Sunday 28 December 2014

ரமணஜோதி 39

ரமணஜோதி 39

காமனும் ஸோமனும் (இரண்டாம் பகுதி)


சித்தங் குளிரக்கதி ரத்தம் வைத்தமுத வா
யைத்திற வருண்மதி யருணாசலா

 நாம் கடந்த அஞ்சலில் நமது உள்ளத்தில் உஷ்ணம் உருவாவதற்கான காரணங்களைக் கண்டோம். அதை குளிர்விக்க சந்திரனின் கரங்கள் எவ்வாறு உதவுகின்றன் என்பதை இந்த அஞ்சலில் காண்போம்.
சந்திரன் என்றால் சம்ஸ்கிருதத்தில் அழகானவன்;மிகுந்த ஒளியுடையவன் என்ற பொருள்.
அமுதத்திற்காக தேவர்களும் அசுரர்களும் கடைந்த பொழுது சந்திரன் பாலாழியிலிருந்து வெளிவந்தவன் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆகவே அவன் தேவ சமானமாக போற்றப்படுகின்றான்.மற்ற கிரகங்களுக்கு சமானமான அந்தஸ்தும் கொடுக்கப் பட்டுள்ளது.
அவனது இன்னொரு பெயர் ஸோமன்.ஆகவே ஸோமவாரம்;திங்கள் கிழமை என்று வாரத்தில் ஒரு நாள் போற்றப் படுகிறது.
அவன் பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு பக்ஷம் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து போய் மறுபடியும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பூரண நிலையை அடைகிறான். இதற்கு புராணத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கதைகள் கூறப்பட்டுள்ளது.
முதற் கதை
சந்திரனிற்கு 27 மனைவியர்.அவர்கள் யாவரும் தக்ஷ ப்ரஜாபதியின் மகள்கள்.அவர்களை திருமணம் செய்து கொடுப்பதர்கு முன் தக்ஷ ப்ரஜாபதி ஒரு நிபந்தனை விதித்தார். சந்திரன் எக்காரணத்தைக் கொண்டும் ஒரு நாளும் தன் மனைவியரிடத்தில் பாகுபாடு காண்பிக்க கூடாது என்பது தான் அந்த நிபந்தனை. சந்திரனும் அதை ஏற்றுக் கொண்டுதான்
அவர்களை மணம் முடித்தான்.
ஆனால் ஒருமுறை அவனுக்கு ரோகிணியிடம் சிறிது அதிகம் ஈடுபாடு ஏற்பட்டது. இதை அறிந்த மற்ற மனைவியர் தந்தையிடம் சென்று முறையிட்டார்கள்.அவனும் கோபமுற்று ,உனது தெய்வீகத்தன்மை எல்லாம் இழக்க கடவாய்என்று சபித்து விடுகிறார். சந்திரன் பொலிவிழந்து ஒளி இழந்து இருளனாகிவிட்டான். இதைக் கண்ட மனைவியர் மனமுடைந்து தந்தையிடம் சென்று தங்கள் கணவரை மன்னித்து விடுமாறு கேட்கிறார்கள். தக்ஷனோ ,தான் கொடுத்த சாபத்தை திரும்ப பெறமுடியாது; சந்திரன் தான் செய்த குற்றத்திற்கு தண்டனை அனுபவித்தேயாக வேண்டும்; தான் செய்யக் கூடியது ஒன்றே தான்; சந்திரன் முதல் பதினான்கு நாட்கள் கொஞ்சம் கொஞ்சாமாக் தனது தேஜசை இழப்பான்;அடுத்த பதினான்கு நாட்களில் தனது இழந்த தேஜசை திரும்பப் பெறுவான்என்று சாப விமோசனம் அளித்தான்.
அதனால்த் தான் நாம் காணும் தேய்பிறையும் அமாவாசியும் வளர்பிறையும் பௌர்ணமியும் என்று கூறுகிறது புராணங்கள்.
இதிலுள்ள myth  மற்ந்து விட்டு சிந்தித்தோமானால் நமக்கு சில படிப்பினைகள் விளங்கும்.
மனைவியரோ மக்களோ எல்லோரிடமும் ஒருவன் பாகுபாடின்றி/-பாரபட்சமின்றி இருக்க வேண்டும்..
அப்படி இருக்கத் தவறினால் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்
கதை இரண்டு
சந்திரனுக்கு கிரக அந்தஸ்த்து கிடைத்ததும் தனது தெய்வீகத்தன்மையிலும் அழகிலும் மிகுந்த இறுமாப்பு உடையவனாகி விடுகிறான்.அந்த இறுமாப்பின் காரணமாக அவனுக்கு தனது குருவான பிரஹஸ்பதியின் மனைவியிடம் இச்சை ஏற்படுகிறது. அது தகாத உறவில் சென்று முடிகிறது.
குருபத்தினி கர்ப்பமுறுகிறாள்.
விவரமறிந்த பிரஹஸ்பதி சாபமிடுகிறார். பிற்பாடு தேவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து பிரஹஸ்பதி தக்ஷனைப் போல் சாப விமோசனம் கொடுக்கிறார். சாபமும் சாப விமோசனமும் முன் கூறியதே தான்.
படிப்பினை மட்டும் சற்று மாறுபடுகிறது.
1 அஹந்தை அழிவில்க் கொண்டு விடும்
2.நாசமடையக் கூடிய சரீர அழகில் மயங்கி தன்னை மறப்பது விபரீதத்தில் கொண்டு விடும்.

