ரமணஜோதி 44
கர்ம பலங்களும் இகலோக வாழ்வும்
சேரா யெனின்மெய் நீரா யுருகிக்கண்
ணீராற் றழிவே நருணாசலா
சையெனத் தள்ளிற் செய்வினை சுடுமலா
லுய்வகை யேதுரை யருணாசலா
இந்த அஞ்சலில் அடுத்த இரண்டு செய்யுள்களைப் பார்ப்போம்.இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்வது ஏன் என்றால் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடைவையாக இருப்பதால் தான்.
அருணாசலா, நீ என்னை அங்கீகரித்து என்னை உன்னில் அடைக்கலமாக்காவிடில் என் கதி அதோகதி தான். நான் இந்த உடலை வைத்துக் கொண்டிருப்பதில் எந்தப் பொருளும் இல்லை.என்னை உன்னோடு சேரமுடியாத கவலை வாட்டியெடுக்கும் பொழுது என் உடல் நீராய் கரைந்து உருகிவிடும். என் கண்களிலிருந்து வரும் நீர் நிற்கவே செய்யாது. அழுது அழுதே என் காலம் கழிந்து விடும்.
நீ என்னை சை எனத் தள்ளிவிட்டால் நான் அந்த சூட்டிலேயே வெந்து வெண்ணீராகிவிடுவேன்,அருணாசலா என்று தொடருகிறார் பகவான்.
இந்த இரண்டு குறள்களும் பக்தியின் பரமோன்னத நிலையை ஒருப்பக்கம் குறிப்பிடுகிறது என்றாலும், மறுபக்கம் பகவானின் கர்ம சித்தாந்தத்தின் விளக்கமாகவும் அமைகிறது.
தலைவி தலைவனிடம் கெஞ்சுவது போன்ற பாணியில் இந்த இருவடிகளையும் பகவான் அமைத்துள்ளார்.
நாயகீ-நாயக பாவத்தில் புனையப்பட்டுள்ள ஈரடிகள் இவை.
காளிதாசரின் சாகுந்தலத்தில் துஷ்யந்தன் சகுந்தலையை விட்டு பிரிந்து போன பிறகு சகுந்தலையின் நிலையை விவரிக்கின்ற களிதாசர் கூறுவார்:
பிரிவின் துயரம் தாளமாட்டாமல் சகுந்தலை கரைந்து உருகி துரும்பாக இளத்துப் போனாள்;அவளது வளைகள் கைகளிலிருந்து நழுவி கீழே விழுந்துவிடும் போலிருந்தது;:அவளது சேலை இடையில் நிற்காமல் கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது.
உடல் ச்சூட்டை தணிக்க தோழியர் தாமரை இலைகளை மார்பகங்களீன் மீது போடபோட அவை வாடிக்கருகி போய்க்கொண்டிருந்தன..
காளிதாசரின் வருணனை பகவான் ரமணரின் இந்த செய்யுள்களை ஒத்து இருக்கிறது.
பரமனிடம் சேராவிட்டால் அப்படியென்ன துன்பம் ஏற்படப் போகிறது?
இங்குதான் சிறிது சிந்திக்க வேண்டும். நம் பிறப்பின் காரணமே நமது முன் ஜன்ம கர்மங்கள் தான்.கர்ம பலன்களை அனுபவிக்காமல் நமக்கு விடுதலை கிடையாது என்கிறது வேதங்களும் உபனிஷத்துக்களும்.
பகவான் ரமணரும் வேதங்களும் உபனிஷத்துக்களும் கூறியுள்ள கர்ம சித்தாந்தத்தை ஒப்புக்கொள்கிறார். ரமணர் கர்மங்களை மூன்று விதமாக பிரிக்கலாம் என்கிறார்:
சஞ்சித கர்மம்:
முன் ஜன்மங்களில் செய்த வினைகளின் பயனாக நாம் சேகரித்து வைத்துள்ள கர்மங்கள்
பிராரப்த கர்மம்:
இந்த வாழ்வில் நாம் அனுபவித்து தீர்க்க வேண்டிய கர்ம பலன்கள். இவை சஞ்சித கர்மத்தின் ஒரு பகுதியே ஆகும். சஞ்சித கர்மங்கள் முழுவதையும் ஒரே ஜன்மத்தில் அனுபவித்து தீர்க்க முடியாது. ஈசுவரனின் தீருமானப்படி அவை ஜன்மங்களிடையே பகிர்ந்தளிகபடுகிறது.
