஹங்கார விகாரங்கள் உயிர்த்தெழுகின்றன. இந்த முடிச்சு விழக் காரணம் அவித்யை தான்.ஒருமுறை இந்த முடிச்சு விழுந்து விட்டால் ஜன்ம-ஜன்மாந்தரங்களுக்கும் அது தொடர்கிறது.உடல் மாறுகிறதே தவிர அந்த முடிச்சு அவிழ்வதில்லை.அந்த முடிச்சு அவிழாத வரை முக்தியும் கிடையாது.
ஸ்ரீ நாராயண குரு தேவன் மலையாளத்தில் “ சிஜ்ஜட சிந்தனம்” என்ற ஒரு நூல் எழுதியுள்ளார்.அதிலும் மேற்படி கருத்துக்களை எடுத்துரைக்கிறார். நாராயண குருதேவன் தனது நூலில் சித்திற்கும் ஜடத்திற்குமுள்ள தொடர்பை விவரித்து இந்த பிரபஞ்ச ரகசியத்தை விளக்குகிறார் இந்த நூலில்..குருதேவனும் பகவான் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தவர் என்றும், அவர் பகவானை தரிசிக்க ஒரு முறை திருவண்ணாமலை ஆசிரமத்திற்கு வந்திருந்தார் என்றும் அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்து விட்டு கேரளம் திரும்பியவுடன்,” நான் முதன் முறையாக நடமாடும் ஜீவன் முக்தரை முதன் முறையாக தரிசித்தேன்,” என்று கூறினாரென்றும் முன்னொரு மடலில் எழுதியிருந்தேன்.
காண்பவன்,காணும் பொருள், தருமம்,தருமம் செய்பவன், விஷயத்தில் ஈடுபடுபவன்—விஷயி, விஷயம், புருஷன்,பிரகிருதி,சத்தியம் ,மாயை, சித் ஜடம் இப்படி எல்லாமே இரட்டையாக காணப்படுகிறது இந்த பிரபஞ்சத்தில்..
இந்த துவைத மனப்பாங்கை வெடிந்து விட்டால் நமக்கு முக்தி தான்.
அப்படிப்பட்ட முக்தியடைவதற்கு ஜடம் என்றால் என்ன? சித் என்றால் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
உருவாகி அழியும் எல்லாம் ஜடம்; அதாவது  பிறப்பும் இறப்பும் உள்ளதெல்லாம் ஜடம்.
பிறப்பு என்று ஒன்றில்லாததும்,என்றுமே அழியாததுமானது தான் சித்.
பிறப்பு,வளர்ச்சி,பழுதடைதல், நசித்தல் இவையெல்லாம் ஜடத்தின் குணங்கள்.
சுபாவத்தில் ஒருமாற்றமுமில்லாமல் காலாகாலமாக இருப்பது சித்.
இந்த இரண்டும் நாசமடையக்கூடிய ஒன்றும் நாசமேயில்லாத ஒன்றும் சேரும்பொழுது உருவாகிறது இந்த பிரபஞ்சம்.
மாற்றத்திற்கு ஆளாகாததும்,நாசமில்லாததுமான சித்தில் ஏற்படுகின்ற சூக்ஷ்மமான-அதி சூக்ஷ்மமான,ஜடத்தை அடிப்படையாகக்கொண்ட மெலிய சலனத்தால் ஒரு சூன்னியம்-வெட்டவெளி தோன்றுகிறது.
