Saturday, 28 February 2015

ரமணஜோதி 84

ரமணஜோதி 84

நல்லறிவு


          புல்லறி வேதுரை நல்லறி வேதுரை
               புல்லிட வேயரு ளருணாசலா
‘ அருணாசலா, எது பொய்யான அறிவு,எது நிஜமான அறிவு என்று எனக்கு புரிய வை; புரிந்து உன்னில் அடைக்கலமாவதற்கு அருள் அருணாசலா “ என்று வேண்டுகிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்.
இன்னொருவிதமான விளக்கமும் இந்த சுலோகத்திற்கு கொடுக்கலாம்: “ நீ என்னை ஆட்கொண்டுவிட்டால் பிறகு நிஜ அறிவு பொய்மையான அறிவு என்ற பாகுபாடெல்லாம் ஏது? எனது அவித்யை, மித்யா  போதம் எல்லாம் சூரியனைக்கண்ட பனித்துளி போல் மறைந்து விடாதா? ஆத்மக்ஞானம் பெற்று விட்டால் இந்த உலக அறிவு எல்லாம் எதற்கு?’
இந்த சந்தர்ப்பத்தில் புல்லறிவு என்றால் என்ன? நல்லறிவு என்றால் என்ன என்பதை புரிந்துகொள்வது பயனுள்ளதாகும்.  
ஏற்கனவே ஒரு அத்தியாயத்தில் பர வித்யா,அபர வித்யா குறித்து அறிந்தோம்.
இந்த பௌதிக உலகத்தைக் குறித்துள்ள அறிவு அபர விதயா என்று பரமனைக் குறித்துள்ள அறிவு பர வித்யா என்றும் கண்டோம்.
இன்னொரு வேற்றுமை என்னவென்றால் அறிவு ஞானத்திலிருந்து வேறுபடுகிறது. அறிவு நம் காதுகளில் விழுகின்ற,கண்களால் காணுகின்ற, மற்றவர்களைக் கண்டு நம் மனது உள்வாங்கிக் கொள்கின்ற தகவல்கள். அந்த தகவல்களை நாம் அனுபவங்கள் மூலம் உணரும்பொழுது ஞானம் ஆகிறது.நெருப்பு சுடும் என்று பெரியவர்கள் குழந்தைகளிடம் சொல்லுகிறார்கள். பெரியவர்கள் மீதுள்ள மரியாதை நிமித்தம் அதை நம்புகிறார்கள்.நெருப்பில் கையை வைத்து சூட்டை உணரும் பொழுது குழந்தை அந்த விஷயத்தில் ஞானம் பெறுகிறது
ரமணர் ஒரு முறை ஞானத்திற்கும் அக்னானத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தன் பக்தர்களுக்கு விளக்கி கூறினார்.
ஒரு நாள் ஆசிரம வாசியான சுந்தரேச ஐயர் என்பவர் “ மனோ விருத்தி” என்றல் என்ன என்று கேட்டார். அதற்கு பகவான் கீழ்க்கண்டவாறு பதில் கூறினார்:
“அதுவா? மனோவிருத்தியில்லாமல் ஆத்மாவை அறிய முடியாது.ஆத்மாவை அறிய வேண்டும்;,அறிந்துகொண்டோம்; அறிந்துகொண்டார்கள் என்று சொல்கிறார்களே,எப்படி  தெரிந்துகொண்டார்கள்? தெரிந்து கொள்வதற்கு தானொருவன் இருக்க வேண்டுமல்லவா? தான் இருப்பதாக வைத்துக் கொண்டாலும்,இருக்கிறேனென்று தெரிந்து கொள்வதற்கு ஒரு விருத்தி வேண்டுமல்லவா? அதனால் உன்முகமான மனோவிருத்தியை ஞானமென்றும், அந்த விருத்தியே புறமுக்மாகும்பொழுது அஞ்ஞானம் என்றும் சொல்கிறார்கள்.. அந்த அஞ்ஞானத்திற்கே மனமென்றும் சித்தமென்றும் பெயர்கள்.அந்த மனோவிருத்தி உன்முகமாகும்பொழுது  புத்தியென்றும் அஹமென்றும் சொல்வார்கள்.. மனம் புத்தி, அஹங்காரம்,சித்தம் ஆகியவற்றின்  சேர்க்கையே  அந்தக்கரணம் அஹம் அசலமானது.(வெளியில் கிள்ம்பாதது.).இந்த அந்தக்கரணம் என்னும் உபாதியினால் புறக்கரணங்களான பஞ்சபூத சிருஷ்டி ஏற்பட்டது. அந்த பூதங்கள் தனித்னியாகவும் சேர்ந்தும் பல விதமாய் பெருகியதால் பல்வகை அங்கங்களுடன் கூடிய பூதவுடலேற்பட்டது.அந்தக்கரணம் எனும் உபாதியினாலுண்டான இந்த பூத சிருஷ்டி அனைத்தையும் விலக்கி மனம் அந்தர்முகமாகும் பொழுது அதிலிருந்து ஞானம் உண்டாகிறது,.இதுவே விருத்திஜன்ய ஞானம் என்பது,”
இப்படிபட்ட ஞானத்தை பகவான் கிருஷ்ணர் பகவத் கிதையின் இரண்டாம் அத்தியாயம் ஸாங்கிய  யோகத்தில் விளக்கமாக அர்ஜுனனக்கு எடுத்துரைத்துள்ளார்.
கீதையின் முதல் அத்தியாயத்தில் ஆர்ஜுனன் விஷாதமக்னனாகி உள்ளம் தளர்ந்து ஆயுதத்தை கிழே போட்டுவிடுவதாக குறப்பட்டுள்ளது. அர்ஜுனன் ஏன் மனம் தள்ருகிறான் என்பதை நாம் சிறிது ஆழ்மாக சிந்திதிது பார்க்க வேண்டும். அர்ஜுனன் தன் சொந்த பந்தங்களுடன் யுத்தம் செய்வதற்கு தயங்கி மனம் தளருகிறான்; அவனுக்கு தைரியம் பகருவதற்காகவும் அவனை யுத்தம் செய்வதற்கு தூண்டுவதற்காகவும் கிருஷ்ணர் கீதோபதேசம் செய்ததாக சில பல நூற்றாண்டுகளாக நம் நாட்டவர் சொல்லிவருகிறார்கள்.அது எவ்வளவு தூரம் உண்மை என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.
அர்ஜுனன தன் குருவோடும்,பாட்டனாரோடும் சதகோரர்களோடும் யுத்தம் செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன் அக்ஞாத முடிவில் விராட ராஜ குமாரனுக்கு உதவுவதற்காக இதே பீஷ்மாச்சாரியரோடும்,துரோணாச்சாரியரோடும் துரியோதனாதிகளொடும் யுத்தம் செய்திருக்கிறான்.அப்பொழுதெல்லாம் ஏற்படாத மனச்சோர்வும் விரக்தியும் இப்பொழுது குருக்ஷேத்திர பூமியில் அதுவும் யுத்தத்திற்கு எல்லாவிதமான யத்தனங்களும் செய்து போர்க்களத்திற்கு வந்த பின் ஏன் ஏற்பட வேண்டும்.
இந்த மாற்றத்திற்கான காரணம் முன் சந்தர்ப்பங்களில் அர்ஜுனன் வ்யக்தி ( தனி மனித ) தலத்தில் நின்று தான் நிலைமையை ஆராய்ந்துள்ளான். இந்த முறை பாரத வர்ஷத்திலுள்ள எல்லா நாட்டு அரசர்களும் குருக்ஷேத்திர பூமியில் குழுமியுள்ளதை கண்ட பொழுது—ஒன்று பாண்டவர்கள் பக்கம் அல்லது கௌரவர்கள் பக்கம் பாரத தேசமே திரண்டு நின்றதைக் கண்ட பொழுது அர்ஜுனன் தனிமனித தலத்திலிருந்து சமஷ்டி-சமுதாய தலத்திற்கு உயருகிறான்; ஆகவே அவனுடைய திருஷ்டிகோணமும் மாறுகிறது. அவன் தன் சொந்த பந்தங்கள் இறக்கப்போவதைப் பற்றி நினைத்து மனம் மறுகவில்லை.ஒரு சமுதாயமே அழிவின் விளிம்பில் நிற்கின்ற காட்சியைக் கண்டு மலைக்கின்றான் இதற்கான சான்று கீதையிலேயே உள்ளது.
