Sunday 28 December 2014

ரமணஜோதி 49

ரமணஜோதி 49      

சௌரியம்

சௌரியங்காட்டினை சழக்கற்ற தென்றே
சலியா திருந்தா யருணாசலா
“அப்பழுக்கற்ற உன் சௌரியத்தை அலுக்காமல் காட்டினாய் அருணாசலா,” என்பது மேலெழுந்த வாரியாக பார்க்கும்பொழுது நமக்கு கிடைக்கும் பொருள்.
“அப்பழுக்கற்ற உன் சௌரியத்தைக் காட்டாமல் ஏன் அசைவில்லாமல் இருக்கின்றாய்,அருணாசலா?” என்பது இன்னொரு பொருள்.
“அருணாசலன் என்றாலே,அசைவற்ற அருணன் என்று பொருள். அருணன் என்றால் சுயம்பிரகாசமானவன். அப்படிப்ப்ட்ட நீ என்று என் அழுக்களையெல்லாம் உன் வீரத்தால்,சக்தியால்,சௌரியத்தால் அழிப்பாய்,அருணாசலாl?”
ஆத்ம போதத்தில் ஆதி சங்கரர் நமது ஆன்மாவைக் குறித்து கூறியதை சற்றேப் பார்ப்போம்:
          யத்பாஸா பாஸ்யதேர்காதி
          பாஸைர்யத்து ப்ஜாஸ்யதே
          யேன ஸர்வமிதம் பாதி
          தத்ப்ரமேத்யவதாரயேத்
                   .போ 61
ஏதொன்றின் ஒளியால் சூரியன் முதலிய ஒளிமிகு கோளங்கள் பிரகாசிக்கின்றதோ, எவை மற்றவைகளை பிரகாசிப்பிக்காதோஅவைகளை பிரகாசிப்பிக்கின்ற, இந்த விசுவத்தையே ஒளிமயமாக்குகிறதோ அது தான் பிரமம்,எங்கிறர் ஆதி சங்கரர்.
இன்னொரு இடத்தில் கூறுகிறார்:
ஏவமாத்மாரணௌ த் யான-
மதனே சததம் க்ருதே
உதிதாவகதிர்ஜ்வாலா
ஸர்வாஞானேந்தனம் தஹேத்
            ஆ.போ 42
ஆன்மா எனும் அரணியை தொடர்ந்து மதனம் செய்வதால் உண்டாகின்ற ஞானமாகின்ற அக்னி அஞானமாகின்ற அழுக்குகளை சுட்டெரித்துவிடுகிறது.
பகவான் ரமணரும் இதே கருத்தை தான் மேற்கண்ட சுலோகத்தில் கூறுகிறார். பரமாத்மாவான அருணாசலன் நம்மிலுள்ள அவித்யா எனும் அழுக்கை தஹிப்பித்து நம்மை சுத்தமாக்கி சுத்த சத் சிதானந்தன்யுடன் லயிப்பிக்கிறான்.ஆனால் அது எப்பொழுது என்று கேட்கிறார் பகவான்
இதற்கு ஒரே மருந்து ‘நான்’ யார் என்று உன்முகமாகத் தேடி  தெரிந்துகொண்டு ‘யானே எங்கும் பிரமமாக இருக்கிறேன்’ என்று புரிந்துகொண்டு விட்டால் நம் மனம் நசித்து விடும்.
நமது லட்சியமே மனோ  நாசமகத்தான் இருக்க வேண்டும்

சங்கர பகவத் பாதாளும் பரமாத்மா அசல்னாயிருக்கிறான் என்று கூறியுள்ளார். பரமாத்மா நிர்மலனாகவும்-அப்பழுக்கற்றவனாகவும் இருக்கிறான் எங்கிறார் அதி சங்கரர்.

