ரமணஜோதி 83
நீயிருக்க பயமேன்?
பீதியி
லுனைச்சார் பீதியிலெனைச்சேர்
பீதியுன் றங்க்கே
னருணாசலா
“எனக்கு உன்னை
சார்ந்திருப்பதில் எந்த பயமுமில்லை. நீ என்னை பயப்படாமல் சேர்த்துக் கொள். என்னே
என் அறியாமை? உனக்கேது பயம்? “
என்று பகவான்
ரமணர் இந்த சுலோகத்தில் வேண்டுகிறார்.
பயம் எப்பொழுது
வரும்? எதாவது ஒன்றை விட்டுப்பிரிய வேண்டிவந்தால் பயம் வரும்; தெரியாத
ஒரிடத்திற்கு போக வேண்டி வந்தால் பயம் வரும்; நிகழப்போவது என்னவென்று
தெரியாவிட்டால் பயம் வரும்.
விசாரமார்க்கத்தின்
மூலம் நித்யானித்ய விவேகம் ஏற்பட்டு வைராக்யம் பிறந்து விட்டால் இந்த இகலோக
சுகங்களை விட்டு பிரிவதற்கோ, இது நாள் வரை சொந்த பந்தங்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தவை
நம்மிடம் இருந்து பிரிந்து போவதாலோ நமக்கு பீதி உண்டாகாது.
நாம் சேரவேண்டிய
இடத்தில்த்தான் போய்ச்சேருவோம் என்ற நம்பிக்கை நமக்கு உண்டாகுமேயானால் பயம்
தோன்றுவதற்கு ஏது கிடையாது.
நாம் இந்த
உலகத்தில் காண்பதெல்லாம் நமது மனத்தின் அவித்யை காரணமாக உளவாகின்றவைதான்.அவையெல்லாம்
நிரந்தரமான சாந்தியை அளிக்கவல்லா; என்று புரிந்துகொண்டுவிட்டோமென்றால் பீதிக்கு
இடம் கிடையாது.
இதெல்லாம்
உண்மையாக இருந்தும் பாமரர்களாகிய ஜீவாத்மாக்கள் வெற்றி இலக்கை அடைவதற்கு
முன்னாலுள்ள ஒரு சில வினாடிகளில் ஒரு வித பீதிக்குள்ளாகத்தான் செய்கிறோம். தினமும்
நாம் மரணத்தை தரிசித்துக்கொண்டிருந்தாலும் மரணம் நம்மையோ நம்மைச் சார்ந்தவர்களையோ
நெருங்கும்பொழுது நம்மையறியாமல் ஒரு பீதி உண்டாகத்தான் செய்கிறது.
இஹாமுத்ர
விரக்தஸ்ய நித்யானித்ய விவேகினஹ: !
ஆஸ்சரியம்
மோக்ஷகாமஸ்ய மோக்ஷாதேவ விபீஷிகா !!
அஷ்டாவக்ர கீதை 3-8
அஷ்டவக்கிரர்
ஜனகரிடம் கூறுகிறார், “என்னதான் நித்யானித்ய விவேகம் ஒருவனுக்கு ஏற்பட்டாலும்
கடைசி நிமிடத்தில் அவனை ஒரு பய பற்றிக்கொள்ளத்தான் செய்கிறது.”
இந்த பயமானது
இந்த உலகில் நாம் அனுபவித்துக் கொண்டிருந்த விஷய சுகங்கள்—அது உணவாகட்டும்,
செவிக்கினிய இசையமுதமாகட்டும்,கண்ணுக்கினிய நாட்யமோ வேறு வகையான காட்சிகளாகட்டும்—இனிமேல்
நமக்கு கிடைக்காது என்கின்ற புரிதலினால் ஏற்படுகின்ற பயம் தான் அது.