தத்ரபஸ்ச்யத் ஸ்திதிதாம் பாற்த்த:  பித்ரூன்,அத பிதாமஹான் !
ஆசார்யாத்மஆதுலான்  ப்ராத்ரூன் புத்ரான் பௌத்ரான் சகீன் ததா!!
ஸ்வசுரான்சுஹ்ருதஸ்சைவ ஸேன்யோருப்யோபி!!!
                ப்.கீ அத்.1 சுலோ 26
அர்ஜுனனின் வேண்டுகோளுக்கு இணங்கி பார்த்தனுக்கு ஸாரதியாக எழுந்தருளியிருக்கும் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனின் ரதத்தை கௌரவ-பாண்டவ சைன்னியங்களுக்கு மத்தியில் கொண்டு நிறுத்துகிறார்; அர்ஜுனன் சைன்னியங்களையும் பாற்த்து அங்காலாய்க்கிறான்:
அங்கே இருக்கும் சேனைகளிலும் இருக்கும் தந்தையரையும், பாட்டன்மாரையும், ஆசாரியர்களையும்,மாதுலரையும்,அண்ணன் தம்பிகளையும் மக்களையும் பேரர்களையும் தோழர்களையும் மாமனார்களையும் அன்பர்களையும் அர்ஜுனன் பார்த்தான்
இந்த சுலோகத்திலுள்ள் பன்மை சொற்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அர்ஜுனனின் எத்தனை பாட்டன்மார்கள் யுத்த பூமிக்கு வந்திருக்கிறார்கள்;பீஷ்மரைத் தவிர ?
ஆசாரியர்கள் ஒத்துக்கொள்ளலாம்;அர்ஜுனன் துரோணரைத் தவிர மற்று சிலரை ஆசாரிய ஸ்தானத்தில் வைத்து பார்த்திருக்கலாம்
அண்ணன் தம்பி மார்கள் ;ஒத்துக்கொள்ளலாம்.
ஆனால் பேரர்கள், மாமனார்கள் எங்கின்ற வார்த்தைகள் சந்தேகத்திற்கு இடமின்றி அர்ஜுனனின் சமுதாய கண்ணோட்டத்தை உறுதிப்படுத்துகின்றன.
அபிமன்யுவின் குழந்தைகூட இன்னும் அதன் தாயின் வயிற்றில்த் தான் உள்ளது. ஒன்ற்க்கு மேற்பட்ட மாமனார்கள் யுத்த பூமியில் இல்லை.
ஆகவே அர்ஜுனன் சமூகத்திலுள்ள புத்திரர்கள் மாமன்மார் ,பாட்டானார்கள்,பேரர்கள் என்று எல்லோரையும் குறித்து கவலை கொள்கிறான் என்பது தெளிவாகிறது.
வியாச முனிவருக்கு வார்த்தை பிரயோகத்தில் தவறு நேர்ந்திருக்ககூடும் என்றும் நினைப்பதற்கில்லை.
இந்த மனம் குழம்பிய  நிலையிலுள்ள அர்ஜுனனுக்கு ஒரு தோழனாக ,மனசாட்சியின் காவலனாக கிருஷ்ணன்  நல்லறிவை ஊட்டுவதற்கு முயலுகிறான். இது தான் சரியான வழி என்று அறுதியிட்டு கூறாமல் அர்ஜுனனை சிந்தித்து முடிவெடுக்கும்படி கூறுகிறான். யுட்தம் தான் சரியான மார்க்கம் என்று கிருஷ்ணன் உபதேசிக்கவில்லை. கீதையை ஒரு யுத்தோபதேசகீதையாக பாரத சமுதாயம் பார்க்கத் துவங்கியது பல நூற்றாண்டுகள் நம்மை அடிமைபடுத்திய மொகாலய ஆட்சி காலத்திலும் அதற்கு பின் உண்டான மேற்கத்திய –குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திலும் தான்.திவீர நாட்டுப் பற்று காரணமாக நமது அன்றாய்ய தேசத் தலைவர்களும் மதத் தலைவர்களும் அந்த சிந்தனையை ஊக்குவித்தார்கள்.
பகவத் கீதையை முழுமையாக பார்க்குமிடத்து அது ஒரு உலக சமாதான கீதை என்பது விளங்கும்.அது ஊக்குவிப்பதெல்லாம் அஞ்ஞானத்திற்கும் ஞானத்திற்கும் இடையேயுள்ள நம் மனதினுள்ளே நடக்கும் போரைத் தான்
குருக்ஷேத்திரத்தில் பீஷ்மர் துரியோதனனுக்கு உற்சாகத்தை ஊட்ட சிம்மனாதம் செய்து சங்கை ஊதி போரை துவக்க முயன்ற பொழுது,கௌரவ படை சங்குகளையும் பேரிகைகளையும் தம்பட்டங்களையும் முழக்கியபொழுது பாண்டவர் தலைவனான யுதிஷ்டரர் எதிர் சங்கொலி கொடுப்பதற்கு முன் பகவான் போரை நிறுத்துவதற்கான கடைசி முயற்சியாக தன் பாஞ்சன்யம் என்ற சமாதான சங்கை ஊதுகிறார். ஆனால் அதுவும் பலிக்கவில்லை.யுத்தம் நிகழ்கிறது.
அனுகீதையில் அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கூறுகின்ற இடம் ஒன்று வருகிறது:” கிருஷ்ணா,நீ அன்று யுத்தபூமியில் சொன்ன உபதேசங்களை இன்னொரு முறை கூறுவாய்,என் மனதில் ஒன்றும் நிற்கவில்லை”
கிருஷ்ணர் அதற்கு. கூறிய பதில் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று
.” பார்த்தா,அன்றிருந்த நிலைமை வேறு; இன்றுள்ள நிலைமை வேறு. எனக்குத் தெரியும் நான் சொன்னது எதுவும் உனக்கு பயனளிக்கவில்லை என்று. நீ யுத்தம் செய்தாய்; அதன் பலனை இன்று காண்கிறாய்.இருந்தாலும்  நான் அன்று கூறிய கருத்துக்களை மிகவும் சுருக்க மாக சொல்கிறேன் கேள்”.
ஈதிலிருந்து நண்றாக விளங்குகிறது பகவான் யுத்தத்தை ஆதரிக்கவில்லை.அவர் சொல்லையும் மீறி நடந்த போர் குருக்ஷேத்திர போர்.அது சர்வ நாசத்திற்கு தான் வழி வகுத்தது.
கிருஷ்ணர் கீதையில் குறிப்பிட்டதெல்லாம் நமது அந்தராத்மாவில் ஏற்படுகின்ற போரைக் குறித்துதானே தவிர,மனிதனுக்கும் மனிதனுக்கும் ஏற்படுகின்ற போரை அல்ல. நம்முள்ளே ஏர்படுகின்ற போரில் நல்லறிவை உட்கொண்டு புல்லறிவை ஒதுக்கிவிட்டு ய்க்ஞ சங்கல்பத்துடன் கர்மங்களை இயற்றினால் உலகில் சாந்தியும் சமாதானமும் நிலவும் என்று தான் பகவான் கிருஷ்ணன் கீதையில் அறுதியிட்டு உறுதி கூறுகிறார்.அதை நாம் புரிந்துகொண்ட விதத்தில் தான் தவறு நேர்ந்துள்ளது.
அது இருக்கட்டும்; கிருஷ்ணர் கூறிய நல்லுரைகள் என்ன என்ற பார்ப்போம்.



