‘அபயம் சர்வ பூதேப்ய
கையினிற் கனியுன் மெய்ரசங் கொண்டுவ
கைவெறி கொளவரு ளருணாசலா
“ஸோமபானம் அருந்தினால் எப்படி ஒருவிதமான தன்னை மறந்த மயக்கம் வருமோ அது போல் எனக்கு உன் மெய்–உண்மையான சொரூபத்தைக் கண்டால் மயக்கம் வரும். உன் சொரூபத்தை நான் உள்ளங் கையிலுள்ள கனி போல் உணருகிறேன். ஆகவே நான் இந்த இஹலோகத்தை முற்றிலும் மறந்து உன்னில் லயித்துவிடுவேன்.அதற்கு நீ அருளவேண்டும் அருணாசலா,” என்று இந்த சுலோகத்தில்.வேண்டுகிறார் பகவான்
“உள்ளங்கையில் நெல்லிக் கனி போல்” என்பது தமிழிலுள்ள வழக்கு. ஆனால் முருகனார் போன்ற பகவானின் சீடர்கள், திராட்சை பழம் தான் நெல்லிக்கனியை விடப் பொருத்தமாக இருக்கும் என்கின்றனார்.;
ஏனென்றால் திராட்சை நெல்லிக்கனியை விட இனிப்பானது, அதுவேதான் மது போன்ற பானங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. நெல்லிக்கனியிலுள்ள துவர்ப்பு திராட்சையில் கிடையாது. ஆத்ம சாக்ஷாத்காரம் அடையும்பொழுது பெறுகின்ற பேரின்பம் மற்ற எல்லாவற்றையும் விட நிலையானது, இனிப்பானது, சுவையானது.
பக்தியின் உச்ச நிலையிலுள்ள ஒருவிதமான பரவச நிலையைத்தான் இங்கு பகவான் குறிப்பிடுகிறார்
பக்தி மார்க்கத்தில் பூரணசரணாகதியாகி பரமேசுவரரின் பூரண அருள் எனும் அமுதை பருகும் பொழுதாகட்டும் ஞான மார்க்கத்தில் ஞானம் பெற்று பூரண ஞானியாகும் பொழுது ஆகட்டும் ஜீவாத்மாக்கள் பரமாத்மாவுடன் பூரணமாக லயித்து ஒரு பரவச நிலையை உருவாகிறது. அப்பொழுது நம்மை
சுற்றி என்ன நடந்தாலும் நாம் ஒரு சாக்ஷி மாத்திரமாய் பார்த்துக்கொண்டு இருப்போமே தவிர நம்மை அவை எந்த விதத்திலும் பாதிக்காது.
பக்தி என்பது ஆழமான தெய்வீக அன்பின் பரவச நிலை என்று நாரத சூத்திரம் இரண்டாவது சூத்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது
ஸத்யஸ்மின் பரமப்ரேம ரூபா !
உண்மையான பக்தியின் இன்னொரு இலக்கணம் ‘அனன்யதா’.
‘நமது மனதின் இலட்சியம் பரமாத்மாவைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது. சிந்தாமல் சிதறாமல் பரமாத்மாவின் மீதே கவனம் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல நாம் இஹலோகத்தில் காணும் பொருட்கள் அனுபவிக்கும் அனுபவங்கள் இவைகளின் பால் விருப்போ வெறுப்போ உணரக்கூடாது’.
ஒருமுறை ரப்பைய்யா என்ற ஸூபி பக்தை தனது பிரார்த்தனை புத்தகத்தில் ஒரு திருத்தம் செய்தார்.
அந்த புத்தகத்தில் இருந்த வரிகள் கீழ்க்கண்டவாறு:
‘அல்லாவை நேசி; சாத்தானை வெறுத்து விடு’
அந்த பெண்மணி ஒரு சிவப்பு பென்சிலை எடுத்து ‘சாத்தானை வெறுத்து விடு” என்ற வார்த்தைகளை அடித்து விட்டாள்.
