Wednesday, 11 March 2015

ரமணஜோதி 92

ரமணஜோதி 92


லாஸ்யமா ? தாண்டவமா?


பொடியான் மயக்கியென் போதத்தைப் பறித்துன்
          போதத்தைக் காட்டினை யருணாசலா
“ மந்திரவாதி போல் சொக்குப்பொடி போட்டு ‘என் போதத்தை’ இருந்தவிடம் தெரியாமல் போகசெய்து விட்டாய் அருணாசலா. அது மட்டுமா.அந்த இடத்தில் உன் போதத்தை பதித்து விட்டாய் அருணாசலா. என்னே உன் கருணை! “ என்று வியக்குகிறார் பகவான் இந்த சுலோகத்தில்.
இந்த சுலோகத்தில் வரும் ‘என் போதம்’ உன் போதம்’ என்ற வார்த்தைகளை நாம் சற்று உள்ளே சென்று பார்க்க வேண்டும்.
என் போதம்’ என்றால் என்ன? ;தனுவை தானமென்று எண்ணும் அறிவு. இந்த உடலை நான் என்று எண்ணி உடலுக்கு ஏற்படும் சுக துக்கங்களை ‘’எனக்கு’ ஏற்பட்டதாக நினைத்து மகிழ்வதும் துன்பப் படுவதுமான அறிவை என் போதம் எங்கிறார் பகவான்.
இதே தான் அவித்யா எனப்படுவதும். இந்த போதத்தின் காரணமாக நாம் விருப்பு வெறுப்பு-ராக-த்வேஷாத்களுக்கு-ஆளாகிறோம்.
இந்த போதத்தை அறிவை- அல்லது அறிவின்மையை அழிப்பது அவ்வள்வு சுலபமன்று. இது ஒரு விதமான மயக்க நிலை.இதிலிருந்து மீளுவதற்கு கடின யத்தனம் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் அருணாசலனின் அருள் இருந்தாலோ ஒரு நொடியிடைகூட தேவை இல்லை. பகவானுக்கு இந்த போதம் அழிந்து ஞானம் ஏற்படுவதற்கு மிக குறைந்த நேரமே தேவைப் பட்டது. தாவோயிசத்தின் தந்தை என்று கருதப் படுகின்ற ‘லாவோட்சே’ க்கு கிழெ விழும் சருகை பார்த்த மாத்திரையிலேயே ஞானம் உண்டாயிற்றாம்.
‘உன் போதம்’ என்ற வார்த்தைமூலம் பகவான் அந்த பிரம்மத்தைப் பற்றிய ஞானத்தை குறிப்பிடுகிறார். ‘அஹம் ப்ரம்மாஸ்மி” ‘தத்துவமஸி” போன்ற மஹாவாக்கியங்களின் அறிவு தான் ‘உன் போதம்”.
தாண்டவராயன் பிள்ளை கைவல்ய நவனீதத்தில் கூறியது போல்,” யானே எங்குமாம் ப்ரம்மம் என்பால் கவருடைய புவனமெல்லாம் கற்பிதம்” என்ற உண்மைதான் ‘உன் போதம்”.
‘காண்பவன்’,’காணப்படும் பொருள்’,காணுவது” எல்லாம் மனதின் கற்பனைகளே; மனமோ எண்ணங்களின் குவியலே என்று பகவான் அடிக்கடி கூறுவார்.
இப்படிப்பட்ட சங்கல்பங்கள் இல்லாமலாவதே உன் போதம்.ஆகவே தான் பகவான் கூறுவார் ‘ஞானிகளுக்கேது,ஓய், சங்கல்பம்?” என்று.
இதே கருத்தை ஸ்ரீ நாராயண குரு தேவன் ‘தெய்வ தசகம்’ என்ற நூலில் கூறுவார்:
          ഒന്നൊന്നായെണ്ണിയെണ്ണിത്തൊ-
          ട്ടെണ്ണുമ് പൊരുളൊടുന്ഗിയാല്,
          നിന്നിടുമ് ദ്രുക്പോലുള്ളമ്

            നിന്നിലസ്പന്ദമാകണുമ്

         

