Thursday, 26 February 2015

ரமணஜோதி 81

 ரமணஜோதி 81


என் குறையை யாரிடம் சொல்வேனருணாசலா ?

                       

பார்த்தருண் மாலறப் பார்த்திலை யெனினருள்

                                    பாருனக் கார்சொல்வ ருணாசலா


' அருணாசலா, நீ எனை பார்த்தருள் உன் கடைக்கண் பார்வை பட்டாலே எனது மாயா மயக்கம் அற்று விடும். நீ அருளவில்லை என்றால் உனக்கு யார் சொல்வது?. என்கிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்.
இதற்கு முன்னாலுள்ள சுலோகத்தில், “அவித்யா  என்பது விஷ சமானம். அது தலைக்கு ஏறுவதற்கு முன் உன் அருள் பார்வையை என் மீது கடாட்சித்து என்னை காப்பாற்று” என்று வேண்டினார்.
அந்த பிரார்த்தனையை இன்னும் வலியுறுத்துகிறார் இந்த சுலோகத்தில்.
உன் பார்வை பட்டாலே விஷம் இறங்கி விடும்; நான் முக்தனாகி விடுவேன். உன் கருணை இல்லையென்றால் எனக்கு வேறு கதி இல்லையென்கிறார்
பரமனின் கருணை குறித்து வள்ளலார் பாடுகிறார்:
என் உடலும் என் உயிரும் என் பொருளும்
நின்னஎன இசைந்தஞ் ஞான்றே
உன்னிடைநான் கொடுத்தனன்மற் றென்னிடைவே
றொன்றும்இலை.உடையாய் இங்கே
     புன்னிகரேன் குற்றமெலாம் பொறுத்ததுவும்
           போதாமல்  புணர்ந்துகொண்டே
     தன்னிகர் என் றெனவைத்தாய் இஞ்ஞ்சான்றென்
           கொடுப்பேன் நின் தன்மை கந்தோ
என் உடலும் என் உயிரும் உனதே என்று நான் சமர்ப்பித்தேண்; இப்பொழுது என்னிடை கொடுப்பதற்கொன்றுமில்லை; இருந்தும் நீ என் குறைகளை மன்னித்தது மட்டுமல்லாமல் என்னை உனக்கு நிகராய் வைத்தாய்; உன் கருணையை என்னே சொல்வது? என்று கேட்கிறார் இராமலிங்க அடிகளார்.
அப்படிப்பட்ட கருணை வள்ளலாம் அருணாசலேசுவரனிடம் பகவான் அருள் வேண்டுகிறார் அஞ்ஞ்சானம் அறுவதற்கு.
அதே போல் நடராசப் பத்து எனும் நூலில் முனிசாமி முதலியார் கூறுகிறார்:

