Monday, 2 February 2015

ரமணஜோதி 65

ரமணஜோதி 67

மாதுர்ய  பக்தி


முன்னால் ஒரு மடலில் நாம் பக்தி மார்க்கத்தைக் குறித்து சிறிது பார்த்தோம்.
மீண்டும் ஒரு முறை ஞாபகப் படுத்திகொள்வோம்.அப்பொழுது தான் பக்தியில் சிருங்கார  பாவத்தைக் குறித்து புரிந்து கொள்ள முடியும்.
பாரதீய கலாச்சாரத்தில் பக்தியை இரண்டு விதமாக பிரித்துள்ளார்கள்: 1.நிராகார/நிர்குண பக்தி—அருவ வழிபாடு
2. ஸகார/ஸகுண பக்தி- உருவ வழிபாடு.
வேதங்களும் உபனிஷத்துக்களும் பகவத் கீதையும் இந்த இரண்டு பக்தி மார்க்கங்களையுமே சிலாகிக்கின்றன.
ஆனால் உபனிஷத்துக்கள் நிர்குண பக்தியை ஒரு படி மேலாக கருதி பராமரிசிக்கின்றன.
பக்தி இலக்கியங்கள் நிர்குண –சகுண பக்தி மார்க்கங்களுக்கு இடையேயுள்ள ஒரு விதமான இறுக்கத்தை வெளிப்படுத்துகின்றன.
கடவுளை ஒரு தத்துவ பிரதீகமாக மட்டும் பார்த்தால் அதன் தெய்வீக தன்மை நஷ்டப்பட்டு அவனை/அதை பாட முடியாமல் போய்விடும். ஆகவே தத்துவத்தன்மையையும் மீறின ஒரு உருவம் கொடுக்க வேண்டி வருகிறது. அதே போல் வைணவத்திலும், கடவுளை புருஷோத்தமனாக சித்திரிக்கின்ற அதே வேளையில் அவனில் ஒரு ‘பராத்துவம்’ நமக்கு அன்னியமான ஒரு சக்தியைக் காணமுடிகிறது..
ஆனால் ஆழ்வார்களின் பாசுரங்களில் சகுண பக்தியே மேலோங்கி நிற்கிறது.
நாலாயிரம் திவ்ய பிரபந்தங்கள்-ஆண்டாளின் திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் உட்பட ---சகுணபக்தியையே பிராதன அடிப்படையாக கொண்டுள்ளது.
ஆனால் எல்லா பக்தி மார்க்கங்களுக்கும் ஒரு சித்தாந்த அடிப்படையும்  உண்டு.
பகவத் கீதையில் காணும் கீழ்கண்ட சுலோகங்கள் இந்த தாத்துவிக அடிப்படையை விளக்குகின்றன.
1.       யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத !
          அப்யுதானம்தர்மஸ்ய ததாத்மனாம் ஸ்ரஜாம்யஹம்
2        பரித்ரானாய சாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்
          தர்மசன்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

3.       ஜனம் கரம்ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்துவதஹ : !
          த்யக்த்வ தேஹம் புனர்ஜன்ம நைதி மா மேதி சோஅர்ஜுனா
                                       ப.கீ அத்த் 4  சுலோ 7-9
பகவத் கீதையில் பராமரிசிக்கப்பட்டுள்ள பக்தி புத்தியை அடிப்படையாககொண்டது. ஆழ்வார்களின் பக்தியோ உணர்வு பூர்வமானது.
நாரத பக்திசூத்ரத்தில் கீழ்க்கண்டவாறு கூற்ப்பட்டுள்ளது:

            குணமாஹாத்ம்யாசக்தி ரூபாசக்திபூஜாசக்தி

            ஸ்மரண்சக்தி

            தாஸ்யாசக்தி சாக்யாசக்திவாட்சல்யாசக்தி

            காந்தாசக்தி ஆத்மனிவேதனாசக்தி

தன்மயாசக்திபரமவிராஹாசக்திரூப

            எக்தாப்யேகதாஷ்த பவதி

சுவாமி சின்மயானத கூறுவார் ‘பக்தி அன்பின் வெவ்வேறு விதமான வெளிப்பாடு. .கடவுளை அவனது குணங்களுக்காக பக்தி செலுத்துவது,அவனது உருவ அழகுக்காக பக்தி செலுத்துவது,, அவனை பூஜிப்பதிலுள்ள ஆசக்தியினால் உளவாகின்ற பக்தி,அவனை நினைத்து அந்த நினைவிலேயே இன்பம் காணுகின்ற பக்தி,அவனுக்கு சேவை செய்வதில் பெறுகின்ற இன்பங்காணுகின்ற பக்தி, அவனுடன் நட்பு பாராட்டி நண்பனாக காணும் பக்தி, குழந்தையாகக்கண்டு வாத்சல்யம் செலுத்தும் பக்தி, நாயகனாக,காதலனாக காணும் பக்தி, அர்ப்பணிக்கின்ற பக்தி, தானும் அவனும் ஒன்றே என்று எண்ணுகின்ற பக்தி, அவனை பிரிந்திருக்கின்ற போது ஏற்படுகின்ற விரஹ தாபத்திலிருந்து உள்வாகும் பக்தி இப்படி பதினோரு விதமாக பக்தி வெளிப்படுகிறது. ஆனால் அடிப்படை ஆண்டவனிடம் மனிதர்களுக்குள்ள அன்பு, காதால்,பாசம் இவைதான் தான் பக்தியாக பரிணமிக்கிறது.’
டாக்டர் ஜயராமன் என்ற அறிஞர் ஆழ்வார்களின் பக்தியையும், இந்தி மொழியில் வெளியாகியுள்ள பக்தி இலக்கியங்களையும் பரிசீத்த பிறகு பக்தியை ஐந்து வகையாக பிரிக்கலாம் என்கிறார்: தாஸ்ய, ஸாக்ய,வாத்சல்ய ,மாதுர்ய ,நிர்வேத என்ற, ஐந்து விதமான பக்தி.
நம்மாழ்வாரின் பாசுரங்களில் தாஸ்ய பக்தியை நாம் காண முடிகிறது

உனக்கு பணிசெய்திருக்கும் தவமுடையேன்

இனிப்போய் ஒருவன்;தனக்குப்பணிந்து

கடைதலைனிற்கை;நின்சாயையழிவுகண்டாய்

புனத்தினை கிள்ளிப்புதுவவிகாட்டி

உன்பொன்னடிவாழ்கவென்று

இனக்குறவர் புதியதுண்ணும்

எழில் மாலிருஞ்சோலை எந்தாய்.


( பெரியாழ்வார் திருமொழி—ஐந்தாம்பத்து—455)

ஐந்தாம் பத்தை ஆரம்பிக்கும்போதே பெரியாழ்வார் கூறுவார்:

            நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்

                  நாரணா ! என்னும் இத்தனையல்லால்

            புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்

                        புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே !


ஸாக்ய பக்திக்கு அர்ஜுன-கிருஷ்ண நட்பை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
பெரியாழ்வாரின் பாசுரங்களில் வாத்சல்ய பக்தியின் ஆழமான பிரதிபலிப்பையும் காணலாம்

தன்னோராயிரம் பிள்ளைகளோடு, தளர் ந்டையிட்டு வருவான்.

பொன்னேய் நெய்யோடு பாலமுதுண்டு, ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்

மின்னேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே

அன்னே !உன்னை அறிந்துகொண்டேன்; உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே !


தன்னை தாய் யசோதையாகவே பாவித்து கொஞ்சும் மொழி பேசும் பெரியாழ்வாரின் மூன்றாம் பத்தில் முதல் பாசுரத்தில் மேற்க்கண்டவாறு கொஞ்சுகிறார்.

