ரமணஜோதி 81
என் குறையை யாரிடம் சொல்வேனருணாசலா ?
பார்த்தருண் மாலறப் பார்த்திலை யெனினருள்
பாருனக் கார்சொல்வ ருணாசலா
' அருணாசலா, நீ எனை பார்த்தருள் உன் கடைக்கண் பார்வை
பட்டாலே எனது மாயா மயக்கம் அற்று விடும். நீ அருளவில்லை என்றால் உனக்கு யார் சொல்வது?.
என்கிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்.
இதற்கு முன்னாலுள்ள சுலோகத்தில், “அவித்யா என்பது விஷ சமானம். அது தலைக்கு ஏறுவதற்கு முன்
உன் அருள் பார்வையை என் மீது கடாட்சித்து என்னை காப்பாற்று” என்று வேண்டினார்.
அந்த பிரார்த்தனையை இன்னும் வலியுறுத்துகிறார் இந்த
சுலோகத்தில்.
உன் பார்வை பட்டாலே விஷம் இறங்கி விடும்; நான் முக்தனாகி
விடுவேன். உன் கருணை இல்லையென்றால் எனக்கு வேறு கதி இல்லையென்கிறார்
பரமனின் கருணை குறித்து வள்ளலார் பாடுகிறார்:
என் உடலும் என் உயிரும் என் பொருளும்
நின்னஎன இசைந்தஞ் ஞான்றே
உன்னிடைநான் கொடுத்தனன்மற் றென்னிடைவே
றொன்றும்இலை.உடையாய்
இங்கே
புன்னிகரேன் குற்றமெலாம் பொறுத்ததுவும்
போதாமல் புணர்ந்துகொண்டே
தன்னிகர் என் றெனவைத்தாய்
இஞ்ஞ்சான்றென்
கொடுப்பேன் நின் தன்மை கந்தோ
என் உடலும் என் உயிரும் உனதே என்று நான் சமர்ப்பித்தேண்; இப்பொழுது
என்னிடை கொடுப்பதற்கொன்றுமில்லை; இருந்தும் நீ என் குறைகளை மன்னித்தது
மட்டுமல்லாமல் என்னை உனக்கு நிகராய் வைத்தாய்; உன் கருணையை என்னே சொல்வது? என்று
கேட்கிறார் இராமலிங்க அடிகளார்.
அப்படிப்பட்ட கருணை வள்ளலாம் அருணாசலேசுவரனிடம் பகவான்
அருள் வேண்டுகிறார் அஞ்ஞ்சானம் அறுவதற்கு.
அதே போல் நடராசப் பத்து எனும் நூலில் முனிசாமி முதலியார்
கூறுகிறார்:
மண்ணாதி பூதமொடு
விண்ணாதி அண்டம் நீ
மறை நான்கின் அடிமுடியும் நீ
மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
மண்டல்மிரண்டேழும் நீ
பெண்ணும் நீ ஆணும் நீ, பல்லுயிருக்குயிரும் நீ
பிறவும் நீ ஒருவ நீயே
பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்றதாய் தந்தை நீயே
பொன்னும் பொருளும் நீ யிருளும் நீ
ஒளியும் நீ போதிக்கவந்த குரு நீ
புகழொணாக் கிரகங்களொன்பதும் நீயிந்த
புவனங்கள் பெற்றவனும் நீ
எண்ணரிய சீவகோடிகளீன்ற வப்பனே என்
குரைகளார்க்குரைப்பேன்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே
முதலியார் பெருமான் கூறுகிறார்:.
“நீ எல்லாவற்றிற்கும் மூலகாரணம். நீயே மண்,விண்,புத உலக
ஜிவராசிகள் எல்லாம்;நீயே சூரிய சந்திரர்கள், நீயே ஆணும் பெண்ணும்;பொன்னும்
பொருளும் நீ;இருளும் ஒளியும் நீ;புவனங்களையும் கிரகங்களையும்
படைத்தவன்;எல்லோருக்கும் அறிவுரை போதிப்பவனும் நீ; பெற்றா தாய்
தந்தையும் நீ.அப்படியிருக்கும் பொழுது என் குறைகளை உன்னிடமல்லாமல் யாரிடம் போய்
கூறுவேன்?”
பகவான் ரமணர் “அருணாசல நவமணி மாலை” மேற்கூறிய
கருத்துக்களை இன்னொரு விதமாக சொல்கிறார்:
அண்ணாமலையா யடியேனை
ஆண்ட, வன்றே
யாவியுடற்-
கொண்டாயெனக்கோர்
குறையுண்டோ
குறையுங் குணமு
நீயல்லா
லெண்ணே நிவற்றை
யென்னுயிரே
யெண்ணமெதுவோ வது செய்வாய்
கண்ணே யுன்றன்
கழலிணையிற்
காதற் பெருக்கே தருவாயே
“நீ அண்ணாமலயாய் என்னை ஆட்கொண்டாய். அன்றிலிருந்து என் உடல்
ஆன்மா பொருள் எல்லாம் உன்னிடம் அர்ப்பித்து விட்டேன். அப்புறம் எனக்கு எப்படி
குறைகள்,அல்லது தேவைகள் இருக்க முடியும்? என் நிறையும் குறையும் உன்னில் அடக்கம்.
நான் ஏன் அவைகளைக் குறித்து சிந்திக்க வேண்டும்?. நான் உன்னையே நினைத்துக்
கொண்டிருக்கிறேன். உன் பாத கமலங்களில் சரண் அடைந்து விட்ட எனக்கு உன் அளவிலா
கருணையை மட்டும் தருவாய்.”
இதையே தான் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதை 13 ஆம் அத்தியாயத்தில் 11 ஆம் சுலோகத்தில் அர்ஜுனனிடம் சொல்கிறார்:
அதைததப்யாசக்தோஅசி கர் தும் மத்யொகமாச்சித:!
ஸர்வகர்மபலத்யாகம் தத: குரு யதாத்மவான் !!
யாரொருவனால் கர்ம யோகத்தையோ ஞானயோகத்தையொ
பக்திமார்க்கத்தின் அப்யாசங்களையோ அனுஷ்டிக்க முடியவில்லையென்றால்,என்னிடம்
அடைக்கலமாகி விடு.கர்மபலன் முழுவதையும் எனக்கு அர்ப்பணித்து விடு.
மனிதனால் கர்மம் செய்யாமல் இருக்க முடியாது. அப்படி
கர்மங்களை செய்யும் பொழுது அதன் விளைவுகள் அவனை தாக்குகின்றன. அதிலிருந்து நாம் தப்ப வேண்டுமென்றால் பற்றுதலின்றி கர்மங்களை ஆற்ற வேண்டும்.அது நம்மை பரமனிடம்
கொண்டு சேர்க்கும். அப்புறம் நமக்கு குறையுமில்லை; கவலயும் இல்லை.சாந்தி
கிடைக்கும்.
No comments:
Post a Comment