                        மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ

                                    மறை நான்கின் அடிமுடியும் நீ

                        மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ

                                    மண்டல்மிரண்டேழும் நீ

                        பெண்ணும் நீ ஆணும் நீ, பல்லுயிருக்குயிரும் நீ

                                    பிறவும் நீ ஒருவ நீயே

                        பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ

                                    பெற்றதாய் தந்தை நீயே

                        பொன்னும் பொருளும் நீ யிருளும் நீ

                                    ஒளியும் நீ போதிக்கவந்த குரு நீ

                        புகழொணாக் கிரகங்களொன்பதும் நீயிந்த

                                    புவனங்கள் பெற்றவனும் நீ

                        எண்ணரிய சீவகோடிகளீன்ற வப்பனே என்

                                    குரைகளார்க்குரைப்பேன்,

                        ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற

                                    தில்லைவாழ் நடராசனே

முதலியார் பெருமான் கூறுகிறார்:.
“நீ எல்லாவற்றிற்கும் மூலகாரணம். நீயே மண்,விண்,புத உலக ஜிவராசிகள் எல்லாம்;நீயே சூரிய சந்திரர்கள், நீயே ஆணும் பெண்ணும்;பொன்னும் பொருளும் நீ;இருளும் ஒளியும் நீ;புவனங்களையும் கிரகங்களையும் படைத்தவன்;எல்லோருக்கும் அறிவுரை போதிப்பவனும் நீ; பெற்றா தாய் தந்தையும் நீ.அப்படியிருக்கும் பொழுது என் குறைகளை உன்னிடமல்லாமல் யாரிடம் போய் கூறுவேன்?”
 பகவான் ரமணர் “அருணாசல நவமணி மாலை” மேற்கூறிய கருத்துக்களை இன்னொரு விதமாக சொல்கிறார்:

                        அண்ணாமலையா யடியேனை

                                    ஆண்ட, வன்றே யாவியுடற்-

                        கொண்டாயெனக்கோர் குறையுண்டோ

                                    குறையுங் குணமு நீயல்லா

                        லெண்ணே நிவற்றை யென்னுயிரே

                                    யெண்ணமெதுவோ வது செய்வாய்

                        கண்ணே யுன்றன் கழலிணையிற்

                                    காதற் பெருக்கே தருவாயே

நீ அண்ணாமலயாய் என்னை ஆட்கொண்டாய். அன்றிலிருந்து என் உடல் ஆன்மா பொருள் எல்லாம் உன்னிடம் அர்ப்பித்து விட்டேன். அப்புறம் எனக்கு எப்படி குறைகள்,அல்லது தேவைகள் இருக்க முடியும்? என் நிறையும் குறையும் உன்னில் அடக்கம். நான் ஏன் அவைகளைக் குறித்து சிந்திக்க வேண்டும்?. நான் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். உன் பாத கமலங்களில் சரண் அடைந்து விட்ட எனக்கு உன் அளவிலா கருணையை மட்டும் தருவாய்.”

இதையே தான் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதை  13 ஆம் அத்தியாயத்தில் 11 ஆம் சுலோகத்தில் அர்ஜுனனிடம் சொல்கிறார்:

             அதைததப்யாசக்தோஅசி கர் தும் மத்யொகமாச்சித:!

            ஸர்வகர்மபலத்யாகம் தத: குரு யதாத்மவான் !!

யாரொருவனால் கர்ம யோகத்தையோ ஞானயோகத்தையொ பக்திமார்க்கத்தின் அப்யாசங்களையோ அனுஷ்டிக்க முடியவில்லையென்றால்,என்னிடம் அடைக்கலமாகி விடு.கர்மபலன் முழுவதையும் எனக்கு அர்ப்பணித்து விடு.

மனிதனால் கர்மம் செய்யாமல் இருக்க முடியாது. அப்படி கர்மங்களை செய்யும் பொழுது அதன் விளைவுகள் அவனை தாக்குகின்றன. அதிலிருந்து  நாம் தப்ப வேண்டுமென்றால் பற்றுதலின்றி  கர்மங்களை ஆற்ற வேண்டும்.அது நம்மை பரமனிடம் கொண்டு சேர்க்கும். அப்புறம் நமக்கு குறையுமில்லை; கவலயும் இல்லை.சாந்தி கிடைக்கும்.