மாதுர்ய பாவம் சம்போக சிருங்கார் (bridal mysticism) என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சிருங்கார பாவம் திரு நங்கை ஆழ்வார், நம்மாழ்வார்,  ஆண்டாள் இம்மூன்று ஆழ்வார்களின் பாசுரங்களிலும் முந்தி நிற்கிறது.
திருப்பாவையில் ஆண்டாள் நாச்சியார் பரமனை புகழ்ந்து பாடும்பொது ஒரு பக்தையாக இன்றி ஒரு காதலியாகவே மாறிவிடுகிறார்கள்

            வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்

            செய்ய்யும்கிரிசைகள் கேளீரோ,பாற்கடலுள்

            பைய துயின்ற பரமனடி பாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றாதோம்

ஐயமும் பிசையும் ஆந்தனையும் கை காட்டி

உய்யுமாறு எண்ணி உகந்தேலேர் ம்பாவாய் .


காதலியின் பொறாமையை மற்ற பெண்கள் மீது மட்டுமல்ல உயிரற்ற ஜட பொருள்கள் மீதும் வசை பாடுகிறார்கள்.பெருமை வாய்ந்த நாச்சியார் திரு
வாய்மொழியில்:

            கற்பூரம் நாறுமோ ? கமலப்பூ நாறுமோ ?

            திருப்பவள்ச் செவ்வாய்தான் தித்திக்குமோ ?

            மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்

            விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே !


அந்த மாதவனின் வாய்ச்சுவையில் கற்பூர வாசனை கிட்டுமோ? தாமரையின் மணம் வீசுமோ? பாஞ்ச்ஜன்யம் என்ற அந்த வெண்சங்கே,உனக்கு கிடைத்த பாக்கியம் எங்களுக்கு கிடைக்கவில்லையே?நீ என்ன பேறு செய்தாய் கண்ணனின் செவ்விதழ்களின் இவ்வளவு அருகில் இருப்பதற்கு?

            பெண் படையார் உன்மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார்

            பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே

விரஹ தாபத்தை எப்படி சொல்கிறார் நாச்சியார் பாருங்கள்:

விண்ணில மேலாப்பு விரித்தார்ப்போல் மேகங்காள்

தெண்ணீர்பாய்! வேங்கடத்து என் திருமாலும் போந்தானே ?

            கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளி சோரச் சோர்வேனை

            பெண்ணீர்மை யீடழிக்கும் இது தமக்கு ஒர் பெருமையே?


            மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள் வேங்கடத்துச்

         சாமத்தின்   நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே

            காமத் தீயுள் புகுந்து கதுவபட்டு இடைக்கங்குல்

            ஏமத்தோர் தென்றலுக்கு இங்கிலக்காய் நானிருப்பேனே


பெரியாழ்வார் தாஸ்ய மாதுர்ய பக்தியை மட்டுமின்றி பூரண சரணாகதி மூலம் பரமாத்மாவுடன் இரண்டற்க் கலக்க்வும் விழைகிறார்.          அக்கரையென்னுமனத்தக் கடலுள் அழுந்தி உன் பேரருளால்   இக்கரையேறி இளைத்திருந்தேனை அஞ்சேலென்று கைகவியாய்

          

            எத்தனைகாலமும் எத்தனையூழியும் இன்றொடு நாளையென்றே

இத்தனைகாலமும் போய்க்கிறிப்பட்டேன் இனி உன்னை போகலொட்டேன்

பகவான் ரமணரின் அக்ஷரமணமாலையில் ‘தொட்டருட்கை பட்டு’ விட்டால் நான் நஷ்டமாய்விடுவேன் என்பது பெரியாழ்வாரின் மேற்கூறிய கருத்தை ஆமோதிப்பது போலிருக்கிறது

மீண்டும் சந்திப்போம் அடுத்த மடலில்.

