அன்னையின் அருள்
ஔவைபோ லெனக்குன் னருளைத் தந்தெனை
யாளுவ துன்கட னருணாசலா
முன்னொரு சுலோகத்தில் பகவான் ரமணர் கூறினார் , “
“ஈன்றிடுமன்னையிற் பெரிதருள் புரிவோ
யிதுவோ வுனதரு ளருணாசலா”
அன்னை ஒருவள் மட்டும் தான் தன் பிள்ளைகளுக்குத் தன் அருளை,ஆசியை கேட்காமலேயே கொடுப்பவள்.
அது அன்னையின் இயல்பு.
பகவான் தனக்கு அருணாசலரிடம் இருக்கும் நெருக்கம் காரணமாக தாயின் அந்த இயல்பை கடன் என்று கூறுகிறார்.
ஈசன் தன்னில் பாதியையே அந்த பராசக்திக்கு நல்கி அர்த்த நாரீஸ்வரன் ஆனார்.
திருமாலோ மஹலக்ஷ்மியை தன் திரு மார்பிலேயே நிரந்தரமாக குடியிருத்தியதின் காரணமாக ஸ்ரீனிவாசன் என்ற பெயர் பெற்றான்.
அதே போல் அருணாசலன் நமக்கும் அருளவேண்டும் என்பது இன்னொரு விளக்கம்.
அர்த்தனாரீஸ்வரர் என்றதும் பகவான் ரமணர் சென்னையிலிருந்து ஆசிரமத்திற்கு சென்றிருந்த ரமண பக்தர் ஜகதீஸ்வர சாஸ்திரிகளுக்கு அருணாசலரருக்கு அர்த்த நாரீஸ்வரர் என்ற பெயர் எப்படி வந்தது என்று விளக்கி கூறியது ஞாபகத்திற்கு வருகிறது.
“ஒரு தடவை கைலாய சிகரத்தில் பரமேஸ்வரன் சுகாசீனராக இருந்த போது பார்வதி பின்னாலிருந்து வந்து வேடிக்கையாகத் தன் கைகளினால் ஒரு க்ஷணம் அவர் கண்களைப் பொத்தினாள்.
உடனே ஈஸ்வரனுடைய இரு கண்களான சூர்ய சந்திரர்கள் பிராகாசமிழந்தன. உலகமெல்லாம் இருளில் மூழ்கியது. பிரஜைகள் அல்லற் பட்டார்கள். பக்தர்கள் ,’ஹே ஈஸ்வரா! இதென்ன அகால பிரளயம்! இதிலிருந்து எம்மை காக்க வேண்டும்’ என்று வேண்டினர்.
பரமசிவன் நெற்றிக்கண்ணை சட்டெந்த் திறந்து பிரகாசம் உண்டாக்கிப் பிரஜைகளின் துன்பத்தை நீக்கினார்.
பார்வதி பயந்து போய் கைகளை அகற்றினாள். பரமேஸ்வரர் ஒன்றும் சொல்லவில்லை.”.அவர் கருணாமூர்த்தியல்லவா! இருந்தாலும் தேவி நடுங்கினாள்.
சுவாமி நயத்துடன்,”தேவி,உனக்கு இது வேடிக்கையே.ஆனால் என் கண்களை மூடியதால் பிரஜைகள் எவ்வளவு தவித்து போனார்கள் ,பார்த்தாயா?”
குழந்தைகள் ஒரு க்ஷணமேயானாலும் துன்பத்திற்குள்ளாகி விட்டார்களே என்று அந்த தாயுள்ளம் வேதனைப்பட்டு பாவத்திற்கு பரிகாரம்.தேடி ஈசுவரனுடைய அனுமதியுடன் தெற்கு நோக்கி பயணமானாள்.
அப்படிச் செல்லும் போது காசியில் கொடூரமான பஞ்சம் தலை விரித்து ஆடுவதைக் கண்டு அந்த தாயுள்ளம் வேதனை தாங்க முடியாமல் உடனேயெ ஒரு மாளிகை எழுப்பி அன்னபூரணா என்ற பெயரில் பசித்து வருபவர்களுக்கெல்லாம் உணவளிக்க ஆரம்பித்தாள்.
காசி ராஜனே வியக்கும் அளவுக்கு அன்னதானம் நடந்தது. தன்னால் முடியாதது ஒரு பெண்மணியால் எப்படி முடிகிறது என்று வியந்து காசிராஜன் மாறு வேடத்தில் அன்னபூர்ணா விடம் வந்து சேர்ந்தார்.
லோகமாதாவிடம் சென்று நீங்கள் என்னிடம் தானியத்தை கொடுத்தால் நானே சோறாக்கிப் போடுவதர்க்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார்.
அன்னையோ ‘உனக்கு வேண்டுமென்றால் உணவு வாங்கிப் போ; தானியமெல்லாம் கொடுக்க இயலாது. உணவளிப்பது எனது கடைமை என்றாள்..”.அதை அடிப்படையாகக் கொண்டு தானோ என்னவோ பகவான் ரமணர்,‘என்னையாளுவது உன் கடன் அருணாசலா’ என்றார் போலும்.
காசி ராஜனுக்கு உண்மை விளங்கி, அன்னபூரணியை அங்கேயே தங்கி இருக்கும்படி வேண்டினார்.
அம்மை அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.ஆனால் காசி நகரத்தை ஆசீர்வதித்து இன்றிலிருந்து மழை பெய்யும் மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். நான் இங்கிருந்து போனாலும் என் சாந்நித்தியம் என்றும் இங்கே இருந்து கொண்டேயிருக்கும் என்று ஆசீர்வதித்தாள்.
அந்த இடம் இன்றும் அன்னபூர்ணாலயம் என்ற பெயரால் அறியப்பட்டு வருகிறது.