அது தான் ஆகாயம்.ஆனால் அதுவும் ஜடம் தான். அந்த வெட்டவெளியில் குடியிருந்து கொண்டு சித் எல்லாவற்றிற்கும் ஸாக்ஷியாக நிலை கொள்கிறது. இதை நமது உபனிஷத்துகள் அவ்வ்யக்தம்-தெளிவில்லாதது என்று வருணித்துள்ளது. இந்த நிராகாரமான ஆகாயத்தில் இன்னும் வலுவுடைய ஸ்பந்தனம் உண்டாகும் பொழுது பிராணன் உருவெடுக்கிறது. பிராணன் உபனிஷத்துகளில் மஹானாத்மா என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.இதுவேதான் மஹத் தத்துவம்,ஹிரணியகர்பன்,ப்ரஜாபதி,சத்துவ புத்தி என்றெல்லாம் அழைக்கப் பட்டுள்ளது.இது ஜடத்தின் இரண்டாம் நிலை. இப்படி  உண்டாகின்ற ஸ்பந்தனத்தில் உருவாகின்றதால் அதற்கு சித்தின் சுபாவ மான போத குணம் உண்டாகிறது. இந்த பிராணன் மற்ற ஜடங்களின் மூலஸ்தானமாகிறது. ஜடத்தில் உண்டாகின்ற மாற்றங்களையெல்லாம் சித் மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கிறது.பஞ்ச பூதங்களால் உருவான எல்லா ஜடவஸ்துக்களும் பிராணனிலிருந்து உருவாகிறது.
தனியொருவனை எடுத்துக்கொண்டால்,பிராணஸ்பந்தனம் கருவிலுள்ள சிசுவில் உளவாவதோடு ’ நான்; நான்; என்ற அஹங்காரமும், அஹங்காரத்திலிருந்து புத்தியும்,புத்தியிலிருந்து சங்கல்பங்களின் ஆலயமான மனதும்,மனதிலிருந்து ஞானேந்திரியங்களும், கடைசியாக ஸ்தூல ரூபமான பௌதிக சரீரமும் அந்த சரீரத்திலிருந்து வேர்படுத்த முடியாத இந்திரியங்களும் உருவாகின்றன. ஆக இவையெல்லாம் ஜட த்தின் பல விதமான உருவ வேறுபாடுகள் தான். இந்த மாற்றங்கள் எல்லாம் நிகழும்பொழுது சித் எனும் போதம் எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாமல், எந்த வித பாதிப்பிற்கும் உள்ளாகாமல் சாக்ஷியாய் நிலைகொள்கின்றது.
இதைத் தான் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் பதிமூன்றாம் அத்தியாயத்தில் இருபத்தியாறாம் சுலோகத்தில் கூறுகிறார்:
                   யாவத் ஸஞ்சாயதே கிஞ்சித்சத்வம் ஸ்தாவரஜங்கமம் !
                   க்ஷேத்ரக்ஷேத்ரஞ் ஸம்யோகாத் தத்வித்தி பரதர்ஷப !!
இந்த பிரபஞ்சத்தில் எந்தவொரு வஸ்து உருவாகியுள்ளதோ அவையெல்லாம் க்ஷேத்ர க்ஷேத்ரஞ்ச சேர்க்கையானால் உருவானது.எப்படி  சலனமற்ற சினிமாத்திரையில் முப்பரிமாணங்களுடைய மனிதர்களும் ஏற்றப்படுகிறார்களோ அதே போல் சித் எனும் ஆகாயத்தில் முக்குணமயமான ஜீவாத்மாக்களும் தோன்றுகிறார்கள்.திரை க்ஷேத்திரஞ்சன் என்றால், அதில் தோன்றும் காட்சிகள் எல்லாம் க்ஷேத்திரமே. க்ஷேத்திரங்கள் மறைநாலும் க்ஷேத்திரஞ்சனான திரை—சிதாகாசம் இருந்துகொண்டேயிருக்கிறது.
அதனால் குருதேவன் தன்னுடைய நூலின் முதல் சுலோகத்தில் கூறுகிறார்:
                   ஒருகோடிதிவாகரரொத்துயரும்-
                   படி பாரொடுனீரனலாதிகளும்
                   கெடுமாறு கிளர்ன்னுவருன்னிரு நின்-
                   வடிவன்னுமிருன்னு விளங்கீடணம்
கோடி சூரியர்கள் ஒன்று சேர்ந்து உதித்துவந்தால் எப்படி பூமி,நீர்,நெருப்பு,போன்ற பஞ்ச பூதங்களும்-பஞ்ச பூதங்களாலான ஜடப்பொருள்களும் அழிந்து மறைந்து போய், பளிச்செனத்தெரியும் உன் வடிவுடைய உருவம் மட்டும் என் உள்ளத்தில் நிறக நீ அருள வேண்டும் என்று வேண்டுகிறார். பகவான் ரமணர் சித் ஜட முடிச்சை அவிழ்த்து என்னை இகலொக பந்தங்களிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அருண்சலனனிடம் வேண்டுகிறாரோ அந்த வேண்டுதலின் எதிரொலி மேற்கண்ட குருதேவனின் சுலோகத்திலும் நாம் காண்கிறோம்.
