Tuesday 5 May 2015

ரமணஜோதி 106

 

 

 

 

ரமணஜோதி 106

அருள் மை-2

மைமய னீத்தருண் மையினா லுனதுண்
          மைவச மாக்கினை யருணாசலா

நாம் கடந்த மடலில் மேற்கண்ட சுலோகத்தின் வாச்சியார்த்தத்தை பார்த்தோம். அப்படி பார்க்கும் பொழுது சில கேள்விகளை எழுப்பினோம். அந்த கேள்விகளின் பதில்களை தேடும் முன்னோடியாக அத்துவைத வேதாந்தந்த்தின் தோற்றம் குறித்தும் அதன் ஆசாரியர்கள் குறித்தும் குறிப்பாக கௌட பாதரின் மாண்டூக்கிய வியாக்கியனத்தை சிறிது விசகலனம் செய்தோம். மடலின் முடிவில் நம்முடைய காலமான பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் தோன்றி நமக்கு வழிகாட்டிய மஹான்களிடையே பகவான் ரமண மஹரிஷியின் உபதேசங்களைக் குறிப்பிட்டோம். அவரின் உபதேசங்களின் விவரங்களை இந்த மடலில் பார்ப்போம்.
ஆத்மா சத் சித் ஆனந்த மானது; சஞ்சலமற்றது; அது சுத்த சைதன்னியம்; அதை ஆவரணம் செய்துள்ள இருளை –அஞ்ஞானத்தை போக்கி விட்டோமென்றால் அதுவே முக்தி-ஆத்ம சாக்ஷாத்காரம்; என்று பகவான் ஆணித்தரமாக கூறியுள்ளார்.கூறியது மட்டுமல்ல நடமாடும் ஜீவன்முக்தராக வாழ்ந்தும் காட்டினார்.
கடந்த மடலில் நமது சித் ஆனது மனமாகி ஜடப்பொருள்களோடு தொடர்பு கொள்ளும்பொழுது நமக்கு பௌதிக அனுபவங்கள் ஏற்படுகின்றன; அவை இன்பகரமாகவும் இருக்கலாம்; துன்பகரமாகவும் இருக்கலாம்; எப்படியிருந்தாலும் அவை தாற்காலிகமானது தான்; க்ஷண நேரத்தில் தோன்றி மறையக் கூடியவை; அவை ஜாக்ரத்தில் ஸ்தூல பௌதிகப் பொருள்களோடு சம்பந்தப் படும் பொழுதும்,சொப்னாவஸ்தையில் சூக்ஷ்ம தலத்தில் பௌதிகப் பொருள்களோடு கர்மேந்திரியங்களின் தொடர்பில்லாமல் ஏற்படுகின்றபொழுதும் நமக்கு ஏற்படுகின்ற அனுபவங்கள் தாற்காலிகமானது தான் என்று சொன்னோம்.
அப்படியென்றால் ‘சித்’ தான் மனமா? என்ற கேள்வியெழலாம்.இல்லை, அப்படியில்லை.ஆத்மாவின் மித்யையான ஒரு அவதாரம் அது. அஞ்ஞானம் எனும் அவித்யையால் ஆவரணம் செய்யப்படும்பொழுது ஏற்படும் நிலை அது. ஆத்மாவினாலே உருவாக்கப் பட்ட ஆவரணம் அது. எவ்வாறு சூரியனால் நீர் ஆவியாகி மேகமாகி அந்த மேகங்கள் சூரியனையே மறைக்கின்றதோ அது போல் சத்சித்தால் உளவாக்கப்பட்ட அவித்யை எனும் ஆவரணம்-மறை- அந்த சித்தையே மறைத்து நமக்கு பௌதிக அனுபவங்களை உளவாக்குகிறது. அஞ்ஞான மறை என்றால் அறிவீனம் என்று பொருள் கொள்ளக் கூடாது; பௌதிக பொருள்கள் குறித்துள்ள அறிவு தான் அவித்யை எனப்படுகிறது.