ரமணஜோதி 80

ரமணஜோதி 80

மாயை எனும் விஷம்


பற்றிமால் விடந்தலை யுற்றிறு முனமருள்
     பற்றிட வருள்புரி யருணாசலா
மாயை எனும் விஷம் தலைக்கேறி என்னை அழிப்பதற்கு முன், உன் அருள் என் மீது விழ அருள்புரிவாய் அருணாசலா””  என்று பகவான் வேண்டுகிறார் இந்த சுலோகத்தில்.
மாயை, அவித்யை,அஞ்ஞானம் நம் கண்களை மறைத்து நாம் யார் என்பதை தெரிய விடாமல் நம் புத்தியை மழுங்கடித்துவிடுகிறது. அம்மாதிரியான நிலை ஏற்பட்டுவிட்டால் நமக்கு முக்தி கிடைப்பது மிகவும் துர்லபமாகிவிடும். அவித்யை விலக வேண்டுமென்றால் பரமன் அருள் வேண்டும். அதைத்தான் யாசிக்கிறார் பகவான் இந்த சுலோகத்தில்.
இதையே பட்டினத்தார் கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்:
          முடிசார்ந்த மன்னரு மற்றமுள்ளோரு முடிவிலொரு
          பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதுங் கண்டுபின்னுமிந்தப்
          பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னினம்பலவ
          ரடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றே யறிவாரில்லையே
“தினம் தினம் மன்னரும் மாந்தரும் ஒரு போல் மடிந்து ஒரு பிடி சாம்பலாவதை நாம் காண்கிறோம். பிறகும் நாம் இந்த இகலோக சுகங்களுக்குப் பின்னால் ஓடுகிறோம். அதை விடுத்து தில்லையம்பலத்தில் வாழும் ஈசனை நினைப்பதில்லையே” என்றூ பட்டினத்தார் அங்கலாய்க்கிறார்.
அப்படி ஈசனை நினைப்பதற்கு ஈசன் அருள் வேண்டும். அதற்காக பட்டினத்தார் கூறும் உபதேசம் என்ன ?
          ஓடாமல் பாழுக்கு உழயாமல் ஒரமுரைப்பவர்பால்
          கூடாமல் நல்லவர்கூட்டம் விடாமல் வெங்கோபம்நெஞ்சில்
          நாடாமல் நன்மைவழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று
          தேடாமல் செல்வந்தருவாய்,சிதம்பர தேசிகனே.
நாம் இந்த இகளோக சுகங்களுக்கு—இந்திரியங்களால் தூண்டபடுகின்ற சுகங்களுக்கு பின் உழைக்காமல் ஓடாமலிருக்கவேண்டும்  நாம் உழைத்து சாப்பிட வேண்டும். சோம்பேரியாக உட்கார்ந்து சாப்பிடக் கூடாது.  புறம் பேசி மற்றவர்கள் குறைகளை பேசித் திரியாமல்,நல்லவர்களுடன் –சத் சங்கங்களில்-சேர வேண்டும். குரோதத்திற்கும் கோபத்திற்கும் இடம் கொடலாகாது. நன்மையிலிருந்து வழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று செல்வம் சேர்த்து வைக்காமல் தில்லையம்பலத்தானின் அருள் வேண்டும் என்கிறார் பட்டினத்தார்.
இன்று நாளை என்று செல்வம் சேர்க்கக் கூடாது; சோம்பேரியாக தூங்கக் கூடாது என்று பட்டினத்தர் படினார். அப்படியே வாழ்ந்து காட்டியவர் பகவான் ரமாணர்.
பகவான் ரமணர் ஆஹாரம்,தூக்கம் முதலியவற்றில் மிகவும் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து காட்டியவர்.
பகவான் ஒருமுறை கூறினார்:
“ஆவரணம்,விக்ஷேபம் என்று தியானத்திற்கு இரண்டு விக்னங்கள் என்று சொல்வார்கள் ஆவரணத்தில் தூக்கம் தான் முதலானது .கூடுமானவரை தூக்கம் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் .தூக்கம் வருவதற்கு என்ன காரணம் என்று விசாரம் செய்து உணவு, நடவடிக்கை,முதலியவைகளை சுத்தமாகவும் மிதமாகவும் வைத்துக் கொண்டு தூக்கம் வராதபடி பார்த்துக்கொள்ளவேண்டுமே தவிர தூக்கம் வந்த பிறகு தடுக்க முயன்றால் என்ன பிரயோனம்? நிறைய உண்டால் நிறைய தூக்கம் வராதா என்ன? தியானத்திற்கு உட்கார்ந்தால் தலை ஆடி ஆடி விழும் .சிலர் தலை முடியை சுவரில் இருக்கும் ஆணியில் கட்டிக் கொள்வார்களாம். இப்படிச் செய்வதால் தலையசையும்போது விழிப்பு வருமே தவிர தியானத்திற்கு உதவுமா? என் பால்யகாலத் தூக்கம் பிரசித்தமானது தானே? ஸ்கூலில் பாடம் நடக்கும் போது தூக்கம் வருகிறதேயென்று, பின்னால் சுவரில் ஒரு ஆணியை அடித்து,அதில் ஒருகயிற்றைக் கட்டி ,அதை என் தலை முடியோடு சேர்த்து கட்டிக் கொள்வேன். தலையசைந்தால் கயிறு மயிரை பிடித்து இழுப்பதில் விழிப்பு வரும்.”