அஹமாகசவல்ஸர்வம்
 பஹிரந்தர்கதோஸ்சுயுத
ஸதா ஸர்வசமஹ ஸித்தோ
நிஸங்கோ. நிர்மலோஸ்சலஹ:
ஆ.போ 35
“நான் ஆகாசத்தைப் போல் எல்லாவற்றின் உள்ளிலும் வெளியேயும்  ஒரே போல் இருக்கிறேன்;எல்லாவற்றோடும் ஒரே போல் விவகரிக்கின்றவனாகவும் ஆனால் எதோடும் பற்றில்லாதவனாகவும் இருக்கிறேன்; நான அப்பழுக்கற்றவன்-நிர்மலன்,அசலன்,”
பகவான் ரமணரின் முக்கியமான் ஒரு சீடராவார் ஸாது ஓம்.அவர் கூறுவார்:
‘ நான்” என்ற நினைப்பே மனம். இன்னொரு விதத்தில் பார்த்தால் மனம் காரணமாக எழும் சிந்தனைகளின் சேகரமே மனம்”
உபதேசவுந்தியார் எனும் நூலில் பகவான் மனோ நாசத்தைக்குறித்து  கூறுகிறார்:
இலயமு நாச மிரண்டா மொடுக்க
மிலயித் துளமெழு முந்தீபற
வெழாதுரு மைந்ததே லுந்தீபற
இந்த மனத்தை நாசமடைய செய்வது அவ்வளவு எளிதன்று.ஆகவே முதலில் நாம் மன அடக்கத்திற்கு முயல வேண்டும்..அது தான் பிரமனை அடைவதற்கான முதல் படி.
இதற்கு அருணாசலனின் அருள் வேண்டும்
அருணாசல பஞ்சரத்னத்தில் பகவான் கூறுகிறார்:
அருணிறை வான முதக் கடலே
விரிகதிரால் யாவும் விழுங்கு—மருண
கிரிபரமான் மாவே கிளருளப்பூ நன்றாய்
விரி பரிதியாக விளங்கு.
வெளிவிடயம் விட்டு விளங்குமரு ணேசா
வளியடக்க நிற்கு மனத்தா---லுளமதனி
லுன்னைத் தியானித்து யோகி யொளிகாணு
முன்னி லுயர்வுறுமீ துன்

ஸ்ரீ அருணாசல பதிகத்தில் பகவான் கூறுகிறார்:
எங்கும் வியாபித்து நிறைந்திருக்கும்,ஆகாயம்,காற்று,நெருப்பு,நீர்,மண் ஆகிய ஐம்பூதங்களும் அவற்றின் கலப்பாய் தோன்றிய பல் வேறு பௌதீகத் தோற்றங்களும்,பலவிதமான ஜீவராசிகளும் சிதாகாச சொரூபனான உன்னையன்றி, வேறு ஒன்றுமேயில்லையென்றால் உனக்கு வேறாக நான் ஒருவன் மட்டும் எப்படி இருக்க முடியும்?சிதாகாச சொரூபனாய் எனது இதயத்தில் இரண்டற்று கலந்து நீயே பிரகாசித்துக் கொண்டிருக்கும்பொழுது, உனக்கு அயலாக நான் என்று எழும் அஹங்காரத்தின் தலையை அது அழிந்துபோகும்படி உனது விரிந்த மலர் பாதத்தை வைத்து,அருணாசலா, நீ வெளிப்பட்டு வருவாய்,
 வெளிவளி தீனீர் மண் பல வுயிரா
விரிவுறு பூதபௌதிகங்கள்
வெளியொளியுன்னை யன்றியின் றென்னின்
வெளியதுளத்து வேறற விளங்கின்
வேறுயா னாருளன் விமலா