ரமணஜோதி 83

ரமணஜோதி 83

  நீயிருக்க பயமேன்?


          பீதியி லுனைச்சார் பீதியிலெனைச்சேர்
          பீதியுன் றங்க்கே னருணாசலா
“எனக்கு உன்னை சார்ந்திருப்பதில் எந்த பயமுமில்லை. நீ என்னை பயப்படாமல் சேர்த்துக் கொள். என்னே என் அறியாமை? உனக்கேது பயம்? “
என்று பகவான் ரமணர் இந்த சுலோகத்தில் வேண்டுகிறார்.
பயம் எப்பொழுது வரும்? எதாவது ஒன்றை விட்டுப்பிரிய வேண்டிவந்தால் பயம் வரும்; தெரியாத ஒரிடத்திற்கு போக வேண்டி வந்தால் பயம் வரும்; நிகழப்போவது என்னவென்று தெரியாவிட்டால் பயம் வரும்.
விசாரமார்க்கத்தின் மூலம் நித்யானித்ய விவேகம் ஏற்பட்டு வைராக்யம் பிறந்து விட்டால் இந்த இகலோக சுகங்களை விட்டு பிரிவதற்கோ, இது நாள் வரை சொந்த பந்தங்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தவை நம்மிடம் இருந்து பிரிந்து போவதாலோ நமக்கு பீதி உண்டாகாது.
நாம் சேரவேண்டிய இடத்தில்த்தான் போய்ச்சேருவோம் என்ற நம்பிக்கை நமக்கு உண்டாகுமேயானால் பயம் தோன்றுவதற்கு ஏது கிடையாது.
நாம் இந்த உலகத்தில் காண்பதெல்லாம் நமது மனத்தின் அவித்யை காரணமாக உளவாகின்றவைதான்.அவையெல்லாம் நிரந்தரமான சாந்தியை அளிக்கவல்லா; என்று புரிந்துகொண்டுவிட்டோமென்றால் பீதிக்கு இடம் கிடையாது.
இதெல்லாம் உண்மையாக இருந்தும் பாமரர்களாகிய ஜீவாத்மாக்கள் வெற்றி இலக்கை அடைவதற்கு முன்னாலுள்ள ஒரு சில வினாடிகளில் ஒரு வித பீதிக்குள்ளாகத்தான் செய்கிறோம். தினமும் நாம் மரணத்தை தரிசித்துக்கொண்டிருந்தாலும் மரணம் நம்மையோ நம்மைச் சார்ந்தவர்களையோ நெருங்கும்பொழுது நம்மையறியாமல் ஒரு பீதி உண்டாகத்தான் செய்கிறது.
          இஹாமுத்ர விரக்தஸ்ய நித்யானித்ய விவேகினஹ: !
          ஆஸ்சரியம் மோக்ஷகாமஸ்ய மோக்ஷாதேவ விபீஷிகா !!
              அஷ்டாவக்ர கீதை 3-8
அஷ்டவக்கிரர் ஜனகரிடம் கூறுகிறார், “என்னதான் நித்யானித்ய விவேகம் ஒருவனுக்கு ஏற்பட்டாலும் கடைசி நிமிடத்தில் அவனை ஒரு பய பற்றிக்கொள்ளத்தான் செய்கிறது.
இந்த பயமானது இந்த உலகில் நாம் அனுபவித்துக் கொண்டிருந்த விஷய சுகங்கள்—அது உணவாகட்டும், செவிக்கினிய இசையமுதமாகட்டும்,கண்ணுக்கினிய நாட்யமோ வேறு வகையான காட்சிகளாகட்டும்—இனிமேல் நமக்கு கிடைக்காது என்கின்ற புரிதலினால் ஏற்படுகின்ற பயம் தான் அது.
அது ஏன் உண்டாகிறது என்றால் நமது இகலோக அனுபவங்களை சுகம் என்று  எண்ணுவதால் உண்டாகின்ற உண்ர்வுகளால் தான். இகலோக சுகங்கள் ஒருபொழுதும் முழுமையான சுகத்தையோ சாந்தியையோ தராது; அனுபவிக்க அனுபவிக்க, இன்னும் வேண்டும்,இன்னும் வேண்டும் என்ற ஏக்கம் அதிகரித்துகொண்டே போகும்; கடைசியில் அது துக்கத்தில் கொண்டு போய்விடும் என்ற அறியாமையினால் உளவாகும் மித்யையான உணர்வு தான் அந்த சுகம்.
ஆத்ம சாக்ஷாத்காரம் பெற்றவர்களுக்கு மட்டுமே முழுமையான சாந்தியும் சந்தோஷமும் கிடைக்கும்.
இரண்டாவது காரணம் நாமெல்லாம் நம் உடலை ஆத்மாவோடு இணைத்து சமன்பாட்டு நிலையில் செயலாற்றிக் கொண்டிருப்பதால்,,மற்ற உடல்களெல்லாம் வேறு என்ற எண்ணம் உதயமாகிறது. நம்மிலிருந்து அன்னியமாக மற்றவர்களை காண்கின்ற போது சிலர் நமக்கு விருப்பமானவர்களாகவும் மற்று சிலர் விருப்பத்திற்கு உடன்பாடில்லாதவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். ‘ததுவமஸி’ என்பதன் தாத்பரியம் மறந்து விடுகிறோம்.
இஷ்டம்( விருப்பு) நசித்துவிட்டால் அனிஷ்டம் ( வெறுப்பு ) இல்லாதாகிவிடுகிறது. விருப்பங்களை ஒழிக்காவிட்டால் துவேஷத்திலிருந்து விடுதலை பெற முடியாது; அதனிலிருந்து உளவாகின்ற துக்கத்திலிருந்தும் விடுபட முடியாது.
சுருங்கச் சொன்னால் ‘ராக துவேஷங்களுடைய இல்லாமை தான் வைராக்யம்”.
மற்றொருவிதத்தில் சொன்னால் ஆத்ம சாக்ஷாத்காரம் அல்லது முக்தி அல்லது மோக்ஷத்திற்கு ராகமும் துவேஷமும் பரம எதிரிகள். அவை இருக்கின்ற வரை முக்தி கிடைக்காது.
இதையேதான் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில், மூன்றாம் அத்தியாயத்தில் 34 -35 ஆவது சுலோகங்களில் விளக்குகிறார்.
இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்த்தே ராகத்வேஷௌ
                                                          வ்யவஸ்திதௌ !