“விஹாரம் இருந்தால்  ( நடவடிக்கைகள்) இருந்தால் ஆஹாரம் வேண்டும்; ஆஹாரம் உண்டால் தூக்கம் வரும். விஹாரமில்லாது போனால் தூக்கம் வராது. உயிர் வாழ்வதற்கு ஏதோ சிறிது உணவு வயிற்றில் விழுந்தால் போதும்”
“அதனால் மிதமான  சாத்வீக ஆஹார விஹார நியமங்கள். ஆன்மீக மலர்ச்சிக்கு அத்தியாவசியமென்றுதான் சொல்லவேண்டியுள்ளது.”
நமது வீழ்ச்சிக்கு முதல் காரணம் கர்த்ருத்துவ’ மனனிலை.  நாம் தான் எல்லாவற்றையும் செய்கிறொம்;நம்மால் எதையும் செய்ய முடியும் ;வெல்ல முடியும் எங்கின்ற மனோபாவம் விஷத்திற்கு சமானமானது.இதைத்தான் ‘அஹங்காரம்’ எங்கிறோம்.
கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்வார்:
ப்ரக்ருதே: க்ரியமாணானி குணை: கர்மாணி. ஸர்வச: !
அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மன்யதே !!
                ப்.கீ அத்3 சுலொ. 27
பிரக்ருதியின் குணவிசேஷங்களால் மனிதன் பலதரப்பட்ட கர்மங்கள் செய்யும்படியாகிறது. அஹங்கார விஷம் தலையில் ஏறியுள்ளவன் எல்லாவற்றிற்கும் நான் தான் கர்த்தா என்று நினைக்கிறான்.
நமது இயல்பு பிரகிருதியின் முக்குணங்களால் உருவகப்படுகிறது. முக்குணங்கள் என்பவை தமஸ் ,ரஜஸ் ,சத்துவம் எனப்பட்டவை. ஒவ்வொருவரிலும் இந்த முக்குணங்களின் விதை ஊன்றப்பட்டுள்ளது. நமது கர்மபலனால் இதில் ஒன்றோ இரண்டோ குணங்கள் சில சந்தர்ப்பங்களில் மேலோங்கி நிற்க ஏது உண்டு. அதன் விளைபவாக நாம் வெற்றியோ தோல்வியோ பெறுகிறோம். இதை ஆன்மாவுடன் இணைத்து நாம் வெற்றி பெற்று விட்டோம் என்றோ தோல்வியுற்று விட்டோம் என்றோ எண்ணுவது தவறு.
மாயை அல்லது அவித்யை என்பது இந்திரியங்களுக்கு வசப்படுதல்.இந்திரியங்களின் திருப்திக்காக கர்மம் இயற்றுவது என்பதாகும்.
பிரகிருதியின் இயல்பு கர்மம்.ஆத்மாவிற்கு கர்மம் இல்லை.இது நமக்கு தெரிவதில்லை.ஆகவே நாம் கர்ம பந்தத்திலிருந்து தப்பிக்க முடிவதில்லை.ஆத்ம-அனாத்ம விசாரம் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தத் தான் செய்யும்.
செடிகள் தத்தம் இயல்புக்கேற்றவாறு ஒங்கி வளருகின்றன அல்லது மற்றொன்றின் மீது படர்ந்து வளருகின்றன. சில செடிகள் கசப்புள்ள கனிகளை தருகின்றன்,சில இனிக்கின்ற கனிகளையும் ,மற்ற சில் புளிப்பான காய்களையும் தருகின்றன்.அது அவைகளின் இயல்பு. அவைகளின் வினைப் பயன்.
இத்தனை வித இயற்கை பேதம் உயிர்களுக்கிடையில் இருப்பதற்கு காரணம் முதலில் கூறிய முக்குணனங்களின் வேறுப்பட்ட தாக்கத்தினள் உண்டாகின்றன என்பது முதல் காரணம். மற்றொரு காரணம் ஐந்து இந்திரியங்களின் இடையே ஏற்படும் ஏற்றத் தாழ்வு தான். ஒருவருக்கு மல்லிகை வாசனை மயக்கத்தை உண்டாக்கும்;இன்னொருவருக்கு ‘அலர்ஜி’ உளவாக்கும்.
இதைத்தான் கீஆசாரியன் கீழ்கண்டவாறு விளக்குகிறார்:
     இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்த்தே ராகத்வேஷௌ
                           வ்யவஸ்திதௌ !
     தயோர்ன வசமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்தினௌ !!
                     ப்.கீ அத் 3 சுலோ 33
இந்திரியங்கள் நமக்கு ஆசை காட்டி மயக்கும்.அந்த ஆசை வலையில் வீழாமல் பரமனை சரணடைவது தான் முக்திக்கு வழி.

