Sunday 30 August 2015

திருவோணம்

திருவோணம்-ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்


மற்றுமொரு திருவோணம் வந்து போய்விட்டது. மக்களெல்லாம் பூக்களமிட்டு, புது உடை அணிந்து, பல்சுவை உணவு அருந்தி உற்றார்-உறவினருடன் உல்லாசமாக திருவோணத்தைக் கொண்டாடினார்கள் என்பது உண்மை. திருவோணத்தின் பின்புலம் மஹாபலி சக்கரவர்த்தி தன் நாட்டையும் மக்களையும் அவர்களின் சுபிடச்சத்தையும் காண மீண்டும் பரசுராம க்ஷேத்திரமான கேரளத்திற்கு வரும் நாள் சிங்க மாசத்தில்( ஆவணித்திங்களில்) வரும் திருவோண நாள் என்பது நாமெல்லாம் அறிந்த கதை. நாடு போற்றும் மஹாபலியின் கதையில்  அவர் மீது அசூயை கொண்ட தேவர் பெருமக்கள் மஹவிஷ்ணுவிடம் முறையிட, மஹாவிஷ்ணுவும் வாமனாவதாரம் எடுத்து வந்து மூன்றடி  நிலத்தை தானமாக கேட்க, தானத்தில் தலை சிறந்த மன்னனான,மஹாபலி தனது குலகுருவான சுக்கிராச்சாரியரின் –‘வந்திருப்பது மஹவிஷ்ணு; உனது அழிவிற்காக தேவர்களின் வேண்டுதலை ஏற்று வந்துள்ளார்; அவரது வேண்டுதலை  ஏற்றுக்கொள்ளாதே’- என்ற எச்சரிக்கையையும் உதாசீனப்படுத்தி விட்டு தானம் கொடுக்க ஒத்துக்கொள்கிறார்..மண்ணுலகையும் விண்ணுலகையும்  த்ரிவிக்கிரமனாக உருமாறிய பெருமாள் அளக்க, மூன்றாவது அடிக்கு  தலை குனிந்து வணங்கினார். த்ரிவிக்கிரம பெருமாள் அவர் தலையில் தன் திரு பாதங்களை வைத்து ஆசீர்வதித்தார்; ஒரு வரமும் கொடுத்தார்: ‘ நீ வருடம் ஒருமுறை இதே மாதம் திருவோணம் நாளன்று உன் நாட்டிற்கு வந்து உன் பிரஜைகளை கண்டு செல்லலாம்” இது கதை.
மேற்கூறியது ஒரு ‘myth”. அதன் தோலை உரித்து சற்று உள்ளே சென்று பார்த்தோமேயானால், நாம் காணுகின்ற காட்சியே வேறு. மஹாபலி சக்கரவர்த்தி தலையைக் குனித்து தன்னை அழித்துக் கொண்டதின் மூலம் சிரஞ்சீவியானார்; இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய அழிவில் அமரத்துவம் ஒளிந்து கொண்டிருக்கிறது. “நான்” அழிந்தால் நீ சிரஞ்சீவியாகிவிடுவாய் என்ற உண்மை புலனாகிறது.
இதைத்தான் பகவான் ரமண மஹரிஷி,
                             அருணாசலமென வகமே நினைப்பவ
                             ரகத்தைவே ரறுப்பா யருணாசலா
என்றார்.
திரிவிக்கிரம பெருமாளை அகத்தில் அழைத்து இருத்திவிட்டால், “நான்” எனும் “அஹம்” அழிந்துவிடும்; பெருமாள் என்றும் அழிவில்லாத நித்தியனாதலால் நீயும் சிரஞ்சீவியாகிவிடுவாய் என்கிறார் ரமணர்.
இன்னொரு சுலோகத்தில் பகவான் ரமணர் சொல்கிறார்:
                   எனையழித் திப்போ தெனைக் கல வாவிடி
                   லிதுவோ வாண்மை யருணாசலா
எனையழித்து உன்னுடன் என்னை சேர்த்துக்கொள் அருணாசலா என்கிறார் பகவான் இங்கு.
நாமோ மஹாபலி போன்ற பௌதீக சுகங்களின் இடைத்தரகர்களின் லௌகீக மாய வலயில் சிக்கி நமது புலன்களுக்கு தீனி போட்டு க்கொண்டிருக்கிறோம் .நாவிற்கு ருசியான உணவு, மனதிற்கு பிடித்த ஆடை அணிகள், செவிக்கேற்ற சங்கீதம், உல்லாச கேளிக்கைகள் என்று நமது ஐம்புலன்களுக்கும் தீனி போட்டுக்கொண்டிருக்கிறொம்...நாமும் தாற்காலிகமான அந்த இன்பங்களில் மூழ்கி நிரந்தர சாந்தியை இழக்கிறோம்.மஹாபலி சக்கரவர்த்தியின் கதை கற்பிக்கும் பாடத்தை மறக்கிறோம்.
ஆகவே தான் மஹரிஷி ரமணர் கேட்கிறார்:
ஐம்புலக் கள்வ ரகத்தினிற் புகும்பொ
தகத்த்னீ யிலையோ வருணாசலா
திரிவிக்கிரம பெருமாளும் மஹாபலியும் நம்முள் எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். .மஹாபலி எப்பொழுது தலை வணங்கி பெருமாளுக்கு இடம் கொடுக்கிறாரோ அப்பொழுது நாம் சிரஞ்சீவியாகிவிடுகிறோம்.மஹாபலி ‘நான்” எனும் அஹந்தையை பிரதிபலிக்கிறார். சத் சிதானந்தனான பெருமாள் எப்பொழுதும் நம்முள் வாமன உருவத்தில் இருந்து கொண்டு தானிருக்கிறார். அவர் த்ரிவிக்கிரம உருவம் எடுக்கும்பொழுது பௌதீக சுகங்களின் ப்ரதீகமான மஹபலி அழிந்து  நாம் சிரஞ்சீவியாகிறோம்.
ஆகவே திருவோணத்தின் தாத்பரியம் என்னவென்றால் நம்முள் இருக்கும் ‘அஹம்’ அழியவேண்டும்; ‘நான்’ தலைகுனிந்து, த்ரிவிக்கிரம பெருமாளுக்கு இடம் அளிக்க வேண்டும்.அப்பொழுது தான் நமக்கு முக்தி-மோக்ஷம்.
திருவோண சந்தர்ப்பத்தில் இந்த உண்மையை நாம் நினைத்து உணர்ந்தோமென்றால் நல்லது.

வாழ்க, மஹபலியின் தன்னடக்க; தன்னழிவு; அவர் என்றும் சிரஞ்சீவிதான்; ஏனென்றால் அவர் தன்னுள் இருக்கும் ‘நானை” அழித்துக்கொண்டு பெருமாளுக்கு இடம் அளித்தார்.

No comments:

Post a Comment