            ஒன்னொன்னாயெண்ணியெண்ணித்தொ-

            ட்டெண்ணும் பொருளொடுங்கியால்,

            நின்னிடும் த்ருக்கு போலுள்ளம்

            நின்னிலஸ்பந்தமாகணும்

     

     

ஒன்றொன்றாக எண்ணி எண்ணி நாம் கண்டும் கேட்டும் தொட்டும் உணருகின்ற பொருள்கள் எல்லாம் ஒரு நிலையில் பொருளே இல்லாதது; அவையெல்லாம் அந்த தேவியில் அடக்கம்; இவைகளிலிருந்து கிடைக்கின்ற எந்த சுகமும் நிரந்தரமல்ல என்று புரிகின்ற வேளை வரும்; இது தான் வேதாந்தத்தின் முளை விடுதல்;அந்த வெளிச்சம் மெல்ல மெல்ல உண்மையில்  நீ யார் என்ற உண்மையை உனக்கு வெளிப்படுத்தும்.அந்த நேரத்தில் மற்ற பொருள்களெல்லாம் இல்லாதாகிவிடும்.நீ மாத்திரமிருப்பாய்.”
இதையே தான் பகவான் “உன் போதம்” என்று இந்த சுலோகத்தில் கூறுகிறார்.
இதை ஸ்ரீ நாராயண குரு தேவன் ‘ஜனனீ நவரத்ன மஞ்சரியில்” ‘ஆகமாந்த நிலை “ என்று கூறுவார்.
ஆகமம் என்றால் வேதம்.வேதங்களின் முடிவு வேதாந்தம் அது தான் ‘ஆகமாந்தம்’.
,வேதாந்தம் என்றால் இந்த அர்த்தமற்ற பிரயாணத்தின் முடிவு; அனுபவித்தது எல்லாம் போதும் என்ற எண்ணம் மனதில் அங்குரிப்பது. என்று பொருள்.
நாராயண குரு தேவன் கூறியுள்ளதைச் சற்றே பார்ப்போம்:

            மேலாய மூலமதியாலாவ்ருதம் ஜனனி !

                  நீ லாஸ்யமாடிவிடுமீ

            கோலாலவாய்வனலகோலாலகல்ம் புவன-

                        மாலாபமாத்ரமகிலம்

            காலாதியாய ம்ருதுனூலாலெ நெய்யுமொரு

                        லீலாபடம் பவதிமெய்-

            மேலாகெ மூடுமதினாலொருமுள்ளதறி-

                        விலாகமாந்த நிலயே !

வேதாந்தப் பொருளான ஜகத் ஜனனியை பிரார்த்தித்து குரு தேவன் அறிவுக்கெல்லாம் மூலமாக –ஆதாரமாயிருக்கின்ற அம்மா,உன்னை உன் போதத்தினால் மூடிக்கொண்டிருக்கிறாய் .நீயே மூல அறிவாய்- அடிப்படை போதமாய்- இருக்கின்றாய். .இருந்தாலும் உன்னிலிருந்து-உன் லாஸ்ய நடனதினால் உற்பத்தியாகின்ற இந்த பிரபஞ்சம் உன்னை மூடியிருக்கின்றது. இந்த பிரபஞ்சமே ஒரு லாஸ்ய நடனம் தானே
இந்த இடத்தில் ஒன்றைக் கூற வேண்டும். நடனம் என்பது இருவகைப்பட்டது என்று பரதமுனி தனது நாட்ய சாஸ்திர நூலில் கூறுகிறார்.
ஒன்று லாஸ்யம்; இன்னொன்று தாண்டவம். லாஸ்யம் ஸ்த்ரீ ரூபமாக பரிணமிக்கும்பொழுது,தாண்டவம் பௌருஷமாக உருவெடுக்கிறது, லாஸ்யம் உலக மாதாவின் நடனம் என்றால் தாண்டவம் அந்த பரமேசுவரனுடையது .உலக மாதாவின் லாஸ்ய நடனத்திலிருந்து இந்த பிரபஞ்சம் உருக்கொள்ளுகிறதென்றால், சிவ தாண்டவத்தில் இவையெல்லாம் ஒடுங்கி அழிந்து போகிறது. லாஸ்யமும் தாண்டவமும் ஸ்ரிஷ்டியுடைய இரு பக்கங்கள்.
லாஸ்யம் நமக்கு ஆசையை உண்டு பண்ணுகிறது; தாண்டவம் வைராக்யத்தை உள்வாக்குகின்றது. ராகமும் வைராக்யமும்-லாஸ்யபாவமும் தாண்டவ சொரூபமும் நம்முள்ளேயே உள்ளது.
இந்த லாஸ்ய பாவத்தை வெடிந்து வைராக்யத்தை நாம் கையிலெடுக்கணும். அது அவ்வளவு சுலபமல்ல.
ஆசையால் மூடப்பட்டிருக்கும் ஆதார உண்மை- சத்- எளிதாக வெளிக்கொணர முடியாதது.
ஈஸாவாஸ்யோபனிஷத் கூறுகிறது:   

