ரமணஜோதி 91
பற்றுக்கோடு
பைங்கொடி யாநான் பற்றின்றி வாடாமற்
பற்றுக்கோ
டாய்க்கா வருணாசலா
“மெல்லிய கொடிகளுக்கு
எப்படி ஆதாரமாக பந்தல் கால்கள் வேண்டுமோ அது போல் எனக்கும் ஒரு ஆதாரம்
தேவைப்படுகிறது. அந்த ஆதாரம் இல்லையென்றால் நான் கீழே விழுந்து அழிந்து விடுவேன்
அருணாசலா; ஆகவே நீ எனக்கு ஆதாரமாக கீழே விழாமல் பாது காவலானாய் இருக்க வேண்டும்
அருணாசலா “என்று பகவான் ரமணர் உருக்கமாக வேண்டுகிறார் இந்த சுலோகத்தில்.
ஜீவாத்மாக்கள் நிரந்தரம்
அவித்யை எனும் மாயையுடன் போராட வேண்டியுள்ளது. இல்லையென்றால் விஷய வாசனைகள் எனும்
சுழலிக்காற்று கொடிகளை அடித்து தள்லி கீழெ வீழ்த்தி விடும். கீழே விழுந்து
விட்டாலோ இந்திரியங்களால் இயக்கப்படும் புலன்களினால் மிதிபட்டு அழிந்து விடும். இந்திரிய விஷயச்
சுழலிக்காற்றை எதிர்த்து நிர்க்க வேண்டுமென்றால் அதற்கு மிகுந்த மனோ திடம்
வேண்டும். சாமானியர்களான ஜீவாத்மாக்களுக்கு அப்படிப்பட்ட பலம் இருப்பதில்லை.
அம்மாதிரியான சக்தி பெறுவதற்கு அருணாசலனின் அரூள் வேண்டும்.
திருமாலின் அவதாரங்களில்
கிருஷ்ணாவதாரமும் ராமாவதாரமும் தான் பூரணாவதாரங்களாக கருதப்படுகின்றன.
அதிலும் ராமாவதாரம்
சிரேஷ்டமானது. ஜீவாத்மாக பிறந்து ஜீவாத்மா படுகின்ற எல்லாவிதமான கஷ்ட
நஷ்டங்களையும் அனுபவித்த அவதாரம் அது. சீதாபிராட்டியை
இராவணன் கவர்ந்து சென்ற பிறகு பல வருடங்கள் துன்பத்தை அனுபவித்த பிறகு சீதை
இருக்குமிடம் தெரிந்து இலங்கையை நோக்கிச் செல்லுகின்ற பொழுது இராமபிரான் இராமேஸ்வரம்
வந்தடைந்தபொழுது மனம் சஞ்சலப்பட்டு ஒரு பற்றுக்கொட்டை தேடினான். பரமேஸ்வரனின்
ஞாபகம் வந்து ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தான். அந்த பிரதிஷ்டை இன்று
இராமனாதன் என்ற பெயரிலும் அந்த இடம் இராமேஸ்வரம் என்ற பெயரிலும் அறியப்படுகிறது.
ஆனானப் பட்ட திருமாலின்
அவதாரமான இராமனுக்கே இந்த
உலகில் பிறந்ததின் காரணமாக ஒரு பற்றுக்கோடு தேவைப்
பட்டது. நாமெல்லாம் எம்மாத்திரம்?
இதையே தான் சிவானந்த
லஹரியில் ஆதி சங்கரரும் குறிப்பிடுகிறார்:
அஸாரே ஸம்ஸாரே நிஜபஜன-தூரே ஜடதியா
ப்ரமனதம் மாமந்தம் பரமக்ருபயா பாது-முசிதம் !
மதன்ய: கோ தூனஸ்-தவ க்ருபண்-ரக்ஷாதி நிபுணல்-
த்வதன்ய: கோ வா மே த்ரிஜகதி சரண்ய: பசுபதே !!
“மனிதப்பிறவி ஒரு
பயனுமில்லாததாகவும் இறை வழிபாட்டிற்கு ஒவ்வாத்தாகவும் இருக்கிறது. பௌதிக
சுகங்களைச் சுற்றி வருகிற நாமெல்லாம் புத்திஹீனர்கள். கண்ணிருந்தும் குருடர்கள்..நீ
தான் எங்களைக் காப்பாற்றவேண்டும்..உன் கருணைக்கு தகுதியானவர்கள் யார்
இருக்கிறார்கள்” என்று வினவுகிறார் ஆதி சங்கரர். ஆகவே அந்த பரமனின் அருள் வேண்டும்
என்பது எல்லோருக்கும் பொதுவானது என்று
புரிந்து கொள்ள வேண்டும்.