தயோர்ந வசமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்தினௌ !!
                           ப்.கீ. அத் .3 சுலோ 34
இந்திரியங்களுக்கு விருப்பு-வெறுப்புக்கள் உண்டு. இந்திரியங்களின் ஆளுகைக்கு ஆட்படுகின்ற நாமும் விருப்பு வெறுப்புடையவர்களாகிறோம்.
இந்த விருப்பு வெறுப்புக்களே நமது சத்ருக்கள்.
          ஸ்ரேயான் ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வனுஷ்டிதாத் !
          ஸ்வதர்மே நிதனம் ஸ்ரேய: பரதர்மோ பயாவஹ: !!
                     ப.கீ. அத்.3. சுலோ 35
எவனொருவன் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தர்மம் எதுவோ அதை செய்ய வேண்டும். அல்லாமல் மற்றவர்கள் தர்மத்தை எவ்வளவு நன்றாக செய்தாலும் அது பயன் தராது. அது விருப்பு வெறுப்புகளை உளவாக்கும்.
போர்முறையில் தேர்ச்சி பெற்றவன்,சத்திரிய குலத்தில் பிறந்தவன்,அவனது தர்மம் போர் புரிவதே,அதை விட்டு சன்னியாசம் வாங்கிக்க்கொண்டு போகிறேன் என்று சொன்னால் அது சரியல்ல” என்பது நாம் சாதாரணமாக கேட்டுள்ள வியாக்கியானம்.
ஆனால் இந்த இடத்தில் பகவத் கீதையிலுள்ள யக்ஞ  சங்கல்பத்தை அதிஷ்டிதமாக கொண்டுள்ள கர்மத்தை விவரிக்கின்ற சுலோகங்களை மறக்கலாகாது’
          சஹயக்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்டவா புரோவாச ப்ரஜாபதி: !
          அனேன ப்ரசவிஷ்யத்வமேஷவோ அஸ்த்விஷ்டகாமதுக் !!
          தேவான்பாவயதானேன தே தேவா பாவயந்து வ: !
          பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத !!
                     ப.கீ அத் 3 சுலோ 10-11
          அன்னாத்பவந்தி பூதானி பர்ஜன்யாதன்னஸம்பவ !
          யக்ஞாத் பவதி பர்ஜன்யோ யக்ஞ: கர்மசமுத்பவ: !
                     ப.கீ அத் 3 சுலோ 14
இந்த உலகில் பிறப்பதும் வாழ்வதும் இன்பம் பெறுவதர்க்கும் துன்பம் அனுபவிப்பதற்குமல்ல;நாம் செய்கின்ற செயல்கள் அத்தனையும் யக்ஞ சங்கல்பத்தை அடித்தளமாகக்கொண்டதாக இருக்க வேண்டும்,;அந்த யக்ஞ சங்கல்பமோ வைஸ்வானரனின் எல்லா அங்கங்களையும் பேணவேண்டும்; பரஸ்பரம் பேணி நன்மையுளவாக்குவதாக இருக்கட்டும்;எப்படி உணவிலிருந்து உயிர்கள் உண்டாகின்றனவோ,எப்படி மழை உணவு உற்பத்திக்கு உதவியாக இருக்கின்றதோ,எப்படி யக்ஞங்களிருந்து எழுகின்ற நெருப்பும் சூடும் கடல் நீரை ஆவியாக்கி,மேகமாய் உருக்கொண்டு வாயுவினால் உந்தப்பட்டு மலைகளினால் தடுத்து நிறுத்தப்பட்டு,குளிர்விக்கப்பட்டு மழையாய் பொழிகின்றதோ எப்படி இந்த பாரஸ்பரியத்தினால் சகல ஜீவராசிகளும் வளமையுடன் செழித்து வளருகின்றதோ அதுபோல் இருக்க வேண்டும் நமது யக்ஞ சங்கல்பிதமான கர்மங்களும்.
     ஸ்வதர்மம் என்றால் நம் சஹ ஜீவராசிகளுக்கு நன்மை பயக்கக் கூடிய கர்மங்களை அனுஷ்டிப்பது; பரதர்மம் என்றால் இதிலிருந்து விலகி சுய நலம் மட்டுமே கருத்தில்க்கொண்டு ஆற்றப்படுகின்ற கர்மங்கள். –ஸ்வதர்மத்தை கைவிட்டு பரதர்மத்தை கைக்கொள்ளலாகாது என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
விருப்பு வெறுப்புக்கள் இல்லாத கர்மங்கள் சுகத்தை நல்கும்.
இதையே தான் ஆதி சங்கரரும்
கஸ்ய சுகம் ந கரோதி விராக:” (வைராக்யம் யாருக்கு சுகம் நல்காது?)
என்று கூறியுள்ளார்.
பர்த்ருஹரி  ஆரம்ப சுலோகங்களிலேயே  நமது துன்பத்துக்கெல்லாம் காரணமான ஆசையை நிந்தித்துக்கொண்டு தனது நூலை ஆரம்பிக்கிறார்.
ஏழாம் சுலோகத்தில் கூறுகிறார்:
          போகா ந புக்தா வயமேவ புக்தா:
          தபோ ந தப்தம் வயமேவ தப்தா:
          காலோ ந யாதோ வயமேவ யாதா:
த்ருஷ்ணா ஜீர்ணா வயமேவ ஜீர்ணா:
 நாம் இந்த இஹலோக வாழ்வில் சுகங்கள் எதையும் அனுபவிப்பதில்லை. ஆனால் சுகபோகங்களை அடைவதற்கான முயற்ச்சியில் நாம் அடைகின்ற துன்பங்கள் நம்மை அரித்து தின்கின்றன. நாம் எந்த தவமும் ஆற்றாமலேயே நமது துக்கமான அனுபவங்கள் நம்மை எரித்து நீறாக்குகின்றன. நமது வாழ்வு முடிவடையவில்லை;ஆனால் நாம் வாழ்வின் முடிவிற்கு வந்துவிட்டோம்;இருந்தாலும் நமது ஆசைகள் நசிக்கவில்லை.( மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை.) நமது உடல் பல்வீனமாகி விட்டது; ஆசைகள் பலமாகவே உள்ளது.
