Monday, 2 February 2015

ரமணஜோதி 66

ரமணஜோதி 66

தோஷமில்லா ஈசன்



          தோடமி நீயகத் தோடொன்றி யென்றுஞ்சந்
          தோடமொன் றிடவரு ளருணாசலா !
‘தோடம்---தோஷம்—குறையேதுமில்லாத உன்னோடு ஒன்றி---இணைவதன் மூலம் என்றும் மகிழ்ச்சியோடு இருக்க அருள அருணாசலா ‘ என்று பகவான் ரமணர் அருணாசலனிடம் நமக்காக பிரார்த்திக்கிறார்.
ஜீவாத்மாக்கள் எல்லாமே அவித்யையினால் பாதிக்கப்பட்டு தோஷத்துடன் குறைகளுடன் இருக்கிறார்கள்.அதனாலேயே அவர்கள் துன்பம் அனுபவிக்க நேருகிறது. பரபிரம்மம் மட்டும் தான் தோஷமில்லாதது.
 இந்த பரபிரம்மம் என்பது யாது?
நமது பாரத கலாச்சாரத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கீழ்க்காணும் ஸ்ருதியில் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கபடுகிறது:
ஏகமேவாத்விதீயம்
           சாந்தோக்யம் 6-2-1
“ஒன்றே உள்ளது;இரண்டில்லை”
அந்த ‘ஒன்று’ அனந்தமானது,அதற்கு ஆரம்பமுமில்லை, முடிவும் இல்லை.’அது’ சாசுவதமானது ‘அதற்கு’ எந்த விகார-விசாரங்கள் இல்லை ‘அது நிர்விகாரி  எல்லாமே ‘அது’ தான்.  நிர்குணமாக,நிர்விசேஷமாக நாம-ரூபங்கள் எதும் இல்லாத ஒன்று ‘அது’. ஆகவே அதை ‘நிர்குண பிரம்மம்’ என்றழைக்கிறோம்.

