Friday 19 December 2014

ரமணஜோதி 33


நிர்குண பக்தி


கோபமில் குணத்தோய் குறியா யெனைக்கொளக்
குறையென் செய்தே னருணாசலா

கோபமில்லாத குணக்குன்றான அருணாசலா நீ ஏன் என்னை குறிவைத்து ஆட்கொள்ள நினைக்கிறாய்?

என்று பகவான் ரமணர் அருணசலரிடம் கேட்கிறார்.
ஆட்கொள்ள நினைப்பது என்னமோ பெரிய குற்றம் போன்ற ஒரு அர்த்ததை இந்த வரிகள் மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு கொடுக்கும்.
இது ஒரு விதமான நிந்தா ஸ்துதி. இதை அங்கதம் என்றும் கூறுவார்கள்.
நானென்ன தவம் செய்தேன் இந்த பக்கியம் பெறுவதற்கு? என்று பகவான் கேட்கிறார் என்றே அர்த்தம் கொள்ளவேண்டும்.

இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால், உன் கோபத்திற்கு என்னை ஏன் இலக்காக்குகிறாய்?
இதில் எனை என்பது ரமணரின் நான் யார் என்ற விசார மார்க்கத்தில் குறிப்பிடப்படும் ஜீவாத்மாவை என்று தான் நாம் கொள்ள வேண்டும்.
ஜீவாத்மாவை அழித்து பரமாத்மாவுடன் லயிக்க வைத்து ஆத்ம சாக்ஷாத்காரம் ஏற்படுத்துவது தான் உன் கருணை,அருணாசலா !
இந்த இரு வரிகள் நம் மனதில் ஒரு சந்தேகத்தை உண்டு பண்ணக்கூடும்.
கோபமில்லாத குணக்குன்றானஎன்ற வார்த்தைகளின் மூலம் கடவுளுக்கு கோபம் தாபம் போன்ற உணர்வுகள் உண்டு என்று பகவான் ரமணர் குறிப்பிடுகிறாரா?
ஜீவாத்மா-பரமாத்மா லயனத்தில் ஏற்படும் நிற்விகல்ப சமாதியும் ஆசா பாச கோப தாப விகாரங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையல்லவோ அது ?
பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன்
கூறுவார்:
அத்வேஸ்ஹ்டா ஸர்வபூதானாம் மைத்ர: கருண ஏவ !
நிர்மமோ  நிரஹங்கார: ஸமது: கஸூக: க்ஷமீ !!
              . கீ 12 அத் 13 சுலோ
எவனொருவன் எல்லா உயிர்களிடத்தும் வெறுப்பின்றி அன்பு செலுத்துகின்றானோ, நான் எனது என்ற அஹங்காரம் இல்லாமல் எல்லா இன்ப துன்பங்களையும் ஒருபோல் பாவித்து மகிழ்ச்சியுடன் இருக்கிறானோ அவனே எனக்கு பிரியமானவன் ஆகிறான்.
பக்தனுக்கே இப்படிப்பட்ட சம சித்தம் வேண்டும் என்று கூறுகின்ற கடவுளுக்கு அந்த சமசித்தம் வேண்டாமா? அவருக்கு எங்கிருந்து கோபமும் குணமும் வருகிறது?

மேலும் பகவான் கிருஷ்ணர் கீதையில் கூறுகிறார்:
யஸ்மான்னோத்விஜதே லோகோ லோகான்னோத்விஜதே
  !
ஹர்ஷாமர்ஷ பயொத்வேகைர் முக்தோ : மே ப்ரியா: !!
                        . கீ 12 அத் 15 சுலோ

எவனொருவனிடமிருந்து மற்றவர்களுக்கு ஒரு விதமான  இடைஞ்சலும் உண்டாவதில்லையோ எவனொருவன் மற்றவர்களிட்மிருந்து எந்த விதமான இடர்களையும் எதிர்க்கொள்வதில்லையோ எவனொருவன் களிப்பு,கோபம், அச்சம், கலக்கம் இவைகளிலிருந்து விடுதலைப் பெற்றுள்ளானோ அவனே எனக்கு பிரியமானவனாகிறான்.