அது ஏன்
உண்டாகிறது என்றால் நமது இகலோக அனுபவங்களை சுகம் என்று எண்ணுவதால் உண்டாகின்ற உண்ர்வுகளால் தான். இகலோக
சுகங்கள் ஒருபொழுதும் முழுமையான சுகத்தையோ சாந்தியையோ தராது; அனுபவிக்க அனுபவிக்க,
இன்னும் வேண்டும்,இன்னும் வேண்டும் என்ற ஏக்கம் அதிகரித்துகொண்டே போகும்; கடைசியில்
அது துக்கத்தில் கொண்டு போய்விடும் என்ற அறியாமையினால் உளவாகும் மித்யையான உணர்வு
தான் அந்த சுகம்.
ஆத்ம
சாக்ஷாத்காரம் பெற்றவர்களுக்கு மட்டுமே முழுமையான சாந்தியும் சந்தோஷமும்
கிடைக்கும்.
இரண்டாவது காரணம்
நாமெல்லாம் நம் உடலை ஆத்மாவோடு இணைத்து சமன்பாட்டு நிலையில் செயலாற்றிக் கொண்டிருப்பதால்,,மற்ற
உடல்களெல்லாம் வேறு என்ற எண்ணம் உதயமாகிறது. நம்மிலிருந்து அன்னியமாக மற்றவர்களை
காண்கின்ற போது சிலர் நமக்கு விருப்பமானவர்களாகவும் மற்று சிலர் விருப்பத்திற்கு
உடன்பாடில்லாதவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். ‘ததுவமஸி’ என்பதன் தாத்பரியம் மறந்து
விடுகிறோம்.
இஷ்டம்(
விருப்பு) நசித்துவிட்டால் அனிஷ்டம் ( வெறுப்பு ) இல்லாதாகிவிடுகிறது. விருப்பங்களை
ஒழிக்காவிட்டால் துவேஷத்திலிருந்து விடுதலை பெற முடியாது; அதனிலிருந்து உளவாகின்ற
துக்கத்திலிருந்தும் விடுபட முடியாது.
சுருங்கச் சொன்னால்
‘ராக துவேஷங்களுடைய இல்லாமை தான் வைராக்யம்”.
மற்றொருவிதத்தில்
சொன்னால் ஆத்ம சாக்ஷாத்காரம் அல்லது முக்தி அல்லது மோக்ஷத்திற்கு ராகமும்
துவேஷமும் பரம எதிரிகள். அவை இருக்கின்ற வரை முக்தி கிடைக்காது.
இதையேதான் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில், மூன்றாம் அத்தியாயத்தில் 34 -35 ஆவது சுலோகங்களில் விளக்குகிறார்.
இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்த்தே ராகத்வேஷௌ
வ்யவஸ்திதௌ !
தயோர்ந வசமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்தினௌ !!
ப்.கீ. அத் .3 சுலோ 34
இந்திரியங்களுக்கு
விருப்பு-வெறுப்புக்கள் உண்டு. இந்திரியங்களின் ஆளுகைக்கு ஆட்படுகின்ற நாமும்
விருப்பு வெறுப்புடையவர்களாகிறோம்.
இந்த விருப்பு
வெறுப்புக்களே நமது சத்ருக்கள்.
ஸ்ரேயான்
ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வனுஷ்டிதாத் !
ஸ்வதர்மே நிதனம்
ஸ்ரேய: பரதர்மோ பயாவஹ: !!
ப.கீ. அத்.3. சுலோ 35
எவனொருவன் தனக்கு
விதிக்கப்பட்டிருக்கும் தர்மம் எதுவோ அதை செய்ய வேண்டும். அல்லாமல் மற்றவர்கள்
தர்மத்தை எவ்வளவு நன்றாக செய்தாலும் அது பயன் தராது. அது விருப்பு வெறுப்புகளை
உளவாக்கும்.
