Friday, 6 March 2015

ரமணஜோதி 89

ரமணஜோதி 89

 

பேய்களை விரட்டுவோம்


பேய்த்தனம் விடவிடாப் பேயாப் பிடித்தெனைப்
          பேயனாக்கினையென் னருணாசலா
“ என்னைப் பிடித்திருந்த பேய் ஒரு வழியாக விட்டதென்”று நினைத்தால், விடாத பேயாய் நீ என்னைப் பிடித்துக் கொண்டு என்னை பித்தனாக்கி விட்டாய், அருணசலா “ என்று பகவான் ரமணர் இந்த சுலோகத்தில் நிந்தா ஸ்துதி செய்கிறார்.
முதலில், நம்மைப் பிடித்துகொண்டு தொந்திரவு செய்து வந்த அந்த பேய்கள் எவை என்று பார்ப்போம்.
கைவல்ய நவ நீதத்தில் தாண்டவராயன் பிள்ளை, இந்த பேய்களை, “பொன்னில மாதராசை” என்று வருணிக்கிறார்.
எந்த ஒரு விஷய வாசனையாகட்டும் அது ஒன்று பொன் –பொருள், அல்லது நிலம்  சம்பந்தப்ப்ட்டதாக இருக்க வேண்டும்; இல்லை அது பெண் சம்பந்தப் பட்டதாக இருக்க வேண்டும்; அல்லது  
இராமாயண காவியமே இராவணனின் தங்கை சூர்ப்பணகையின் ‘பாலின” இந்திரிய வாசனையாலும், பிறகு அவள் தூண்டுதலின் பேரில் இராவணனில் எழுந்த பெண்ணாசையாலும் உண்டானது. அதற்கு சற்று முன்னால் சென்று பார்த்தால்,இராமனின் வனவாசம் கைகேகியின் மண்ணாசையால்—தன் புத்திரனான பரதனுக்கு இராஜ பதவி வேண்டும் என்ற ஆசையால் விளைந்தது.
மஹாபாரதம் முழுவதும் பெண்ணாசையும் மண்ணாசையும் தாண்டவமாடுகின்றன.
பீஷ்மர் காசிராஜனின் பெண்களை சிறை எடுத்து வந்தது தனது சகோதரனின் பெண்ணாசைக்காக ! ஏன் ? பீஷ்மர் சபதம் செய்ததே தன் தந்தையின் பெண்ணாசைக்காகத் தானே ! ..பாண்டவ-கௌரவ போரே மண்ணாசையால் விளைந்தது.அது குருக்ஷேத்திரப் போரில் சென்று முடிந்தது;சர்வ நாசம் விளைந்தது.
பொன்-பெண்-நிலம் என்ற முன்றின் மீதுள்ள பற்றே பேய்த்தனமாக நம்மை பிடித்து ஆட்டுகின்றன. ஏன் இந்த மூன்றை மட்டும் குறிப்பிட்டு கூறவேண்டும்?
உலகில் விஷய  வாசனைகள் அனேகமாக இருந்தும் ஏன் இந்த மூன்றை மட்டும் குறிப்பிட வேண்டும்?
ஏனென்றால் எல்லா ஆசைகளும் ஏதோ ஒரு விதத்தில் இந்த மூன்றில் அடக்கமாக இருப்பதால்த் தான்.
யோக வாசிஷ்டத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
     மனைவியு மகரும் பொன்னு மமதைசெய் தமுதம் போல
     நினைவினா னேயஞ் செய்து  நீணிலத் துள்ள  வெல்லா
     மனையவர்க் காக செய்வர்---
பெண்ணிற்காகவோ பொருளுக்காகவோ எதர்க்காகவென்றாலும் அது மமதையால்- மமாகாரத்தால்- அஹம்காரத்தால் விளைகிறது..என்கிறது வாசிஷ்டம்
இதே கருத்து பாகவதத்திலும் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது:
     விழைவெனப்ப டுகின்றது மென்மெல
     வழல்விரிந்த கனகத் தரும்பிமென்
     மழலை மாதர் மருங்கிற் படர்ந்துபைங்
     குழவி மீதுகொழுந்துவிட்டொங்குமால்