நாஸதாசீன்னோ ஸதாசீல்
ஆ நீதவாதம் ஸ்வதயா ததேகம்
தஸ்மாத்தான்யன்னபர: . கிம் ச நாஸ
                     ரிக் வேதம் 10-129-2
 ஆரம்பத்தில் அதற்கு ‘அஸத்’ பாவம் இல்லாமலிருந்தது. ‘ஸத்’ பாவமும் இல்லாமலிருந்தது. ‘இல்லை’ என்பதும் இல்லை;  ‘இருக்கிறது’ என்பதும் இல்லை அதாவது அதற்கு எந்த குண விசேஷமும் இல்லை. அதிலிருந்து வேறொன்றில்லாமலிருந்தது.
‘அதில்’ எல்லாம் அடக்கம்.அதுவே எல்லாம்.
‘சத்’ பாவம் ‘அதிலிருந்து’ உண்டாகிறது.’அசத்’ பாவம் அதிலேயே இருக்கிறது.
இருட்டிருந்தால் வெளிச்சம் வேண்டும்; வெளிச்சம் இருந்தால் வெளிச்சம் இல்லாத நிலையை இருட்டு என்கிறோம்.
கேவல ரூபமான அந்த சத்சிதானந்தன் மட்டும் இருந்தான்.
          த்வே அக்ஷரே ப்ரம்மபரே த்வனந்தே
     வித்யாரே வித்யேனிஹிதே யத்ர கூடே
                ஸ்வேதாஸ்வத்ரோபனிஷத் 5-1
நாசமில்லத,முடிவில்லாத உத்தமமான பிரம்மத்தில் ஞானமும்,அஞ்ஞானாமும் மறைந்திருக்கிறது
நசிகேதஸ் யமதர்ம ராஜாவிடம் விடுத்த வேண்டுகோளையும் அதற்கு யமதர்ம ராஜன் அளித்த பதிலையும் இங்கு நாம் நினைவு கூறுவோம்.
          அன்யத்ர தர்மாதன்யத்ராதர்மால்
          அன்யத்ராஸ்மால் க்ரிதாக்ரிதால்
          அன்யத்ர பூதாச்ச பவ்யாச்ச
          யத்தல் பஸ்யஸி தத்வாத்,
                கடோபனிஷத் 1-2-14
நசிகேதஸ் யமதர்மரிடம் கேட்கிறான். “தர்மத்திற்கு அன்யமான அதர்மத்திற்கும் அன்யமான, செய்து முடித்தவைகளிலிருந்த வேறான,செய்யப் போகின்ற கர்மங்களிலிருந்து வேறான ( பூத-கடந்த –காலம்,பவிஷ்ய- வருங்காலம்) எதை ஒன்றை தாங்கள் காண்கிறிர்களோ ‘அதை’ எனக்கு உபதேசிப்பீர்களாக”.       
அதற்கு யமதர்ம ராஜன் கூறுகிறான்:
          ஸர்வே வேதா யல்பதமாமனந்தி
          தபாம்சி சர்வாணி ச ய த்வதந்தி
          யதிச்சந்தோ ப்ரம்மசர்யம் சரந்தி
          தத்தே பதம் சங்க்ரஹணே ப்ரவீமி
          ஓம் இத்யேதல்.
          ஏதத்யே வாக்ஷரம் பிரம்ம
          ஏத தேவாக்ஷரம் பரம்
                கடோபனிஷத் 1-2-15,16
‘எந்த ஒரு வார்த்தையை எல்லா வேதங்களும் போற்றிப் பாடுகின்றனவோ, ஏதொன்றை எல்லா தவங்களுக்கும் முலாதாரமாய் இருக்கின்றதோ, எதை ஒன்றை வேண்டி மனிதர்கள் பிரம்மசரியம் அனுஷ்டிக்கிறார்களோ ‘அதை’ நான் தங்களுக்கு சுருக்கமாக சொல்கிறேன்.அது தான் ”ஓம்” என்ற பிரணவ மந்திரம். அதுவே பிரம்மம். அதுவே பரபிரம்மம்”.
 நிதரிசனமாக காணமுடியாததும்  ஆனால் எல்லா சராசரங்களிலும் உள்ளதும் ஆன ஒரே பொருள் “அது” ,பிரம்மாண்டகொடிகளில்,சர்வ பிரபஞ்ச ராசிகளிலும் எல்லா உயிரிலும் பிராணனாக பிரகாசிக்கின்ற ஒரே பொருள் “அது”. அந்த  ‘சத்’ பாவம். எல்லா மதங்களுக்கும் அடிப்படையாக உள்ள எல்லா தத்துவ சம்ஹிதைகளும் சமயப் பிரிவுகளும் அங்கீகரிக்கின்ற ஒரு மூல-ஆதார- தத்துவம் அதை வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்-பிரம்மம், பரமன்,சிவன், அல்லாஹ். யேசுனாதர்,ஜெஹோவா என்று எத்தனையோ பெயர்கள். ‘அதை’ போற்றுவர்கான—வழிபடுவதற்கான முறைகள்,அதை அடைய செல்லவேண்டிய பாதைகள் மாறுபடுகின்றன. அதற்கு குணங்கள் உண்டு,அது நிற்குண்சம்பன்னமானது, அதற்கு பல உருவங்கள்,பல பெயர்கள்,அதைக் குறித்து கால்த்திற்கு ஏற்ற வாத பிரதிவாதங்கள்..