Wednesday, 11 March 2015

ரமணஜோதி 88

ரமணஜோதி 88
கருமம் பிரகிருதியின் குணம்

பெயர்நினைத் திடவே பிடித்திழுத் தனையுன்
          பெருமையா ரறிவா ரருணாசலா
“உன்னை மனதால் நினைத்தவுடனையே என்னை பிடித்து இழுத்து ஆட்கொண்டு விட்டாயே அருணாசலா! உன் பெருமையை யாரறியமாட்டார் அருணாசலா “ என்று பகவான் வியக்குகிறார் இந்த சுலோகத்தில்.
தன்னை யார் வாயிலோ அருணாசலம் என்ற பெயரை கேட்க வைத்து, பந்தங்களையும் சொந்தங்களையும் விட்டு விட்டு திரு அருணை நோக்கி  இழுத்து வந்து வாழ் நாள் பூராவும் இந்த உலகிற்கு வழிகாட்டியாக இருக்க வைத்த அருணாசலனின் கருணையை-பெருமையை நினைவு கூருகிறார் பகவான் இந்த சுலோகத்தில்.
நாமாக ஒன்றும் செய்வதில்லை எல்லாம் அந்த பரமனின் அருள்;கருணை தான்; பின் ஏன் நமக்கு இந்த கர்த்த்ருத்வ பாவம் என்று மறைமுகமாக கேட்கிறார் பகவான்
மாணிக்கவாசகர் இன்னும் ஒரு படி மேலே போய் கூறுகிறார்:
          உருத்தெரியாக் காலத்தே
          உள்புகுந்து என் உளம் மன்னிக்
          கருத்திருத்தி ஊன்புக்குக்
          கருணையினால் ஆண்டுகொண்ட
          திருத்துருத்தி மேயானைத்
          தித்திக்கும் சிவபதத்தை
          அருத்தியினால் நாய் அடியேன்
          அணிகொள் தில்லை கண்டேனே
                திருவாசகம்-கண்டபத்து சு3
  நான் உருவும் தோற்றமும் கொள்ளாத நிலையில் நீ என்னுள் புகுந்து நிலை பெற்று என்னை உருவாக்கினாய்”
தாயின் கருப்பையில் தந்தையின் சுக்கிலம் சென்று அடைவதற்கு முன்னையே பரமன் அங்கு சென்று  வரவேற்று குழந்தை எவ்வாறு உருவாக வேண்டும் என்று ஒரு சிறந்த மருத்துவன் போன்று நிர்ணயிக்கிறார். குழந்தயின் உடலில் ஒன்பது வாயில்களை வைத்து அந்த இடங்களில் தையல் போட்ட தழும்பு கூட தெரியாமல் இந்த உடலை உருவாக்குகிறார். இவரல்லவோ நாம் காணும் மருத்துவர்களில் தலை சிறந்த மருத்துவர்? இதுவல்லவோ கருணை? ஆக நாம் ஒன்று செய்வதில்லை;எல்லாமே அந்த பரமனின் செயல் தான் என்கிறார் மாணிக்கவாசகர் ..
நாம் ஒன்றும் செய்வதற்கில்லை;எல்லாம் அவன் செயல் என்று நாம் சும்மா இருந்துவிடலாமா? கூடாது என்கிறார் கீதாச்சாரியன்
          உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம் !
     ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹன்யாமிமா: ப்ரஜா: !
               ப்;கீ அத்3 சு 24
பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், “ நான் கர்மங்கள் செய்யாமல் இருந்து விட்டால் உலகம் அழிந்து விடும்; ஒன்று இருக்க வேண்டிய இடத்தில் இன்னொன்று இருக்கும்.அப்படி ஏற்படுகின்ற கலவையினால் சர்வ நாசம் சம்பவிக்கும்”
விதைகள் பல விதமான குண நலன்களுடையவை. ஆனால் அவை முளைத்து வளர்ந்து வரும்பொழுதுதான் நல்லவை எது,கெட்டவை என்று தெரிய வரும். எது விளையும் பயிர், எது களை என்று தெரிய வரும். தொழில் எதுவும் செய்யாமல் இருப்பது வாழாமல் இருப்பதற்கு சமானம்.செயலிழந்திருப்பது செத்ததற்கு சமானம்.
நெல் விதைக்க வேண்டிய நிலத்தில்  கோதுமை விளைவிக்க முயன்றால் விளையுமா? கையிருக்க வேண்டிய இடத்தில் கால் இருக்க முடியுமா? பரமன் சரியாக கருமம் செய்வதால் தான் அதாது இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது.