போர்முறையில் தேர்ச்சி பெற்றவன்,சத்திரிய குலத்தில் பிறந்தவன்,அவனது தர்மம்
போர் புரிவதே,அதை விட்டு சன்னியாசம் வாங்கிக்க்கொண்டு போகிறேன் என்று சொன்னால் அது
சரியல்ல” என்பது நாம் சாதாரணமாக கேட்டுள்ள வியாக்கியானம்.
ஆனால் இந்த இடத்தில் பகவத் கீதையிலுள்ள யக்ஞ சங்கல்பத்தை அதிஷ்டிதமாக கொண்டுள்ள கர்மத்தை
விவரிக்கின்ற சுலோகங்களை மறக்கலாகாது’
சஹயக்ஞா: ப்ரஜா:
ஸ்ருஷ்டவா புரோவாச ப்ரஜாபதி: !
அனேன
ப்ரசவிஷ்யத்வமேஷவோ அஸ்த்விஷ்டகாமதுக் !!
தேவான்பாவயதானேன
தே தேவா பாவயந்து வ: !
பரஸ்பரம்
பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத !!
ப.கீ அத் 3 சுலோ 10-11
அன்னாத்பவந்தி
பூதானி பர்ஜன்யாதன்னஸம்பவ !
யக்ஞாத் பவதி பர்ஜன்யோ யக்ஞ: கர்மசமுத்பவ: !
ப.கீ அத் 3 சுலோ 14
இந்த உலகில்
பிறப்பதும் வாழ்வதும் இன்பம் பெறுவதர்க்கும் துன்பம் அனுபவிப்பதற்குமல்ல;நாம்
செய்கின்ற செயல்கள் அத்தனையும் யக்ஞ சங்கல்பத்தை அடித்தளமாகக்கொண்டதாக இருக்க
வேண்டும்,;அந்த யக்ஞ சங்கல்பமோ வைஸ்வானரனின் எல்லா அங்கங்களையும் பேணவேண்டும்;
பரஸ்பரம் பேணி நன்மையுளவாக்குவதாக இருக்கட்டும்;எப்படி உணவிலிருந்து உயிர்கள்
உண்டாகின்றனவோ,எப்படி மழை உணவு உற்பத்திக்கு உதவியாக இருக்கின்றதோ,எப்படி யக்ஞங்களிருந்து
எழுகின்ற நெருப்பும் சூடும் கடல் நீரை ஆவியாக்கி,மேகமாய் உருக்கொண்டு வாயுவினால்
உந்தப்பட்டு மலைகளினால் தடுத்து நிறுத்தப்பட்டு,குளிர்விக்கப்பட்டு மழையாய்
பொழிகின்றதோ எப்படி இந்த பாரஸ்பரியத்தினால் சகல ஜீவராசிகளும் வளமையுடன் செழித்து
வளருகின்றதோ அதுபோல் இருக்க வேண்டும் நமது யக்ஞ சங்கல்பிதமான கர்மங்களும்.
ஸ்வதர்மம் என்றால் நம் சஹ ஜீவராசிகளுக்கு
நன்மை பயக்கக் கூடிய கர்மங்களை அனுஷ்டிப்பது; பரதர்மம் என்றால் இதிலிருந்து விலகி
சுய நலம் மட்டுமே கருத்தில்க்கொண்டு ஆற்றப்படுகின்ற கர்மங்கள். –ஸ்வதர்மத்தை கைவிட்டு
பரதர்மத்தை கைக்கொள்ளலாகாது என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
விருப்பு
வெறுப்புக்கள் இல்லாத கர்மங்கள் சுகத்தை நல்கும்.
இதையே தான் ஆதி சங்கரரும்
“கஸ்ய சுகம் ந கரோதி விராக:” (வைராக்யம்
யாருக்கு சுகம் நல்காது?)
என்று கூறியுள்ளார்.
பர்த்ருஹரி ஆரம்ப சுலோகங்களிலேயே நமது துன்பத்துக்கெல்லாம் காரணமான ஆசையை
நிந்தித்துக்கொண்டு தனது நூலை ஆரம்பிக்கிறார்.