இந்த சுலோகத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு உண்மை என்னவென்றால், சித்திலிருந்து உளவாகின்ற ஸ்பந்தனம் மூலம்,சித்ஜட க்ரந்தி மூலம் ஜடப்பொருட்கள் சித்தின் பிரகாசத்தை மறைக்கிறது; அந்த முடிச்சவிழ்ந்து விட்டால்,--அவிழ்ந்தால் மட்டுமே-- நாம் சத் சிதானதம் காணமுடியும் என்றும் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்தக் கருத்தை கிதை ஏழாம் அத்தியாயத்தில் நாம் காணலாம்
                   நாஹம் பிரகாச: ஸர்வஸ்ய      யோகமாயாஸமாவ்ருத:--
                   மூடோயம் நாபிஜானாதி    லோகோ  மாமஜமவ்யயம்.
                     ப.கீ அத் 7 சுலோ 25
யோக மாயையினால் மூடப்பட்டுள்ள நான் எல்லோர் கண்களுக்கும் தென்படுவதில்லை;ஆகவே பிறப்பும் இறப்பும் இல்லாத என்னை இந்த மூட உலகம் அறிவதும் இல்லை. அவித்யை எனும் முடிச்சை அவிழ்த்து, மாயை எனும் திரையை விலக்கினால்த் தான் சுயம் பிரகாசிக்கின்ற சத்சிதானத்தத்தை காண முடியும் என்கிறார் பகவான்.
இதே கருத்தை கீதை அஞ்சாம் அத்தியாயத்திலும் வேறு விதத்தில் சொல்லப்பட்டுள்ளது:
                   அஞானேனாவ்ருதம் ஞானம்
                   தேன முஹ்யந்திஜந்தவ:
                     ப்.கீ.அத் 5 சுலோ 15
அறிவின்மை ஞானத்தை மறைக்கிறது;ஜீவாத்மாக்கள் ராக துவேஷ மோஹத்திற்கு உள்ளகிவிடுகிறார்கள்;துன்பப்படுகிறார்கள்.
அதே அத்தியாயத்தின் பதினாறாம் சுலோகத்தில் கிருஷ்ணர் கூறுகிறார்:
                   ஞானேன து ததக்ஞானம் யேஷாம் நாசிதமாத்மன:!
                   தேஷாமாதித்யவத்ஜ்ஞானம் ப்ரகாசயதி தத்பரம் !
எவனொருவன் ஆத்மஞானம் பெற்று சத்சிதானதத்தை காணுகிறானோ அவனது அஞ்ஞானம் அழிக்கப்படுகின்றது,.அப்பொழுது சித் கோடி சூரியன் உதித்தது போல் பிரகாசமாக காட்சியளிக்கிறது.
இதே பொருள்பட பகவான் ரமணர் உள்ளது நாற்பது கலிவெண்பா நூலில் 25ஆம் சுலோகத்தில் கூறுகிறார்:
உருப்பற்றி யுண்டா முருப்பற்றி நிற்கு
முருப்பற்றி யுண்டுமிக வோங்கு—முருவிட்
டுருப்பற்றுந் தேடினா லோட்டம் பிடிக்கு
முருவற்ற பேயகந்தை யோர்வாய்—கருவாம்.