அருண்கிரினாதரும் இதையே கூறியுள்ளார். “மூவேடணையென் றுமுடிந்திடுமோ” என்று.
பட்டினத்தாரும் இதையே நினைத்து புலம்புகிறார்:
     கன்னிவன நாதா கன்னிவன நாதா
     மூலமறியேன், முடியும் முடிவறியேன்
     ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா !
     அறியாமை யாம்மலத்தால் அறிவுமுதற்கெட்டனடா !
     பிரியா வினைப்பயனால் பித்துப் பிடித்தனடா.
     தனுவாதி நான்கும் தானாய் மயங்கினடா
     மனுவாதி சத்தி வலையிலகப்பட்டனடா
     மாமாயை யென்னும் வனத்தில் அலைகிறண்டா
     தாமாய் உலகனைத்தும் தாது கலங்கிறண்டா
     கன்னி வன நாதா! கன்னிவன நாதா !
     மண்ணாசைப் பட்டேனை  மண்ணுண்டு போட்டதடா
     பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே
     மக்கள்சுற்றத் தாசை மறக்கேனே யென்குதே
     திக்கரசாம் ஆசையது தீறேனே யெங்குதே
     வித்தைகற்கு மாசையது விட்டொழிய மாட்டேனே யென்குதே!

ஸ்வாமி வித்யாரண்யர் இதே கருத்தை வேறு வித மாகக் கூறுகிறார்: விஷய வாசனைகள் மூன்று வகைப் பட்டவை :
1.புகழாசை
2.அறிஞர் என்று போற்றப் பட வேண்டும் என்ற ஆசை
3.தேஹ வாசனை
முதலில் கூறிய இரண்டும் நடைபெற இயாலாத ஆசைகள். ஒரு நாளும் ஒருவரும் எல்லாராலும் போற்றப்பட மாட்டார். யாராவது சிலர் குறை சொல்லுவர். போற்றுவர் உண்டென்றால் தூற்றுவரும் உண்டு..ஸக்ஷாத் மஹாலக்ஷ்மியின் அவதாரமான ஸீதா பிராட்டியாரையும் குறை கூறினர் சிலர் ராமாயண காலத்தில்..எல்லோரையும் எப்பொழுதும் யாராலும் திருப்திப் படுத்த முடியாது. ஆகவே நம்மை பாராட்டுவர்களிடம் பிரியமும், குறைகாண்பவர்களிடம் வெறுப்பும் உளவாவது உலக இயற்கை.
கல்வியறிவும் இதே மாதிரித் தான். கல்விக்கான தாஹமும் மூன்று வகைப் பட்டது.
ஒன்று எல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற தாகம். எல்லாம் தெரிந்துகொள்வது சாத்தியமான காரியமல்ல. இதற்கு நமது சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் நிறைய உதாரணங்கள் காணலாம். பரத்வாஜ முனிவர் சிறந்த அறிஞர்.மூண்று ஜன்மங்கள் போதவில்லை அவருக்கு வேதங்களையும் சாஸ்திரங்களையும் புரிய வைப்பதற்கு, தேவேந்திரன் வர வேண்டி வந்தது; கற்பதற்கு..அவருக்கு இது இயலாத காரியம் என்று புரிய வைப்பதற்கு
இரண்டாவது வேதங்களிலும் வேத புத்தகங்களிலும் ஏற்படுகின்ற ஆழமான பற்றுதல். துர்வாச முனிவர் எல்லா வேதபுத்தகங்களையும் கற்றறிந்து, எடுத்துக்கொண்டு பரமேசுவரனைக் காணச் சென்றார். இதை கண்ணுற்ற  நாரதர், “ என்ன  முனிஸ்ரேஷ்டரே, இப்படி கழுதை போல் பொதி சுமந்து கொண்டு வருகிறீரே?” என்று கேலி பேசினார்.