இந்த ஆசை வலையத்தில் நாம் ஏன் விழுகிறோம்?
     காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ: !
     மஹாசனோ மஹாபாப்மா வித்த்யேனமிஹ வைரிணம் !!
                           ப்.கீ. அத்  3 சுலோ 37
இந்த ஆசை அல்லது காமம் ரஜோகுணத்திலிருந்து உதிக்கின்றது. இந்த காமம் நிறைவேறாத நிலையில் குரோதம் உண்டாகிறது. குரோதம் எல்லாவற்றையும் உண்ணவல்லது.ஆகவே தான் அதை நம் முக்திக்கு எதிரியென்று கூறப்படுகிறது. இந்த ஆசை நெருப்பை எப்படி புகை மறைக்கிறதோ, எப்படி தூசி படிந்த கண்ணாடி ண்பிக்காதோ அது போல் உங்களை ஞானம் அடைய விடாமல் தடுத்து விடுகிறது.

இந்த விஷ பாதையிலிருந்து தப்பிக்க ஒன்று கடினமான முயற்சி வேண்டும்; அது மட்டும் போதாது; பரமன் அருளும் வேண்டும். அதைத்தான் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில் வேண்டுகிறார். 

ரமணஜோதி 79

ரமணஜோதி 79

ஸகலம் வசுதைவகம்


       நோக்கியே கருதிமெய் தாக்கியே பக்குவ
           மாக்கிநீ யாண்டரு ளருணாசலா
‘நான் பக்குவப்பட்டுவிட்டேன்; என்னை ஏற்றூக்கொண்டு காத்தருளருணாசலா
என்று முன்னால் கண்ட சுலோகங்களில் பகவான் வேண்டுகிறார்.
பகவான் ஏன் வேண்டவேண்டும் என்று நம்மில் சிலருக்கு சந்தேகம் உண்டாகலாம்.
இதற்கான பதிலை ஒரு சந்தர்ப்பத்தில் தன்னை நாடி வந்தவர்களிடம் பகவானே கூறியுள்ளார்.
ஒரு சந்தர்ப்பத்தில் பேராசிரியர்  சுவாமினாதன் சில வடமொழி புலவர்களுடன் பகவானைக் காண வந்திருந்தார். அவர்கள் பகவான் முன்னிலையில் யோகவாசிஷ்டத்தைக் குறித்து திவீரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பகவான் சாதாரணமாக இம்மாதிரி விவாதங்கள் நடக்கும்பொழுது அதிகமாக தலையிடமாட்டார்.யாரவது ஏதாவது கேட்டால் மிகவும் யோசித்து ஒரு சில வார்த்தைகளில் பதில் சொல்வார்.
மேற்கூறிய விவாதம் நடந்துகொண்டிருக்கும்பொழுது ஒரு அறிஞர் பகவானிடம் கீழ்க்கண்டவாறு கேட்டார்:
“ராமாயணத்தில்  வரும் ஸ்ரீ ராமன் மஹாவிஷ்ணுவின்  அவதாரம் அல்லவா? அவன் எல்லாம் அறிந்த சர்வஞானியல்லவா? அப்படிப்பட்ட பூரண முக்தனான ஸ்ரீ ராமன் வசிஷ்டரிடம் பாலிசமான கேள்விகள் கேட்பதாக யோக வாசிஷ்டத்தில் வருகிறதே? அப்படி கேள்வி கேட்கின்ற ஸ்ரீ ராமன் முக்தனா? இல்லை முமுக்சுவா? ( முமுக்சு என்றால் ஞானம் பெறுவதில் ஆர்வம் உடையவன்)”
