ரமணஜோதி 103
ஜீவாத்மா-பரமாத்மா
லயனமே முக்தி
மெய்யகத் தின்மன மென்மல ரணையினா
மெய்கலந்
திடவரு ளருணாசலா
இந்த சுலோகம் வாச்சியார்த்தமாக பார்த்தால் காதலியொருவள் காதலனனிடம் கொஞ்சி
கெஞ்சும் சிருங்கார வேண்டுதலாக தோன்றும். “ உடலெனும் வீட்டில் மனமெனும் மலர்
மெத்தையில் நாம் கலந்திடுவோம் அருணாசலா” என்று காதலி காதலனாகிய அருணாசலனிடம்
வேண்டுவது போல் எழுதப்பட்டிருக்கும் இந்த சுலோகத்தில் பொதிந்திருக்கும்
உள்ளர்த்தம் மிகவும் ஆழமானது; தத்துவார்த்தமானது.
மெய் என்றால் உடம்பு (தேஹம்) என்று ஒரு அர்த்தம்; உண்மை என்பது இன்னொரு
அர்த்தம்.
‘அகம்’ என்பதற்கு ‘நான்’ என்று ஒரு அர்த்தம்; வீடு என்று இன்னொரு அர்த்தம்.
“மெய்யகம்” உண்மையான ‘ நான்’ என்றும் பொருள் கொள்ளலாம்; ‘உடலாகிய வீடு’
என்றும் கொள்ளலாம்.
மனமாகிய ஜீவாத்மா உண்மை நானோடு கலந்து உண்மையை உணருவதற்கு அருளருணாசலா என்று
தத்துவார்த்தம் .
மலரணை என்கின்ற பதம் மூலம் பகவான் பக்குவமான மன நிலையிலுள்ளேன்; கலவிக்கு இது
சரியான தருணம்; ஆகவே என்னோடு கலந்து ஆத்மசாக்ஷாத்காரம் பெறுவதற்கு நீ அருளவேண்டும்
அருணாசலா என்று வேண்டுகிறார் பகவான் இந்த சுலோகத்தில்.
பரமனை காதலனாகக் கருதி பக்தி
செலுத்துவது பக்தியின் மேலான நிலை. ஆழ்வார்கள் பாசுரத்தில் இந்த நிலை முந்தி
நிற்கக் காணலாம்.முக்கியமாக கோதை நாசியாரின் திருவாய் மொழிகளில் விரஹ பக்தி
முனைந்து நிற்கும்.மேலோட்டமாக பார்த்தால் அது சிருங்கார ரசமாகத் தோன்றினாலும் அதன்
உட்பொருள் பரமாத்மாவுடன் இணவதற்கான ஜிவாத்மாவின் விழைதல் தான் காதலாக
வெளிப்படுகிறது என்பதை உணரலாம்.
உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பாசுரத்தை பாருங்கள்.கோதை தனக்கு தானே
தைரியம் வரவழைத்துக் கொள்கிறாள் பரமனோடு இணைவதற்கு.
நாணியினியோர் கருமமில்லை
நாலயலாரும்
அறிந்தொழிந்தார்
பாணியா தென்னை மருந்து செய்து
பண்டுபண் டாக்க வுறுதிராகில்
மாணி யுருவா யுலகளந்த
மாயனைக் காணில் தலைமறியும்
ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில்
ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின்
‘இனிமேல் நான் வெட்கப் பட என்ன இருக்கிறது. அயலார் எல்லோரும் உன்னிடம் நான்
மயங்கி விட்டேன் என்று அறிந்துகொண்டு விட்டார்கள்.
‘திருமணமாகாத என்னை மருந்துகொடுத்து மாற்ற நினைக்கின்ற அவர்களிடமிருந்து என்னை
காக்க வேண்டுமென்றால் ஆயர்பாடிக்கே என்னை அழைத்துச் சென்று விடு,உலகளந்த பெருமானே’என்கிறார்
கோதை நாச்சியார்.