இந்தக் கருத்தை சிறிது ஆழமாக அலசிப் பார்ப்போம்.
 நமது ‘மனம்’ என்பது சிந்தனைகள்-விசாரங்களின் சேகரங்களே. சிந்தனைகள்-விசாரங்கள் என்றால் மனம் எதை சங்கல்பித்து,அதற்கு உருவமும் பெயரும் கொடுத்து  அதற்கு விகார,குணப் பூச்சுக்களை பூசி தானே அந்த விகாரங்களுக்கு அடிமையாகி இன்பபடுவதோ துன்பப் படுவதோ ஆன அனுபவங்களை சிருஷ்டிக்கின்றனவோ அவையே சிந்தனைகள்-விசாரங்கள். கரும்பு இனிக்கும்; பாகற்க்காய் கசக்கும் என்பது போன்ற எண்ணங்களை சங்கல்பித்து, சந்தோஷிக்கிறது, அல்லது துக்கிக்கிறது.
இதற்கு சரியான உதாரணம் கயிறில் பாம்பைக் கண்ட ஜீவனின் அனுபவம் தான். இருட்டில் கயிறைக் காணும் பொழுது ஜீவாத்மா அதை பாம்பு என்று நினைக்கின்றது அப்படி நினைக்கின்றபொழுது பாம்பைக் கண்டால் என்ன பயம் ஏற்படுமோ அதே பயம் நம்முள் உண்டாகிறது.நாக்கு குழறுகிறது,உடம்பு வியர்க்கிறது. அந்தக் கயிறைக் கண்டபொழுது ஏற்படுகின்ற விகாரமானது நம் மனதின் கற்பனையால் உருவானது. கயிறில் பாம்பை சிருஷ்டிக்கின்றது மனம். யாராவது விளக்கை எடுத்து வந்து அது பாம்பல்ல, கயிறு தான் என்று நிரூபிக்கும்பொழுது நமது பயம் விலகி மற்ற விகாரங்களுக்கு இடம் கொடுக்கிறது.
அதே போல் நம் வீட்டு கதவை யாரோ தட்டுகிறார்கள்; போய் திறக்கிறோம்; அங்கு நிற்பவரைப் பார்க்கும்பொழுது எங்கோ எப்பொழுதோ பார்த்த ஒருவரின் ஞாபகம் நம் உள் மனதில் எழுகிறது; நம்மை அறியாமல் அவர் மீது வெறுப்பு உளவாகிறது; அந்த வெறுப்பின் காரணமாக நம்  நாவிலிருந்து தடித்த வார்த்தைகள் வெளிவருகின்றன;முன் பின் தெரியாத ஒருவரிடம் நமக்கு விரிசலுள்ள உறவு முளைக்கிறது.
ஒரு இளைஞன் ஒரு யுவதியைப் பார்க்கிறான்; விரும்ப ஆரம்பிக்கிறான்;அவனது தாய்-தந்தையர் ;தோழர்கள் எல்லோரும் “இவளைப் போய் எப்படி விரும்பினாய்” என்று கேட்கிறார்கள். பதிலில்லை; மனம் செய்யும் சித்து விளையாட்டு.
இப்படி நினைவலைகள் நம்மில் உளவாகுவத்ற்கு முன்னோடியாக—அல்லது முதல் படியாக நம்மில் உளவாவது ‘ நான்” என்ற எண்ணம் தான். அதன் பிறகு அந்த “நான்” தனக்கு வெளியில் பார்க்கும்பொழுது தான் மற்ற நினைவுகள் உண்டாகின்றன.’நான்’ உருவான பிறகு உண்டாகின்ற நினைவுகள் எழுகின்றன, அழிகின்றன; ஆனால் ‘நான்’ என்ற எண்ணம் மட்டும் ஸ்தாயியாக இருந்து கொண்டே இருக்கிறது, இந்த முதல் எண்ணம் ஜாக்ரத்தில் கர்மேந்திரியங்கள் வழியாகவும் சொப்னத்தில் ஞானேந்திரியங்கள் வழியாகவும் செயலாற்றி மேலும் மேலும் எண்ணங்களை உற்பத்தி செய்கின்றது.
ஆகவே மனம் என்பது ‘நினைப்பவனையும்’ நினைப்பவைகளையும்’ ஒரே நேரத்தில் பிரதிபலிக்கின்றது.
இந்தக் கருத்தை பகவான் ரமணர் தனது ‘உபதேச உந்தியாரில்’ எவ்வளவு அழகாக சொல்கிறார் பாருங்கள்:
      எண்ணங்க ளேமனம் யாவினு நானெனு
           மெண்ணமே மூலமா முந்தீபற
           யானா மனமென லுந்தீபற
                உ.உ சுலோ 18
 ‘நான்’ எனும் எண்ணம் எழுந்த பிறகு தான் ‘நான் ஆண்’, நான் பெண்’  ;நான் வக்கீல், நான் மருத்துவர்” என்றெல்லாம் தோன்ற ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் ‘நான் யார்’ என்ற கேள்வியே கேட்காமல் இந்த ‘உடல் தான்  நான்’ என்ற குழப்பமான எண்ணம் தோன்றுகிறது. ஆகவே உடலுக்கு ஏற்படுகிற இன்பங்கள் துன்பங்கள் ‘நானுக்கு’ ஏற்பட்டதாக  நினைப்பு தோன்றுகிறது.