இந்த உண்மை நாம் நமது அந்திம காலத்தில் அறிகிறோம்;’நாம் ஆசையை ஒடுக்குவதற்கான எந்த முயற்ச்சியும் எடுக்கவில்லை; ஆசைகள் நசிக்கவில்லை,ஆசைகளின் பின்னால் ஓடியோடி நம் உடல் தான் பல்வீனமாகிவிட்டது என்ற உண்மையை புரிந்து கொள்ளுகிறோம்.
இந்த உண்மையை உணரும் பொழுது, நிரந்தரமான சாந்தியை அடைவதற்கு வழி என்ன என்று சிந்திக்க ஆரம்பிக்கிறோம்.
பர்த்ருஹரி 10 ஆவது சுலோகத்தில் மேலும்  கூறுகிறார்:
ஆசா நாம நதி மனோரதஜலா த்ரிஷ்ணாதரங்காகுலா
ராகக்ராஹவதீ விதர்க்கவிஹகா தைர்யத்ருமட்வம்சினீ
மோஹோவர்த்தசுதுஸ்தராதிகஹனா ப்ரோத்துங்க சிந்தாதடீ
தஸ்யாம் பரகதா விசுத்த மனஸோ நந்ததி யோகீஸ்வரா:
ஆசையாகின்ற நதி  நமது மனதின் கற்பனை எனும் நீரினால் நிறைந்தும்,அதியாசை என்கின்ற அலைகளினால் உந்தப்பட்டும், தீவிர காதல் உருவி.லுள்ள முதலைகள் நிறைந்தும் விடாப்பிடியான பிடிவாதங்கள் என்கின்ற பறவைகளின் உதவியுடனும் நமது தைரியத்தையெல்லாம் துவம்சம் செய்து .மோஹம் என்ற சுழிகளுடையதாகவும் இருக்கிறது. பர்த்ருஹரி ஆசை எவ்வள்வு கொடூரமானது ,அதில் இறங்கிவிட்டால் எவ்வளவு அபாயங்கள் காத்திருக்கின்றன என்பதை மிகுந்த கவி நயத்துடன் கூறியுள்ளார். இப்படிப்பட்ட நதியை கடந்து கரையேறுவது அவ்வளவு எளிதல்ல என்றும் சொல்லுகிறார்.
          அவசியம் யாதாரஸ்சிரதரமூஷித்வாபி
          வியோகே கோ பேதஸ்த்யஜதி ந ஜனோ யத் ஸ்வயமமுன்
          வ்ரஜந்த: ஸ்வாதந்த்ர்யாததுலுபரிதாபாய மனச:
          ஸ்வ்யம் த்யக்தா ஹ்யேதே சமசுகமனந்தம் விததி
                     வைராக்ய சதகம் சுலோ 12
என்றைக்காவது ஒரு நாள் விஷய வஸ்துக்களும் சொந்த பந்தங்களும் நம்மை விட்டு போகத்தான் போகிறது.அப்படியிருக்க நாமே என் அவையை விட்டுவிடக்கூடாது” என்று கேட்கிறார் இந்த ஞானி.
இரு சந்தர்ப்பங்களிலும் நமக்கு ஏற்படுகின்ற பிரிவு ஒன்று தான். ஆனால் நம்மால் சுயமாக அவையை விட முடிவதில்லை. அவை நம்மை விட்டு போகும்பொழுது நமக்கு உண்டாகின்ற துன்பம் அதிகம்.நாமாக அவைகளை த்யாகம் செய்தால் வலி குறையும். ஆனால் செய்வதில்லை;அதற்கு காரணம் பயமே.
பர்த்ருஹரி நமது பயங்களைக் குறித்து  இன்னும் விரிவாக மற்றொரு சுலோகத்தில் சொல்கிறார்:
          பொகே ரோகபயம் குலே ச்யுதிபயம் வித்தே ந்ருபாலாத் பயம்
          மானே தைன்யபயம் பலே ரிபுபயம் ரூபே ஜராய பயம்
          சாஸ்த்ரே வாதிபயம் குணே கலபயம் காயே க்ருதாந்தாத் பயம்
          ஸர்வம் வஸ்து பயான்விதம் புவி ந்ருணாம் வைராக்யம் ஏவாபயம்
இந்த புவியிலுள்ள எல்லா ஜீவாத்மாக்களுக்கும் சுகங்களை அனுபவிக்கும்போது வியாதிகளைக் குறித்து பயம், பதவி,தகுதி பெற்றவர்களுக்கு அந்த நிலையிலிருந்து கீழே விழுந்து விடுமோ என்கின்ற பயம், பொருளீட்டி வைத்திருந்தால் அரசு பறித்துக் கொண்டு விடுமோ எங்கின்ற பயம் பேரும் புகழும் பெற்றவர்கள் அதையெல்லாம் இழந்து மற்றவர்கள் முன்னால் சிறுமைப் பட்டு விடுமோ என்ற பயம், வலிமையும் சக்தியும் படைத்தவர்களுக்கு அந்த வலிமையை இழந்து பலவீனர்களாகிவிடுவோமோ என்ற பயம், எதிரிகளினால் ஏற்படக்கூடிய பயம், அழகு படைத்தவர்களுக்கு காலப்போக்கில் வயதின்மூப்பு காரணமாக தோல் சுருங்கி,நரை பாதித்து, அழகை இழந்துவிடுவோம் என்ற பயம் ,அறிவாளிக்கு தம்மை விஞ்சிய அறிவாளியிடம் தோற்றுவிடுவோமோ என்ற பயம், நல்லவர்களுக்கு பொல்லாதவர்களைக் கண்டு பயம், எல்லாவற்றிற்கும் மேலாக மரண பயம் இப்படி பயந்து பயந்தே வாழ்வு முடிந்து விடுகிறது. பயமில்லாத அவஸ்தை வைராக்ய நிலை ஒன்றே.
சின்ன விஷயங்களில்கூட அர்த்தமற்ற பயத்திற்கு நாம் ஆளாகிறோம். இரண்டு சிறு சம்பவங்களைப் பார்ப்போம்.
ஒரு வயதான தம்பதியர்,தங்கள் பொறுப்புக்களை எல்லாம் முடித்து விட்டு வாழ்வை இனி அனுபவிக்கலாம் என்று நினைக்கிறார்கள். மனைவிக்கு மறந்து போன சங்கீத வாசனை மீண்டும் தலை தூக்கியது. கணவரும் அதற்கு சம்மதித்தார்.. ஒரு சங்கீத வித்வானை வீட்டிற்கு வரவழைத்து சங்கீதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள் அந்த பெண்மணி.
பாட்டு வாத்தியார் வீட்டிற்கு வந்ததும் புருஷன்காரர் வீட்டிற்கு வெளியே போய் கேட்டருகில் நின்றுகொண்டு போவோர் வருவோரிடம் பேசிக்கொண்டிருப்பார்.