ஏழாம்
சுலோகத்தில் கூறுகிறார்:
போகா ந புக்தா
வயமேவ புக்தா:
தபோ ந தப்தம்
வயமேவ தப்தா:
காலோ ந யாதோ
வயமேவ யாதா:
த்ருஷ்ணா ந ஜீர்ணா வயமேவ ஜீர்ணா:
நாம் இந்த இஹலோக வாழ்வில் சுகங்கள் எதையும்
அனுபவிப்பதில்லை. ஆனால் சுகபோகங்களை அடைவதற்கான முயற்ச்சியில் நாம் அடைகின்ற
துன்பங்கள் நம்மை அரித்து தின்கின்றன. நாம் எந்த தவமும் ஆற்றாமலேயே நமது துக்கமான
அனுபவங்கள் நம்மை எரித்து நீறாக்குகின்றன. நமது வாழ்வு முடிவடையவில்லை;ஆனால் நாம்
வாழ்வின் முடிவிற்கு வந்துவிட்டோம்;இருந்தாலும் நமது ஆசைகள் நசிக்கவில்லை.( மீசை
நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை.) நமது உடல் பல்வீனமாகி விட்டது; ஆசைகள் பலமாகவே
உள்ளது.
இந்த உண்மை நாம்
நமது அந்திம காலத்தில் அறிகிறோம்;’நாம் ஆசையை ஒடுக்குவதற்கான எந்த முயற்ச்சியும்
எடுக்கவில்லை; ஆசைகள் நசிக்கவில்லை,ஆசைகளின் பின்னால் ஓடியோடி நம் உடல் தான்
பல்வீனமாகிவிட்டது என்ற உண்மையை புரிந்து கொள்ளுகிறோம்.
இந்த உண்மையை
உணரும் பொழுது, நிரந்தரமான சாந்தியை அடைவதற்கு வழி என்ன என்று சிந்திக்க
ஆரம்பிக்கிறோம்.
பர்த்ருஹரி 10
ஆவது சுலோகத்தில் மேலும் கூறுகிறார்:
ஆசா நாம நதி மனோரதஜலா த்ரிஷ்ணாதரங்காகுலா
ராகக்ராஹவதீ விதர்க்கவிஹகா தைர்யத்ருமட்வம்சினீ
மோஹோவர்த்தசுதுஸ்தராதிகஹனா ப்ரோத்துங்க சிந்தாதடீ
தஸ்யாம் பரகதா விசுத்த மனஸோ நந்ததி யோகீஸ்வரா:
ஆசையாகின்ற
நதி நமது மனதின் கற்பனை எனும் நீரினால்
நிறைந்தும்,அதியாசை என்கின்ற அலைகளினால் உந்தப்பட்டும், தீவிர காதல் உருவி.லுள்ள
முதலைகள் நிறைந்தும் விடாப்பிடியான பிடிவாதங்கள் என்கின்ற பறவைகளின் உதவியுடனும்
நமது தைரியத்தையெல்லாம் துவம்சம் செய்து .மோஹம் என்ற
சுழிகளுடையதாகவும் இருக்கிறது. பர்த்ருஹரி ஆசை எவ்வள்வு கொடூரமானது ,அதில்
இறங்கிவிட்டால் எவ்வளவு அபாயங்கள் காத்திருக்கின்றன என்பதை மிகுந்த கவி நயத்துடன் கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட நதியை கடந்து கரையேறுவது அவ்வளவு எளிதல்ல என்றும் சொல்லுகிறார்.
