ரமணஜோதி 82
பித்து தெளிய
மருந்து
பித்துவிட் டுனைநேர் பித்தனாக் கினையருள்
பித்தந் தெளிமருந்த ருணாசலா
“இந்த மாயாலோகத்துடன் நமக்குள்ள பற்றுதல் ஒரு பைத்தியக்காரத்தனமான பற்றுதல்.
அந்த பித்து தெளிந்தால் தான் நமக்கு அந்த பரமனிடம் ஈடுபாடு உண்டாகும்.அப்படி ஒரு ஈடுபாடு
உண்டானால் அதுவே மற்றொரு பித்தாக மாறி நம்மை பைத்தியமாக்கிவிடும். அப்படிப்பட்ட
பித்தும் ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கு இடைஞ்சலாகிவிடும். ஆகவே அந்த பித்தும் தெளிய
வேண்டும். பிறகு தான் பரமாத்மாவுடன் லயிக்க முடியும்” என்கிறார் பகவான் இந்த
சுலோகத்தில்..
பகவான் ஒருமுறை பக்தர்களிடம் உரையாடும்பொழுது கூறினார்: “’சிதாபாசம்’ என்றால்
ஏகமாகிய (ஒன்றான ) ‘சித்”திலிருந்து ( தன்னுணர்வு ஞானத்திலிருந்து ) அதன் ஆபாச
ஒளியாகிய ( பிரதிபலிப்பாக ) ‘அஹம்-விருத்தி’ ( நான் ) தோன்றுவதே.
ஒன்றாக தோன்றின அஹம்விருத்தி ஸத்வ-ரஜஸ்- தமோ குணங்களின் சேர்க்கையினால்
மூன்றாகி, அந்த மூன்றிலிருந்து பஞ்சபூதங்கள் பிறந்து ,அந்த ஐந்திலிருந்து அனேகம்(
ஜீவ-ஜடப் பிரபஞ்சம் ) உண்டாயிற்று என்று பொருள்.
அதுவே உடலை ‘நான்’ என்று எண்ணும் மயக்கத்தைத் தோற்றுவிக்கிறது.”
இந்த மயக்கம் முற்றும் போது அது பித்தாக மாறுகிறது.
இந்த மயக்கத்தின் அடிப்படை விருப்புக்கள் தான். நமது ஒவ்வொரு செய்கையும் எதோ
ஒரு விருப்பத்தின் பேரிலேயே செய்யப்படுகிறது.
கர்மம் என்றால் பிரவிருத்தி அல்லது செயல் என்று பொருள்..கர்மமும் கர்ம பலன்களும்
வேறு வேறல்ல. நாம் ஒரு கர்மம் செய்யும்பொழுதே அதன் பலனும் கூடவே பிறந்து
விடுகிறது. சில கர்மங்களின் பலனை நாம் தெரிந்துகொள்ள கால அவகாசம் தேவைப்படலாம்.
ஒருவனின் துஷ்கர்மங்களின் பலன் உடனே வெளிப்படாமல் காலம் சென்று வெளிப்படலாம்.
அது உள்காயமாக இருந்து புரையோடி புண்ணாகி சீழ்படிந்து துன்பத்தை அளிக்க காலம் எடுத்துக்கொள்ளும்.
அவ்வளவுதான்.
தேவீ பாகவதம் ஒன்றாம் அத்தியாயம் ஐந்தாம் கண்டம் 74 ஆம் சுலோகத்தில்
கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:
அகாரணம் கதம் கார்யம்
ஸம்ஸாரேத்ர பவிஷ்யதி
இந்த சம்சாரத்தில் எதுவும் காரணம் இல்லாமல் நடப்பதில்லை. காரண கர்மம் நடந்து சிலகாலமாயிருக்கல்லாம்.
நாம் சில பொழுது வருந்துவதுண்டு,’ நான் யாருக்கும் எந்த துரோகமும் செய்ததில்லையே?
எனக்கு என் இந்த கஷ்டம்?’.என்று.
நமது கஷ்டத்திற்கு ஹேதுவான கர்மம் நமது ஞாபகத்திற்கு வருவதில்லை;அவ்வளவுதான்.காரண
கர்மம் என்றோ நாம் செய்திருக்க வேண்டும்;அதில் ஐயமில்லை.
ஆகவே தான் பெரியோர்கள் சொல்வார்கள் ‘எல்லாம் பிராரப்த கர்ம பலன்’ என்று.
இதன் அடிப்படையை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஜீவாத்மாகப்பட்டது இச்சை, ஞானம்,
கிரியை என்ற முப்பரிமாணம் உடையது.
நம்முடைய ஞானம் நமது இச்சையை ஆதாரமாகக் கொண்டது. நமது அறிவை இச்சையாகப்பட்டது
அதற்கிசைவாக வளைத்து ஒடிக்கிறது. அப்படிப்பட்ட அழுக்கடைந்த ஞானம் நம்மை சில பல
கிரியைகளை செய்ய தூண்டுகிறது,.