இந்த முறை பகவான் சிறிதும் யோசிக்கவும் இல்லை; நேரமும் எடுத்துக் கொள்ளவில்லை. பகவான் ப்ளீரென பதில் சொன்னார்
“ வசிஷ்டர் சொன்னது முக்த ராமனுக்குமில்லை; முமுக்சு ராமனுக்கும் இல்லை ஓய் ! அது உமக்கும், எனக்கும் தான் ஓய் !”
அதே பதில் தான் நமது சந்தேகத்திற்கும் பதில். பகவான் ரமணர் பிரார்த்திப்பது நமக்காகத் தான்.
முன்னால் “நான் பக்குவமாய்விட்டேன் என்னை எடுத்துக் கொள்” என்று சொன்ன பகவான் ரமணர் இந்த சுலோகத்தில் கூறுகிறார்:
“ அப்படி நான் பக்குவப் படவில்லை என்று நினைத்தால், நீ தான், அருணாசலா, என்னை பக்குவப் படுத்த வேண்டும். கண்ணால் கடாட்சித்தோ, மனதால் அனுக்கிரகித்தோ, என்னை ஸ்பரிசித்தோ அருளவேண்டும்”
முன்னால் ஒரு மடலில் குரு தீக்ஷை அளிக்கின்ற முறைகளைக் குறித்து குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது அதே முறைகளை பரமனின் அருள் பெறுவதற்கும் பகவான் ரமணர் குறிப்பிடுகிறார்.
பகவானின் உபதேசங்கள் நமக்கு இரண்டு மார்க்கங்களை காண்பிக்கின்றன.
ஒன்று ‘நான் யார்’ என்ற விசார மார்க்கம்;
இன்னொன்று பூரண சரணாகதி மார்க்கம்.
பூரண அத்வைதியான பகவான் ரமணர் பூரண சரணாகதி மார்க்கத்தை உபதேசிக்கிறார் என்றால், அவர் அத்வைதத்தை மறந்து துவைதத்திற்கு மாறிவிட்டார் என்று அர்த்தமா? யார் யாரிடம் சரணாகதியாவது? இருப்பது ஒருவனே என்றால் சரணாகதி எப்படி சாத்தியம்?
 அவர் கருணை மிகுந்து, நமது சக்தியின்மையை உணர்ந்து, புரிந்துகொண்டு விசாரமார்க்கம் மிகுந்த கடினமானது; அது பலரின் சக்திக்கு மீறினதாக இருக்கும் ;அதனால் பக்தி மார்க்கத்தின் ஒரு அங்கமான பூரண சரணாகதியை ஏற்றுக்கொள்ள சொல்கிறார்.
இதே கருத்தை பகவத் கீதையிலும் காணலாம்.
கீதாச்சாரியன் கூறுகிறான்:
           பஹூனாம் ஜன்மனாமந்தே ஞானவான்மாம் ப்ரபத்யதே !
           வாஸுதேவ ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: !!
                           ப.கீ.அத்.7 சுலோ 19
‘பல பிறவிகளுக்குப் பிறகே “ யாவும் வாசுதேவ சொரூபம்”: என்ற ஞானம் பெற முடியும்.அதற்கு பின் தான் நீ என்னை வந்தடைய முடியும் அது மிகவும் துர்லபம்.’
‘வாசுதேவ’ என்பதன் பொருள்—பிரத்தியகாத்மன், எதிலும் ஊடுருவி நிலைத்திருப்பவன், என்பது.