அது எது இல்லை என்று பல அறிஞர்கள் கூறியுள்ளார்கள். நம் முன்னோர்களான முனி சிரேஷ்டர்கள் கூறின,மஹா வாக்யம், ‘நேதி,நேதி’ இதிலை,இதில்லை என்கின்ற உண்மை,பரம சித்தந்தம் தான் அது.
வார்த்தகளால் விவரிக்க முடியாதா,கண்களால் காண முடியாத,நமக்கு எட்ட முடியாத துரத்தில்,ஆனால் நமக்கு மிகவும் அருகிலேயே,நமக்குள்ளேயே இருக்கின்ற,பரமாத்மா தான் அது.
“அயமாத்மா ப்ரம்மா:” “இந்த ஆன்மா பிரம்மமாகிறது”. என்று மாண்டுக்யோபனிஷத் கூறுகிறது.
“சர்வம் கல்விதம் ப்ரம்ம:” என்று சாந்தோக்யம் கூறுகிறது.
“ஏஷ ம ஆத்மாந்தர்ஹ்ரிதய ஏதத்ப்ரம:” “என்னுடைய
 இதயத்தில் உள்ள ஆன்மா தான் பிரம்மம்’ என்றும் சாந்தோக்யம் சொல்கிறது.ஆனால்
இந்த ஆன்மாவை அடைவது அவ்வளவு சுலபமல்ல.
          நாயாத்மா பலஹீனேன லப்யோ
          ந ச பிரமாதாத்தபஸோ வாச்லிங்கால்
          ஏதருபாயைர்யததே யஸ்து வித்வாம்-
          ஸ்தசைஷ்ய ஆத்மா விசதே  பிரம்மதாம
“இந்த ஆத்ம சாக்ஷாத்காரம் பலவீனர்களுக்கு உள்ளதல்ல; தபோ லக்ஷணங்களில்லாதவர்களுக்கும் உள்ளதல்ல;உறுதி,-வைராக்யம் விவேகம், தவ வலிமை உள்ளவர்கள் மட்டுமே அடைய முடியும்.”,என்று கடோபனிஷத் கூறுகிறது.
இப்படிப்பட்ட பிரம்மத்துடன் நாம் எப்படி அடைவது.
அத்ற்கு விலங்காக உள்ளது எவை?
பகவான் ரமணர் கூறுகிறார்:
“ஆத்ம்சாக்ஷாத்காரம் அடைவதிலேற்படக் கூடிய தடைகள் எல்லாம் வாசனைகளால் உண்டாகக் கூடியவை.
வாசனைகள் என்பது மனதின் எண்ண எழுச்சிகளே. அவை எண்ணற்ற ஜன்மங்களாக நாம் தேடி சேர்த்துவைத்தவை.
இந்த வாசனைகளை ஒழிப்பது தான் நம் நோக்கமாக இருக்க வேண்டும்.
இந்த வாசனைகள் உண்டாவது எப்படி?
ஜன்ம ஜன்மாந்திரங்களாக நாம் செய்துள்ள வினைகளின் பயனாக வாசனைகள் நம் அடிமனத்தில் புதைந்து கிடக்கின்றன. அவை எதேனும் ஒரு ஊக்கம் கிடைத்துவிட்டால் கிளை விட்டு வளரத்தொடங்கிவிடும். இதைத் தான் பகவான் தனது உபதேச உந்தியார் எனும் நூலில் இரண்டாவது சுலோகத்தில் கூறுகிறார்:
          வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
          வினைக்கடல் வீழ்த்திடு முந்தீபற
          வீடு தரலிலை யுந்தீபற
நம் மனத்திலெழுகின்ற எண்ண அலைகள் –விரித்தி--- சிறிதுகாலத்திற்கே வீரியத்துடன் இருக்கும்.மெதுவாக அவை வலுவிழந்து மறைந்து விடும். எங்கே போகின்றன இந்த நினைவலைகள் ?
நீங்கள் முதன் முதலில் ஒரு ஆரஞ்சு சாப்பிடும் பொழுது ஆரஞ்சின் சுவை என்ன என்பதை புரிந்து கொள்கிறீர்கள். சிறிது நேரம் சென்ற பிறகு அதன் சுவை உங்கள் மனதை விட்டு மறைந்து விடுகிறது.ஆனால் மீண்டும் ஒரு  ஆரஞ்சை பார்க்க நேர்ந்தால்  நீங்கள் முதலில் சாப்பிட்ட ஆரஞ்சின் சுவை மனதில் தோன்றி உங்கள் மனதில் ஒரு எதிர்பார்ப்பை உளவாக்குகிறது. அது வரை அந்த சுவை எங்கே போயிற்று? அது உங்கள் மனதின் அடித்தளத்திலேயே அமிழ்ந்து கிடக்கின்றது. யாராவது ஆரஞ்சை உங்கள் கண் முன் கொண்டு வந்தாலோ  பழைய நினைவுகள் முளைத்தெழுகின்றன.