இதைக் கண்ட மௌலவி ஒருவர் ,”புனித நூலில் திருத்தம் செய்வது பாப காரியம். நீ இந்த திருத்தம் செய்திருக்க கூடாது.” என்று கண்டித்தார்.
அதற்கு அந்த பெண்மணி கூறினாள்.” நான் அல்லாவை நேசிக்க ஆரம்பித்த பின் எனது இதயத்தில் மற்ற எதையும் வெறுப்பதற்கு இடமே இல்லை. நான் என்ன செய்ய?” தூய பக்தியில் மனம் நிறைந்து விட்டால் நம்மால் எதையும் யாரையும் வெறுக்க முடியாது.
தஸ்மின்னன்யதா தஹிரோபிஷூதாஸீனதா ச !
நாரத சூத்திரம்
-9
அனன்ய பக்தி என்பது ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு என்ற எண்ணம் இல்லாமலிருப்பதும் தான்.
பூரண சரணாகதி அடைந்த பின் அல்லது ஞானியான பின்,ஆத்ம சாக்ஷாத்காரம் அடைந்த பின் அவர்களின் செய்கைகள் மற்ற ஜீவாத்மாக்களுக்கு பைத்தியக்காரத்தனமாகக்கூட தோன்றலாம்.
ஒரு ஃபகீர் (சாது) ஒரு வீட்டுத் திண்ணையில் இரவு நேரங்களில் தங்கியிருப்பார். நகர சோதனைக்காக செல்கின்ற அரசர் இரவு பூராவும் விழித்துக் கொண்டே உட்கார்ந்திருக்கின்ற ஃபகீரைப் பார்த்து அதிசயப்பட்டார். ஒரு நாள் அவரிடமே கேட்டுவிட்டார்,” ஏன் இப்படி இரவு பூராவும் தூங்காமலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?”
அதற்கு அவர் சொன்ன பதில் இது தான்:
“என்னிடம் மிகுந்த விலைஉயர்ந்த பொருள் ஒன்று உள்ளது. அது மிகுந்த சிரமத்திற்கு பின் நான் சம்பாதித்தது. அது நஷ்டமடையாமல் இருப்பதற்கு தான் நான் ராத்திரி பூராவும் கண் விழித்து இருக்கிறேன்.”
அரசன் சுற்றுமுற்றும் பார்த்தான். அந்த ஃபகீரிடம் ஒரு அதுங்கி உரு மாறிய அலூமினிய தட்டைத் தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை.
அரசன் கேட்டான்,” உனக்கு என்ன பைத்தியமா? உன்னிடம் அப்படி என்ன விலை உயர்ந்த பொருள் உள்ளது?”
ஃபகீர் சொன்னார்,” உங்கள் கண்களுக்குத் அது தெரியாது. நீண்ட காலமாக கடவுளிடம் பக்தி செலுத்தியதின் பயனாக எனக்கு கிடைத்துள்ள அந்த பரமானந்தத்தை உங்களால் பார்க்கவும் முடியாது;.உணரவும் முடியாது. நான் உறங்கி விட்டால் அந்த பேரின்பம் எனக்கு நஷ்டமாகிவிடும்.”
இது சாமானியர்களின் கண்களுக்கு பைத்தியக்காரத்தனமாகத் தான் படும்.
ஸ்வாமி விவேகனந்தர் காலத்தில் வாழ்ந்த காஜியபூரைச் சேர்ந்த பவஹரி பாபா ஒரு முறை ஒரு நாய்க்குப் பின்னால் ஒரு ரொட்டித் துண்டை எடுத்துக் கொண்டு ஓடினார். சும்மா ஓடவில்லை;இப்படி கத்திக் கொண்டே ஓடினார்,” என்னருமை ராமா, சற்றே நில். நான் இந்த ரொட்டியின் மீது சீக்கிரம் வெண்ணையைத் தடவித் தருகிறேன். வெறும் ரொட்டியை எப்படித்தின்பாய்?”