இந்த இஹலோஹ இன்பதுன்பங்களில் எனக்கு எந்த ஈடுபாடுமில்லை;’உண்மையான நான்” யார் என்று தெளிந்துகொண்டு விட்டேன்; என்னை பிச்சி ( பைத்தியம்)என்றெண்ணி இந்த உலகத்தவர் என்னை திருத்த முயலுவர்.அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டுமென்றால் என்னை உன்னுடன் லயிக்க விட்டு உன் ஆஸ்தானத்திற்கே என்னைக் கொண்டு போய்விடு,;ஆத்ம்ஞானம் நிரந்தரமாக என்னிடம் தங்குவதற்கு அருள் பாலிப்பாயாக[A1] ’
தந்தையும் தாயுமுற்றாரும் நிற்கத்
தனிவழி போயினாள் என்னும் சொல்லு
வந்தபின் நைப்பழி காப்பரிது
மாயவன் வந்துருக் காட்டுகின்றான்
கொந்தள மாக்கிப் பரக்கழித்துக்
குறும்பு செய்வானோர் மகனைப்பெற்ற
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே
நள்ளிர்ட் கணென்னை யுய்த்திடுமின்.
அடுத்த பாசுரத்தில் இன்னும் தெளிவாக கூறுகிறார் ஆழ்வார்:
இப்படியாக ஆழ்வார்கள் சிருங்கார ரசம் ததும்பும் பாசுரங்கள் மூலம் ஆத்ம சாக்ஷாத்காரத்தை வேண்டியுள்ளார்கள்.
ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கு, -பரமனிடம் கலப்பத்ற்கு-லயிப்பதற்கு நாம் எப்பொழுது
பக்குவமாகிறோம் என்பதை பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் அருமையாக சொல்லுவார்:
சரேயோ ஹி ஞானமப்யாஸாத் ஞானாத் த்யானம்
விசிஷ்யதே த்யானாத் கர்மபல்த்யாகஸ்த்யாகாச் சாந்திரனந்தரம் !!
ப்.கீ.அத் 12 சுலோ 12
அப்யாசத்தைவிட ஞானம் சிறந்தது;ஞாத்தைவிட த்யானம்
மேலானது;தியானத்தைக்காட்டிலும் கர்மபலத் தியாகம் அல்லது நிஷ்காமிய கர்மம் மேலானது;
தியாகம் செய்வதால் சாந்தி கிடைக்கிறது.
அதே போல் தன்னை மறந்து பரமனில் ஐக்கியமாகி அவனே எல்லாம் என்ற பக்தியின்
பரமோன்னத நிலையை அடைவது தான் நமது இலட்சியம்.அம்மாதிரி நிலையை அடையும் பொழுது ஒன்றைத் தவிர வேறொன்றில்லை என்று புரியும்.அந்தப்
புரிதலை நோக்கி நாம் நடக்கிறோம், உண்மையான பக்தனோ எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல்
தன்னையே தந்து அவனில் ஐக்கியமாகி விடுகிறான்.அப்படி செய்ய்யும் பொழுது அவன் எல்லா
கர்மபலங்களையும் தியாகம் செய்து விடுகிறான்.அதுவே உத்தம்மான நிலை என்று கிருஷ்ணர்
கூறுகிறார்.இந்த அர்ப்பண பாவம் தான் ஆழ்வார்களின் பாசுரங்களில் ஓங்கி நிற்கிறது.
துஞ்சத்து ராமானுஜ எழுத்தச்சன் தனது ‘சிந்தா ரத்னம்’ என்ற மலையாள புத்தகத்தில்
கூறுகிறார்:
பவஸாகரம் கடக்கேணமெங்கிலோ பக்த்யா
பவசேவயெ செய்துகொள்ளேணம் வழிபோலெ
யுவதீமணே! நினக்கக்னானமோஹவசால்
விவசபாவமுள்ளிலுள்ளது நீங்கீடுவான்
பரமேசுவரபாதபஜனம் செய்தீடுக.
பரமாம்ருதம் நாமகீர்த்தனம் சொல்லீடுக.
பரமேசுவரனுடெ பாதஸேவையை கொண்டு
பரமானந்தமாய பதத்தே லபிச்சீடாம்.
