Thursday, 19 March 2015

ரமணாஜோதி 99

ரமணஜோதி 99

பரமனின் கருணையும் புருஷாகாரமும்

மிஞ்சசிடிற் கெஞ்சிடுங் கொஞ்சவறிவினியான்
 வஞ்சியா தருளெனை யருணாசலா !!
இந்த பௌதிக நான் –உடலே தான் நான் என்று நம்பும் நான் என்னால் எல்லாம் முடியும்; நடப்பதெல்லாம் என் முயற்சியினால்த் தான் என்று நம்பிக்கொண்டு அகந்தையினால் நான் யார் என்பதே தெரியாமல் ‘கர்தத்ருவ” மனோபாவத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நான் “கொஞ்ச அறிவினி”  என்று பகவான் சொல்லுகிறார். பக்குவ்மடையாத அந்த நான்- ஜீவாத்மா கஷ்டங்கள் வரும்பொழுது,”பகவானே” என்று பரமனை சரணம் அடைகிறது. இது சரியான பக்தியுமல்ல்; சரியான சரணாகதியுமல்ல. இருந்தாலும் கருணைகூர்ந்து ,அருணசலா, என்னை ஏற்றுக்கொள்வாய் என்று இறைஞ்சுகிறார்,பகவான் இந்த சுலோகத்தில்.
மானிடர்களுக்கும் அசேதன வஸ்துக்களுக்குமுள்ள வேற்றுமை என்னவென்றால்,அசேதனங்களுக்கு வெளிஉலக அறிவு என்று ஒன்று இல்லை; ஆகவே செய்வதற்கொன்றுமில்லை. நமக்கு அந்த அறிவு உள்ளது. ; ஆகவே நாம் கர்மங்கள் ஆற்றுகிறோம் ;அதன் பயனையும் அனுபவிக்கிறோம்.ஆனால் கர்மாக்களை ஆற்றுவது ஜிவாத்மாக்களின் சொரூப சுபாவமல்ல;
ஆன்மாவிற்கு கர்மமம் செய்வதால் பெறுவதற்கொன்றுமில்லை; இழப்பதற்குமொன்றுமில்லை பெறுவையெதுவும் நித்யவுமல்ல .இழப்பவை என்றாவரது ஒரு நாள் நாசமடையக் கூடியவையே.
இந்தக் கருத்தை பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார்:
          நைவ தஸ்ய க்ருதேனார்த்தோ நாக்ருதேனேஹ கஸ்சன !
          ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஸ்சிதர்த்தவ்யபாஸ்ரய: !!
                        ப்.கீ. அத்த் 3 சுலோ.18
அவனுக்கு கர்மம செய்து ஒன்றை பெறுதலும், செய்யாது எதையாவது இழத்தலுமில்லை.
பிறகு நாம் ஏன் பல செயல்களை செய்கிறோம் என்றால் நமது ஆசைகளினால் தான். ஆசைகளோ இந்திரியங்களால் தூண்டப்பட்டு உற்பத்தியாகிறது. அதனால் உண்டாகின்ற பலன்களும் நமது மனதின் சங்கல்பங்களே.
கிருஷ்ணர் கீதையில்  கூறுவார்:
          ப்ரக்ருதே: க்ரியமாணானி குணை: கர்மாணி சர்வச:!
          அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மன்யதே !!
யோக வாசிஷ்டத்தில் வசிஷ்டர் ஸ்ரீராமனிடம் கூறுவார்:
          ஸம்யமான்மனஸ்:சாந்திமெதி ஸம்சாரஸ்ம்ப்ரமஹ
          மந்தரீஸ்பந்ததாம்யாதெ யதாக்ஷீரமஹார்ண்ணவ: !
                           யோ.வா இரண்டாம் ப்ரகரணம் சுலோ 1
மந்தரை எனும் மலை எப்பொழுது தன்னுடைய சலனத்தை நிறுத்துகின்றதோ அப்பொழுது பாற்கடல் அமைதியாகிறது. அது போல் மனம் எப்பொழுது இல்லாதாகிறதோ அப்பொழுது இகலோகத்தின் மீது நமக்குள்ள பற்று அற்றுப் போகின்றது;நித்ய சாந்தி அடைகிறோம்.