செயலில்லாமல் இருக்கும் உடல்கள் உலகிற்கு சுமையாக இருக்கும். அப்படிப்பட்ட ஜீவச்சவங்களால் உலகிற்கு எந்த நன்மையும் பயக்காது. தக்கார்-தகவிலார் வேற்றுமை மறைந்து போகும்,
பகவான் ரமணர் ஒரு முறை கூறினார்: ” சும்மா இருப்பது என்பது எந்த ஜீவனாலும் முடியாத காரியம். உயிர் வாழ்வதற்கு உணவு தேவை.அதை பிக்ஷை எடுத்தாவது பெற வேண்டும்.அதுவும் ஒரு கருமம் தானே.யாராவது உணவை கொண்டு தந்தாலும் அதை எடுத்து உண்ண வேண்டுமலவா? அதுவும் கருமம் தானே? வாயில் போட்டுத் தந்தாலும் உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டுமல்லவா? மூச்சை இழுத்துவிடுவது கூட கருமமே. ‘சும்மா இருத்தல் என்றால் கர்த்ருத்வ மனோபாவம் இல்லாமல் கருமம் இயற்றுவது என்பது தான்.”
கர்த்ருத்வ மனோபாவம் இல்லாமல் இருப்பது என்றால் ‘நான் செய்கிறேன்’ என்ற நினைப்பு இல்லாமல் இருப்பது.
அப்படிப்பட்ட கருமம் எப்படி இருக்க வேண்டும்?
          ந புத்திபேதம் ஜனயேதக்ஞானாம் கர்மசங்கினாம் !
          ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்வான்யுக்த: ஸமாசரன் !!
                     ப்.கீ அத் 3 சு 26
நமது செயல்கள் மற்றவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. மற்றவர்களுக்கு நாம் முன் மாதிரியாகயிருக்க வேண்டும் என்பது உண்மை;ஆனால் உபதேசம் என்ற பெயரில் அவர்கள் செய்கின்ற கர்மங்களில் குறை கண்டு விமரிசனம் செய்து நடக்கின்ற கருமங்களை நிறுத்தக் கூடாது.  கருமங்கள் செய்யாமலிருப்பதை விட பற்றுடனாவது கருமங்கள் செய்வது மேல்.பற்றுடன் கருமங்கள் செய்வதை விட பற்றில்லாமல் கருமங்கள் செய்வது மேல்.எல்லாராலும் அந்த நிலையை உடனடியாக அடைய முடியாது. அதற்கு அருணாசலனின் அருள் வேண்டும். அதற்கு அப்பியாசம் வேண்டும் அப்படி அப்பியாசம் செய்ய முடியவில்லை என்றால் அவனது பெயரையாவது தியானம் செய்ய வேண்டும்.  
கீதையில் பகவான் கிருஷ்ணர் மேலும் கூறுகிறார்:
ப்ரக்ருதேர் குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குணகர்மஸூ !
தானக்ருதஸ்னவிதோ மந்தாங்க்ருத்ஸ்னவின்ன
விசாலயேத் !!
                           ப.கீ அத் 3 சு 29
பிரகிருதியின் குணங்களால் மோகத்திற்கு இரையாகி இஹலோக விஷயங்களில் பற்று வைக்கின்ற மந்த புத்தியுடையோரை ஞானிகள் குழப்பக்கூடாது.
காய்-கனிகள் பிஞ்சாயிருக்கும் பொழுது தோலேது சுளையேது என்று தெரிவதில்லை.முதிர்ந்து பழுத்த பின்பே அது விளங்கும். பிரகிருதியின் இயல்பு கர்மம் என்பதும், ஆத்மாவிற்கு கர்மம் இல்லையென்பதும் அந்த நிலையில் தெரியாது. ஆகவே பிஞ்சு நிலையில் இருப்பவர்  கர்ம பந்தத்தில் இருந்தே ஆக வேண்டும்.அவர்களுக்கு ஆத்ம-அனாத்ம விசாரங்கள் வீண் குழப்பத்தைதான் ஏற்படுத்தும் அவர்கள் பற்றுடன் கர்மம் செய்து கொண்டிருப்பதில் தோஷமில்லை.
அவர்களை உற்சாகபடுத்துவதோடு ‘எல்லாம் ஈசன் செயல்,எல்லாம் அவன் உடமை,நான் அவனது தொண்டன்,என்ற எண்ணத்தை ஊக்குவிக்க வேண்டும்.


மயி ஸர்வாணி கர்மாணி ஸமன்யஸ்யாத்யாத்மசேதஸா !
நிராசீர்னிர்மமோ பூத்வாயுத்யஸ்வ விகதஜ்வா: !!
 .ப்.கீ அத்3 சு 30
கர்மங்களையெல்லாம் பரமனிடம் அர்பித்து, சித்தத்தைச் சைதன்யத்தில் வைத்து, ஆசையையும் மமாகாரத்தையும் அகற்றி மனக்கொதிப்பின்றி கர்மம் செய்யவேண்டும்.


No comments:

Post a Comment