            ஹிரண்மையேன பாத்த்ரேண

            ஸத்யஸ்யாபிஹிதம் முகம்

            தத்வம் பூஷன்னபாவ்ருணு

            ஸத்யதர்மாய த்ருஷ்டயே

‘ ஸத்’ எனப்படும் மூலமதி ஒரு தங்கசெப்பில் அடைபட்டிருக்கிறது.
சாமானியர்களான நம் கண்களுக்கு தங்கம் தான் தெரியும்; ‘ஸத்’ தெரியாது.
தங்கம் என்பது பௌதிகப் பொருள்களின் பிரதீகமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.ஆகவே தான் இராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறினார்: “ இந்த உலகிலிருந்து இரண்டு விஷயங்கள் அழிந்து விட்டால் ,முக்தி எளிதாகி விடும்; அவை காஞ்சனமும் காமினியும்.”
காஞ்சனம் –தங்கம் பௌதிக சுகங்களைத் தருகின்ற எல்லாப் பொருள்களையும் குறிக்கின்ற பொழுது, ’காமினி’ ஆணுக்கு பெண்ணிட்மும் பெண்ணிற்கு ஆணிடமும் ஏற்படுகின்ற கவர்ச்சியைக் குறிக்கின்றது.
இதையே ஒரு மலயாளக் கவிஞன் பாடியுள்ளான்:

            கனகம் மூலம்,காமினி மூலம் கலகம் பலவிதமுலகில்”

இராமாயணமாகட்டும் மஹாபாரதமாகட்டும் இந்த உண்மையின் வெளிப்பாடுகள் தான்.
குரு தேவன் கூறியுள்ள வார்த்தைகளில் சிலதைப் பார்ப்போம்:

            “கீலாலவாய்வனலகோலாஹலம் புவனம்”

கீலால என்றல் ஜலம்;வாயு,அனலன்(னெருப்பு) இப்படிப்பட்ட பஞ்ச பூதங்களினால் உளவாகின்ற கோலாகலம் தான் இந்த பிரபஞ்சம் .பஞ்சபூதங்கள் ஒன்றாக சேருவதும் அவை தனித் தனியாக பிரிவதுமான செய்கைகளினால் ஏற்படுகின்ற ஆரவாரம் தான் நாம் காணுகின்ற எல்லா இன்ப துன்பங்களுக்கும் காரணம். அதுவே தான் பிரபஞ்சமும்.
இந்த ஆரவாரத்தின் நடுவில் நாம். பிறகு நமக்கு நிம்மதியேது? இந்த ஆரவாரத்திலிருந்து தப்பிக்க வேண்டும். எப்படி?முடியுமா? ஆசையை தூண்டக்கூடிய பொருள்களின் முன்னால் உட்கார்ந்துகொண்டு தொடாமல் இருக்க முடியுமா? ஒன்றா இரண்டா அம்மாதிரி பொருள்கள்? எதைத் தொடுவது? எதை விடுவது? ஒன்றைத் தொட்டால் மற்றொன்றை விட்டால் கூடவே வரும் சுகமும் துக்கமும்.

எதையுமே தொடாமலிருக்க வைராக்யம் வேண்டும் .அதற்கு அந்த பரமனின் அருள் வேண்டும் அந்த ‘உன் போதத்தை அருளுமாறூ பகவான் அருணாசலனனிடம் பிரார்த்திக்கிறார்.

No comments:

Post a Comment