துர்வாச முனிவரின் இயல்பு கண்மூடித்தனமான கோபம். அவர் நாரதரின் கிண்டலைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எல்லா கிரந்தங்களையும் சமுத்திரத்தில் தூக்கி எறிந்து விட்டார்.
மஹாதேவன் அவரை சமாதானப் படுத்தி தான் யார் என்று உண்ர்வதே சிறந்த அறிவு; புத்தக ஞானம் இதற்கு உதவவில்லையென்றால் அந்த அறிவினால் பலனே இல்லை என்று புரிய வைத்தார்.
மூன்றாவது வாசனை,சற்றும் வளைந்து கொடுக்காத சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத் தான் நடந்துகொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை. விஷ்ணு புராணத்தில் வரும் தாஸுரனின் கதை இதற்கு உதாரணம். சற்றுக் களங்கப் படாத இடத்தில் யாகாதி கர்மங்கள் செய்திட தாசுரன் உலகம் முழுவதும் சுற்றி வந்தும் ஒரு இடம் கூட கர்மங்கள் செய்வதற்கு லாயக்கில்லை என்று யாகமே செய்ய முடியாத நிலைக்குத் தள்.ளப்பட்டான்.
இதையெல்லாவற்றையும் விட மிகவும் கொடூரமான வாசனை தேஹ வாசனை.இந்த தேஹமே தான் என்று எண்ணி தேஹத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அலைய வைக்கும் வாசனை.தேஹத்தின் தேவைகள் இந்திரியங்களின் ஆற்றலிலிருந்து உளவாவது.அதை ஓருகாலும் திருப்தி செய்ய முடியாது.நெருப்பிலிட்ட விறகு போல் அது மேலும் மேலும் விறகைக்  கேட்டுக் கொண்டேயிருக்கும். ஒருமுறை தேஹ சுகத்திற்கு அடிமையாகிவிட்டால் மீண்டும் இந்த அந்த சுகத்தைத் தேடிக்கொணேயிருக்கும். அந்த தேடல் அவனுக்கு அளிக்கும் சுகத்தை விட துக்கமே  மிகுதி.. இவையெல்லாம் சேர்ந்து நம்மை பேய் பிடித்தது போல் தாண்டவமாடவைக்கும்.அது ஆனந்த தாண்டவமாயிராது என்பது மட்டும் உண்மை.
மது அருநத துவங்குமுன் எல்லா குடிகாரர்களும் சொல்வார்கள்,” எனக்கு நல்ல சக்தி உண்டு.எப்பொழுது வேண்டுமென்றாலும் என்னால் இந்தப் பழக்கத்தைலிருந்து விடுபட முடியும்.” என்று.எவ்வளவு பொய்யான நம்பிக்கை !
இப்படிப்பட்ட பேயாட்டத்திற்கு நாம் ஆளாவது ஏன்? இதே கேள்வியை அர்ஜுனனும் கிருஷ்ண பரமாத்மாவிடம் கேட்கிறான் பகவத் கீதையில்.
          

அத கேன ப்ரயுக்தோஅயம் பாபம்சரதி புருஷ:!
           அனிச்சன்னபி வார்ஷ்ணேய் பலாதிவ நியோஜித: !!
                           ப்.கீ அத்.3 கர்ம யோகம் சுலோ 36
“ நீயே இந்த மனிதர்களையெல்லாம் நடத்திக்கொண்டு போவதாக இருந்தும்,ஏன் அவர்கள் இச்சையில்லாமலிருந்தும் இம்மாதிரி பேயாட்டத்திற்கு ஆளாகிறார்கள்?”

பகவானின் பதில்களை அடுத்த மடலில் பார்ப்போம்.

No comments:

Post a Comment