வேறென வெளிவருவேனார்
வெளிவரா யருணா சலவவன் றலையில்

விரிமலர் பதத்தினை வைத்தே

ரமணஜோதி 48


ரமணஜோதி 48

துரீயம்

கடந்த இரண்டு அஞ்சல்களாக நாம் ஜீவான்மா எப்படி தானே கட்டிய இரண்டு அறைகளில் சிறையுண்டு அல்லல் படுவதையும் அதிலிருந்து விடுபடுவதற்காக இன்னொரு அறையில் சென்றடைவதையும் அதுவும் ஒரு தாற்காலிகமான விடுதலை தான் என்று கண்டோம்.
நிரந்தரமான விடுதலையைக் குறித்து ஆலோசிக்கு முன் பகவான் ரமணர் ஸுஷுப்தியைக் குறித்து கூறீயுள்ள சில கருத்துக்களை சற்று விவரமாக பார்ப்போம்.
“தூக்கத்தில் நாம் எப்படியிருக்கிறோம்? நானெனும் எண்ண எழுச்சியற்று சும்மாயிருக்கிறோம்.அதனின்று விழிக்குங்கால் அகந்தையும்,அதைப் பற்றிய பிற எண்ணங்களும் எழுந்து நமது இயல்பேயாம் ஆனந்தத்தை மறைத்து விடுகின்றன. ஆகவே  சுகமாய் இருக்க விரும்புவன் தோன்றி மறையும் அகந்தையும் அதைப் பற்றி வரும் எண்ணத் தொடரையும் விவேகத்தால் ஒழிக்க வேண்டும்”.( ஸ்ரீ பகவான் வசனாம்ருதம் பாகம் 2,/85)
“ஜாக்ரத்திலும் ஸ்வப்னத்திலும் மனமிருப்பதால்,மனோமயமாய் உலகு காணப்படுகிறது. தூக்கத்தில்(ஸ்ஷுப்தியில்) மனமொடுங்க,அத்துடன் உலகமும் ஒடுங்குகிறது. மீண்டும் விழிக்குங்கால், மனமெழுகிறது;அத்துடன் மனோமயமேயாம் உலகும் காணப்படுகிறது. தூக்கத்தின்போது ஒடுங்கியிருந்த அகந்தை விழிக்குங்கால் உடலுடன் தன்னை சம்பந்தப் படுத்திக் கொண்டு உலகை காண்கிறது. ஆகவே உலகம் மனோமயமே. மனத்தை விட்டு அதற்கோர் இருப்பில்லை.” (வ.ச.2/89)
“ இம்மனம் கனவில் ஒரு உலகையே சிருஷ்டிக்கிறதே? அவ்வாறே தான்  நனவிலும்;
கனவு குறுகிய காலத்ததாகவும்,நனவு நீண்ட காலத்ததாகவும் தோன்றுகிறது”.
“அவஸ்தாத்ரய ஸக்ஷியாம் “நான்” அவஸ்தைகளால் பாதிக்கப் படுவதில்லை.”
 துரிய எனும் நாலாவது அவஸ்தை ப்ரஹ்மனின் அதிஷ்டானம் என்கிறார் ஸ்வாமி சிவானந்தா.இந்த நிலையை அடைகின்ற ஜீவாத்மா தன்னுடைய இயற்கையான சத்-சித்-ஆனந்த ஸ்வரூபமான பிரமனில்  லயிக்கின்றது. சமசாரத்தில் உழலுகின்ற ஜீவாத்மாக்கள் ஜாக்ரத்,ஸ்வப்ன,சுஷுப்தி எனும் மூன்று அவஸ்தைகளில் மாறி மாறி சலித்துக்கொண்டிருக்கிறது.