மனைவி ஒரு நாள் இரண்டு நாள் ஒரு வாரம் பார்த்தாள்.அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கடைசியில் கேட்டே விட்டாள்.” நீங்கள் செய்வது உங்களுக்கே நல்லா இருக்கா? வித்வான் என்ன நினைத்துக் கொள்வார்? உள்ளே வந்து உட்கார்ந்து கொள்ளக் கூடாதா?”.
அவர் சொன்னார், “ நீ தவறாக நினைத்து கொண்டிருக்கிறாய்.  நான் உள்ளே வந்து உட்கார்ந்து விட்டால் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் நீ பாடுவதைக் கேட்டு நான் என்னவோ உன்னைப் போட்டு அடிப்பதாகவும் நீ அழுவதாகவும்  நினைத்துக் கொண்டு என்னிடம் சண்டைக்கு வந்து விடுவார்கள் என்ற பயத்தில் தான் வெளியே போய் நின்று கொள்கிறேன் .” என்றாரே பார்ப்போம்.
இன்னொரு சம்பவம். ஒருவர் ரயிலில் அயணித்துக் கொண்டிருந்தார் .பக்கத்திலிருந்தவர் இவரிடம் ’ மணி எத்தனை?” என்று கேட்டார்.
“ சொல்ல முடியாது.” என்றார் இவர்.
“ ஏன் கைக்கடிகாரம் இல்லையா? இல்லை,அது வேலை செய்யவில்லையா?” என்று விடாமல் கேட்டார்.
“ கடிகாரமும் இருக்கிறது அது  வேலையும் செய்கிறது.ஆனால் மணி சொல்ல முடியாது.”
முதலில் பேசியவர் விடவில்லை.” ஏன் இப்படி முரட்டுத்தனமாக பதிலளிக்கிறீர்கள்?” என்றார்.
“ ஆமாம்,ஐயா.முதலில் மணி கேட்பீர்கள்.அப்புறம் எந்த ஊர் என்பீர்கள்; குடும்பத்தைப் பற்றி விசாரிப்பீர்கள்.பிறகு ‘இந்த வழியாக வந்தேன்;உங்கள் ஞாபகம் வந்தது’ என்று சொல்லிக்கொண்டு வீட்டிற்கு வர்வீர்கள்;அப்புறம் நான் இருக்கும் பொழுதும் இல்லாதபொழுதும் என் வீட்டிற்கு வருவீர்கள்;ஒரு நாள் என் மகளை இழுத்துக் கொண்டு ஓடிவிடுவீர்கள். என் முதல் மகளை இப்படித்தான் இழுத்துக் கொண்டு ஓடினான். எதர்கய்யா வம்பு? நான் மணி சொல்ல மாட்டேன்”.
மேலெ சொன்ன இருகதைகளும் மேலோட்டமாக பார்த்தால் வேடிக்கையாக தென்படும்.
ஆனால் இரண்டு சம்பவங்களிலும் அடிப்படையான் மனித மனத்தின் பயம் விளையாடிக்கொண்டிருப்பது தெரியும். பயம் என்பது மனித மனத்தின் சங்கல்பங்களிலிருந்து எழுகிறது. சந்தர்ப்பங்களும் சூழ் நிலைகளும் அனுபவங்களும் கற்பனா சக்திக்கு வலுவூட்டுகிறது. பயம் கவ்விக்கொள்கிறது.
ஞானிகளுக்கு பயம் கிடையாது;ஏனென்றால் அவர்களுக்கு சங்கல்பம் கிடையாது.
இதே கருத்தை பகவத் கீதையில் எல்லா அத்தியாயங்களிலும் காணலாம்.முக்கியமாக
          யதா ஹி நே ந்த்ரியாத்தேஷு ந கர்மஸ்வனுஷஜ்ஜதே !!
          ஸர்வஸங்கல்பஸன்யாஸீ யோகாரூடஸ்ததோஸ்யதே !!
                           அத்.6 சுலோ 4
எப்பொழுது ஒருவன் விஷயங்களில் பற்று வைக்காமல் கர்மங்கள் ஆற்றுகிறானோ,எவனொருவன் எண்ணங்களை விட்டொழிக்கிறானோ அப்பொழுஹு யோகாரூடன் ஆகிறான்
அவனுக்கு பயம் இராது.அவன் முக்தனாகிறான்.
மனு நீதியிலும் இதையே கூறியுள்ளார்கள் நமது முன்னோர்கள்:
     ‘சங்கற்பத்தினின்றே ஆசையும் செயலும் வடிவெடுக்கின்றன.”
                                     மனு. 2-2
மஹாபாரதம் சாந்தி பர்வத்திலும் இப்படி கூற’ப்பட்டுள்ளது:
        ஆசையே,உனக்கு பிறப்பிடம் எது என்பதை நான் அறிகிறேன்.சங்கற்பத்திலிருந்து நீ உதித்துள்ளாய்; உன்னை நாந் சங்கற்பிக்காமல் விட்டு விடுகிறேன்; நீ நிர்மூலமாய்ப் போய்விடுவாய்”
                சாந்தி பர்வம் 177-25
சங்கற்பம் போனால் ஆசை,கர்மங்கள்,பயங்கள் எல்லாம் போய் விடும்.
மேலும் கீதாச்சாரியன் கூறுகிறான்:
          உத்தரேதாத்மனாத்மானாம் நாத்மானமவஸாதயேத் !
          ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மன: !!
                ப.கீ அத் 6 சுலோ 5
ஆத்மாவே ஆத்மாவிற்கு பந்து,ஆத்மாவே ஆத்மாவிற்கு எதிரி .ஆகவே ஆத்மாவே அவனை உயர்த்துகிறது; தாழ்த்தவும் செய்கிறது.
நமக்கு நாமே எதிரி. நமது சங்கல்பங்கள் நம்மை கீழ்ப் படுத்தினால் நமது வீழ்ச்சி நிச்சயம். நாம் கற்பனைகளை வெற்றி கொண்டோமானால் நமக்கு முக்தி நிச்சயம்..நாம் சிலவற்றை விரும்புவதாலும் சிலவற்றை வெறுப்பதாலுமே நமக்கு பயம் உண்டாகிறது; வீழ்ச்சியுண்டாகிறது.
கிருஷ்ணர் இப்படி முடிக்கிறார்:
          ‘தஸ்மாத்யோகி பவ அர்ஜுன!”
‘ஆகவே நீ யோகியாவாய் அர்ஜுனா”
யோகி என்றால் யோகத்தை அடைபவன்.யொகம் என்றால் இர்ண்டும் ஒன்றாய் சேருவது. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று தான் என்று புரிந்து விட்டால் பீதி ஒழிந்து போகும்; முக்தி கிடைக்கும்.