இப்படி யாதொரு குண் நலங்களும் இல்லாத ஒரு நிர்குணமானவனாக பக்தனே இருக்க வேண்டும்  என்று கூறும் பொழுது பகவானும் நிர்குணசம்பன்னனாகத்தானே இருக்க வேண்டும்?

எல்லா மதங்களிலும் ஈசுவரனை பல விதமான உருவங்களாக சித்திரித்திருக்கிறார்கள். ஏனென்றால் சாதாரண மனிதனின் மனதிற்கு உருவமில்லாத ஒரு பரம சக்தியை கற்பனை பண்ணிப் பார்ப்பது சிரமமான காரியம். ஏதோ ஒரு குறியீடு இருந்தால்தான் அவனால் அந்த குறியீட்டில் மனதை ஒருமுகப் படுத்தி பரமாத்மாவில் லயிப்பதற்கான முயற்சியில் ஈடுபட முடியும். ஆகவே அவன் பகவானுக்கு அவன் எந்த ஒரு மேலானவனிட்மும் எதிர்ப்பார்க்கின்றகருணை,அனுகம்பை,இரக்கம், தயாள குணம் போன்ற-- குண நலன்களையும் பகவானில் பூசிப் பார்க்கின்றான்.

ஆகவே சகுண பக்தி மார்க்கம்  சாதாரண மனிதர்களுக்கு தேவையாக் உள்ளது. மோக்ஷ பிராப்த்திக்கான முதல் படி.அது.
பக்தி மர்க்கத்தின் கடைசிப் படியில் நாம் சென்றடையும் பொழுது நமக்கு கடவுள் எல்லாவற்றிலும் காட்சியளிப்பார்..அப்பொழுது கோவில்களிலுள்ள விக்ரகங்கள் மட்டுமல்ல கடவுள்.அவர் எல்லா ஜீவ ரசியிலும் ---ஏன் ஒவ்வொரு சேதன அசேதன வஸ்துக்களிலும் இருக்கிறார் என்பது புரியும். நம்மிலும் இருக்கிறார்,மற்றவர்கள்லும் இருக்கிறார் என்பது புரியும்.அப்படி புரிந்து விட்டால் நமக்கு எல்லோரிடமும் அன்பு தானாக உண்டாகும். வெறுப்பு நசித்து விடும்.

இதையேதான் பகவான் ரமணர் உள்ளது நாற்பதில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:


உருவந்தா னாயி நுலகுபர மற்றா
முருவந்தா னன்றே லுவற்றி__நுருவத்தைக்
கண்ணுறுதல் யாவனெவன் கண்ணலாற் காட்சியுண்டோ
கண்ணுதா நந்தமிலாக் கண்ண்மே__யெண்ணில்
              உள்ளது நாற்பதுசுலோ 4
ரமணர் கூறுவார்:
காட்சி என்பது கண் எனபதிலிருந்து மாறுபட்டிருக்க முடியுமா? நமக்கு அந்தமில்லாத கண் பெற முடிந்தால் அனந்தமான உருவமற்ற  பரமாத்மாவைகாணமுடியும்.
நமது பௌதிக கண்களுக்கு ஒரு வரையறைக்குட்பட்ட சக்திதான் உள்ளது. ஆகவே கடவுளுக்கு ஒரு உருவமும் குண நலன்களும் கற்பிக்க வேண்டியுள்ளது.
பகவத் கீதையில் தனது விசுவரூபத்தை அர்ஜுனனுக்கு காண்பிபதற்கு முன் கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு ஞானக் கண் கொடுத்தார் என்று கூறப்பட்டுள்ளது..அதுவும் இதே தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது தான்.
Description: https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


No comments:

Post a Comment