இந்த மூன்று அறைகளின் சுவர்களையும் உடைத்து தள்ளி விட்டால் நாம் இருப்பது ஆதியும் அந்தமும் இல்லாத ஒரு திறந்த வெளி.அதை நாலாவது அறை என்று கூறலாமா? ஏனென்றால் அறைக்கு சுவர்கள் இருக்கும்;வாசல் இருக்கும். ஆனால் துரீயத்தை அடைந்து விட்டால் ஜீவாத்மா எந்த எல்லைகளுக்கும் கட்டுப் பட்டதில்லை.ஆதற்கு போவதற்கு வாசலும் இல்லை;தேவையும் இல்லை.
ஒரு முறை S.S. கோஹன் என்ற வெளி நாட்டவர் “சமாதி என்றால் என்ன?” என்று பகவான் ரமணரிடம் கேட்டார்’
அதற்கு பகவான் சொன்னார்:
“சமாதி என்றால் ஒருவனது இயற் குணம்..”
கோஹன் தொடர்ந்து கேட்டார்,” இதுவும் துரீயவும் ஒன்று தானா?”
இதற்கு பகவான் அளித்த பதிலும் தொடர்ந்து அளித்த விளக்கங்களும் மிகவும் முக்கியமானவை.
பகவான் சொன்னார்:
“சமாதி, துரீயம், நிர்விகல்ப சமாதி மூன்றுமே ஒருவன் தன்னைத் தானே அறிந்து கொள்வதையேக் குறிக்கிறது. இது தான் நாலவது அவஸ்தை.-பர பிரம்மம்.-மற்ற மூன்று அவஸ்தைகளிலிருந்து -ஜாக்ரத், சொப்னம்,சுஷுப்தி—வேறானது. இந்த நாலாவது அவஸ்தை   நிரந்தரமானது. இந்த அவஸ்தையில் மற்ற மூன்று அவஸ்தைகளும் வந்து போகிறது. துரீயாவஸ்தையில் நமது மனம் அதன் மூலத்துடன் லயித்துவிட்டதை உணர்கிறோம்.சில புலன்கள்.அப்பொழுதும் நமது ஆன்மாவை அரித்துக் கொண்டிருக்கும்.ஒரு விதமான இயக்கம் என்று கூறலாம்.ஆனால் நிர்விகல்ப சமாதியில் புலன்கள் முற்றிலும் செயலிழந்து விடும் சிந்தனைகள் பூரவும் மறைந்து விடும்.ஆகவே அது சுத்த சித் எனப்படுகிறது.ஆகவே இந்த நிலை ஆனந்தமயமானது. துரீயம் சவிகல்ப சமாதியில் அடைய முடியும்.”.
வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பகவான் கூறுவார்:
உண்மையில் ஜிவான்மா மூன்றே அவஸ்தைகளில்த் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.  துரியம் என்பது நாலாவது அவஸ்தை அன்று.ஆனால் சதாரண மனிதர்கள் அதை சரியாக புரிந்து கொள்வதில்லை. ஆகவே
துரீயத்தை நாலாவது அவஸ்தை என்று கூறுகிறோம்.. துரீயம் தான் சத்யவஸ்தை;இது ஒன்றின் பாகமுமல்ல;இதுதான் எல்லாவற்றின் மூலம்.
இது உன் அஸ்தித்துவத்தின் அடிப்படை..”
மாண்டுக்ய உபனிஷத் ஏழாவது சுலோகத்தில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:

:ந்தப்ரஞா பஹிர்ப்ரஞா   நோபயத்:ப்ரஞ: ப்ரஞானகனம்

  ப்ரஞ  நாப்ரஞ்ம் ! அத்ருஷ்டமவ்யவஹார்யமக்ராஹ்யமலக்ஷணம்

அசித்யமவ்யபதேஸ்யமேகாத்மப்ரத்யசாரம் ப்ரபஞ்சோப்சம்

சந்தம் சிவம்த்வைதம் சதுர்த மன்யந்தே ஆத்மா விஜ்னேய:!!

ப்ரமன்  சொப்னாவஸ்தையில் காணும் அந்த:ப்ரஞனுமல்ல; ஜாக்ரத் அவஸ்தயில் காணும் பஹ்ர்ப்ரஞனுமல்ல;இரண்டும் கலந்த ஒரு நிலையும் அல்ல.சமுத்திரத்தைப் போன்ற எல்லாவற்றின் சங்கமுமல்ல ;
இது ஆன்மாவின் தனி ஸ்வ்ரூபம்; ரூப-குண விசேஷங்கள் எதுவுமில்லாத பிரம்ம நிலை.சுத்த சத் சிதானந்த நிலை
இது பார்க்க இயலாத நிலை.ஆகவே
அதிருஷ்டம்
இது அவ்யவஹாரயம்-
இதுடன் எந்த ஒரு விவகாரமும் வைத்துக் கொள்ளமுடியாது.
ஸ்பரிசிக்க,பேச,பிடிக்க முடியாத ஒரு அவஸ்தை.
இது அக்ராஹ்யம்—நமது எந்த புலனுக்கும் அடங்காது-கட்டுப்படாது.
அலக்ஷணம்- அவ்யாபாதேஸ்யம் விவரிக்க இயலாதது
இது ஒரு ஏகாத்மப்ரத்ய சாரம்-இதை வேறு எதனுடனும் ஒப்பிடமுடியாது.இதை இதுனுடன் தான் ஒப்பிடமுடியும்.எப்படி ராம ராவண யுத்தத்தை ராம ராவண யுத்தத்துடன் மட்டும் தான் ஒப்பிட முடியுமோ அது போல். ஆகவே –இது ஏகத்துவம், ஆத்மத்துவம் ;சர்வத்துவம்
ப்ரபஞ்சோஸ்மம்
இங்கு எல்லா சலனங்களும் முடிவுறுகிறது.எப்படி அலைகள் ஒவ்வொன்றாக எழும்பி முடிவில் சமுத்திரத்திலேயே வந்தடைகின்றதோ அது போல் இங்கும் ஒரு விதமான சாந்தம் நிலவுகிறது.
இந்த அவஸ்தை சதுர்தம் மான்யதே,ஸ ஆத்மா
இது ஆத்மாவின் நாலாவது நிலை என்று கொள்ளலாம். கணித முறைப்படியல்ல நாலாவது; 
மூன்று படிகளை கடந்து வந்து விட்டோம் ஆகவே நாலாவது; இதில் எல்லாம் அடக்கம்.இது தான் எல்லா ‘சத்’துக்களிலும் சத்; எல்லா ‘சித்’ துக்களிலும் சித்;எல்லா ‘ஆனந்தத்திலும் ஆனந்தம். சத்-சித்-ஆனந்தம்
இதே கருத்தை ரிபு கீதையின் இருபத்தியாறாவது அத்தியாயத்திலும் காணலாம்
எதனிடையில் காயிகமாஞ்செயலு மில்லை
 யெதனிடையில் வாசிகமாஞ் செயலுமில்லை
யெதனிடையின் மானதமாஞ் செயலுமில்லை
யெதனிடையின் மற்றுமொரு செயலுமில்லை
யெதனிடையிற் பாவமற மெவையுமில்லை
யெதனிடையிற் பற்றுபல னுணவுமில்லை
யதனிடையிற் சங்கற்ப மணுவு மின்றி
யம்மயமாய நவரதஞ்ச் சுகித்திருப்பாய்
26/7 ரிபு கீதை
எதனிடையிற்.கற்பனையே யென்று மில்லை
     யெதனிடையிற் கற்பிப் போன் றானு மில்லை
யெதனிடையிற் பிரபஞ்ச முதிக்கவில்லை
யெதனிடையிற் பிரபஞ்ச மிருக்கவில்லை
யெதனிடையிற் பிரபஞ்ச மொடுங்க வில்லை
     யெதனிடையி லெவையுமொரு காலு மில்லை
யதனிடையிற் சங்கற்ப மணுவு மின்றி
     யம்மயமா யனவரதஞ்ச் சுகித்தி ருப்பாய்
                           26/8 ரிபு கீதை
இப்படிப்பட்ட ஆனந்தமயமான ஒரு நிலையைத் தேடி அடையாமல் சும்மா சுகமுண்டுறங்கிடிற் என் கதி என்னாகும் அருணசலா என்று பகவான் கேட்கிறார்.
என்னை ஜாக்ரத்,சொப்னம்,சுஷுப்தி என்ற வலயத்திலிருந்து மீட்டு உன்னை சரணடைச் செய் அருணாசலா எங்கிறார் பகவான்




ரமணஜோதி 47

ரமணஜோதி 47

அவஸ்தா த்ரயம் 2

 இதற்கு முந்தய அஞ்சலில் அவஸ்தா த்ரயத்தின் முதல்  அவஸ்தையானஜாக்ரத்குறிது சில தகவல்களை தெரிந்து கொண்டோம்.
இந்த அஞ்சலில் அடுத்த இரண்டு அவஸ்தைகளை குறித்து பார்ப்போம்

சொப்னாவஸ்தை.

