Friday, 19 December 2014

ரமணஜோதி 21


பக்தி  எனும் பூரண சரணாகதி


கிரியுருவாகிய கிருபாக் கடலே
கிருபை கூர்ந்தருள்வாய ருணாசலா

கிரி என்றால் மலை. மலை உயரத்தைக் குறிக்கிறது. கடல் ஆழத்தைக் குறிக்கிறது. அருணாசலம் அக்னிப் பிழம்பான மலை. அக்னிப் பிழம்பின் அடியும் தெரியாது;முடியும்(முடிவும்) தெரியாது. ஆதியும் கிடையாது; அந்தமும் கிடையாது.

அப்படிப்பட்ட=-ஆதியும் அந்தமும் இல்லாத அருணாசலா, எனக்கு (எங்களுக்கு) நீ அருள்வாயாக.,என்கிறார் பகவன் இந்த ஈரடிகளில்.
மலையையும் கடலையும் குறிப்பிட்டு உயரமும் ஆழ்கடலும் ஒன்று தான். பிரமனின் வெவ்வேறு விதமான வெளிப்பாடுகள் தான் என்று சொல்லாமல் சொல்லுகிறார் பகவான்
சாதாரண மனிதர்கள் கடவுளிடம் எனக்கு செல்வம் வேண்டும், கல்வி வேண்டும், மனைவி மக்கள் வேண்டும் என்றெல்லாம் வேண்டுவார்கள். பகவானோ அருணாசலத்தின் அருள் மட்டும் இருந்தால் போதும் என்கிறார்.
துருவ ராஜகுமரன் கடுந்தவத்திற்குப் பின் மஹாவிஷ்ணு பிரத்தியக்ஷமான போது தான் எதற்காக தவம் இருந்தானோ அதை மறந்து உன் அருள் வேண்டும் என்றானாம். அது தான் சுத்த பக்தி
இதையே தான் கீதையில் பன்னீரெண்டாம் அத்தியாயத்தில் இரண்டாவது சுலோகத்தில் சொல்லுகிறார்.

:மய்யாவேச்ய மனோ யே மாம் நித்யயுக்தா உபாசதே !
ஸ்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா: !!

என்னிடத்தில் யாரொருவன் விருப்பு வெறுப்பு இல்லாமல் ஏகாக்கிரதையுடன் ஒருமனதாகி என்னை உபாசிக்கிறானோ அவன் தான் சிறந்த யோகி.

நிர்குணோபாசனையோ  சகுணோபாசனையோ எதுவாக இருந்தாலும் விருப்பு வெறுப்புக்களுக்கு இடம் கொடுக்க கூடாது. நமது மார்க்கமே சரியான மார்க்கம் மற்றெல்லாம் தவறானது என்ற எண்ணம் கூடாது. இதை விளக்குவதற்காகத்தான் கீதையில் கர்ம யோகம்,பக்தி யோகம் ஞான யோகம் என்று எல்லா மார்க்கங்களையும் விவரித்து கூறியிருக்கிறார் பகவான் கிருஷ்ணர்.
உண்மையான பக்தி உண்டாகிவிட்டால் இக லோக சம்பந்தமான ஆசைகள் மட்டுமல்ல, பரலோகத்தை குறித்துள்ள இச்சைகள் கூட இருக்க கூடாது.
பக்தி என்ற ஸம்ஸ்கிருத வார்த்தை பஜ் என்ற மூலத்திலிருந்த்து வந்துள்ளது. பஜனை,அனுராகம்,பிரேமை,பிரீதி எல்லாமே பக்தியைத்தான் குறிக்கிறது.
உண்மையான பக்தன் கடவுளை கடவுளுக்காகவே வேண்டுகிறான்.
அந்த பக்தியில் சுய லாபம் என்கிற பேச்சுக்கே இடமில்லை.
பயத்திற்கும் இடமில்லை.
தனையன் தந்தையைக் கண்டு -தந்தை எவ்வளவு பெரிய பதவியிலிருந்தாலும்- பயப்படுவதில்லை.
கடவுளிடம் வைக்கபடுகின்ற அன்பில் சுயநலம் என்பது கொஞ்சமும் இருக்காது.
கடவுளைக் காணவேண்டும் முக்தி கிடைக்க வேண்டும் என்று கூட வேண்டுவது கூடாது.
பிரஹலாதன் சிறுவனாயிருக்கும் போது அவனது தந்தையால் கடுமையான சோதனைக்குள்ளாக்கப் பட்ட போதும் கடவுளை நிந்திக்கவுமில்லை,கடவுளை தன் துணைக்கு அழைக்கவும் இல்லை. ஒவ்வொரு முறை சோதனைக்குள்ளாக்கப் பட்டபோதும் அவன் நாம் கடவுளை நெருங்கி விட்டோம் என்று தான் நினைத்தான்.
கடவுளோடு லயித்து விட வேண்டும் என்பது மட்டும் தான் அவனது குறிக்கோளாக இருந்தது
ஒரு முறை ஒரு பக்தர் பகவனிடம் ஒரு கேள்வியை ஒரு காகிதத்தில் எழுதிக் கேட்டார்:
பகவானிடம் அனன்ய சரணாகதி அடைந்தால் எல்லாம் கிடைக்குமென்கிறார்களே, அனன்ய சரணாகதி என்றாலொரேயிடத்தில் அமர்ந்து ஒரு வித சிந்தனையுமின்றி, சரீர போஷணைக்கு அவசியமாண,ஆஹாராதி சிந்தனைகளை விட்டு விட்டு எப்போதும் பகவானை நினைப்பது தானா?
ஏதேனும் வியாதி வந்தால் கூட சிகித்சை பெறவும் முயலாமல் தேக நலன் நலனின்மை இவற்றையெல்லாம் ஈசன் கையில், என்று பகவானிடம் ஒப்படைத்து விட வேண்டியது தானா?
கீதையில் ஸ்தித பிரக்ஞயை பற்றி இப்படி கூறப்பட்டுள்ளதே?