அவசியம்
யாதாரஸ்சிரதரமூஷித்வாபி
வியோகே கோ
பேதஸ்த்யஜதி ந ஜனோ யத் ஸ்வயமமுன்
வ்ரஜந்த:
ஸ்வாதந்த்ர்யாததுலுபரிதாபாய மனச:
ஸ்வ்யம் த்யக்தா
ஹ்யேதே சமசுகமனந்தம் விததி
வைராக்ய சதகம் சுலோ 12
என்றைக்காவது ஒரு
நாள் விஷய வஸ்துக்களும் சொந்த பந்தங்களும் நம்மை விட்டு போகத்தான்
போகிறது.அப்படியிருக்க நாமே என் அவையை விட்டுவிடக்கூடாது” என்று கேட்கிறார் இந்த
ஞானி.
இரு
சந்தர்ப்பங்களிலும் நமக்கு ஏற்படுகின்ற பிரிவு ஒன்று தான். ஆனால் நம்மால் சுயமாக அவையை
விட முடிவதில்லை. அவை நம்மை விட்டு போகும்பொழுது நமக்கு உண்டாகின்ற துன்பம் அதிகம்.நாமாக
அவைகளை த்யாகம் செய்தால் வலி குறையும். ஆனால் செய்வதில்லை;அதற்கு காரணம் பயமே.
பர்த்ருஹரி நமது
பயங்களைக் குறித்து இன்னும் விரிவாக
மற்றொரு சுலோகத்தில் சொல்கிறார்:
பொகே ரோகபயம்
குலே ச்யுதிபயம் வித்தே ந்ருபாலாத் பயம்
மானே தைன்யபயம் பலே ரிபுபயம் ரூபே
ஜராய பயம்
சாஸ்த்ரே
வாதிபயம் குணே கலபயம் காயே க்ருதாந்தாத் பயம்
ஸர்வம் வஸ்து
பயான்விதம் புவி ந்ருணாம் வைராக்யம் ஏவாபயம்
இந்த புவியிலுள்ள
எல்லா ஜீவாத்மாக்களுக்கும் சுகங்களை அனுபவிக்கும்போது வியாதிகளைக் குறித்து பயம்,
பதவி,தகுதி பெற்றவர்களுக்கு அந்த நிலையிலிருந்து கீழே விழுந்து விடுமோ என்கின்ற
பயம், பொருளீட்டி வைத்திருந்தால் அரசு பறித்துக் கொண்டு விடுமோ எங்கின்ற பயம் பேரும்
புகழும் பெற்றவர்கள் அதையெல்லாம் இழந்து மற்றவர்கள் முன்னால் சிறுமைப் பட்டு
விடுமோ என்ற பயம், வலிமையும் சக்தியும் படைத்தவர்களுக்கு அந்த வலிமையை இழந்து
பலவீனர்களாகிவிடுவோமோ என்ற பயம், எதிரிகளினால் ஏற்படக்கூடிய பயம், அழகு
படைத்தவர்களுக்கு காலப்போக்கில் வயதின்மூப்பு காரணமாக தோல் சுருங்கி,நரை பாதித்து,
அழகை இழந்துவிடுவோம் என்ற பயம் ,அறிவாளிக்கு தம்மை விஞ்சிய அறிவாளியிடம்
தோற்றுவிடுவோமோ என்ற பயம், நல்லவர்களுக்கு பொல்லாதவர்களைக் கண்டு பயம்,
எல்லாவற்றிற்கும் மேலாக மரண பயம் இப்படி பயந்து பயந்தே வாழ்வு முடிந்து விடுகிறது.
பயமில்லாத அவஸ்தை வைராக்ய நிலை ஒன்றே.
சின்ன விஷயங்களில்கூட
அர்த்தமற்ற பயத்திற்கு நாம் ஆளாகிறோம். இரண்டு சிறு சம்பவங்களைப் பார்ப்போம்.
ஒரு வயதான
தம்பதியர்,தங்கள் பொறுப்புக்களை எல்லாம் முடித்து விட்டு வாழ்வை இனி அனுபவிக்கலாம்
என்று நினைக்கிறார்கள். மனைவிக்கு மறந்து போன சங்கீத வாசனை மீண்டும் தலை தூக்கியது.