சர்வம் என்ற வார்த்தை மூலம் கீதாசிரியன் சரம், அசரம், மனிதர்கள் ,மற்ற எல்லா ஜீவ ராசிகள் எல்லாவற்றையும் குறிப்பிடுகிறான்.
ஒருவன் ஞானம் பெற்று விட்டால் பரமனே எல்லா சராசரங்களிலும் நிறைந்து நிற்கிறான் என்கின்ற சுவானுபவம் அடைகிறான். ஆனால் அப்படிப்பட்ட வெளிப்பாடு உண்டாவதற்கு பல் பிறவிகள் பிடிக்கின்றன. காண்பதனைத்தும் பரமாத்ம சொரூப்மாக தென்படும்போது அவன் ஞானியாகிறான். இம்மாதிரியான மகோன்னத நிலை அடைந்தவர்கள் சிலரே.
மற்றவர்களுக்கும் மோக்ஷ மார்க்கம் வேண்டுமல்லவா? அதற்கான ஒரு மார்க்கம் தான் பூரண சரணாகதி.
ஒரு முறை பகவான் பூரண சரணாகதியை குறித்து விளக்கம் அளித்தார்.அது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.
ஒரு பகதர் நீண்ட நாட்களாக பகவானை தரிசிக்க திருவண்ணாமலை வந்து பொய்க்கொண்டிருந்தார். அவர் ஒரு முறை வந்தபோது பகவானிடம் ,தான் சமீபத்தில் சமாஸ்ரயணம் ( வைஷ்ணவ தீக்ஷை) பெற்றுக்கொண்டதை கூறிவிட்டு வைஷ்ணவ சம்பிரதாயங்களைக் குறித்து சொல்லலானார்.
அப்பொழுது பகவான் சொன்னார்:
“அவர்கள் 9வைஷ்ணவ) சம்பிரதாயத்தில் சாயூஜ்யத்தை (இறைவனுடன் ஒன்றிவிடுதல்) ஒப்புக்கொள்வது கிடையாது. வைகுண்டத்தில் மஹாவிஷ்ணு இருப்பார்; அவரைச் சுற்றி இந்த முக்தி அடைந்தவர்கள் உட்கார்ந்து சேவிப்பார்கள்;என்கிறார்கள். எல்லாருக்கும் வைகுண்டத்தில் எப்படி இடம் இருக்கும்?--------அது மட்டுமில்லை; சமாஸ்ரயணம் செய்யும்பொழுது “அனைத்தையும் குருவிற்கு அர்ப்பணம் செய்கிறேன் “  என்று ஒரு மந்திரம் இருக்கிறதாம் அந்த மந்திரத்தை சொல்லி  குருவிற்கு  தக்ஷிணை கொடுத்தால் போதுமாம்; எல்லாம் அர்ப்பணம் ஆகிவிடுமாம்.- --------
“அர்ப்பணம்”  என்பது இத்தனை சுலபம் என்று நினைப்பது வெறும் பிரமை. அர்ப்பணமென்றால் மனம் தன்னில் அடங்கி அதனுடன் ஐக்கியமாகவேண்டும். அப்படி  ஆவதற்கு சுய பிரயத்தினமும், ஈசுவர கிருபையும் இருந்தாலன்றி முடியாது.  ஈசுவர சக்தி தானாகப் பிடித்துக்கொண்டு  அகத்தே இழுத்துப் போகவேண்டும். அப்பொழுது தான் அனைத்தையும் நம்மால் அர்ப்பிக்க முடியும். நாம் என்ன அர்ப்பிப்பது? தானாகவே அர்ப்பணமாகிவிடும். இப்படிப்பட்ட பூரண சரணாகதியைச் சாதிக்கும் வரை அல்லாடிக்கொண்டே, பிரயத்தினம் செய்துகொண்டேயிருக்க வேண்டும். முயற்சி பண்ணிக்கொண்டேயிருந்தால் கடைசியில் எப்போதோ பலன் கிடைக்கும்.