அஹந்தை ஒரு பேய்; அது இந்த தேகம் தான் நான் எனும் மாயையை நம்முள் உளவாக்கி நம்மை ஏமாற்றுகிறது..அதற்கு உருவம் கிடையாது ;ஆகவே ஒரு பௌதிக உடலை பிடித்துக்கொண்டு அது தான் நான் என்னும் பொய்யான ஒரு தோற்றத்தை உருவாக்கி தானும் ஏமாறுகிறது; மற்றவர்களையும் ஏமாற்றுகிறது. ஆத்மா தான் பிறக்கிறது,இறக்கிறது எனும் அக்ஞான குட்டையில் நம்மை மூழ்கடித்து, இஹலோக சுங்களை அனுபவிக்கத் தூண்டுகிறது. அப்படி அவித்யயில் மூழ்கும்பொழுது உண்மையான ‘நான்’ யார் என்பதை மறந்துவிடுகிறது; மறைத்து விடுகிறது. ‘நான் யார்’ என்ற விசாரம் உண்டாகிவிட்டால் இந்தப் பேய் இந்த உடலை விட்டு ஓடிவிடும்; உண்மையான நான் நம் கண்களுக்கு தென்படும்.
“இந்த நிலையை அடைய அருள வேண்டும் அருணசலா” என்கிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்.





ரமணஜோதி 100

ரமணஜோதி 100


மீகாமன்


     மீகாம னில்லாமன் மாகாற் றலைகல
               மாகாமற் காத்தரு ளருணாசலா
மீகாமன் என்றால் கப்பலை ஓட்டுனர் அல்லது நடத்துனர்.. நடுக்கடலில் ஒரு கப்பல், ஓட்டுனரும் நடத்துனரும் இல்லாமல் சிக்கிக்கொண்டால் என்ன கதியாகும்? ஓட்டுனர் இல்லாதது மட்டுமல்ல, அங்கு ஒரு புயல் காற்று அடித்தால் கப்பலின் நிலைமை என்னாகும்? ஈசன் அருள் கிடைக்காத மனிதாத்மாக்களின் நிலைமையும் இதே போல் தான்.
இந்த மாயையினால் உருவான பிரபஞ்ச ஸாகரத்தில் ஆசைகள் எனும் திமிங்கலுங்களும் சுறா மீன்களும் ஏராளம்.ஏராளம்.அவைகளிடம் சிக்கிக் கொண்டாலோ நாம் தப்பிக்கவே இயலாது. அப்படி தப்பித்துக் கொண்டாலும் கடலினுள்ளிலுள்ள சுழல்களில் சிக்கி அங்கேயே உழன்று கொண்டிருக்க வேண்டியது தான்.ஆகவே தான் பகவான் அருணாசலனின் அருளை வேண்டுகிறார்.
இதே போல்த் தான் தாண்டவராயன் பிள்ளையும் கைவல்ய நவனீதத்தில் வேண்டுகிறார்.
           வாராயென் மகனே தன்னை மறந்தவன் பிறந்தி றந்து
          தீராத சுழற்காற் றுற்ற செத்தைபோற் சுற்றிச் சுற்றிப்
          பேராத கால நேமிப் பிரமையிற் றிரிவன் போதம்
          ஆராயுந்த ந்னைத் தானென் ற்றியுமவளவுந் தானே
                     கை.ந.இரண்டாம் பாகம் தத்துவ விளக்கபடலம்
                     சுலோ 19
தன்னை மறந்தவன் என்ற வார்த்தைகள் மூலம் அந்த பரமாத்மாவை மறந்து விட்ட்வர்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, அவர்கள் இவ்வுலகிலிருந்து முக்தியடைய முடியாதவதர்களாகி விடுவார்கள் எங்கிறார் பிள்ளை. அவர்கள் ‘புனரபி ஜனனம்,புனரபி மரணம்’ பிறந்தும் இறந்தும் இந்த சம்சார சாகரத்தில் கிடந்து உழல்வார்கள். சுழலிக்காற்றில் அகப்பட்டுக்கொண்ட ஒரு வைக்கோல் துரும்பு போல் அல்லாடுவார்கள்..இந்த சுழற்சியிலிருந்து மோக்ஷம் அடைவதற்கு ஒரே வழி நான் யார் என்று விசாரித்து அறிந்து ஆத்ம ஸாக்ஷாத்காரம் அடைவது தான்.
இதே போல் மலையாள கவிஞர் துஞ்சத்து எழுத்தச்சன் ‘ஹரி நாம
கீர் த்தனம்என்ற நூலில் கூறியுள்ளது நினைவுகூரத்தகுந்தது.