மாண்டூக்யம் சொல்கிறது:
ஸ்வப்ன-ஸ்தானொ .ந்த: ப்ரஜ்னா:: சப்தா-ங்க எகொனவிம்ஷதி முக:
 ப்ரவிவிக்த-புக் தைஜசோ த்விதிய பாதா:
இரண்டாவது அவஸ்தையில் கனவு காண்கின்ற நம் நிலையை குறித்துச் சொல்லப் பட்டிருக்கிறது. கனவு தூங்கும் பொழுதும் காணலாம்;தூங்காமலிருக்கும் பொழுதும் காணலாம்.எப்படியிருப்பினும் கனவு காணும் பொழுது நாம் உள்   நோக்கி  சிந்தனையைத் திருப்புகிறோம்.இதைத் தான்அந்த: ப்ரஞ்சய”,ப்ரவிவ்க்தா அல்லது சூக்ஷ்ம திருஷ்டி தைஜசா என்றெல்லாம் அழைக்கப் படுகிறது.
கனவிலும் நாம் பௌதிக வஸ்துக்களை தான் காண்கிறோம். நாம் ஏற்கனவே கண்ட பௌதிக வஸ்துக்கள் குறித்து நம் மனதில் எழுந்த,எழுகின்ற விகாரங்களின் வெளிப்பாடுகள் தான் கனவாக நம் உறக்கத்தில் வருகிறது.அல்லது நமது கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளின் எதிரொலியாகவும் கனவுகள் அமைகிறது.
விழித்துக்கொண்டு இருக்கின்றபொழுது காண்கின்ற கனவுகள்,வருங்காலத்தை குறித்த நமது எதிர்பார்ப்புக்கள்; கற்பனைகள்;எதிர்கால திட்டங்கள்.எப்படியிருந்தலும் எல்லாமே நமது மனத்திற்குள் நிகழ்கின்றவை. கனவுகள் உண்டாகின்ற பொழுது நமது கர்மேந்திரியங்கள் மூலம் நாம் அந்த நேரத்தில் காணுகின்ற வெளியுலக வஸ்துக்கள் சம்பந்தப்பட்டதல்ல.
நமது மனம் சம்பந்தப் பட்டது தான் கனவு .நமது புலன்கள் சம்பந்தப்பட்டது தான் கனவு. நாம் ஏற்கனவே உள் வாங்கி சேகரித்து வைத்துள்ள் அனுபவங்களின் பிரதிபலிப்புக்கள் தான் கனவுகள்.கனவுகளிலும் “நான்” “நீ” “இது” “அது”. எங்கின்ற வேற்றுமைகளை உணருகிறோம்.
“ஜாக்ரத்” அவஸ்தையில் நாம் கண்ட ஏழு அங்கங்களும் பத்தொன்பது வாய் களும் சொப்னாவஸ்தயிலும் இயங்குவதாக நாம் உணருகிறோம்
நமது ஸ்தூல அறிவு குறைபடுகிறதோ,அங்கெல்லாம் சூக்ஷ்ம புலன்கள் இயங்கி நமது கற்பனா சக்தியினால் அந்த குறைவுகளை நிரப்புகிறோம்.
அப்படி நிரப்பும் பொழுது ஸ்தூல புரிவுணர்தலிலும் மாற்றம் ஏற்படுகிறது.
அந்த சூக்ஷ்மமான மாற்றங்கள் பிற்காலத்தில் நமது நடவடிக்கைகளிலும்,பார்வைக் கோணங்களிலும் மாற்றம் ஏற்படுகிது.அது செயல்களின் மீது தாக்கம் செலுத்துவதால் நமது கர்ம பாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் உண்டாகின்றன.
இப்படி ஏற்படுகின்ற மாற்றங்களினால் நமது புரிது உணர்தல்(perceptions)  மீண்டும் மீண்டும் அழிக்கப்பட்டு,உருவாகி அழிக்கப்பட்டு புத்துயிர் பெறுகின்றன. இப்படி எரிக்கப்படுவதால் இந்த நிலையை “தைஜசா” என்று அழைக்கிறார்கள்.
சொப்னாவஸ்தயில் ஆத்மன் சூக்ஷ்ம வஸ்துக்களை மட்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.நமது வாசனைகள்     ஜாக்ரத்தில் என்பது போல் சொப்னாவஸ்தயிலும் வெளிப்படுகிறது..
மேற்கண்ட விவரணங்களிலிருந்து நாம் ஜாக்ரத் அவஸ்தையில் காணுகின்றவை தான் நிஜம்;சொப்னாவஸ்தயில் காண்பவை   நிஜமல்ல என்ற முடிவிற்கு வர வாய்ப்பு உண்டு.
அது சரியான முடிவல்ல என்ற வாதத்தையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஏனென்றால் யார் அந்த முடிவிற்கு வருகிறார்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.யாரோ ஒருவர் சொப்னாவஸ்தயிலும் ஜாக்ரத்திலும் சாக்ஷியாக இருந்தாலொழிய இரு அனுபவங்களையும் ஒத்து நோக்கி, இது நிஜம்,அது நிஜமல்ல என்று கூற முடியும்.அதையும் தவிர எப்பொழுது அந்த ஸாக்ஷி அப்படிப்பட்ட முடிவிற்கு வருகிறான் என்பதும் முக்கியம்.
 நாம் ‘ஸொப்னாவஸ்தை” நிஜமல்ல என்ற தீருமானத்திற்கு வருவது ஜாகரத் அவஸ்தையில்த் தான். ஆகவே ஜகரத் அவஸ்தயில் சாக்ஷி ஒருதலைபட்சமான முடிவிற்கு வர சாத்தியக் கூறுகளுள்ளது.
இரண்டுமே நிஜமல்ல என்பதுதான் நிஜம்.’ஸொப்னாவஸ்தையின் தைர்க்யம் –காலயளவு ஜகரத் அவஸ்தையை விட குறைவாக உள்ளது என்பது மட்டும் நிச்சயம்.
இந்த இரு அவஸ்தையிலும் நாம் இன்ப துன்பங்களுக்கு ஆளாகிறோம் என்பதும் உண்மை.
சொப்னத்தில் நடக்கின்ற பொழுதும் நமது ஸ்தூல சரீரமானது,ஜாகரத்தில் எவ்வாறு  நிகழ்வுகளினால் உந்தப்பட்டு பிரதிகரிக்குமோ அதே போல் பிரதிகரிக்கிறது. கனவிலும் பயப்படக்கூடிய ஒரு நிகழ்ச்சி நடக்கும் பொழுது உடல் வியர்க்கிறது;நிஜத்திலும் வியர்க்கிறது.காணக்கிடைகாத ஒரு கா ட்சியை காணுகின்ற பொழுது நமது உள்ளம் உவகை எய்துகிறது.