ரமணஜோதி 64

ரமண ஜோதி 64

 தீக்ஷை

தொட்டருட் கைமெய் கட்டிடா யெனிலியா

 னட்டமா வேனருளருணாசலா


“ அருணாசலா, நீ என்னை கைபிடித்து, அணைத்துக் கொள்ளவில்லையென்றால் நான் என் செய்வேன்? எனக்கு வேறு கதி ஏது?”என்று பகவான் தன்னை பரமனின் மணப்பெண்ணாக பாவித்துக் கொண்டு கேட்கிறார்.
இன்னொரு விதத்தில் பார்த்தால்,பகவான் சீடனாக பரமாத்மாவிடம் ஸ்பரிச தீக்ஷை தருமாறு கேட்கிறார்.
இந்த சுலோகத்தில் இரண்டு விதமான பாவங்களை  பகவான் கொண்டு வருகிறார்.:
ஒன்று: தீக்ஷா பாவம்( குரு-சிஷ்ய பாவம்)
இரண்டு: : நாயகீ நாயக பாவம்
முதலில் தீக்ஷா பாவத்தைப் பார்ப்போம்.
குரு, சிஷ்யனின் தலையில் கைவைத்து  ஆசீர்வதிக்கும் போது சீடனுக்கு ஞானம் லபிக்கிறது..
தீக்ஷா என்பது குரு தனது சக்தியை சீடனுக்கு பரிமாற்றம் செய்வதாகும்.இது சீடனின் ஆன்மீக சக்தியை உத்போஷிப்பதற்கு சமானம்
.’பாட்டறியை (Battery ) ரீசார்ஜ் பண்ணுவது போல்.
தீக்ஷை அளிக்கும் முறை குருவிற்கு குரு மாறுபடும்.
ஸ்பரிச தீக்ஷா,  நயன தீக்ஷா, மானச தீக்ஷா என்று மூன்று விதமான தீக்ஷா சம்பிரதாயம் உள்ளது..
ஸ்பரிச தீக்ஷா என்பது குரு சீடனின் தலையில் கை வைத்து தீக்ஷை அளிக்கும் முறை
 நமது பண்டைய கலாச்சாரத்தில் சாதாரணமாக பெரியவர்கள் சிறியவர்களை ஆசீர்வாதம் செய்யும்போது கூட தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்வார்கள். இன்றைய காலத்தில் நமது இளம் தலைமுறையினர், சிகையலங்காரம் கலைந்துவிடும், என்று கூறி தலையில் கைவைக்க விட மாட்டார்கள்.
தற்போது ஒரு மேலை நாட்டு விஞ்ஞானி ஒருவர் தலையில் கைவைக்கும் போது ஒருவர் மனதிலுள்ள நல்லாசிகள் ( positive vibration)  மற்றவருக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார். இனிமேல் ஒருவேளை நமது இளைய தலைமுறை-நமது ஸ்ருதி-ஸ்ம்ரிதி அதிஷ்டிதமான  பண்புகளை மூட நம்பிக்கை என்று பரிஹசித்த இளையவர்கள்—விஞ்ஞானபூர்வமானது என்று அங்கீகரிப்பார்களோ என்னவோ ?
அதே போல தான் நமஸ்கரிப்பது.. நமது கலாச்சாரப்படி நம்ஸ்கரிப்பது  நமது அஹங்காரத்தை அழிப்பதற்கு அறிகுறியாகும். நமஸ்காராம் என்றால் சாஷ்டங்கமாக நமஸ்கரிப்பதாகும்.சாஷ்டாங்கம் என்றால் எட்டு அங்கங்களும் பூமியில் பதியும்படி கீழே விழுந்து வணங்குவதாகும்.
பகவான்  ரமணர் கூறுவார்:
“ அகந்தை தலை குனிதலே,அதாவது, அடங்கலே,நமஸ்காரத்தின் தாத்பரியம். அதாவது ,அகந்தை தன் மூலத்தொடுங்கலே நமஸ்காரம். உடலை மட்டும் கீழே கிடத்தலால் ஈசனை ஏமாற்றிவிட முடியாது.. அகந்தை அற்ற இடத்தேதான் அருளொளி மிளிரும்” (வசனாம்ருதம் ஈ பக் 105)