விஹாயகாமான் யஸ்ஸார்வான் புமாம் ஸ்சரதி நிஸ்ப்ருஹ்ஃ
நிர்மமோ நிரஹங்காரஃ ஸசாந்திம் அதிகச்சதி
              அத்தியாயம் 2-71
(ஆசைகளையெல்லாம் அறுத்து,அபிமானமும் அஹங்காரமுமின்றி உலவும் மனிதனெவனோ அவன் அமைதி பெறுகிறான்.)
இந்த சந்தேகங்கள் நம் எல்லோர் மனதிலும் எழக் கூடியது தான்.
இதற்கு பகவான் ரமணர் அளித்த பதில் நாமெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
இந்த கேள்விகளை படித்துவிட்டு பகவான் நிதானமாக புன்னகையுடன் கூறினார்.
அனன்ய சரணாகதியென்றால், எவ்விதமான எண்ணத்திலும் பற்றில்லாமலிருப்பது என்பது உண்மை தான். ஆனால்
சரீர போஷணைக்கு வேண்டிய ஆஹாரம், ஜலம், முதலியவற்றிற்கான முயற்சியையும் விட்டு விட வேண்டியது தானா?
என்றால் என்ன சொல்வது?
பகவான் அனுக்கிரகத்தினால் தானாக வந்ததைச் சாப்பிட வேண்டுமா? அல்லது கொஞ்சம் முயல வேண்டுமா?என்று கேட்டிருக்கிறாரா?
முயற்சி இல்லாமல் தானாக வந்தாலும் கூட சாப்பிடுவது யார்?யாராவது வாயிலே போட்டாலுமே விழுங்கவாவது செய்யணுமா இல்லையா? அது மட்டும் முயற்சியில்லையா?
நோய் வந்தால் சிகித்சை எடுத்துக் கொள்ளவேண்டுமா அல்லது நம் தேகஸ்திதியை பகவானிடம் ஒப்படைத்து விட்டுச் சும்மா இருக்க வேண்டுமா? என்று கேட்கிறார்.
சங்கரர் சாதன பஞ்சகத்தில் சொல்கிறார்--

க்ஷூத்வ்யாதிஸ்ச்ச சிகித்ஸ்யதாம்
பிரதிதினம் பிக்ஷஔஷதம் புஜ்யதாம்

க்ஷூத் என்றால் பசி, பசியும் ஒரு வ்யாதி தான்.அந்த வ்யாதிக்கு மருந்து ஆஹாரம் தான்.

பிக்ஷைக்காவது போகணுமில்லையா? எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு அசையாமல் உட்கார்ந்துகொண்டு, வந்தால் சாப்பிடுகிறேனென்றால், உலகம் நடப்பது எப்படி?
ஆகையினாலே, அவரவர்களின் சமஸ்காரங்களுக்குஏற்பப் பிரப்தமானதை அனுபவித்துக் கொண்டு ,செய்பவன் நான்’ என்ற கர்த்ருத்வ’ பாவமில்லாமல் இருக்க வேண்டும்.
செய்பவன் நான் என்ற எண்ணம் தான் பந்தம்.  அந்த பந்தமில்லாமலிருக்கும் வழியை  ஆராய்ந்து தெரிந்து கொள்ளவேண்டுமே தவிர ,பசிக்கு ஆஹாரம் சாப்பிடலாமா,வியாதி வந்தால் மருந்து கொடுக்கலாமா என்று சந்தேகங்களை வைத்துக் கொண்டிருந்தால்,அவை முடிவில்லாமல் போய்க்கொண்டேயிருக்கும்.
அப்புறம் வலி வந்தால் முனகலாமா?மூச்சை உள்ளே இழுக்கலாமா? என்றெல்லாம் கூட சந்தேகங்கள் வரும்.
அனன்ய சரணாகதி செய்ய்ய வேண்டும் என்றால் மற்ற சிந்தனைகளையெல்லாம் விட்டு விட்டு மனத்தை கடவுளிடம் லயிப்பிக்க  வேண்டும்.

அப்படி ஒரு நிலைமையை அடைவதற்கு அருணாசலா நீ அருள வேண்டும் என்று நம் சார்பில் கேட்கிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்.

No comments:

Post a Comment