கணவரும் அதற்கு சம்மதித்தார்.. ஒரு சங்கீத வித்வானை வீட்டிற்கு வரவழைத்து சங்கீதம்
கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள் அந்த பெண்மணி.
பாட்டு
வாத்தியார் வீட்டிற்கு வந்ததும் புருஷன்காரர் வீட்டிற்கு வெளியே போய் கேட்டருகில்
நின்றுகொண்டு போவோர் வருவோரிடம் பேசிக்கொண்டிருப்பார்.
மனைவி ஒரு நாள்
இரண்டு நாள் ஒரு வாரம் பார்த்தாள்.அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கடைசியில்
கேட்டே விட்டாள்.” நீங்கள் செய்வது உங்களுக்கே நல்லா இருக்கா? வித்வான் என்ன
நினைத்துக் கொள்வார்? உள்ளே வந்து உட்கார்ந்து கொள்ளக் கூடாதா?”.
அவர் சொன்னார், “
நீ தவறாக நினைத்து கொண்டிருக்கிறாய். நான்
உள்ளே வந்து உட்கார்ந்து விட்டால் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் நீ பாடுவதைக் கேட்டு
நான் என்னவோ உன்னைப் போட்டு அடிப்பதாகவும் நீ அழுவதாகவும் நினைத்துக் கொண்டு என்னிடம் சண்டைக்கு வந்து
விடுவார்கள் என்ற பயத்தில் தான் வெளியே போய் நின்று கொள்கிறேன் .” என்றாரே
பார்ப்போம்.
இன்னொரு சம்பவம்.
ஒருவர் ரயிலில் அயணித்துக் கொண்டிருந்தார் .பக்கத்திலிருந்தவர் இவரிடம் ’ மணி
எத்தனை?” என்று கேட்டார்.
“ சொல்ல
முடியாது.” என்றார் இவர்.
“ ஏன்
கைக்கடிகாரம் இல்லையா? இல்லை,அது வேலை செய்யவில்லையா?” என்று விடாமல் கேட்டார்.
“ கடிகாரமும்
இருக்கிறது அது வேலையும் செய்கிறது.ஆனால்
மணி சொல்ல முடியாது.”
முதலில் பேசியவர்
விடவில்லை.” ஏன் இப்படி முரட்டுத்தனமாக பதிலளிக்கிறீர்கள்?” என்றார்.
“
ஆமாம்,ஐயா.முதலில் மணி கேட்பீர்கள்.அப்புறம் எந்த ஊர் என்பீர்கள்; குடும்பத்தைப்
பற்றி விசாரிப்பீர்கள்.பிறகு ‘இந்த வழியாக வந்தேன்;உங்கள் ஞாபகம் வந்தது’ என்று
சொல்லிக்கொண்டு வீட்டிற்கு வர்வீர்கள்;அப்புறம் நான் இருக்கும் பொழுதும்
இல்லாதபொழுதும் என் வீட்டிற்கு வருவீர்கள்;ஒரு நாள் என் மகளை இழுத்துக் கொண்டு
ஓடிவிடுவீர்கள். என் முதல் மகளை இப்படித்தான் இழுத்துக் கொண்டு ஓடினான். எதர்கய்யா
வம்பு? நான் மணி சொல்ல மாட்டேன்”.
மேலெ சொன்ன
இருகதைகளும் மேலோட்டமாக பார்த்தால் வேடிக்கையாக தென்படும்.
ஆனால் இரண்டு
சம்பவங்களிலும் அடிப்படையான் மனித மனத்தின் பயம் விளையாடிக்கொண்டிருப்பது தெரியும்.
பயம் என்பது மனித மனத்தின் சங்கல்பங்களிலிருந்து எழுகிறது. சந்தர்ப்பங்களும் சூழ்
நிலைகளும் அனுபவங்களும் கற்பனா சக்திக்கு வலுவூட்டுகிறது. பயம் கவ்விக்கொள்கிறது.