ப்ரிஹதாரண்யகோபனிஷத்தில் கூறியுள்ளது இதை தெளிவுபடித்துகிறது:
காமமய ஏவாயம் புருஷ இதி ச யதாகாமோ பவதி
தல்
க்ரதுர்பவதி
யல் க்ரதுர்பவதி தல் கர்ம குருதே ததபி
சம்பத்யதே
பி.உபனி 4.4.5
புருஷன் (ஜீவாத்மா) ஆசா சொரூபனாகவே உள்ளான். அவனுடைய
ஆசைகள்-காமனைகள்-எப்படிப்பட்டவையோ அப்படியே அவனது எண்ணங்களும் உருவாகிறது. அவனுடைய எண்ணங்கள்
எப்படிப்பட்டவையோ அதன்படியே அமைகிறது அவனது செயல்களும்.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் நமது எல்லா அனுபவங்களுக்கும்
காரணம் நமது ஆசையால் தூண்டப்பட்டு செய்யப்படுகின்ற கர்மாக்கள் தான்.
பிரஹதாரணியத்தில் இதையே கீழ்க்கண்டவாறு சொல்லியுள்ளார்கள்
ததேவ ஸக்தஹ: ஸஹ கர்மணைதி
லிங்கம் மனோ யத்ர நிஷக்தமஸ்ய:
பிர.உபனி
4.4.6
மனதில் ஒன்றின் இச்சை எழுந்துவிட்டால் அதை எப்படியாவது அடைய நாம்
முயலுவோம்.;அடையவும் செய்வோம்.
பகவத் கீதயிலும் இதே கருத்தை நாம் காணலாம்.
‘காமகாரேண ஃபலே ஸ்க்தோ நிபத்யதே’
ஐந்தாம் அத்தியாயம் 12 ஆம் சுலோகத்தில் குறிப்பிடபட்டுள்ளது.
ஆகவே பலன் நல்லதாகட்டும்,துன்பத்தைதரக்கூடியதாக
இருக்கட்டும்,எல்லாமே நம் ஆசைகளிலிருந்து உதிக்கிறது என்பதை
புரிந்துகொண்டுவிட்டால் நாம் நமது ஆசைகளை பரமனை நோக்கி திருப்ப முயலுவோம்.
இன்னொரு உண்மையும் மேலே குறிப்பிட்டுள்ள்
உபனிஷத் வாக்கியங்களிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
நமது மனம் படைக்கின்ற சக்தியை உடையதாக
இருக்கிறது. நாம் மனதில் எது ஆக வேண்டும்
என்று நினைக்கின்றோமோ அதுவே ஆகிறோம். சாந்தோக்கியம் இதை எடுத்துக்கூறுகிறது:
அத கலு க்ரதுமய: புருஷோ யதா க்ரதுரஸ்மிம்ல்லோகே
புருஷோ
பவதி ததேத: ப்ரேத்யே பவதீ
சா.உபனி
3-14-1
ஜீவாத்மா மனதின் இயக்கத்திற்கு ஆட்பட்டவனாகிறான். அவன் எப்படி நினைக்கிறானோ
அப்படியே ஆகிறான்.
ஆகவே மனக்கட்டுப்பாடு நமது முக்திக்கு மிகவும் இன்றியமையாததாகிறது.
மேற்கூறிய தத்துவங்களை மிகவும் தெள்ளத்தெளிவாக மஹாபாரதம் சாந்தி பர்வத்தில்
காணலாம்:
யதா யதா கர்மகுணம் ஃபலார்த்தீ
கரோதியம் கர்மஃபலே னிவிஷ்ட:
ததா ததாயம் குணஸப்ரயுக்த:
சுபாஸ்பம் கர்மஃபலம்
புனக்தி
மல்ஸ்யோயதா ஸ்ரோத இவாபிபாதௌ
ததாக்ருதம் பூர்வமுபைதி கர்ம
சுபே த்வஸௌ துஷ்யதி துஷ்க்ரிதேது
ந துஷ்யதே வை பரம: சரீரி
பலங்களில் ஆசை வைத்து அந்த ஆசைகளில் மனதை ஆழமாக செலுத்தி எவனொருவன் கர்மங்களை
செய்கிறானோ அது நல்ல பலன்களைத் தந்தாலும் அசுப பலங்களைத் தந்தாலும் அனுபவித்தே
தீரவேண்டும்.
நமது முன்னேற்றத்திற்கு நமது பூர்வ கர்மங்களே தடையாயிருக்கின்றன.எப்படி கீழ்
நோக்கி வீழ்ந்துகொண்டிருக்கும் நீர்வீழ்ச்சி மீனின் மேல் நோக்கி செல்கின்ற நோக்கத்திற்கு தடையாக உள்ளதோ
அது போல்.
பகவத் கீதையில் இதை நாம் இன்னும் தெளிவாக காணலாம்.
மூன்றாம் அத்தியாய்ரத்தில் 37 ஆம் சுலோகத்தில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ குணஸமுத்பவ: !
மஹாசனோ மஹாபாபாமா வித்த்யேனமிஹ வரிணம் !!