          ஓம்காரமாயப் பொருள் மூன்னாய் பிரிஞ்சுடனெ-
     யாங்காரமாயதினு தான் தன்னெ ஸாக்ஷியது
     போதம்வருத்துவதினாளாயினின்ன பர-
     மாசாரியரூப; ஹரினாராயண நம: !
துவக்கமே மிகவும் சக்திவாய்ந்ததாக –பொருள் பொதிந்ததாக இருக்கிறது. ஓம்காரம் மூன்றாக பிரிந்து--அதாவது அ,உ,ம் என்ற மூன்று எழுத்துக்களின் கூட்டு தான் ஓம் என்று முன்பொரு மடலில் குறிப்பிட்டிருந்தேன்—அது போல ஒம் என்ற சொல்லைப் பிரித்து மூன்று அக்ஷரங்களாக கூறும்போது ஏற்படுகின்ற தாக்கத்தை விளக்குகிறார் கவிஞர்.
அ என்று சொல்லும்பொழுது நாம் வாய் நன்றாக திறந்து உச்சரிக்கிறோம். அது விஸ்தாரமான ஸ்தூல பிரபஞ்சத்தை குறிக்கிறது.
‘உ’ என்று சொல்லும்பொழுது உதடுகள் சிறிது நெருங்கி மூடிக்கொள்ள ஆரம்பிக்கிறது.இது ஸூக்ஷ்ம பிரபஞ்சத்தைக் குறிக்கிறது.
‘ம்’ என்று உச்சரிக்கும் பொழுது வாய் நன்றாக மூடிக்கொள்கிறது.அது ஸூக்ஷ்மேதரமான பிரபஞ்சத்தைக் குறிக்கிறது.
அதற்கு பிறகோ, ஒரு சாந்தமான அமைதி; எந்த உணர்ச்சிகளுக்கும் இடமில்லாத அமைதி. அது தான் பிரம்மம்.
இந்த பிரம்மம் தான் ஸூக்ஷ்மேதரவும்,சூக்ஷ்மவும், ஸ்தூலவுமான பிரபஞ்சத்தை பிரதிபலிக்கின்றது.
ஆகவே,அது தான்-பிரம்மம்;அது தான் எல்லாம்.
‘ஓம்’ காரத்திற்கு முன்னும் பின்னும் அமைதி-நிசப்தம் தான்.
இந்த ஒம்கார ரூபமான துரீயாவஸ்தை தான் சுஷுப்தியாகவும்,சொப்னாவஸ்தையாகவும்,ஜாக்ரத்தாகவும் உரு மாறுகிறது.
இந்த பரம்பொருளின் ஸ்தூல உருவம்தான் ஸத்வ-ரஜஸ்- தமோ குணங்களும்.
‘அ’காரம் உலக சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும், ’உ’காரம் எல்லோருக்கும் பாதுகாவலனான விஷ்ணுவும், ‘ம’காரம் ஸம்ஹார மூர்த்தியான சிவனையும் குறிக்கிறது.
ஆதியும் அந்தமுமில்லாத, ‘இது’ தான் என்று அறுதியிட்டு உறுதி கூறமுடியாததுமான, எதன் மீது எந்த ஒரு குண நலன்களையும் ஆரோபிக்க
முடியாததுமான அந்த ஸத்தியம் தான் ‘ஒம்’காரம் எனப்படும் பிரம்மம்
அந்த பிரம்மம் எதிலும் பற்றில்லாமல்,எல்லாவற்றிற்கும் ஸாக்ஷி மாத்திரமாய் நிற்கின்ற அடிப்படை தத்துவம் தான்.
ஸாங்கிய ஸாஸ்திரத்தின் அடிப்படையில் விவரிக்க இயலாத இந்த அடிப்படை தத்துவம் சூக்ஷ்ம-ஸ்தூல பிரபஞ்சமாக விரிவடையக்கூடியதாக இருக்கிறது; அது சத்துவ-தமோ குணங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது.
