Saturday 20 December 2014

ரமணஜோதி 36

ரமணஜோதி 36

கௌதம மாமுனிவர்ஒரு சில குறிப்புக்கள்


கௌதமர் தற்போதைய மன்வந்தரத்தின் சப்த ரிஷிகளில் ஒருவர்.
ஒரு மன்வந்தரம் என்பது ஒரு மனுவின் வாழ்க்கையின் காலையளவைக் குறிக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தில் காலத்தின் அளவை  குறிக்கும் ஒரு குறியீடு.மன்வந்திரம்
ஒவ்வொரு மன்வந்திரமும் ஒரு குறிப்பிட்ட மனுவினால் சிருஷ்டிக்கப்பட்டு, ஆட்சி செய்யப்பட்டு வருகிறது என்பது இந்து தர்ம சாஸ்த்திரம்  ஒவ்வொரு மனுவும் பிரம்மனால் படைக்கப் படுகிறார். மனு இந்த உலகத்தை சிருஷ்டித்து அதில் சகல ஜீவ ராசிகளையும் சிருஷ்டிக்கிறார். ஒவ்வொரு மன்வந்தரத்திலும் பகவான் விஷ்ணு வெவ்வேறு அவதாரம் எடுக்கிறார். ஒவ்வொரு மன்வந்தரத்திலும் சப்த ரிஷிகள் மனுவினால் சிருஷ்டிக்கப் படுகிறார்கள்.
நாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஏழாவது மன்வந்தரம் இந்த மன்வந்தரத்தின் சப்த ரிஷிகளில் மிகவும் முக்கியமானவர் கௌதமர்.
கௌதமர் வேத காலத்து முனிவர்களில் ஒருவர். பல மந்திரங்களின் கர்த்தா அவர். அவரை மந்திர திராஷ்டாஎன்று கூறுவார்கள்.
அவர் நியாய சாஸ்திரத்தின் கர்த்தா. ரிக் வேதத்திலுள்ள பல சுலோகங்களின் கர்த்தாவும் அவரே,
அவரது மனைவி அகலிகை. அகலிகையும் பிரம்மாவின் மானச புத்திரி தான்.
தேவி புராணம்,சிவ புராணம்,விஷ்ணு புராணம் ,வால்மீகி ராமாயணம் போன்ற நூல்களில் கௌதமரைப் பற்றிய குறிப்புகள் வருகிறது.
கௌதமர் ஆஞ்சனேயரின் பிதாமகர் என்று சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது.ஆஞ்சனேயரின் தாய் அஞ்சனா கௌதமரின் மகள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
கௌதமர் நசிகேதரின் தந்தை வழி பிதாமகராகிறர் என்று கதோபனிஷத்தில் கூறப்பட்டுள்ளது. நாமெல்லாம் நசிகேதரைபற்றி கேள்விப்பட்டுள்ளோம்.சிறு வயதிலேயே யமனிடம் வாதாடி பிரம்மத்தை பற்றி அறிந்துகொண்டவர் நசிகேது.
விவசாயத்திற்கும் நீர்வளத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளித்தவர் கௌதமர் என்று சிவபுராணம் கூறுகிறது.
கௌதமரும் அவரது துணைவியார் அகலிகையும்

பிரம்மகிரியில் ஒரு நீண்ட தவம் இருந்து வந்தார்கள்.
அப்பொழுது அங்கு மிகவும் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மழை பொய்த்து விட்டது. மரங்களில் ஒரு இலை கூட துளிர்க்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்- மற்ற ஜீவராசிகள் எப்படி உயிர் வாழ கஷ்டப் பட்டிருப்பார்கள் என்று.