ஒரு உடலுடன் தன்னை சொருமித்து பார்க்க துவங்கிவிட்டால் அந்த உடம்பிலிருந்து மாறுபட்டவை- வேறுபட்டவையெல்லாம் ‘நானல்ல’ என்ற எண்ணம் உண்டாகிறது. அப்படி நம் உடம்பிலிருந்து வேறுபட்டவைகளுக்கு ரூப நாமங்கள் வழங்குகிறோம்; அவைகளை நன்றாக இருக்கிறது; நன்றாக இல்லை;என்ற குண விசேஷங்களை சார்த்துகிறோம்,நாம் சார்த்துகின்ற குணவிசேஷணங்கள் நம்மில் ஏற்படுத்துகின்ற தாக்கத்தால் நமது எண்ணங்களும் விருப்பு வேறுப்புகளாக உருவெடுக்கின்றன.
மனம் என்பது இவ்வாறு இரு கூறுகளாக உளது; முதலில் சுத்த சைதன்யமான ஆத்மா; அதன் மீது அஞ்ஞானமாகின்ற மறை விழும்பொழுது ஏற்படுகின்ற எண்ணக்குவியல்களாலான மனம் இன்னொன்று. இவை ஒன்றுக்கொன்று மாறுப்பட்டு-பரஸ்பர விரோதமாகவும் உள்ளன,
“உள்ளது நாற்பது’ நூலில் பகவான் இதை விளக்குகிறார்:
           சடவுடனா நென்னாது சச்சித் துதியா
           துடலளவா நானோன் றுதிக்கு---மிடையிலிது
           சிச்சடக்கி ரந்திபந்தஞ் சீவனுட்ப மெய்யகந்தை
           யிச்சமு சாரமன மெண்ணென்னே---விச்சை
           உருப்பற்றி யுண்டா முருப்பற்றி நிற்கு
           முருப்பற்றி யுண்டுமிக வோங்கு===முருவிட்
           டுருப்பற்றுன் தேடினா லோட்டம் பிடிக்கு
          முருவற்ற பேயகந்தை யோர்வாய்--- கருவாம்
                           உ.நா சுலோ 24-25
எந்த எண்ணமில்லாத சத் சித்  தான் ‘நான்” என்று நமது ஆத்மா சொல்லுவதில்லை, ; அதே போல் ‘சித்’ இல்லையேல் இந்த உடம்பும் ‘நான்’ என்று கூறுவதற்கில்லை.சத் சித் எழுவது மில்லை பிறப்பதுமில்லை; அது இருக்கிறது அவ்வளவு தான்;
நிர்விகாரமான, நிச்சலமான சித்திற்கும் சைதன்யமே இல்லாத இந்த உடம்பிற்கும் நடுவில் ஒரு உறவு ஏற்பட்டு “நான்” உதிக்கின்றது.இந்த உறவை முன்னொரு மடலில் சித்-சட பந்தனம் என்று குறிப்பிட்டிருந்தோம் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.இந்த உறவு மூலம் ஸூக்ஷ்ம சரீரத்திற்கு காரணமான ’அகம்’ ஜனிக்கிறது. அகம் மேற்கொண்டு மனோ ருபமாக பிரபஞ்சத்தை சிருஷ்டித்து அதில் ஆழ்ந்து விடுகிறது.
இந்த ‘அகம்’ ஒன்றிலிருந்து மற்றொன்றை உருவாக்கி அதைப் பற்றிக் கொண்டு வளம் கொழிக்கிறது;ஒரு உடல் உபயோகமில்லாதாகும்பொழுது இன்னொரு உடலைப் பற்றிக்கொள்கிறது. ஆனால் இந்த’ நான் யார்’ என்ற கேள்வி கேட்டு விட்டாலோ அந்த அகந்தை பேய் ஓட்டம் பிடித்து விடும்.ஏனென்றால் ‘அகந்தைக்கு’ உண்மையான அஸ்த்தித்வம் கிடையாது. பொய்யான மாயாவி அது. ‘யார் நீ’ என்று கேட்டு விட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் மறைந்து விடும்.
இதையே ‘உபதேச உந்தியாரிலும்’ பகவான் கூறியுள்ளார்:
           மனத்தி னுருவை மறவா துசாவ
     மனமென வொன்றிலை யுந்தீபற
     மார்க்க நேரார்க்குமி துந்தீபற
உ உ 17
மனம் என்றால் என்ன என்று இடைவிடாமல் விசாரித்தால் மனம் என்று ஒன்று கிடையாது என்று தெரிய வரும்; எல்லாமே ஒன்று தான் என்று புரியும். இப்படி விசாரித்தறிவதே எல்லோருக்கும் நேரான வழி எங்கிறார் பகவான்.
உபதேசவுந்தியாரில் இருபதாம் சுலோகத்தில் மீண்டும் பகவான் கூறுகிறார்:
           நானொன்று தானத்து நானாநென் றென்றது
                தானாகத் தோன்றுமே யுந்தீபற
                தானது பூன்றமா முந்தீபற
                     உ உ 20
‘நான் யார்” விசாரித்தால் “பொய்மை நானும்’ “சத்ய நானும்” லயித்து ஒன்றாகும்பொழுது சத் சித் தானாகவே தோன்றும்; அது தான் பூரணமானது;எல்லையற்றது; அத்துவைதமானது என்று விளங்கும்.
இதையே “ஆன்ம வித்தை” எனும் நூலிலும் பகவான் விளக்கியுள்ளார்:
          