ரஜோ குணத்திலிருந்து உதிக்கின்ற காமமும் குரோதமும் எதையும் நாசம் செய்ய
வல்லது.இதுவே நமக்கு பரம வைரி என்கிறார் கிருஷ்ணர்.
உலகத்தவர் எல்லோருக்கும் பரம சத்த்ருவாயிருப்பது ஆசை. அந்த ஆசை நிறைவேறுவதில் விக்னம் ஏற்படும் பொழுது நாம்
கோபத்திற்கு ஆளாகிறோம். கோபம் நம் கண்ணை மறைக்கும்.காமமும் குரோதமும்
உடன்பிறப்புக்கள். ஒன்றிலிருந்து மற்றொன்றை பிரிக்க இயலாது.
வெறுப்பு விருப்பின் மறுபக்கம். விருப்பு அல்லது ஆசை வளரும் பொழுது
வெறுப்பிற்கும் உரமூட்டப்படுகிறது, காமக்குரோதங்களின் விளைவாக நமக்கு புத்தி நாசம்
உண்டாகிறது. புத்தினாசம் சம்பவிக்கின்றபோது நாம் பித்தனாகி விடுகிறோம்.
தாயுமானவர் கோபத்தின் தாக்கத்தை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்:
ஆராயும் வேளையில் பிரமாதி யானாலும்
ஐயவொரு செயலுமில்லை
அமைதியொடு பேசாத பெருமைபெறு குணசந்த்ர
ராமென இருந்தபேரும்
நேராக வொருகோபம் ஒருவேளை வரஅந்த
நிறைவொன்று மில்லாமலே
நெட்டுயிர்த் துத்தட் டழிந்துளறு வார்வசன
நிர்வாக ரென்றபேரும்
பூராய மாயோன்று பேசுமிட மோன்றைப்
புலம்புவார் சிவராத்திரிப்
போதுதுயி லோமெனற விரதியரும் அறிதுயில்
போலேயிருந்து துயில்வார்
கோபம் வந்திடுகில் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் எவ்வளவு நாள் மௌனமாய்
இருந்தவரானாலும் அதுவரை அடைந்த நிறைவையெல்லாம் இழந்தவராகிறார்.
ஆகவே தாயுமானவர் இந்த ஆசைகளுக்கெல்லாம் கடிவாளம் பூட்டும்படி வேண்டுகிறாற்.
உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்க்குளே வீழாமல் மனதற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே. .
பகவான் ரமணர் இந்த ஆசைகளிலிருந்தெல்லாம் நம்மை விடுவித்து இந்த இகலோக
வாழ்க்கையிலேற்பட்டுள்ள பித்தை குணப்படுத்துமாறு அருணாசலரிடம் வேண்டுகிறார்.
ஒரு பித்து விடவேண்டுமென்றால் இன்னொரு பித்தை உண்டு பண்ணவேண்டும். விஷயவாசனைகளை
நீக்கி நமது மனத்தை அந்த பரமனின் மீது ஒருமுகப்படுத்த வேண்டும்.அதன் பயனாக நாம்
அவன் மீது பித்தனாகி விடுகிறோம்.இந்த பித்தும் ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கு ஒரு
தடையே. ஆகவே அந்த தடையையும் விலக்குமாறு பகவான் வேண்டுகிறார்.
பிரேம மார்க்கத்தைக்குறித்து விளக்கும்பொழுது ஒருமுறை பகவான் கூறினார்:
“கெட்டதை விலக்குவதற்கு நல்லதை பிரேமிக்க வேண்டும். கடைசியில் அதுவும்
ஆத்மானந்தத்திற்கு தடங்கலாக தோன்றுமாகையால், அந்த நல்லதையும் விலக்க வேண்டியது
தான். ஆனால் முதலில் நல்லதை பிரேமித்தே ஆகவேண்டும். பிரேமித்து பிறகு
தள்ளவேண்டும். இப்படி எல்லாவற்றையும் தள்ளிவிட்டால் இருப்பது ‘ தான்’ தான். அதுவே
தான் உண்மையான பிரேமை.”
“ பிரேமை தான் கடவுளின் ஸ்வரூபம்.’எனக்கு இது பிரியமில்லை,எனக்கு அதில்
பிரேமையில்லை,’ என்று நல்லது கெட்டவை எல்லாவற்றையும் விலக்கி விட்டால் , விஞ்சி இருப்பது எதுவோ அது
தான் தன் ஸ்வரூபம். அது தான் சுத்தமான பிரேமை. அந்த சுத்தமான பிரேமையைக் கடவுள்
என்றோ ஆத்மா என்றோ வேறு எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.அது தான் பக்தி;அது
தான் ஞானம் எல்லாம் அது தான்’.
இந்தக் கருத்தைதான் பகவான் இந்த சுலோகத்தில் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார்;
பித்துவிட் டுனை நேர்
பித்தனாக்கினையருள்
பித்தந் தெளிமருந் தருணாசலா
No comments:
Post a Comment