.இதைத்தான் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில் விளக்குகிறார்.

Thursday, 26 February 2015

ரமணஜோதி 82

ரமணஜோதி 82

பித்து தெளிய மருந்து


பித்துவிட் டுனைநேர் பித்தனாக் கினையருள்
          பித்தந் தெளிமருந்த ருணாசலா
“இந்த மாயாலோகத்துடன் நமக்குள்ள பற்றுதல் ஒரு பைத்தியக்காரத்தனமான பற்றுதல். அந்த பித்து தெளிந்தால் தான் நமக்கு அந்த பரமனிடம் ஈடுபாடு உண்டாகும்.அப்படி ஒரு ஈடுபாடு உண்டானால் அதுவே மற்றொரு பித்தாக மாறி நம்மை பைத்தியமாக்கிவிடும். அப்படிப்பட்ட பித்தும் ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கு இடைஞ்சலாகிவிடும். ஆகவே அந்த பித்தும் தெளிய வேண்டும். பிறகு தான் பரமாத்மாவுடன் லயிக்க முடியும்” என்கிறார் பகவான் இந்த சுலோகத்தில்..
பகவான் ஒருமுறை பக்தர்களிடம் உரையாடும்பொழுது கூறினார்: “’சிதாபாசம்’ என்றால் ஏகமாகிய (ஒன்றான ) ‘சித்”திலிருந்து ( தன்னுணர்வு ஞானத்திலிருந்து ) அதன் ஆபாச ஒளியாகிய ( பிரதிபலிப்பாக ) ‘அஹம்-விருத்தி’ ( நான் ) தோன்றுவதே.
ஒன்றாக தோன்றின அஹம்விருத்தி ஸத்வ-ரஜஸ்- தமோ குணங்களின் சேர்க்கையினால் மூன்றாகி, அந்த மூன்றிலிருந்து பஞ்சபூதங்கள் பிறந்து ,அந்த ஐந்திலிருந்து அனேகம்( ஜீவ-ஜடப் பிரபஞ்சம் ) உண்டாயிற்று என்று பொருள்.
அதுவே உடலை ‘நான்’ என்று எண்ணும் மயக்கத்தைத் தோற்றுவிக்கிறது.”
இந்த மயக்கம் முற்றும் போது அது பித்தாக மாறுகிறது.
இந்த மயக்கத்தின் அடிப்படை விருப்புக்கள் தான். நமது ஒவ்வொரு செய்கையும் எதோ ஒரு விருப்பத்தின் பேரிலேயே செய்யப்படுகிறது.
கர்மம் என்றால் பிரவிருத்தி அல்லது செயல் என்று பொருள்..கர்மமும் கர்ம பலன்களும் வேறு வேறல்ல. நாம் ஒரு கர்மம் செய்யும்பொழுதே அதன் பலனும் கூடவே பிறந்து விடுகிறது. சில கர்மங்களின் பலனை நாம் தெரிந்துகொள்ள கால அவகாசம் தேவைப்படலாம்.
ஒருவனின் துஷ்கர்மங்களின் பலன் உடனே வெளிப்படாமல் காலம் சென்று வெளிப்படலாம். அது உள்காயமாக இருந்து புரையோடி புண்ணாகி சீழ்படிந்து துன்பத்தை அளிக்க காலம் எடுத்துக்கொள்ளும். அவ்வளவுதான்.
தேவீ பாகவதம் ஒன்றாம் அத்தியாயம் ஐந்தாம் கண்டம் 74 ஆம் சுலோகத்தில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:
          அகாரணம் கதம் கார்யம்
          ஸம்ஸாரேத்ர பவிஷ்யதி
இந்த சம்சாரத்தில் எதுவும் காரணம் இல்லாமல் நடப்பதில்லை. காரண கர்மம் நடந்து சிலகாலமாயிருக்கல்லாம். நாம் சில பொழுது வருந்துவதுண்டு,’ நான் யாருக்கும் எந்த துரோகமும் செய்ததில்லையே? எனக்கு என் இந்த கஷ்டம்?’.என்று.
நமது கஷ்டத்திற்கு ஹேதுவான கர்மம் நமது ஞாபகத்திற்கு வருவதில்லை;அவ்வளவுதான்.காரண கர்மம் என்றோ நாம் செய்திருக்க வேண்டும்;அதில் ஐயமில்லை.
ஆகவே தான் பெரியோர்கள் சொல்வார்கள் ‘எல்லாம் பிராரப்த கர்ம பலன்’ என்று.
இதன் அடிப்படையை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஜீவாத்மாகப்பட்டது இச்சை, ஞானம், கிரியை என்ற முப்பரிமாணம் உடையது.
நம்முடைய ஞானம் நமது இச்சையை ஆதாரமாகக் கொண்டது. நமது அறிவை இச்சையாகப்பட்டது அதற்கிசைவாக வளைத்து ஒடிக்கிறது. அப்படிப்பட்ட அழுக்கடைந்த ஞானம் நம்மை சில பல கிரியைகளை செய்ய தூண்டுகிறது,.
ப்ரிஹதாரண்யகோபனிஷத்தில் கூறியுள்ளது இதை தெளிவுபடித்துகிறது:
          காமமய ஏவாயம் புருஷ இதி ச யதாகாமோ பவதி
                                                                                     தல் க்ரதுர்பவதி
          யல் க்ரதுர்பவதி தல் கர்ம குருதே ததபி சம்பத்யதே
                                     பி.உபனி  4.4.5
புருஷன் (ஜீவாத்மா) ஆசா சொரூபனாகவே உள்ளான். அவனுடைய ஆசைகள்-காமனைகள்-எப்படிப்பட்டவையோ அப்படியே அவனது எண்ணங்களும் உருவாகிறது. அவனுடைய எண்ணங்கள் எப்படிப்பட்டவையோ அதன்படியே அமைகிறது அவனது செயல்களும்.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் நமது எல்லா அனுபவங்களுக்கும் காரணம் நமது ஆசையால் தூண்டப்பட்டு செய்யப்படுகின்ற கர்மாக்கள் தான்.
            பிரஹதாரணியத்தில் இதையே கீழ்க்கண்டவாறு சொல்லியுள்ளார்கள்
          ததேவ ஸக்தஹ: ஸஹ கர்மணைதி
          லிங்கம் மனோ யத்ர நிஷக்தமஸ்ய:
                           பிர.உபனி 4.4.6
மனதில் ஒன்றின் இச்சை எழுந்துவிட்டால் அதை எப்படியாவது அடைய நாம் முயலுவோம்.;அடையவும் செய்வோம்.
            பகவத் கீதயிலும் இதே கருத்தை நாம் காணலாம்.
          ‘காமகாரேண ஃபலே ஸ்க்தோ நிபத்யதே’
ஐந்தாம் அத்தியாயம் 12 ஆம் சுலோகத்தில் குறிப்பிடபட்டுள்ளது.
ஆகவே பலன் நல்லதாகட்டும்,துன்பத்தைதரக்கூடியதாக இருக்கட்டும்,எல்லாமே நம் ஆசைகளிலிருந்து உதிக்கிறது என்பதை புரிந்துகொண்டுவிட்டால் நாம் நமது ஆசைகளை பரமனை நோக்கி திருப்ப முயலுவோம்.
இன்னொரு உண்மையும் மேலே குறிப்பிட்டுள்ள் உபனிஷத் வாக்கியங்களிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
நமது மனம் படைக்கின்ற சக்தியை உடையதாக இருக்கிறது. நாம் மனதில்  எது ஆக வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதுவே ஆகிறோம். சாந்தோக்கியம் இதை எடுத்துக்கூறுகிறது:
          அத கலு க்ரதுமய: புருஷோ யதா க்ரதுரஸ்மிம்ல்லோகே
                    புருஷோ பவதி ததேத: ப்ரேத்யே பவதீ
                                     சா.உபனி 3-14-1
ஜீவாத்மா மனதின் இயக்கத்திற்கு ஆட்பட்டவனாகிறான். அவன் எப்படி நினைக்கிறானோ அப்படியே ஆகிறான்.
ஆகவே மனக்கட்டுப்பாடு நமது முக்திக்கு மிகவும் இன்றியமையாததாகிறது.
மேற்கூறிய தத்துவங்களை மிகவும் தெள்ளத்தெளிவாக மஹாபாரதம் சாந்தி பர்வத்தில் காணலாம்:
          யதா யதா கர்மகுணம் ஃபலார்த்தீ
          கரோதியம் கர்மஃபலே னிவிஷ்ட:
          ததா ததாயம் குணஸப்ரயுக்த:
          சுபாஸ்பம் கர்மஃபலம் புனக்தி
         