“நமஸ்காரம் என்பது ஆத்ம சமர்ப்பண மனோபாவத்தை வருவியதற்காக,அதற்கு,அறிகுறியாய்,முன்னோர்களால் கையாளப் பட்டு வந்தது. ஆனால் காலக்கிரமத்தில் மாந்தர் அதன் உட்கருத்தை உணராது,பக்தி பாவமொன்றுமில்லாமல் உடலைக் கீழே கிடத்தியெழும் ஒரு தேகாப்யாசமாக செய்துவிட்டனார்.
உள்ளத்தூய்மையின்றி அவ்வுத்தேசம் கூட, இல்லாமல் கீழே விழுந்தெழுவதால் என்ன பயன்?
அகத்தே ஆயிரம் தீய நினைவுகளை வைத்துக் கொண்டு உடலைக் கீழே கிடத்தி எழுவதால் கடவுளோ, குருவோ ஏமாற மாட்டார்.
அவ்வாறு என் முன் யாராவது நமஸ்கரித்தால் அது என்னை அடிப்பது போலிருக்க்கிறது.
உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக் கொண்டால் அதுவே பணிவும்,நமஸ்காரமும் ஆகுமே.” என்பார் பகவான் ரமணர்.( வச. 2 /241
நாம் தீக்ஷையை பற்றிக் கூறிக்கொண்டிருந்தோமல்லவா? ஸ்பரிச தீக்ஷைக்கு சிறந்த உதாரணம் இராமகிருஷ்ண பரமஹம்சரும் ஸ்வாமி விவேகானந்தரும்.
இளம்  நரேந்திரன் இராமகிருஷ்ணரிடம் கடவுளை காண்பிக்கும்படி கேட்டுக்கொண்டபோது ,இராமகிருஷ்ணர் நரேந்திரனின் தலையில் கை  வைத்தார்
அதன் பலன், நரேந்திரன் கடவுளை பார்த்தான் என்பது மட்டுமல்ல,அவன் உலகத்தை கீழடக்கிய ஸ்வாமி விவேகானந்தரும் ஆனான்
மாதா அமிருதானந்தமயி எல்லோரையும் அன்புடன் அணைத்து தீக்ஷை வழங்குகிறார்.
பகவான் ரமணர் நயன தீக்ஷை முறையை பின்பற்றினார்;(அவர் அப்படி கூறவில்லையென்றலும்). அவர் முன்னால் மௌனமாக உட்கார்ந்திருந்து விட்டு எல்லாம் புரிந்து விட்டதாக கூறிச் சென்றுள்ளார்கள்.டாக்டர்.இராதாகிருஷ்ணன்,ஸ்ரீ நாராயண குரு போன்றவர்கள் ரமணரை தரிசிக்க வந்து விட்டு ஒன்றுமே பேசாமல் ஒன்றிரண்டு நாட்கள் ஆசிரமத்தில் தங்கிவிட்டு சென்றுள்ளார்கள்.
காஞ்சி பரமாச்சாரியர் யாரையும் தொடுவது மிகவும் அபூர்வம்.அவர் தன் அருள் பார்வை மூலமாக பலருக்கும் அருள் பாலித்தார்.
மானச தீக்ஷைக்கு சிறந்த உதாரணம் தக்ஷிணாமூர்த்தியே.
நமது பண்பாட்டு கிருதிகள் பறைவைகளை ஸ்பரிச தீக்ஷைக்கும் மீன்களை நயன தீக்ஷைக்கும்,ஆமையை மானச தீக்ஷைக்கும் உதாரண்மாகக் கூறுகின்றன.
பறைவைகள் முட்டைகளின் மீது அடைகாத்து குஞ்சு விரிப்பதும், மீன்கள் முட்டைகளை நெருங்காமலே கடலிலிருந்து கண்ணால் பார்த்தே குஞ்சு பொரிப்பதும், ஆமைகள் முட்டை இட்டபின் அவைகளை திரும்பிக் கூட பார்க்காமல் இருக்கும் ஆனால் முட்டை விரிந்ததும் குஞ்சுகள் தாயை நோக்கி ஓடி வரும் 
தீ (dhI)  என்றாள் சம்ஸ்கிருதத்தில் கொடுப்பது என்றர்த்தம். ‘க்ஷ’ என்றால் அழிப்பது என்று பொருள். அருளைக் கொடுத்து அஞ்ஞானத்தை அழிப்பது தீக்ஷை.
குரு அளிக்கும் தீக்ஷயின் அழகு என்னவென்றால் கொடுப்பதால் குரு ஒன்றையும் இழப்பதில்லை; மாறாக,மேலும் ஞானியாகிறார்..