காபில சாஸ்திரப்படி நம்முள் சுயம் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் ‘போதம்’ தான் இந்த பிரம்மம்;அதுவே சத்துவ ரஜஸ்,தமோ குணங்களின் சேர்க்கையால் ‘விஷயங்களால் மூடப்பட்டிருக்கின்ற ஸ்தூல சூக்ஷ்ம பிரபஞ்சத்தை சிருஷ்டிக்க வல்லதாகவும் இருக்கிறது. ஆனால் இப்படி நடக்கின்ற பிரபஞ்ச சிருஷ்டியில் பிரம்மத்திற்கு, அல்லது நமது போதத்திற்கு எந்த பங்குமில்லை;அது வெறும் சாக்ஷி மாத்திரம் தான். நம் ‘போத’ ஸ்வ்யம் பிரகாசமானதாக இருக்கிறது.
நமது விவகார பிரபஞ்சத்தில், ஒளி அல்லது பிரகாசம் சூரிய –சந்திராதிகள், அக்னி, அல்லது வேறு பொருள்களின் சேர்க்கையில் உளவாகும் ஒருவித சக்தி எனத் தெரிந்து கொண்டிருக்கிறோம். இந்த நமக்கு வெளியிலுள்ள சக்தி சேகரிப்புகளிலிருந்து வருகின்ற ஒளி ஒரு பொருளின் மீது விழுந்து அது நமது கண்களிலுள்ள கண்மணி( Retina ) யில் தலிகீழாக அந்தப் பொருளின் பிம்பத்தை உண்டு பண்ணி நமது மூளயின் மூலம் சரியான உருவில் அந்த பொருள்களை காண்கிறோம் என்று விஞ்ஞானம் நமக்கு கற்று தந்துள்ளது.
ஆனால் கண்களை மூடிக்கொண்டு இருள் சூழ்ந்த ஒரு அறையில் படுத்து உறங்கும்பொழுது காணுகின்ற எந்த ஒரு வெளி சக்தியின் உதவியுமில்லாமல் பிரகாசமான காட்சிகளை சொப்னங்களாக காணுகின்றோம். அங்கே பிரகாசம் –ஒளி எங்கிருந்து வந்தது ?. அது நமது போதத்திலிருந்து வந்த ஒளி தான்.
இதை நமது முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். ஆகவே தான் சூரியனும் சந்திரனும் அக்னியும் இல்லையென்றாலும் ஒளி இருந்துகொண்டே இருக்கும் என்று சொன்னார்கள். ஜனக-யாஞ்யவால்க்கிய சம்வாதத்தில் இந்த உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது
இந்த சம்வாதம் பீரிஹதாரண்ய உபனிஷத்தில் வருகிறது.யாஞ்யவல்கியர் சிறந்த ஞானி .மஹாராஜா ஜனகரின் சபையை அலங்கரித்திருந்த வித்வாங்களில் முக்கியமானவர். ஜனகரின் குரு என்று கூட கூறலாம்.ஜனகரே சிறந்த ஞானி.இவர்களுக்குள் நடந்த விவாதங்கள் எல்லாமே மிகவும் சுவாரசியமானது.அதிலும் இந்த விவாதம் மிகவும் முக்கியமானது.
ஜனகர் கேட்டார்:” மஹரிஷிவரியரே,விசுவ புருஷனின் பிரகாசம் எங்கிருந்து வருகிறது?
முனிவர் கூறினார்:” சந்தேகமில்லாமல் சூரியனிடமிருந்து தான்,மன்னா.சூரியனின் வெளிச்சத்தில் தான் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் அமர்கின்றன,நடக்கின்றன,செயலாற்றுகின்றன.இதில் உனக்கென்ன சந்தேகம், அரசே?”
“முனிசிரேஷ்டரே, சூரியன் மறைந்த பிறகும் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் செயலாற்றுகின்றனவே;அது எப்படி?”
முனிவர் சொன்னார்,” சூரியன்மறைந்தால் சந்திரன் உதிக்கின்றான். நிலவின் ஒளி நமக்கு உதவுகின்றன,.”
“ சில நேரங்களில் சூரியனும் சந்திரனும் இருவருமே மறைந்து விடுகிறார் கள்;அப்பொழுது?”
“நிச்சயமாக நாம் உருவாக்கும் அக்னி நம்மை சஹாயிக்கின்றது.”