ஆகாமி கர்மம்
பிராரப்த கர்மபலனை அனுபவிக்கின்ற பொழுது நாம் செய்ய்ய வேண்டி வருகின்ற வினைகளின் பயனாக நாம் சேகரிக்கின்ற கர்மங்கள். இவை சஞ்சித கர்மங்களின் சேகரத்தில் போய் சேருகின்றது.அவை அடுத்து வரும் ஜன்மங்களில் அனுபவித்து தீர்க்க வேண்டியவை. இது ஒரு தொடர்கதையாகி விடுகிறது.
ரமணர் கர்மபலங்கள் கடவுளால் தீருமானிக்க படுகின்றன என்பதில் மாறுபட்ட கருத்து கொள்ளவில்லை.
அவரது உபதேசவுந்தியாரில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:
கன்மம் பயன்றரல் கர்த்தன தாணையாற்
கன்மங் கடவுளோ வுந்தீபற
கன்மஞ் சடமதாலுந்தீபற
வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்திடு முந்தீபற
வீடு தரலிலை யுந்தீபற.
ஆனால் நாம் இந்த சரீர பந்தத்திலிருந்து விடுபட்டு அந்த பரமனுடன் ஐக்கியமாகிவிட்டால் கர்ம பலங்கள் நம்மை தாக்காது என்கிறார்.
பகவான் ஒரு பக்தரின் கேள்விக்கு பதிலளிக்கும் பொழுது கூறுகிறார்:
அஹங்காரம் நான் என்ற மமதை தான் நம்முடைய ஆன்மாவிற்கும் உடலுக்கும் இடையிலிருந்து கொண்டு நம்மை இகலோக வாழ்க்கையுடன் பிணைத்து வைக்கிறது.அந்த அஹம் அழிந்து விட்டால் நாம் பரமாத்மாவுடன் ஐக்கியமாகிவிட்டால், கர்மங்கள் யாரை பற்றிக்கொண்டு நின்றதோ அந்த பற்றுக்கோடு அழிந்துவிட்டால் கர்மங்கள் யாரை சார்ந்திருக்கும்? ஆகவே “நான்” இல்லையென்றால் “நான்” செய்கின்ற கர்மங்களும் இல்லை.
இந்த ஜன்மத்திற்கு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள கர்ம பலன் கள் நம்மை தொடர்ந்து கொண்டு தானிருக்கும்.ஆனால் ஆத்மசாக்ஷாத்காரம் அடைந்த ஒருவனுக்கு கர்ம பலன்களின் தாக்கம் தெரிவதில்லை என்பது மட்டுமல்ல,சஞ்சித கர்மத்தில் எஞ்சியுள்ள கர்மங்களும் அழிந்து போய்விடும்.
கர்திருத்வ மனோபாவம் அழிந்துவிடுவதால், ஆகாமி கர்மங்களும் சேருவதற்கு வாய்ப்பில்லை.
அதனால் பகவான் கூறுகிறார்:
உதித்த விடத்தி லொடுங்கி யிருத்த
லதுகன்மம் பத்தியு முந்தீபற
வது யோக ஞானமு முந்தீபற
ஆனால் அப்படியொரு ஆத்ம சாக்ஷாத்காரம் நிகழவில்லை யென்றால் நாம் இந்த் கர்ம சுழ்ற்சியில் சிக்கி தவித்துக் கொண்டு தானிருக்க வேண்டும்.அப்படியொரு விடுதலை கிடைக்க வேண்டுமென்றால் அந்த அருணாசலன் அருள் வேண்டும்.
இதைத்தான் ஸ்ரீ அருணாசல பதிகத்தில் பகவான் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:
கருணையா லென்னை யாண்ட நீ யெனக்குன்
காட்சிதந் தருளிலை யென்றா
லிரணலி யுலகி லேங்கியே பதைத்திவ்
வுடல்விடி லென் கதியென்னா
மருணனைக் காணா தலருமோ கமல(ம்)?
No comments:
Post a Comment