தொட்டனைத்தூறும் மணர்க்கேணி

கற்றனைத்தூறும் கல்வி மாந்தர்க்கு

ஈசாவாசம் கூறுகிறது:

            பூரணமத: பூர்ணமிதம்

            பூரணத் பூரணமுதச்யதே

            பூரணஸ்ய பூரணமதய

            பூரண்மேவ வஷிஷ்யதே

            ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி:


பகவானின் முதலில் எடுத்துக் காட்டிய செய்யுள் மற்றொரு புறம் நாயிகா நாயக பாவத்தை எப்படி வெளிப்படுத்துகிறது எப்படி என்று காண்போமா?
‘தொட்டருட்கை’ என்கின்ற பதம் மூலம் பகவான் திருமணங்களில் முக்கிய சடங்கான பாணிக்கிரகணத்தை குறிப்பதாக தோன்றுகிறது. பாணிக்கிரகணம் முடிந்து சப்தபதி என்கின்ற சடங்கையும் முடித்து விட்டு சொல்கின்ற மந்திரங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவையே

“நாம் இன்று ஒரு சபதம் எடுத்துக் கொள்வோம்.நாம்  அன்பை பகிர்ந்து கொள்வோம்; நமது பலம்,பலவீனங்கள்,விருப்பங்கள் எல்லாம் ஒன்றாகட்டும் .நமக்கு இன்று முதல் ஒரே மனம், .நான் ஸாமவேதமென்றால் நீ ரிக் வேதம், நான் மேலுலகம் என்றால் நீ பூமியாவாய். நான் சுக்கிலம் என்றால் நீ அதை வாங்கி தாங்கிக் கொள்ளும் தாயாவாய். நாம் இருவரும் சேர்ந்து சந்ததிகளை பெறுவோம்.,செல்வம் சேகரிப்போம்,”

“நாம் இருவரும் சேர்ந்து ஏழு அடிகள் கடந்து விட்டோம்  நீ இன்று முதல் என்னுடையவள் நாம் இருவரும் பங்காளிகள்.  நான் உன்னுடையவனாய்விட்டேன். நீயில்லாமல் இனிமேல் நானில்லை. நீயும் நானில்லாமல் வாழ மாட்டாய். எல்லா இன்பங்களையும் நாம் ஒருமித்து அனுபவிப்போம். நான் வார்த்தை என்றால் நீ அதன் பொருள். பொருளில்லாமல் வார்த்தை இல்லை; வார்த்தை இல்லாமல் பொருளில்லை.நான் சிந்தனை  நான் என்றால்  நீ ஒலி. இரவும் பகலும் நமக்கு தேனாக இனிக்கட்டும். பூமியும் ஆகாயமும் இனிக்கட்டும். சூரியனும் தாவரங்களும் இனிக்கட்டும். கோமாதாக்கள் தேன் போல் இனிக்கும் பால் தரட்டும். ஆகாயம், பூமி, மலைகள் இந்த பிரபஞ்சம் முழுவதும் எப்படி சாசுவதமாக இருக்கிறதோ அது போல் நானும் நீயும் சிரஞ்சீவிகளையிருப்போம்.”

இந்த பாரத பூமியில் விவித பாகங்களில் நடக்கும் விவகங்களில் உச்சரிக்கப்படும் மந்திரங்களின் சாராம்சம் மேலே கூறியது. இதில் பொதிந்து கிடக்கின்ற ஒரு உண்மை ஜீவாத்மா- பரமாத்மா உறவை பிரதிபலிக்கின்றது. ஆத்மசாக்ஷாத்காரத்திற்குப் பின் ஆத்மா இப்படியொரு நிலையிலிருக்கும் என்பதை பகவான் ரமணர் குறிப்பிடுவது போல் தோன்றுகிறது..

நாயகி-நாயக பாவம் வைஷ்ணவத்தில் கோதை நாச்சியாரின் கிருதிகளில் இன்னும் வ்யக்தமாக புலனாகிறது.அதை அடுத்த மடலில் பார்ப்போம். .