ஊனா ருடலிதுவே நானா மெனுனினைவே
           நானா நினைவுகள்சே ரோர்நா ரெனுமதனா
           னானா ரிடமெதென்றுட் போனா நினைவுகள்போய்
           நானா னெனக்குகையுட் டானாய் திகழுமான்ம---
                ஞானமே; இதுவே மோனமே; ஏக வானமே;
                           இன்பத்  தானமே
                                     ஆ.வி சுலோ 2
“ஊனால் உருவான—சதைப் பிண்டமான உடல் தான் நான்” என்ற ஒரு மெல்லிய கயிற்றில்த் தான் நமது எல்லா எண்ணங்களும் நினைவுகளும் கட்டப் பட்டிருக்கின்றன. ஆகவே இந்த எண்ணம்—அதாவது ‘இந்த பூதவுடல்தான் நான்” என்கின்ற எண்ணம் எங்கிருந்து உண்டானது, எப்படி உண்டானது ,உண்மையான ‘நானின்’ இருப்பிடம் யாது என்று ஆராய்ந்தால் நமது எண்ணங்களெல்லாம் மாயமாய் மறைந்து விடும்.அப்பொழுது தெரியும் அந்த ஞானக்குகையில் சுத்த சைதன்னியமான சித் ஒளிர்ந்துகொண்டிருக்கும். இதுவே மௌனம். இதுவே துவிதமில்லாத ஒன்று; இதுவே அந்தமில்லாத சாந்தியின் இருப்பிடம்
ஆனால் இப்படி ‘நான் யார்” எனது இருப்பிடம் எது” என்று விசாரிதறிவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு அருணாசலனின் அருள் வேண்டும்.அருணாசலனின் அருள் எனும் மாய மை கிடைத்துவிட்டால் நமது அத்துவிதமான, நித்ய சாந்தி அளிக்க்க் கூடிய சித்தை ஆவரணம் செய்துள்ள மறைத்துள்ள மேகபடலங்கள் மறைந்துவிடும், நாம் மாயா மயக்கத்திலிருந்து விழித்துக்கொள்வோம்.அந்த “அருள் மை” வேண்டி பகவான் நம் சார்பில் பிரார்த்திக்கிறர் அக்ஷரமண மாலையின் இந்த சுலோகத்தில்.
மைமய னீத்தருண் மையினா லுனதுண்
          மைவச மாக்கினை யருணாசலா


No comments:

Post a Comment