சுஷுப்தி

கனவு நிலையில் நாம் ஸ்தூல பொருள்களின்,,ஸ்தூல பொருள்கள் சம்பந்தமான விகார விசாரங்களின் தாக்கத்திற்கு  ஆளாகிறோம். சில நேரங்களில் நமது உறக்கத்தில் இம்மாதிரியான எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் உறங்குகிறோம்.அம்மாதிரியான் நிலையை சுஷுப்தி என மாண்டுக்யொபனிஷத் கூறுகிறது.
யத்ர சுப்தோ ந கஞ்சன் காமம் காமாயதே ந கஞ்சன்ஸ்வப்னம்
பஸ்யதி தத்
ஸுஷுப்தம் ! ஸுஷுப்த ஸ்தான் ஏகீபூத: ப்ரஞானகன:
ஏவானந்தமயோ!!
இந்த நிலையில்  எந்த விதமான ஆசைகளும் இல்லை.ஆசைகள் நிறைவேறததால் ஏற்படுகின்ற ஏமாற்றங்களும் இல்லை.அமைதி! எந்த விதமான சஞ்சலங்களும் இல்லாமல் பூரண அமைதி.ஏக ப்ரக்ஞ்சை !மனம் ஒரு விதமான சலனமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது.
கான்சன காம்யதே-எதற்கும் ஆசைப்படுவதும் இல்லை, காஞ்சன ஸ்வப்னம் பஸ்யதி-எதுவும் வேண்டும் என்று கனவு காண்பதுமில்லை. ஆகவே தத் சுஷுப்தம். இது ஒரு அனிச்சையான செயல். இது தான் ஆன்மாவின் மூன்றாம் பாதம்.  .மனம் ஒரு முகப்பட்டு உள்வாங்கி விடுகிறது.வெளியுலகு குறித்து எந்த விதமான பிரக்ஞ்சையும் இல்லாமல் ஆனந்தமயமான ஒரு நிலையில் இருக்கிறது.
சொப்னாவஸ்தைக்கும் ஜாக்ரத் அவஸ்தைக்கும் இடைப்பட்ட ஒரு நிலை தான் இந்த சுஷுப்தி.ஆனால் இது நிரந்தரமல்ல.இது ஒரு இடைவெளி தான்.
மனம் இகலோக மாயயில் சிக்கி அல்லல்ப் பட்டு அசரும் பொழுது அது தூக்கத்திற்காக  ஏங்குகிறது;சுஷுப்தியில் தன்னை அறியாமல் அமழ்ந்து விடுகிறது.
மேற்கண்ட மூன்று நிலைகளையும் நமது மூன்று சரீர ஸ்திதிகளோடு ஒப்பிடலாம்-ஸ்தூல சரீரம்,சூக்ஷ்ம சரீரம்,காரண சரீ.ரம்
முதல் நிலை பஹிஷ் ப்ரஞ்ச்யா,ஸ்தூல,வைஸ்வானர.
இரண்டாம்  நிலை அந்த: ப்ரக்ஞ்ச்யா,சூக்ஷ்ம,ப்ரவிவ்க்தா ,தைஜசா
மூன்றாம் நிலை சர்வஞ்ச்யா,அன்டர்யாமி,யோனிஷ் சர்வஸ்யா
ஆனால் இவை மூன்றுமே தாற்காலிகமானவைதான்
.