காசியிலிருந்து புற்பட்ட தேவி காஞ்சி வந்து மணலில் சிவலிங்கம் அமைத்து பூஜித்தாள்.
பாப விமோசனம் அடைந்தாள்.
அங்கு காமாக்ஷியாக ரூபம் கொண்டு பிரசித்தமானாள்.
அங்கிருந்து புறப்பட்டு ரிஷப வாஹனத்தில் ஏறி அருணாசலம் வந்தடைந்தாள்.
திருவண்ணாமலையில் பவளக்குன்றின் அடிவாரத்திலிருந்த கௌதமரின் ஆசிரமத்திற்கு வந்தாள். (பகவான் ரமணரும் பல நாட்கள் பவளக்குன்றில் இருந்திருக்கிறார்.)
கௌதமர் அந்த நேரம் ஆசிரமத்தில் இல்லை. கௌதமரின் புதல்வன் சதானந்தர் தான் இருந்தார்,
சதானந்தருக்கு தேவியைப் பார்த்ததும் தாய்ப் பாசம் பெருக்கெடுக்க,’அம்மா,அம்மா’என்றழத்து அர்க்யபாத்யங்களால் உபசரித்தார்.
அங்குள்ள செடிகொடிகள்கூட தாயைக் கண்ட சந்தோஷத்தில் பூத்து குலுங்கின. தேவிக்கு புஷ்பாபிஷேகம் செய்தன.
பிறகு கௌதமரின் அறிவுரைப் படி தேவி மீண்டும் கடும் தவம் இருந்தாள்.கடைசியில் மஹாதேவன் மனமிரங்கி பிரத்யக்ஷமாகி .தேவியிடம்,”என்ன வரம் வேண்டுமோ கேள் தருகிறேன்”என்றாராம்
தேவி,’ எனக்கு உங்கள் தேகத்தின் பாதி வெண்டும். நான் உங்களில் பாதியாகிவிட்டால் உங்களை விட்டு பிரிய வேண்டி வராது. பிரியாவிட்டால் முன்னால் செய்தது போல் சிறுபிள்ளைத்தனமான தவறுகள் நிகழாதல்லவா”என்றாள். மஹாதேவனும் “அப்படியே ஆகட்டும்” என்றார்.
அன்று முதல் பரமேசுவரன் அர்த்த நாரீசுவரனானார்.” என்று பகவான் கதையை முடித்தார்.
இந்த கதையின் மூலம் பகவான் நமக்கெல்லாம் ஈசுவரனின்/ தாயுள்ளத்தின் கருணையும் இசுவரனில் லயித்து விட்டால் தவறுகள் நிகழாது என்றும் அறிவுறுத்துகிறார் போலும்
அப்படிப்பட்ட உலக மாதா தன் குழந்தைகளுக்கு கேட்காமலேயே படியளக்கிறாள்.
பகவான் வேண்டுகிறார், “ அதே போல் எனக்கு நீ அருள வேண்டும்” என்று.
பகவானின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இந்த இடத்தில் குறிப்பிடுவது தவறாகாது .
ஆசிரமத்திலேயே. வளர்ந்த ஒரு காளை மாட்டை மதுரை மீனாக்ஷி கோவிலுக்கு காணிக்கையாக அனுப்பிவைத்தார்கள். அவர்கள் அதற்கு ‘பசவன்’ என்று பெயரிட்டார்கள்.
அந்த மாட்டை நன்றாக அலங்கரித்து ஆசிரமத்திலிருந்து அழைத்து சென்ற சாம்பசிவ ஐய்யருடன் போட்டோ எடுத்து ,அந்த போட்டோவையும் ,பழைய காலத்து ஜரிகை சால்வை விபூதி,குங்குமம்,மஞ்சள்,முதலான பிரசாதங்களையும் சாம்பவசிவ ஐய்யரிடமெ கொடுத்து அனுப்பினார்களாம்.
ஐய்யர் ஒரு பெரிய தாம்பாளத்தில் பிரசாதங்களையும் சால்வையும் வைத்து பிராமணர்கள் ‘ந கர்மண ந ப்ரஜய தனேன’ என்று மந்திரம் ஓத பகவானிடம் சமர்ப்பித்தார்.
சாம்பசிவ ஐய்யர் சால்வையை எடுத்து பகவானின் கால்கள் மீது போர்த்தினார். விபூதியையும் குங்குமத்தையும் எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டு சால்வையை காலிலிருந்து அகற்றிவிட்டுக் கூறினார். “பார்த்தீர்களா,அம்மா மீனாக்ஷி அனுப்பியிருக்கிறாள். அம்மா பிரசாதம்.”
அங்கிருந்தவர்கள் அப்பொழுது அவர் குரல் தழுதழுத்ததையும் உடம்பு சிலிர்த்ததையும் கண்டார்களாம்.
பகவான் ஆனந்த பாஷ்பம் நிறைந்த கண்களை மூடிக்கொண்டு மௌனமாகி சிலை போல் அசலமாக அமர்ந்துவிட்டாராம்.
அருணாசலராயிருந்தாலும் தேவி மீனாக்ஷியாயிருந்தாலும் ஒன்றே என்று பகவான் கருதினார் என்பதற்கான சான்று இது..
மற்றொரு விளக்கம் ஔவை பிராட்டிக்கு பகவான் கணேசர் ஆசியளித்தது போல் எனக்கும் அருள வேண்டும் என்று பகவான் கேட்டுக்கொள்கிறார் என்பதாகும். எல்லா கடவுள்களும் ஒன்று தான் என்ற பகவானின் ஞானம் இதன் மூலம் வெளியாகிறது.
No comments:
Post a Comment