“ நெருப்பும் இல்லையென்றால்---?”
“ ஒலி இருக்கிறது.ஒலியின் மூலம் நாம் திசைகளை கண்டறியமுடியும்.தடங்கல் இல்லாமல் செயலாற்ற முடியும்.”
“ அதுவும் இல்லாவிட்டால்?”
“, அரசே, மகிழ்ச்சி.  நீ இப்பொழுது தான் சரியான கேள்விக்கு வந்திருக்கிறாய். எதுவுமே இல்லாவிட்டாலும் ஆத்மன் இருக்கிறான்.”
“ ஆத்மன் என்றால் என்ன?”
“ஆத்மன் உன்னுள்ளேயே இருப்பவனும், பலவகையான பிராணன்களால் சூழப்பட்டவனும் அவனே பிரகாசமாக இருப்பவனும், அறிவின் இலக்கணமாகவும் இருக்கிறான்.உன் கர்மேந்திரியங்கள் செயலிழந்தாலும் வெளியுலக பிரகாசங்கள் அஸ்தமித்தாலும்,உன்னால் செயலாற்ற முடியும் ஆத்மாவின் உதவியுடன்.”
யாஞ்யவல்கியர் தொடர்ந்தார்:” ஆத்மா என்ப்படுவது ஒரே இடத்தில் இருந்து கொண்டு எங்கும் சஞ்சரிக்கக் கூடியது.”
இந்த ஆத்ம சைதன்யம் எல்லோருள்ளேயும் சதா சர்வ காலம் ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது.மனம் பல இடங்களில் அலைந்தாலும் வேதனைப்பட்டாலும் ஆத்மா பாதிக்கப் படுவதில்லை.வேதனையை உணருவதும் இல்லை.ஆத்மா வெறும் ஸாக்ஷி மாத்திரமாய் நிலை கொள்கிறது.
இப்படிப்பட சைதைன்யத்தை,சுயம் பிரகாசமான ஆத்மாவை,போதத்தை உணருவதற்கான சக்தியை எனக்கு அளிக்கவேண்டும்,ஹரி நாராயணா
என்று எழுத்தச்சன் வேண்டுகிறார்.
இதே போதத்தை தான் ஆத்மாவைத்தான்,பிரம்மத்தை தான் பகவான் ரமணர் மீகாமன் என்று விவரிக்கிறார்.
இந்த மீகாமன் நிர்மலமும் நிராகாரனும் நிர்குணனும் ஆக இருக்கிறான்.இதைத்தான் சாந்தோகிய உபனிஷத்தில் ஆறாம் அத்தியாயத்தில் உத்தாலக முனிவர் தன் புத்திரனும்,சீடனுமான ஸ்வேதகேதுவிற்கு பிரம்ம வித்யை உபதேசிக்கின்ற பொழுது கூறுகிறார்:
ஸதேவஸௌமியேதமக்ர ஆஸித்.” என்றும் ,”ஏகமேவாத்விதீயம்” 
அதாவது ஆதியில் ஸத் ஒன்று மட்டும் தான் இருந்தது.அதுவே பலதாக தோன்றும் மாயையை ஏற்படுத்திற்று.அது நம்முடைய மனப்பிராந்தியே தவிர,நிஜமல்ல.
அதே அத்தியாயத்தில் மஹரிஷி மீண்டும் கூறுவார்:
யதா ஏகேனைவ ம்ருத்பிண்டேன ஸர்வம் ம்ருண்மயமவுஞாதம்
            விஞாதம் ஸ்யாத்வாசாரம்பணம் விகாரோ நாமதேய:
குடம், பானை,சட்டி என்று வித விதமான உருவததை மனம் எனும்  கலைஞன் படைத்தாலும் அவை எல்லாமே மண் தான்.பெயர் தான் மாறுகிறது.
அவை வெவ்வேறு என்று நமது மனம் பிராந்தி கொள்கிறது.இந்த பிராந்தியை விலக்கிக் கொள்ளவேண்டுமென்றால் அந்த மீகாமனின் உதவி வேண்டும்.அதைத்தான் வேண்டுகிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்.