ரமணஜோதி 93
அஜாதவாதம்
போக்கும் வரவுமில் பொதுவெளி யினிலருட்
போராட்
டங்காட் டருணாசலா
“ அருணாசலா, போக்கும் வரவுமில்லாத சிதாகாசத்திற்கு என்னை உயர்த்திக்கொண்டு
போய் உன் அருள் விளையாட்டை எனக்கு காண்பி.” என்று வேண்டுகிறார் பகவான் இந்த
சுலோகத்தில்.
போக்கும் வரவுமில்லாத வெட்டவெளி என்றால் எந்த சலனுமுமற்ற ஆத்ம-ஆகாசம். இதையே
தான் சிதாகாசம் என்றும் கூறுகிறார்கள். இங்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை.
எல்லாம் மாற்றத்திற்கு உட்ப்பட்டது போல் தோன்றினாலும்,பிரம்மம் அருணாசல உருவத்தில்
ஆடாமல் அசையாமல் நிரந்தரம் ஒளிர்ந்து கொண்டேயிருக்கின்ற சிதாகாசம் இது. தோன்றுவதும்
வளருவதும் அழிவதுமாக தோன்றினாலும் இங்கே எதுவுமே அழிவதுமில்லை;ஆகவே
தோன்றுவதுமில்லை.
அருணசலர் தான் நமது உண்மை சொரூபம்.அது தான் பிரம்மம்.எல்லா மாற்றங்களுக்குமிடையில்
தான் மட்டும் மாறாமல், பிற மாற்றங்களால் பாதிக்கப் படாமல் இருக்கின்ற அந்த அருட்
விளையாட்டை அவ்வளவு எளிதாக காணமுடியாது. அந்த அனுபவத்தை கருணை கூர்ந்து காட்டருணாசலா
என்கிறார் பகவான்..இந்த பிரம்ம தத்துவத்தை புரிந்து கொள்வது, உணருவது அவ்வளவு
எளிதல்ல. அதற்கு அருணாசலனின் அருள் தேவை.அதைத் தான் வேண்டுகிறார் பகவான் இங்கே.
‘இறப்பும் பிறப்பும் கிடையாது என்று எப்படிக் கூற முடியும்?’ என்ற சந்தேகம்
நம்மில் பலருக்கும் வரலாம். நமது இகலோக இன்ப-துன்பங்களெல்லாம் நமது முன் ஜன்ம கர்ம
பலன் என்று பகவானே பல இடங்களில் கூறியுள்ளாரே? இங்கே அவரே அவரது கருத்தை மறுத்துக்
கூறுவதாக சொல்லுவது சரியா?
கேள்விகள் நியாயமானது தான். இதே கேள்வியை பக்தர்கள் பகவானிடம்
கேட்டுள்ளார்கள்.அவர்களுக்கு பகவான் அளித்த பதில்களை சற்றே நினைவு கூர்ந்தால் நாம்
தெளிவடையலாம்.
அதற்குமுன் வேதங்களிலும் வேதாந்தங்களிலும் பாஷ்யங்களிலும் பிரபஞ்ச
சிருஷ்டியைக் குறித்து கூறப்பட்டுள்ளதை பார்ப்போம்.
அத்வைத சித்தாந்தத்தில் பிரபஞ்ச சிருஷ்டியை குறித்து மூன்று அடிப்படை
தத்துவங்கள் விவரிக்கப் படுகிறது.
1.அஜாத வாதம்
பிரபஞ்சம் என்று ஒன்று படைக்கப் படவேயில்லை. பிரபஞ்சம் என்பது மனித மனதின் சிருஷ்டியே
.நமது சங்கல்பங்களே..காலம்,தேசம்,காரண காரியங்கள் எல்லாம் நம் மனதில் தோன்றுபவை
தான். ஆத்மா ஒன்று தான் உண்மையான ஒன்று .அதை நாம் புரிந்து கொள்ளும் பொழுது நமது அஞ்ஞானம் விலகி வெளிச்சம் ஏற்படுகிறது .அப்பொழுது
அந்த ஒளியில் இந்த பிரபஞ்சம் மறைந்துவிடும்.
ஆன்மாவின் உண்மை சொரூபத்தை அறியாத நிலையில் நமது மனம் அவித்யையில் மூழ்கி
நீ,நான்,இது,அது என்ற வேறுபாடுகளுக்குள் சிக்கி ஒரு மாயா உலகத்தை
சிருஷ்டிக்கின்றது..இது நாம் கனவுகளில் காணுகின்ற உலகத்திலிருந்து மாறுபட்டதல்ல;
விழித்தெழுந்திருக்கும்பொழுது அந்த உலகம் காணாமல் போய் விடும்.நமது வாழ்விற்கும்
நாம் காணுகின்ற கனவுகளுக்குமுள்ள வித்தியாசம் முன்னது சிறிது நீண்ட கால அளவுடையது என்பது தான்.
2.
த்ரிஷ்டி-சிருஷ்டி வாதம்
முன்னால் சொன்னதை ஜீரணிப்பது பலருக்கும் கடினமாக இருக்கும். இதை மற்றொரு
விதத்தில் கூறுவது தான் இரண்டாவது தத்துவம். சிறிது எளிமையாக கூறப்படுகிறது இங்கே.