இதிலிருந்து வசிஷ்டர் கூறும் உண்மை என்னவென்றால் மனம் தான் நமது எல்லா இன்ப துன்பங்களுக்கும் காரணம். மனம் அலை பாயும்பொழுது பல கர்மங்களை செய்து கூட்டுகிறோம்; விளைவுகளையும் அனுபவிக்கிறோம்.
இந்த பிரபஞ்சமே  நம் மனதில் தான் உதிக்கின்றது; அது ஆடி அடங்குவதும் இந்த மனத்தில்த் தான். நாம் கண்களையும் காதுகளையும் மற்ற எல்லா இந்திரியங்களையும் பிரபஞ்சத்திலிருந்து விடுபடுத்தி ஓரிடத்தில் அமர்ந்திருந்தாலும் நம் மனதில் இந்த பிரபஞ்சம் பரந்து விரிந்து காட்சியளிக்கும் .நமது பூர்வகால அனுபவங்களும்,வாசனைகளும், மனதில் உதிக்கின்ற வருங்கால எதிர்பார்ப்புக்களும் நம்மில் ஒர் மஹா பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கின்றது. நாம் சங்கல்பத்திலேயே இன்ப துன்பங்களை உணருகிறோம். ஆக, பிரபஞ்சம் நமக்கு வெளியே இல்லை,நமக்குள்ளேயே தான் இருக்கிறது.. நமது செயல்களுக்கெல்லாம் காரணம் நம்முள் இருக்கும் வாசனைகள் தானே தவிர வெளியேயுள்ள பிரபஞ்ச வஸ்துக்களல்ல .நாம் ஒருவனை விரும்பும் போதோ வெறுக்கும்போதோ நாம் விரும்புவதும் வெறுப்பதும் நம் மனதிலுண்டான –சங்கல்ப மனிதனைத்தானே தவிர உண்மையில் எந்த அபரனையுமல்ல. அதே போல் நம்மை ஒருவன் விரும்பவோ வெறுக்கவோ செய்தால் அவர்களது மனதிலுள்ள ‘சங்கல்ப நம்மை” த்தான் அவர்கள் விரும்புகிறார்கள்; வெறுக்கிறார்கள். அவர்களது சங்கல்பத்திலிருந்து நாம் சிறிதே வேறுபட்டாலும் அவர்களது விருப்பு வெறுப்பாகவும் வெறுப்பு விருப்பமாகவும் மாறக்கூடும். இந்த உண்மை நமக்கு புலனாகி விட்டால் நமக்கு இன்பமும் கிடையா; துன்பமும் கிடையா.
இதனால் தான் வசிஷ்டர் இராமனிடம் கூறுகிறார்:
          சித்தோன்மேஷ நிமேஷாப்யாம் ஸம்சாரஸ்யோதயக்ஷயௌ
          வாசனாப்ராணசம்ரோதாதனிமேஷம்மன்:குரு !!
                          யோ/வா. இரண்டாம் பிர: சுலோ 2
மனதில்தான் பிரபஞ்சத்தின் உற்பத்தியும் நாசமும் சம்பவிக்கின்றது; மனதிலுள்ள வாசனைகளை நாம் அடக்கி நம் புலன்களை  நிர்வீரியமாக்கினால் .சங்கல்பமும் விகல்பமும் இல்லாதாய் நமக்கு பூரண சாந்தி கிடைக்கும்.
இதையே இன்னும் உறுதிப் படுத்துகிறார் வசிஷ்டர் அடுத்த சுலோகத்தில்.
          அயமிஸ்வைகல்போத்தஹ: ஸ்வவிகல்பபரிக்ஷயாத்
          க்ஷீயதேதக்த்தசம்சாரோ நிஸார இதி நிஸ்சய: !
நம்முடைய மன சங்கல்பத்தில் உற்பத்தியாகின்ற இந்த ஒன்றுக்கும் உதவாததும் கேடு விளைவிக்கக் கூடியதுமான பிரபஞ்சம்—சங்கல்பங்கள், நம் மனதிலிருந்து அகன்று விட்டால் நசித்துவிடுமென்கிறார் வசிஷ்டார். எதையும் நாமாக கற்பனை செய்யாமல் இருந்தால் நமக்கு விருப்பு-வெறுப்பு உளவாகாது; இன்ப துன்பங்களும் உண்டாகாது. எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தின் வாசற்படி;ஏமாற்றங்கள் விருப்பு-வெறுப்புக்களின் சூத்திரதாரி.