இப்படி அடிமனதில் அமிழ்ந்து கிடக்கின்ற நினைவலைகள் தான் ‘சம்ஸ்காரா’
என் சொல்லப்படுகிறது. சம்ஸ்காரா இந்த பூதவுடல் மறைந்தவுடன் இல்லாமல் ஆகிவிடுகிறதில்லை.அது ஜீவான்மாவின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. இந்த சம்ஸ்காரவிலிருந்து—நினைவலைகளிலிருந்து—கிளம்புகின்ற-உயிர்த்தெழுகின்ற ஆசா பாசங்கள்,இஷ்டானிஷ்டங்கள்,விருப்பு-வெறுப்புக்கள் வாசனைகள் எனப்படுகிறது.
இவை ஜன்ம ஜன்மாந்திரத்திற்கும் தொடருகிறது. ஒவ்வொரு ஜன்மத்திலும் இதன் ஒரு பகுதியைத் தான் னாம் அனுபவித்து தீர்க்கிறோம்.
ஒவ்வொரு ஜன்மத்திறும் பகிர்ந்தளிக்கப் பட்டிருக்கின்ற பகுதி தான் பிராரப்த கர்மங்கள் என்ப்படுகிறது.
நாம் சுமந்து கொண்டிருக்கின்ற இந்த புண்ணிய-பாப மூட்டையை எப்படி இறக்கி வைப்பது?
பகவான் சொல்லுகிறார்:
          கருத்தனுக் காக்கு நிட் காமிய கன்மங்
          கருத்தைத் திருத்திய: துந்தீ பற
  கதி வழி காண்பிக்கு முந்தீபற
இந்த ஜன்மத்தில் செய்கின்ற எந்தவொரு கர்மமும் இந்த ‘சம்ஸ்கார’ சுமையிலிருந்து விடுதலை அளிக்காது, பலனை எதிர்பாராமல் செய்கின்ற சத்கர்மங்கள் மட்டும் தான்—மோக்ஷத்தை அளிக்காது,ஆனால் மோக்ஷத்திற்கான் நல் வழி காண்பிக்கும். இதன்- நிஷ்காமிய-பலனை எதிர்பாராமல் செய்கின்ற சத் கர்மங்களால்- நாம் நல்ல வழியை தேர்ந்தெடுக்க வாய்ப்புண்டாகிறது. நான் யார் என்ற விசார மார்க்கம் மூலம் பிரம்மத்தை அடையாளம் கண்டுகொண்டு ‘அஹம் ப்ரம்மாஸ்மி” ‘த த்வம் அஸி” முதலிய மஹாவாக்கியங்களின் முழு அர்த்தத்தையும் உணரும் போது தான் நமக்கு விடுதலை.
மேற்கூறிய சுலோகத்தின் மூலம் கர்ம யோகத்தையும் பக்தி யோகத்தையும் ஒருங்கிணைக்கிறார் பகவான் ரமணர்.
‘கருத்தனுக்கான நிஷ்காமிய கர்மம்- வெறும் நிஷ்காமிய கர்மமல்ல;பலனை முழுமனதுடன் ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கின்ற மனப்பாங்குடன் செய்ய்யப்படுகின்ற நிஷ்காமிய கர்மங்கள் தான் ‘கதி வழி காண்பிக்கும்’ என்கிறார் பகவன்.உபதேச உந்தியாரின் அடுத்த சுலோகத்தில் பகவான் கூறுகிறார், 
    திடமிது பூசை செபமுன் தியான
முடல்வாக்க்ளதொழிலுந்தீபற
          வுயர்வாகு மொன்றிலொன் றுந்தீபற
 “ மனசாவாசா கர்மணா’ –மனதால்,வார்த்தைகளால்,கர்மங்களால் செய்யப்படுகின்ற பூஜைகள்,ஜபங்கள்,தியானங்கள் கண்டிப்பாக பலன் தரும்;”
         
மூன்றாவது அடி மூலம் மேலும் பகவான் தெளிவு படுத்துகிறார்,’பூசையை விட ஜபமும்.,ஜபத்தை விட தியானமும் ஒன்றுக்கொன்று மேலானவை.அதே போல் மனசால் செய்ய்யப் படுகின்ற சத்கர்மங்களை விட-அதாவது நல்லது நினைப்பது சிலாக்கியம் என்றாலும்,நினைப்பதை சொல்வது மேலானது,சொல்வதைவிடனல்லதை செய்வது மேலானது.

உபதேச உந்தியாரின் மேலும் சில சுலோகங்களை அடுத்த மடலில் பார்ப்போம்.

No comments:

Post a Comment