எப்பொழுது நான் என்ற எண்ணம் உதிக்கின்றதோ அப்பொழுது இந்த உலகம் உருவாகிறது..
நான் காண்கிறேன்; நான் செய்கிறேன்; நான் இங்கிருக்கிறேன்; நான் சுகமாக
இருக்கிறேன்; நான் துக்கமாக இருக்கிறேன்; எல்லாம் நான் எனும் சிந்தையுடன் தொடர்பு
உடையயு.அது தேஹமே நான் என்ற நினைப்புடைய நான்.நான் இங்கிருக்கிறேன் என்றால் இந்த
தேகம் இங்கிருக்கிறது என்று பொருள். எனக்கு வலிக்கிறது என்றால் இந்த தேகத்திற்கு
வலிக்கிறது என்றர்த்தம்.. தேகாஸ்பத்மான நான் மறைந்து உண்மையான நான்
உதயமாகும்பொழுது இந்த தேச கால வித்தியாசங்கள் மறைகின்றன. வலியும் தெரிவதில்லை;
ருசியும் தெரிவதில்லை உண்மையான ‘நானுக்கு’.
இதை திருஷ்டி-சிருஷ்டி வாதம் என்று கூறுகிறார்கள். இந்த உலகம் நம்
திருஷ்டியில் தான் நிலை கொள்கிறது. நான் முதலில் தோன்றுகிறது; பிறகு உலகம்
தோன்றுகிறது. உலகத்தை நம் மனது சிருஷ்டிக்கின்றது. நான் மறைந்தால் உலகமும்
மறைகின்றது.
அஜாதவாதமே தான் இதுவும். வேறு விதமாக விளக்கப் பட்டிருக்கிறது ;அவ்வளவு தான்.
சிருஷ்டி-த்ரிஷ்டி வாதம்
மேலே கூறிய இரு தத்துவங்களினாலும் தெளிவடையாதவர்களுக்காக இந்த மூன்றாவது வாதம்
கூறப்பட்டுள்ளது. இசுவரன் முதலில் தோன்றினான்.அவன் தனது மாயா சக்தியினால் இந்த
பிரபஞ்சத்தை படைத்தான்;பிறகு பிரபஞ்சத்திலுள்ள எல்லா சேதன-அசேதனா
(அசையும்-அசையா) பொருள்களையும் படைத்தான்.
நாம் காண்பதெல்லாம் அந்த பரமேசுவரனின் படைப்புக்கள் தான்; அவனிலிருந்து உருவானது
தான்; ஆகவே எல்லாம் அவனின் அம்சம் தான்.
பகவான் ரமணரிடம் பக்தர் ஒருவர் இந்த வித விதமான விளக்கங்களைக் குறித்து
கேட்டதற்கு பகவான் சொன்னார், :
“இதில் எது உண்மையானது என்று தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப் பொகிறோம்?
நமக்கு தெரிந்ததெல்லாம்,நம்முள் ஒரு ‘நான்” இருப்பது தான். இது சர்வ நிச்சயம்.
இந்த ‘நான்” யார் என்று தெரிந்து கொள்ள முயலுவோமே.அது தெரிந்து விட்டால்,புரிந்து
விட்டால் பிறகு பிரபஞ்ச சிருஷ்டியைக் குறித்துள்ள வாதங்களெல்லாம் அனாவசியமாகி
விடும்.”
“ பிரம்மம் அல்லது பரமாத்மா பல ரூபங்களிலும் பல நாமங்களிலுமாகத்
தென்படுகிறது.அதுவே பிரபஞ்சம். காண்பதெல்லாம் காண்பவனின் பார்வையில் இருக்கிறது. ஒருவனுக்கு
கயிறாகத் தோன்றுவது மற்றொருவனுக்கு பாம்பாகத் தோன்றுகிறது. மல்லிகை சிலருக்கு சுகந்தமாகவும்
மற்று சிலருக்கு தலை வலியை உண்டு பண்ணுவதாகவும் உள்ளது.
பகவான் தொடர்ந்து கூறினார்,” இந்த வாதங்களெல்லம் கேட்பவரின் சக்திக்கு ஏற்றபடி
கூறப்படுகிறது. எல்லாமே உண்மை தான். சொல்லுகின்ற விதம் தான் மாறுகிறது.”
ஆகவே இந்த வாதங்களையெல்லாம் மறந்து விட்டு அருணாசலனின் அரூளோடு நான் வேறல்ல; பிரம்மம் வேறல்ல ;எல்லாம் ஒன்றே என்று
புரிந்து கொண்டுவிட்டோமென்றால் உலகில் இன்ப துன்பங்கள் கிடையா .நிரந்தர சாந்தியைப்
பெறுவோம். அதற்காக பகவான் பிரார்த்திக்கிறார்:
போக்கும்
வரவுமில் பொதுவெளி யினிலருட்
பொராட்டங்காட் டருணாசலா
“
No comments:
Post a Comment