பகவான் ரமண மஹரிஷியிடம் ஒரு பக்தர் கேட்டார்,” சுவாமி! கீதையில் கிருஷ்ண பகவான் ,எல்லாவற்றிற்கும் கர்மா தான் காரணம்;உன்னுடையது ஒன்றுமில்லை என்று முதலில் சொல்லிவிட்டு பிறகு கர்த்தா, கர்மா ,கிரியை யெல்லாம் நானே என்று சொல்லுகிறாரே?” என்று.
பகவான் சொன்னார்: “ கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு என்ன சொன்னார்? ‘கர்மப்படி நடப்பது நடக்கும்; கர்த்தாவான நானிருக்கிறேனில்லையா? பார்த்துகொண்டிருக்கிறேன்; நீயேன் கவலைப் படுகிறாய்? இந்த யுத்தத்தில் சுற்றாத்தார் கொல்லப்படுகிறார்களே,அந்த வதையை உன் சரீரம் செய்கிறதே தவிர நீ செய்யவில்லை.நீ சரீரமா? இல்லையே. .பின்னே உனக்கிந்தப் பந்தமெதற்கு?” என்றார் அதாவது உன் சரீரம் காரியம் செய்கிறது;ஆனால் உனக்கு அந்த கர்த்ருத்வ பாவம் வேண்டாம். கர்த்ரு பாவத்தை விடுவதற்குத்தான் ‘புருஷாகாராம்’ ( ஜீவனின் முயற்சி) அவசியம்.
சரீரம் நானென்ற அந்த கர்த்ருத்வபாவ பந்தத்தை ஏற்றுக்கொண்டதும் நானே, விட வேண்டியதும் நானே .தான் கொண்டு வந்ததை தானே போக்கடித்துக் .கொள்ள வேண்டும்”
பகவான் குறிப்பிடும் கீதா சுலோகங்களைச் சற்றே பார்ப்போம்.
கீதை மூன்றாம் அத்தியாயம் 33 வது சுலோகத்தில் கிருஷ்ணர் கூறுகிறார்:
ஸத்ருசம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதோஞானவானாபி !
ப்ரக்ருதிம் யாந்தி பூதானி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி !!.
ஞானியும் தன் இயல்புக்கு ஏற்றபடி கர்மங்கள் செய்கிறான்; எல்லா ஜீவாத்மாக்களும் அவரவர் இயல்பை பின்பற்றி கர்மங்கள் இயற்றுகின்றன. ஆகவே அந்த கர்மங்களை தடை செய்வதால் ஆவதென்ன?
தாவரங்களில் சில நெடிந்து உயர்ந்து வளருகின்றன; சில மற்ற தாவற்றங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டு அவைகளிலிருந்து உணவை இழுத்துக் கொள்கின்றன .கடல் ஆர்ப்பரித்துக் கொண்டேயிருக்கிறது. சில காய் கனிகள் இனிக்கின்றன; சில புளிக்கின்றன; சில கசக்கின்றன.. இவைகளை மாற்ற முடியாது. அதே போல் நாமெல்லாம் பிரகிருதியின் நியதிக்கு கட்டுப்பட்டவராவோம், நமது இயல்பு நம்மிலுள்ள தமோ ரஜஸ்,சத்துவ குணங்களின் ஏற்றத் தாழ்வினால்  நிர்ணயிக்கப் படுகிறது. அதை மீறி நம்மால் செயலாற்ற முடியாது.
அப்படியென்றால் நாம் ஒன்றும் செய்ய வேண்டாமா? மனித முயற்சிக்கு இடமேயில்லையா? இந்தக் கேள்விகளுக்குத்தான் பகவான் மேற்கண்டவாறு பதிலளித்தார். இதற்கு ஆதாரமாக பகவான் கீதையின் மூன்றாம் அத்தியாயத்திலுள்ள 34 வது சுலோகத்தை சுட்டிக்காட்டுகிறார்:
          மயி ஸர்வாணி கர்மாணி ஸம்ன்ய்யஸ்த்யாத்மசேதஸா !
          நிராசீர்னிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வா:!!
                                ப.கீ. அத்த்.3 சுலோ. 34
கிருஷ்ணர் சொல்லுகிறார் கர்மங்களையெல்லாம் எனக்கர்ப்பித்து, சித்தத்தை சைதன்யத்தில் வைத்து, ஆசையையும் மமாகாரத்தையும் அகற்றி, மனக்கொதிப்பின்றி செயலாற்றுவது தான் பாமரர்கள் செய்யக் கூடியது”
பகவான் ரமணர் கூறுகிறார்:” இப்படி நிஷ்காமிய கர்மம் ஆற்றுவது அவ்வளவு எளிதன்று; அதற்கு ‘புருஷாகாரம்” –மனித முயற்சி தேவை.
நமது ஆசாபாசங்கள் நம்மால் உள்வாக்கப்பட்ட பந்தங்கள்.எப்படி சிலந்தியானது தன் உடலிலிருந்து ஒரு திரவத்தை ஊற்றெடுக்கச் செய்து வலை பின்னுக்கிறதோ அது போல் நாமும் பாசவலை பின்னி அதில் பந்தனப்பட்டு அவதிப்படுகிறோம். நம்மால் உண்டுபண்ணப்பட்ட பந்த முடிச்சுக்களை நாமே தான் அவிழ்க்க வேண்டும்.புருஷாகாரத்தால் அந்த பந்தத்தை அறுத்தால். கர்த்தாவான ஈசனின் ஆணைப்படி எல்லா கர்மங்களும் தானாக நடக்கும்; நம்மை பாதிக்காது.
நம் மனதில் ஏற்படுகின்ற சஞ்சலங்களுக்கு விடையாக பகவான் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இன்னொரு பகதருக்கு பதிலளித்த்ள்ளார்: பக்தர் கேட்டார்:
ஈஸ்வரனே எல்லாரிதயங்களிலும் இருந்து சூத்திரதாரியாக தன் மாயாவிலாசத்தால் பொம்மலாட்ட விளையாட்டை நடத்துகிறான் என்று பகவத் கீதை பதினெட்டாம் அத்தியாயம் 61 வது சுலோகத்தில் சொல்லப் பட்டுள்ளதே?”
          ஈஸ்வர்ஸ்சர்வ பூதானாம் ஹ்ருத்தேசே அர்ஜுன திஷ்ட்டதி
          ப்ராமயன் ஸர்வபூதானி யந்த்ராரூடானி மாயயா !!
அதற்கு பகவான் பதிலளித்தார்:” ‘ஈஸ்வரஸ்சர்வபுதானாம்’ எனறு சொன்ன கிருஷ்ணர் அடுத்த சுலோகத்திலேயே என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?  அதற்கு என்ன அர்த்தம்?
          தமேவசரணம்கச்ச ஸர்வ பாவேன பாரத
          தத்ப்ரஸாதாத் பராம் சாந்திம்ஸ்தானம் ப்ராப்ஸஸிசாஸ்வதம்!!
அந்த ஈசனிடம் எல்லாவகையிலும் அடைக்களமாகிவிடு; அப்பொழுது உனக்கு ஏற்படும் தெளிவால் உனக்கு நித்ய சாந்தி கிடைக்கும்.” என்கிறார். ‘அடைக்கலமாகிவிடு’ என்றால் புருஷாகாரம் செய்ய வேண்டுமென்றுதானே அர்த்தம்.ஆகவே ‘நான்’ என்ற நினைப்பு இருக்கிறவரை முயற்சி செய்ய வேண்டியது தான். அந்த நினைப்பு அழிந்து போன பிறகு எல்லாம் ஒன்றே.”

ஆகவே இந்த கொஞ்ச அறிவினியானை உன் அருளால் என்னை உன்னுடன் சேர்த்துக்கொள் என்று பகவான் ரமணர் இந்த சுலோகத்தில் வேண்டினால்க்கூட நம் முயற்சியும் இன்றியமையாதது என்பதை நாம் மறக்கக் கூடாது.

No comments:

Post a Comment