இந்த சம்சாரம் எனும் கடலை கடப்பதற்கு பகவத் சேவையை விட சிறந்தது ஒன்றுமில்லை
யுவதீமணீ ( சிந்தா ரத்னம் நூல் ஆசாரியன் தன்னுடைய சிஷ்யைக்கு உபதேசிக்கின்ற
பாணியிலுள்ளது.) அவித்யயால் உன்னுள்ளே உண்டாகியுள்ள விவச பாவம்-மனோ விஷமம் நீங்க
வேண்டுமென்றால் பரமேசுவரனுடைய பாத சேவை செய்வாயாக. மிகவும் உத்தமமான நாம
சங்கீர்த்தனம் செய்வதன் மூலம் நீ பர்மோன்னத நிலையை அடைவாய். அதாவது ஆத்ம
சாக்ஷாத்காரம் பெறுவாய் என்கிறார் ராமானுஜ எழுத்தச்சன்.
இங்கு தாஸ்ய பக்தி மிகுந்து நிற்கிறது.
தாஸ்யபக்தியை ஆழ்வார்களின்
பாசுரங்களிலும் காணலாம்
வழக்கொடு மாறுகொள் அன்று
அடியார் வேண்ட
இழக்கவும் காண்டுமிறைவ-இழப்புண்டே
எம்மாட்கொண்டாகிலும்யான் வேண்டேங்கண்கல்
தம்மால் காட்டு உன்மேனிச்சாய்
பாசுரம் 13
‘ பெருமானே, எனது வேண்டுகோள் எந்தவிதத்திலும் நியாயமற்றது அன்று. நன்மை
னிறைந்த யஜமானர்கள் அடியார்களின் வேண்டுதல்களை தனக்கு உண்டாகக்கூடிய கஷ்ட நஷ்டங்களைப்
பொருட்ப்படுத்தாமல் நிறைவேற்றுவது உலக வழக்கம்.ஆகவே என்னை உன் அடியானாக
ஏற்றுக்கொண்டு உன் திரு உருவத்தை எனக்கு காண்பிப்பாயாக.”
துபிரகடப் படுத்தினாலும்—ஆண்டான்-அடிமை—பாவம் முந்தி நின்றாலும் கல்லுக்குள்
நீர் போல் அத்துவைத சித்தாந்தம் ஒளிந்து கிடக்கிறது. ‘ஆண்டவா, நீ உந்திரு உருவத்தை
காண்பித்து என்னை உன்னுடன் சேர்த்துக்கொள்; எனக்கு ஆத்ம சாக்ஷாத்காரம் பெறச் செய்”
என்பது உள்ளர்த்தம்.
எம்பெருமானின் திரு உருவம் என்பது ஞான ஸ்வரூபம்,சுயம் பிரகாசமானது; அந்த ஞான
சொரூபம் நம்முள் பிரகாசித்துவிட்டால் மற்றவை எல்லாம் மறந்து விடும்.எங்கு ஞான
உள்ளதோ அங்கு அக்ஞானம் மறைந்து விடும். நம் உள்ளம் இருளடைந்து கிடக்கும்பொழுது
தான் இந்த பொய்யான ஜகத்-மித்யா பிரபஞ்சம் வெளிப்படுகிறது. நாராயணனின் திரு உருவம்
நம்முள் பிரகாசிக்க ஆரம்பித்தால் பிரபஞ்சம் மறைந்து விடும்.
எவ்வாறு இருளில் நாம் பாம்பு என்று பயந்த பொருள் வெறும் கயிறு தான் என்று
வெளிச்சம் வரும்பொழுது தெரிகிறதோ,வெள்ளி எனனினைத்த பொருள் வெறும் சிப்பி தான்
என்று தெரிய வருகிறதோ அது போல் நாராயணன் நம்முள் பிரகாசிக்கும்பொழுது மற்ற எல்லா
கவலைகளும் மறைந்து போய்விடும்.
ஆகவே ரமணர் வேண்டுகிறார், “ என்னை அணைத்து உன் உள்ளமாகிய மலர்ப்படுத்தியில்
கிடத்திக்கொள்;அல்லது எனது உள்ளமாகிய போதத்தில் நீ வந்து அமர்ந்து கொள் அருணாசலா;
என் அக்ஞானத்தை களைந்து விடு அருணாசலா,”.என்கிறார்.
No comments:
Post a Comment