          மல்ஸ்யோயதா ஸ்ரோத இவாபிபாதௌ
          ததாக்ருதம் பூர்வமுபைதி கர்ம
      சுபே த்வஸௌ துஷ்யதி துஷ்க்ரிதேது
          ந துஷ்யதே வை பரம: சரீரி
பலங்களில் ஆசை வைத்து அந்த ஆசைகளில் மனதை ஆழமாக செலுத்தி எவனொருவன் கர்மங்களை செய்கிறானோ அது நல்ல பலன்களைத் தந்தாலும் அசுப பலங்களைத் தந்தாலும் அனுபவித்தே தீரவேண்டும்.
நமது முன்னேற்றத்திற்கு நமது பூர்வ கர்மங்களே தடையாயிருக்கின்றன.எப்படி கீழ் நோக்கி வீழ்ந்துகொண்டிருக்கும் நீர்வீழ்ச்சி மீனின் மேல்   நோக்கி செல்கின்ற நோக்கத்திற்கு தடையாக உள்ளதோ அது போல்.
பகவத் கீதையில் இதை நாம் இன்னும் தெளிவாக காணலாம்.
மூன்றாம் அத்தியாய்ரத்தில் 37 ஆம் சுலோகத்தில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:
          காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ குணஸமுத்பவ: !
          மஹாசனோ மஹாபாபாமா வித்த்யேனமிஹ வரிணம் !!
ரஜோ குணத்திலிருந்து உதிக்கின்ற காமமும் குரோதமும் எதையும் நாசம் செய்ய வல்லது.இதுவே நமக்கு பரம வைரி என்கிறார் கிருஷ்ணர்.
உலகத்தவர் எல்லோருக்கும் பரம சத்த்ருவாயிருப்பது ஆசை. அந்த ஆசை  நிறைவேறுவதில் விக்னம் ஏற்படும் பொழுது நாம் கோபத்திற்கு ஆளாகிறோம். கோபம் நம் கண்ணை மறைக்கும்.காமமும் குரோதமும் உடன்பிறப்புக்கள். ஒன்றிலிருந்து மற்றொன்றை பிரிக்க இயலாது.
வெறுப்பு விருப்பின் மறுபக்கம். விருப்பு அல்லது ஆசை வளரும் பொழுது வெறுப்பிற்கும் உரமூட்டப்படுகிறது, காமக்குரோதங்களின் விளைவாக நமக்கு புத்தி நாசம் உண்டாகிறது. புத்தினாசம் சம்பவிக்கின்றபோது நாம் பித்தனாகி விடுகிறோம்.
தாயுமானவர் கோபத்தின் தாக்கத்தை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்:
 ஆராயும் வேளையில் பிரமாதி யானாலும்
      ஐயவொரு செயலுமில்லை
  அமைதியொடு பேசாத பெருமைபெறு குணசந்த்ர
     ராமென இருந்தபேரும்
நேராக வொருகோபம் ஒருவேளை வரஅந்த
       நிறைவொன்று மில்லாமலே
    நெட்டுயிர்த் துத்தட் டழிந்துளறு வார்வசன
      நிர்வாக ரென்றபேரும்
பூராய மாயோன்று பேசுமிட மோன்றைப்
     புலம்புவார் சிவராத்திரிப்
   போதுதுயி லோமெனற விரதியரும் அறிதுயில்
     போலேயிருந்து துயில்வார்
கோபம் வந்திடுகில் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் எவ்வளவு நாள் மௌனமாய் இருந்தவரானாலும் அதுவரை அடைந்த நிறைவையெல்லாம் இழந்தவராகிறார்.
ஆகவே தாயுமானவர் இந்த ஆசைகளுக்கெல்லாம் கடிவாளம் பூட்டும்படி வேண்டுகிறாற்.
 
   உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
      ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்க்குளே வீழாமல் மனதற்ற
       பரிசுத்த நிலையை அருள்வாய்
    பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
       பரிபூர ணானந்தமே. .
பகவான் ரமணர் இந்த ஆசைகளிலிருந்தெல்லாம் நம்மை விடுவித்து இந்த இகலோக வாழ்க்கையிலேற்பட்டுள்ள பித்தை குணப்படுத்துமாறு அருணாசலரிடம் வேண்டுகிறார்.
ஒரு பித்து விடவேண்டுமென்றால் இன்னொரு பித்தை உண்டு பண்ணவேண்டும். விஷயவாசனைகளை நீக்கி நமது மனத்தை அந்த பரமனின் மீது ஒருமுகப்படுத்த வேண்டும்.அதன் பயனாக நாம் அவன் மீது பித்தனாகி விடுகிறோம்.இந்த பித்தும் ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கு ஒரு தடையே. ஆகவே அந்த தடையையும் விலக்குமாறு பகவான் வேண்டுகிறார்.
பிரேம மார்க்கத்தைக்குறித்து விளக்கும்பொழுது ஒருமுறை பகவான் கூறினார்:
“கெட்டதை விலக்குவதற்கு நல்லதை பிரேமிக்க வேண்டும். கடைசியில் அதுவும் ஆத்மானந்தத்திற்கு தடங்கலாக தோன்றுமாகையால், அந்த நல்லதையும் விலக்க வேண்டியது தான். ஆனால் முதலில் நல்லதை பிரேமித்தே ஆகவேண்டும். பிரேமித்து பிறகு தள்ளவேண்டும். இப்படி எல்லாவற்றையும் தள்ளிவிட்டால் இருப்பது ‘ தான்’ தான். அதுவே தான் உண்மையான பிரேமை.”
“ பிரேமை தான் கடவுளின் ஸ்வரூபம்.’எனக்கு இது பிரியமில்லை,எனக்கு அதில் பிரேமையில்லை,’ என்று நல்லது கெட்டவை எல்லாவற்றையும்  விலக்கி விட்டால் , விஞ்சி இருப்பது எதுவோ அது தான் தன் ஸ்வரூபம். அது தான் சுத்தமான பிரேமை. அந்த சுத்தமான பிரேமையைக் கடவுள் என்றோ ஆத்மா என்றோ வேறு எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.அது தான் பக்தி;அது தான் ஞானம் எல்லாம் அது தான்’.
இந்தக் கருத்தைதான் பகவான் இந்த சுலோகத்தில் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார்;
          பித்துவிட் டுனை நேர் பித்தனாக்கினையருள்
                   பித்தந் தெளிமருந் தருணாசலா