ஆனால் சாமானிய மனிதர்களுக்கு அவரின் செய்கை பைத்தியக்கரத்தனமாகத் தான் படும். ஆனால் அவர் அந்த நாயில் சாக்ஷாத் ராமனைக் கண்டார் என்பது எப்படி மற்றவர்களுக்குத் தெரியும்?
ஒரு முறை எச்சம்மாள் என்ற பக்தை பகவான் ரமணரிடம்
( அப்பொழுது ரமணர் விரூபாக்ஷ குகையில் இருந்து வந்தார்)
இப்படி முறையிட்டாள்:
“நான் கொடுத்து வைக்காதவள். பகவானுடைய படத்தையும் சேஷாத்திரி சாமிகளின் படத்தையும் வைத்து ,அதற்கு லக்ஷ பத்ரம் (இலை) பூஜை செய்ய வேண்டும் என்று வேண்டிண்டிருந்தேன்..ஆனால் எனக்கு ஐம்பதாயிரத்திற்கு மேல் துளிர் இலைகள் கிடைக்கவில்லை. நான் என்ன செய்வேன்?”
பகவான் மிகவும் சாதாரணமாக கூறினார்:” இலைகள் கிடைக்காவிட்டால் உன் உடம்பை கிள்ளிக்கொண்டு பூஜை பண்ணுவது தானே?’
“பகவான் என்னை கேலி செய்கிறீர். உடம்பை கிள்ளினால் வலிக்காதா? அதுவும் ஒரு லக்ஷம் தடவை?” என்றாள் எச்சம்மாள்.
“கிண்டலும் இல்லை;கேலியுமில்லை. உன் உடம்பை கிள்ளினால் வலிக்கும்; இலைகளை கிள்ளினால் செடிகளுக்கு வலிக்காதா?” என்றார் பகவான்.
எச்சம்மாள் வெல்வெலத்துப் போய்விட்டாள்.
“இதை முன்னமையே என் ஸ்வாமி சொல்லவில்லை?” என்று கேட்டதற்கு பகவான் சொன்னார், ”உன் உடம்பை கிள்ளினால் வலிக்கும் என்று தெரிகிறது; இலைகளை கிள்ளினால் செடிகளுக்கு வலிக்கும் என்று ஏன் தெரியாமல் போயிற்று?”
ஆத்ம சாக்ஷாத்காரம் அடைந்த ஞானிகளுக்கு பிரகிருதியிலுள்ள எல்லா பொருள்களும் ஒன்றுதான்.
இதைத்தான் ‘அபயம் சர்வ பூதேப்ய:’ என்கிறார்கள் போலும்
இதே கருத்தை பகவான் தமிழில் மொழி பெயர்த்த ‘தேவிகா லோத்திரத்தின் ஞானாசாரவிசாரபடலத்தில்”கூறியுள்ளார்:
“வேரெதுவு தான்பிடுங்க வேண்டா மிலையினையும்
வேறுபடுத் துஞ்செயலும் வேண்டாமே –சீறி
யினாத செய வேண்டா மெவ்வுயிர்க்கும் பூவு
மனாதரவாய்க் கிள்ளவேண் டாம்காண்.”
எந்த வேரையும் பிடுங்க வேண்டாம். எந்த இலையையும் பறிக்கவேண்டாம்.எந்த உயிர்க்கும் துன்பம் தரக்கூடிய காரியங்களைக் கோபித்து செய்ய வேண்டாம். பரிவின்றி மலரெதையும் கொய்ய வேண்டாம் .
பாகவதத்தில் உத்தம பக்தனுக்கான லக்ஷணம் ‘எல்லா உயிரினங்களையும் சமமாக பாவிப்பது, பக்தர்களிடம் சிரத்தையுடனும் பக்தியில்லாதவர்களிடம் கிருபையுடனும் பழகுவது’ என்று கூறப்பட்டுள்ளதை இங்கு நினைவு கூற வேண்டும்
No comments:
Post a Comment