மற்ற ரிஷிகள் எல்லாம் வேறு இடம் தேடி புறப்பட தயாரான பொழுது கௌதமர் அவர்களை தடுத்து நிறுத்தி வருண பகவானை வேண்டி கடும் தவம் இருந்தார்.
வருண பகவானும் மகிழ்ச்சி அடைந்து அவர் முன் பிரச்சன்னமானார்.
கௌதமரின் வேண்டுகோளைக் கேட்டு வருண பகவான் குழப்பமடைந்தார்.
கால நிலையைத் தீருமானிப்பது பகவான் பரம சிவனாக இருக்கும்பொழுது வருணனால் மழை இல்லாத நேரத்தில் மழையை கொண்டு வரமுடியாது. ஆகவே கௌதமரிடம் வேறு ஏதாவது கேட்கும்படி கூறினார்.
கௌதமர் மிகவும் யோசித்து,  நான் ஒரு பள்ளம் தோண்டுகிறேன். நீங்கள் அதில் நீரை நிரப்பி தர வேண்டும். அந்த நீர் எவ்வளவு எடுத்தாலும் வற்றாமல் இருக்கவேண்டும். என்று கேட்டுக் கொண்டார்.
வருண பகவானும், அப்படியே ஆகட்டும். என்று கூறி மறைந்தார்.
அன்றிலிருந்து ரிஷிகளும் மற்றவர்களும் அந்த பள்ளத்திலிருந்து நீர் எடுத்து விவசாயம் பண்ணினார்கள், வீட்டு தேவைகளை நிவர்த்தி செய்தார்கள், கால் நடைகளுக்கும் மற்ற ஜீவ ராசிகளுக்கும் நீர் கொடுத்தார்கள். மிகவும் நலமாக வாழ்ந்தார்கள்.
அந்த பள்ளம் கௌதம தீர்த்தம் என்ற பெயரில் பிரம்மகிரியில் ஒரு குளமாக இன்றும் இருந்து வருகிறது. அந்த தீர்த்ததை தரிசித்து நீராடி எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதன் புண்ணியம் அந்த வற்றாத குளத்தைப் போல் நிரந்தரமாக கிடைத்துக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்து வருகிறது.
கௌதமர் என்ற பெயரிலிருந்து தான் தென்னிந்தியாவின் வற்றாத ஜீவ நதிக்கு கோதாவரி என்ற பெயர் வந்தது என்கிறது சிவ புராணம்.
ஒரு நாள் கௌதமரின் ஆசிரம தோட்டத்திற்குள் ஒரு பசு மாடு நுழைந்து மேய ஆரம்பித்தது. இதைக் கண்ட கௌதமர் ஏனோ கோபம் கொண்டு ஒரு புல்லை பறித்து அந்த பசு மாடு இருந்த திசையை நோக்கி எறிந்தார். அவரது நோக்கம் அந்த மாட்டை தோட்டத்திலிருந்து விரட்ட வேண்டும் என்பதாக மட்டும் இருந்தும் கூட அவரது தவ வலிமையினாலோ என்னவோ அந்தப் புல் பட்டதும் மாடு இறந்து விழுந்து விட்டது.
கோஹத்யா பாபம் தன்னை பிடித்துக் கொண்டதை அறிந்ததும் கௌதமரும் அவரது துணைவியார் அகலிகையும் மிகவும் துக்கமடைந்தார்கள். அவர்களது துன்பத்தை அதிகப்படுத்துவது போல் மற்ற் முனிவர்களும் முனி பத்தினிகளும் அவர்களை அந்த இடத்தை விட்டே போகவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். வேறு வழியில்லாமல் கௌதமரும் அவரது மனைவியும் அங்கிருந்து ஒரு குரோசா  தூரத்தில் மற்றொரு ஆசிரம் அமைத்து வசிக்க ஆரம்பித்தார்கள். (ஒரு குரோசா என்றால் 500 வில்லடி தூரம் அல்லது ஒரு பசுமாட்டின் கரைதல் கேட்க முடியாத தூரம்)
பாபத்தின் பிடியிலிருக்கும் அவர் வேத அனுஷ்டானங்கள் எதையும் செய்ய இயலவில்லை. அவரால் வேத அனுஷ்டானங்கள் எதுவும் செய்யாமல் இருக்கவும் முடியவில்லை.
ஆகவே மற்ற ரிஷிகளை கலந்து ஆலோசித்து அவர் பிராயச்சித்தம் செய்ய தீரிமானித்தார்.
பொறாமை ரிஷிகளையும் விட்டு வைக்கவில்லை போலும்.
கௌதமர் மாமுனிவர் என்ற பட்டத்துடன் வாழ்வது அவர்களுக்கு பிடிக்க வில்லை போலும். ஆகவே செய்ய இயலாத ஒரு பிராயச்சித்த கர்மத்தை அவர்கள் உபதேசித்தார்கள்.