ஞானிகளுக்கு பயம்
கிடையாது;ஏனென்றால் அவர்களுக்கு சங்கல்பம் கிடையாது.
இதே கருத்தை
பகவத் கீதையில் எல்லா அத்தியாயங்களிலும் காணலாம்.முக்கியமாக
யதா ஹி நே
ந்த்ரியாத்தேஷு ந கர்மஸ்வனுஷஜ்ஜதே !!
ஸர்வஸங்கல்பஸன்யாஸீ
யோகாரூடஸ்ததோஸ்யதே !!
அத்.6 சுலோ 4
எப்பொழுது ஒருவன்
விஷயங்களில் பற்று வைக்காமல் கர்மங்கள் ஆற்றுகிறானோ,எவனொருவன் எண்ணங்களை விட்டொழிக்கிறானோ
அப்பொழுஹு யோகாரூடன் ஆகிறான்
அவனுக்கு பயம்
இராது.அவன் முக்தனாகிறான்.
மனு நீதியிலும்
இதையே கூறியுள்ளார்கள் நமது முன்னோர்கள்:
‘சங்கற்பத்தினின்றே ஆசையும் செயலும்
வடிவெடுக்கின்றன.”
மனு. 2-2
மஹாபாரதம் சாந்தி
பர்வத்திலும் இப்படி கூற’ப்பட்டுள்ளது:
“ ஆசையே,உனக்கு பிறப்பிடம் எது என்பதை நான் அறிகிறேன்.சங்கற்பத்திலிருந்து நீ உதித்துள்ளாய்; உன்னை நாந்
சங்கற்பிக்காமல் விட்டு விடுகிறேன்; நீ நிர்மூலமாய்ப் போய்விடுவாய்”
சாந்தி பர்வம் 177-25
சங்கற்பம் போனால்
ஆசை,கர்மங்கள்,பயங்கள் எல்லாம் போய் விடும்.
மேலும்
கீதாச்சாரியன் கூறுகிறான்:
உத்தரேதாத்மனாத்மானாம்
நாத்மானமவஸாதயேத் !
ஆத்மைவ ஹ்யாத்மனோ
பந்துராத்மைவ ரிபுராத்மன: !!
ப.கீ அத் 6 சுலோ 5
ஆத்மாவே
ஆத்மாவிற்கு பந்து,ஆத்மாவே ஆத்மாவிற்கு எதிரி .ஆகவே ஆத்மாவே அவனை உயர்த்துகிறது;
தாழ்த்தவும் செய்கிறது.
நமக்கு நாமே எதிரி. நமது சங்கல்பங்கள் நம்மை கீழ்ப் படுத்தினால் நமது வீழ்ச்சி நிச்சயம். நாம் கற்பனைகளை வெற்றி கொண்டோமானால் நமக்கு முக்தி நிச்சயம்..நாம் சிலவற்றை விரும்புவதாலும் சிலவற்றை வெறுப்பதாலுமே
நமக்கு பயம் உண்டாகிறது; வீழ்ச்சியுண்டாகிறது.
கிருஷ்ணர் இப்படி முடிக்கிறார்:
‘தஸ்மாத்யோகி பவ
அர்ஜுன!”
‘ஆகவே நீ
யோகியாவாய் அர்ஜுனா”
யோகி என்றால்
யோகத்தை அடைபவன்.யொகம் என்றால் இர்ண்டும் ஒன்றாய் சேருவது. ஜீவாத்மாவும்
பரமாத்மாவும் ஒன்று தான் என்று புரிந்து விட்டால் பீதி ஒழிந்து போகும்; முக்தி
கிடைக்கும்.
.இதைத்தான் பகவான்
ரமணர் இந்த சுலோகத்தில் விளக்குகிறார்.
No comments:
Post a Comment