வைராக்யம்,பற்றற்ற மனோ
நிலை, சஞ்சலப் படாத புத்தி இவை இருந்தாலும் இறைவன் கருணை என்ற ஊன்றுகோல் இருந்தால்
தான் நாம் கீழே விழாமல் இருக்க முடியும்.
மஹாகவி பாரதியும் இதை
வேறு மாதிரி கூறியுள்ளார்:
காவித்துணி வேண்டா,கற்றைச்சடை வேண்டா
பாவித்தாற் போதும் பரம நிலை எய்துதற்கே
சாத்திரங்கள் வேண்டா,சதுர் மறைகளேதுமில்லை
தோத்திரங்களில்லை யுளத்த்தோடு நின்றாற் போதுமடா
!!
ஆதி சங்கரர் சிவானந்த
லஹரியில் மேலும் கூறுகிறார்:
ஸதா மோஹாடவ்யாம் சரதி யுவாதீனாம்குசகிரௌ
நடத்யாசா சாகாஸ்வடதி ஜடதி ஸ்வைரமபித:
கபாலின் பிக்ஷோ மே ஹ்ருதய
கபி மத்யந்த சபலம்
த்ருடம்பக்தயா பத்தவா சிவ பவததீனம் குரு விபோ
!!
“ என் மனம் எப்பொழுதும் ஒரு குரங்கைப் போன்று ஆசைகளாகின்ற கிளைக்குக் கிளை தாவுகிறது. பருவ
மங்கைகளின் மலைகளையொத்த மார்பகங்களில் அது கூத்தாடுகிறது. ஆசைகளாகிய சுழலில்
சிக்கி அங்குமிங்கும் ஓடுகிறது.இந்த மனக் குரங்கை பக்தி எனும் கயிற்றால் உறுதியாக
கட்டி,னீ தான் உன் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் “.
இந்தக் கருத்துக்கள்
அபிராமி அந்தாதியிலும் மையக் கருத்தாக காணப்படுகிறது;
ஆளுகைக்கு,
உந்தன் அடித்தாமரைகள் உண்டு,அந்தன்பால்
மீளுகைக்கு,
உந்தன் விழியின் கடை உண்டு,மேல் இவற்றின்
மூளுகைக்கு, என்
குறை,நின் குறையே அன்று,-முப்புரங்கள்
மாளுகைக்கு,
அம்பு திடுத்த வில்லான்,பங்கில் வாணுதலே
“ எனக்கு
முக்தியளிக்க, எமனிடமிருந்து- வீழ்ச்சியிலிருந்து-விடுதலைப் பெற அன்னை அபிராமியின்
திருவடி தாமரைகளின் ஸ்பரிசம் உண்டு; அன்னையின் கடைக்கண் பார்வை ஒன்று போதும் என்
மன சஞ்சலங்கள் அனைத்தும் நீங்க; நான் முயன்று வணங்கினால் பயனுண்டு; வணங்காமல் உன்
கருணை கிடைக்காவிட்டால் அது உன் தவறல்ல்; என் தவறே;” எங்கிறார் அபிராமி பட்டர்.
மற்றொரிடத்தில்
கூறுகிறார்:
ஈசனின் இடப்பாகத்தில் அமர்ந்திருக்கும் அன்னையே,
கொடிய ஆசைக்கடலில் விழுந்து எழ முடியாமல் தவிக்கும் எனக்கு முக்தியளிக்கக் கூடிய
சக்தி உன் திருவடிகளுக்கே உண்டு. நீ வலிய வந்து என்னை ஆட்கொள்ளாவிட்டால் எனக்கு
முதியேது ?”
ஆசைக் கடலில்
அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில்
அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம்
தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என்
சொல்லுவேன்ன்?-ஈசர் பாகத்து நேரிழையே
இதையே ரமண பகவான்
அக்ஷர மணமாலையில் முன்னால் கூறினார்:
கேளா தளிக்குமுன்
கேடில் புகழைக்
கேடுசெய் யாதரு ளருணாசலா
ஞான மார்க்கத்தை
விசார மார்க்கம் மூலம் விளக்கிய பகவான் சாமானியர்களான நமக்கு பக்தியின் பெருமையையும்
ஈசனின் அருள் வேண்டும் என்கின்ற சத்தியத்தையும் மீண்டும் மீண்டும்
வலியுறுத்துகிறார். “எல்லாம் என்னால் முடியும் என்ற அஹந்தையை விட்டொழிக்க வேண்டும்
என்பதே பகவானின் உபதேசம். சுருக்கமாக சொன்னால் பக்தி மார்க்கமாகட்டும் கர்ம
மார்க்கமாகட்டும் எதானாலும் ‘நான்” அழிய வேண்டும் இல்லையேல் முக்தியில்லை; என்பதே
பகவானின் உபதேசங்களின் சாரம்.
No comments:
Post a Comment