பிரம்மகிரியை 108 முறை வலம் வந்து கங்கையில் நீராடி பூமாதேவியின் உருவத்திற்கு பூஜை செய்து கங்கா நீரால் பூமாதேவிக்கு அபிஷேகம் செய்து  மீண்டும் பதினோரு முறை பிரம்மகிரியை வலம் வந்து கங்கையில் நீராடினால் பாப விமோசனம் கிடைக்கும் என்று ஆலோசனை வழங்கினார்கள்.
கௌதமரும் அவர்களது ஆலோசனையை ஏற்றுக் கொண்டு 108 முறை பிரம்மகிரியை வலம் வந்தார்.
பூமா தேவியின் உருவத்தையும் மண்ணால் உண்டாக்கினார். ஆனால் கங்கா ஜலத்திற்கு எங்கே போவது?
அப்பொழுது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. சாக்ஷாத் பரமசிவன் கௌதமர் முன் பிரத்தியக்ஷமானார்..கௌதமரின் தவத்தில் மகிழ்ந்து என்ன வரம் வேண்டும் கேள் கொடுக்கிறேன்” என்றார்.
கௌதமரும், எனக்கு பாப விமோசனம் வேண்டும்  என்றார்.
என்ன பாப விமோசனமா? உனக்கா? உன்னை பார்த்தாலே மற்றவர்களுடைய பாபங்களெல்லாம் நீங்கிவிடும் என்றிருக்க உனக்கு பாப விமோசனமா? நீ ஒரு பாபமும் செய்யவில்லை. உன்னை மற்றவர்கள் குழப்பியிருக்கிறார்கள். அந்த பசு மாட்டின் ஆயுள் முடிந்து விட்டது. நான் அழைத்துக்கொண்டு விட்டேன். நீ மனதால்க் கூட அந்த மாட்டிற்கு தீங்கு நினைத்ததில்லையே? அப்படியிருக்க நீ எப்படி பாபம் செய்தவனாவாய்?என்றார் பரமசிவன்.
எப்படியிருந்தாலும் என் மனதிற்கு நான் பாபம் செய்தவனாகப் படுகிறது; ஆகவே அதற்கு பிராயச்சித்தம் செய்யவேண்டும். நீங்கள் அனுக்கிரகிக்க வேண்டும். என்றார். கௌதமர்
கௌதமர் கங்கா தீர்த்தம் வேண்டும் என்று பிடிவாதமாக் கேட்டதால், பக்தனின் வேண்டுதலை தட்ட முடியாமல் பரம சிவனும் தன் தலையில் வசித்து வந்த கங்காதேவியிடமிருந்து ஒரு மகளை படைத்து கௌதமருக்கு கொடுத்தார்.
சிவனின் வேண்டுகோளுக்கு இணங்கி கங்கையின் மகள் கௌதமரை  நீராட்டி புனிதப்படுத்தினாள். அதற்கு பிறகு ,கங்கையின் மகள் திரும்ப கங்கையிடம் போவதற்கு பரமசிவனிடம் அனுமதி கேட்டாள். பரம சிவனோ நீ இங்கேயே இருந்து இங்கு வசிக்கும் ரிஷிகளையும் மற்ற ஜீவராசிகளையும் வாழ வைக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். மேலும்   நீ இன்றிலிருந்து கௌதமி என்ற பெயரில் அறியப்படுவாய்  என்றருளினார்.
கௌதமியோ, தங்கள் ஆணைக்கு நான் கட்டுப் படுகிறேன். ஆனால் தாங்களும் அன்னை பரசக்தியும் இங்கேயே  இருக்க வேண்டும். என்றாள். பரமசிவனும் அப்படியே ஆகட்டும் என்று கூறிவிட்டார்.
மேலுலகிலிருந்து இதை கேட்ட பிரமனும் விஷ்ணுவும் உடன் அங்கு வந்து விட்டார்கள்.
அவர்கள் பரமசிவனை கைலாயம் திரும்பும்படி வற்புறுத்தினார்கள்.
கௌதமியோ அவர்களையும் அங்கேயே இருக்கும்படி வேண்டினாள்.
பிரமனும் விஷ்ணுவும் பன்னீரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்மராசியில் பிரவேசிக்கும்பொழுது தாங்கள் வருவதாகவும் ஆனால் என்றென்றும் மும்மூர்த்திகளின் சக்தியும் இணந்து த்ரியம்பகேஸ்வராராக இங்கே இருப்போம் என்று அருளிச் செய்துவிட்டு சென்றார்கள்.
த்ரியம்பகேஸ்வரர் பாரதத்திலுள்ள பன்னீரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று.
கௌதமரால் தென்னிந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட கங்கை அன்றிலிருந்து கோதாவரி என்றறியப்படுகிறாள்.

இப்படிப்பட்ட மகானான கௌதம மாமுனிவரால் ஆசீர்வதிக்கப்பட்ட இடம்  திருவண்ணாமலை என்கிறார் பகவான் ரமணர்.

No comments:

Post a Comment