சந்திரனின் இன்னொரு பெயர் சோமன் என்று கூறினோமல்லவா? ஸோமன் என்பதின் பொருளைப் பார்ப்போம்.
ஸோம என்பது ஒரு தாவரத்தின் பெயர். இந்த செடியிலிருந்து எடுக்கின்ற ஸோமரசத்திற்கு மயக்கமூட்டக்கூடிய சக்தியுண்டாம்.
ரிக் வேதத்தில் ஸோமா என்பதை கடவுளாகவே சித்திரிக்கப்படுகிறது ஸோமனைக் குறித்து ரிக் வேதத்தில் 120 சுலோகங்கள் உள்ளன
ஸோமா என்பதை பல விதத்தில் உருவகப் படித்தியுள்ளார் நமது முன்னோர்கள்.
தெய்வீக ரிஷபமாக; ஒரு தெய்வீக பறவையாக, நீரிலிருந்து எழுகின்ற மஹா சக்தியாக; தாவரங்களின் நாயகனாக; எல்லாவற்றிற்கும் மூலக்கருவாக;ஆனால் மனிதனாக மட்டும் சித்திரிக்கப் படவில்லை.
சோமரசத்தை அருந்தியதால் தான் தேவர்களுக்கு எல்லா இடையூறுகளையும் இல்லாமலாக்குவதற்கான் சக்தி கிடைத்தது  என்று வேதம் கூறுகிறது.
கோப்பையிலிருக்கும் சோமரசம் தேவர்கள் அருந்த அருந்த கோப்பையிலுள்ள உயிர்சக்தி குறைந்து வரும்.கடைசியில் கோப்பை காலியாகி இருள் சூழ்ந்து விடுகிறது. மீண்டும் கோப்பை நிறைக்கப்படுகிறது.உயிரோட்டம் வருகிறது. சோம ரசம் கோப்பையில் குறைந்து மெல்ல மெல்ல இருள் சூழ்வது தேய் பிறையைக் குறிக்கும்; மீண்டும் கோப்பை நிரம்புவது வளர்பிறையைக் குறிக்கும்.
இதையே உலகாயத ரீதியாக சிந்தித்துப் பார்த்தோமானால்,சோமரசம் உடலின் உள்ளே போகும்பொழுது இருள் சூழ்ந்து அறிவு மழுங்குகிறது.மது கோப்பையிலேயே சோம ரசம்  இருந்துவிட்டால் ஒளி எங்கும் இருக்கும்; வாழ்வும் பிரகாசமாக  இருக்கும்

இப்படி பல விதமாக விளக்கப்பட்டுள்ள சந்திரன் வேறு விதமாகவும் கவிஞர்களால் புகழப் பட்டிருக்கிறான்.அவன் அன்பின் அடையாளம். குளிர்மையின் மறு பெயர். அவனைக் கண்டால் கெட்டியாக மூடப்பட்டிருக்கும் ஆம்பல் மொட்டுக்களும் மலர்ந்து புன்னகைக்கும்.
நமது உள்ளமும் ஒரு ஆம்பல் மொட்டைப் போன்றது.அகந்தையால் ஆவரணம் செய்யப்பட்டு இருள் சூழ்ந்து மலராமல் இருக்கிறது அருணாசலன் எனும் சந்திரனின் குளிர்மையான ஒளிக்கிரணங்கள் ஸ்பரிசிக்கும் பொழுது மலர்ந்து அருணாசலனின் ஒளியை உட்கொண்டு பிரகாசமானதாக உருப்பெறும்.
நமது இதயத்தை ஆம்பல் அரும்பாக உள்ளது நாற்பதிலும் பகவான் குறிப்பிட்டுள்ளார்.

இருமுலை நடுமார் படிவயி றிதன்மே
லிருமுப் பொருளுள நிறம்பல விவற்று
ளொருபொரு ளாமபல ரும்பென வுள்ளே
யிருவிரல் வலத்தே யிருப்பது மிதயம்
   .நா அனுபந்தம் சுலோ 18

அருணசலனின் அருளால் நாம் ஆன்மாவை அடையாளம் கண்டுகொள்ள முடியும். பெரிய சாதனைகள் எதுவும் புரிய வேண்டாம். என்ற பக்தி மார்க்கத்தை பகவான் இங்கே வலியுறுத்துகிறார்.
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


No comments:

Post a Comment