-------அர்ப்பணம் அர்ப்பணம் என்கிறார்களே,’நான்’ என்று ஒன்று இருந்தால் தானே அர்ப்பிக்கலாம்? நான் யாரென்று தெரிந்துகொள்ளும்வரை அவர்கள் சொல்லும் சர்வசமர்ப்பணம் நடக்காது. அதை தெரிந்து கொண்டாலோ இருப்பது ஒரே பொருள் தான். நான் எனும் மனது அடங்கும். அது தான் சரியான அர்ப்பணம்.”
பூரண சரணாகதிக்கு பல படிகள் உண்டு என்று பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளது,
முதலில் துன்பத்திற்கு ஆளாகிறவர்கள் அவரவர்கள் மனோ நிலைக்கு ஏற்ப கடவுளை உபாசிக்கிறார்கள். எல்லா தெய்வங்களும் பரமனின் அம்சமே. எதுவுமே சர்வேசுவரனுக்கு அன்னியமானவை அல்ல. லட்சியம் எவ்வளவு பெரியதோ அவ்வளவுக்கவளவு அதை அடைவதும் கடினம். மனபரிபாகத்திற்கேற்ப ஆசையும் வடிவெடுக்கிறது. அவைகளை நிறைவேற்றுவதற்கான உபாயங்களும் மாறுபடுகின்றன.
           கர்மைஸ்தைஸ்தைர்ருதக்னானா: ப்ரபத்ய்ந்தோந்தேவதா: !
           தம் தம் நியமமாஸ்தாய ப்ர்க்ருத்யா நியதா: ஸ்வயா !!
                           ப.கீ அத் 7 சுலோ 20
“எந்த பக்தன் எந்த உருவில் என்னை வழிபட்டாலும்,நான் அவனது பக்தியை அசையாததாக ஆக்குகிறேன் “ என்கிறார் பகவான் கிருஷ்ணர் அடுத்த சுலோகத்தில்.
           யோ யோ யாம் யாம் தனும் பக்த: ஸ்ரத்தயார்சிதுமிச்சதி !
           தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம் !!
                                           சுலோ 21
அதே அத்தியாய்த்தில் 28ஆம் சுலோகத்தில் பகவான் கூறுவார்:
“புண்ணிய  கருமங்களை செய்கின்ற ஜனங்களின் பாபங்கள் முடிவடையும் பொழுது  துவைதத்திலிருந்து விடுபடுகிறார்கள் அவர்கள் உறுதியுடன் என்னை வழிபடமுடிகிறது.”
சுயநலமற்ற  கருமங்களெல்லாம் புண்ணிய கருமங்களே. நெடுனாள் நிஷ்காமிய கருமம் புரிந்து, மனதை தூய்மையாக்கினால் மட்டுமே பூரண சரணாகதியாக முடியும்.
வெற்றி தோல்விகளுக்கிடையிலும் மாறாத பகி பூண்டொழுகினால் மட்டுமே பூரண சரணாகதியாகமுடியும்.

இப்படி தூய்மையாவதற்கு ஈசன் அருள் பூரணமாக வேண்டும்.அதையே தான் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில் வேண்டுகிறார்.