Sunday, 28 December 2014

ரமணஜோதி 42

ரமணஜோதி  42

அருட்பெரும் ஜோதி--பிரம்மமே ஒளி; ஓளியே பிரம்மம்


சூதுசெய் தென்னைச் சோதியா தினியுன்
சோதி யுருக்காட் டருணாசலா

இந்த சுலோகத்தில் கவனத்தில்க் கொள்ள வேண்டிய இரு சொற்கள்சூது மற்றும் சோதியுரு.
அப்படியென்ன சூது செய்தான் அருணாசலன்? பகவான் ஏன் இப்படி கூறுகிறார்?

எல்லா ஆத்மாக்களும் ஒன்று தான்; அவையெல்லாம் சுத்த சைதன்யம் தான்; சுயம் பிரகாசிக்கின்றவை தான். அவையெல்லாமே பிரமம் தான். இதைத் தான் தாண்டவராயன் பிள்ளை கைவல்ய  நவநீதத்தில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.:

-----யானே எங்குமாம் பிரம மென்பால்
கவருடை புவன மெல்லாம் கற்பிதமென்ற றிந்து
                   கை  தத்துவ விளக்க படலம் சு.3
ஆகாயம் எப்படி எங்கும் பரந்து விரிந்து தென்படுகிறதோ அது போல்  கலப்படமற்ற சுத்த சிதாத்மாவான பஞ்ச கோசங்களாலான இந்த ஸ்தூல சரிரம் நானல்ல;அதன் மேல் படர்ந்துள்ள மனோ விகல்பங்களும் புத்தி சம்பந்தப் பட்ட அஞ்சானங்களும் நானல்ல; விஷ்ணு,சிவன்,பிரம்மா இந்திரன் என்று பல பெயர்களில் அறியப்படும் கலப்படமற்ற சிதாத்மாவான் பர பிரமமே யான் ;கூறுபட்டு,மாறுபட்டு பல உருவங்களாக காணப்படுமிந்த பிரபஞ்சமெல்லாம் அவித்யயினால் ஏற்பட்ட மாயையே.
இப்படிப்பட்ட சுத்த சிதாத்மாவான நான் எப்படி அவித்யைக்கு ஆளாகிறேன்? இந்திரியங்களின் ஆளுமைக்கு ஏன் அடிபணிகின்றேன்? எப்படி நான் இந்த ஆசாபாசங்களால் கட்டப் படுகிறேன்?
எல்லாம் பூர்வ ஜன்ம கர்மங்களின் விளைவு என்று விளக்கம் அளிப்பார்கள். பூர்வ ஜன்மத்திற்கும் பூர்வ ஜன்மத்திற்கும் பூர்வ ஜன்மத்திற்கும்---இப்படியே போய் ஒரு ஆரம்பம் இருக்க வேண்டுமல்லவா? அந்த ஆரம்ப ஆத்மா ஏன் இந்த மாய வலலையில் சிக்க வேண்டும்? ஏன் ஆதாம் ஏவாளுக்கு அந்த விஷமக் கனியை திங்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று?
இதற்கு வேதாந்த்தில் நிறைய தத்துவ விளக்கங்கள் கூறப் பட்டுள்ளன
ஆதி சங்கரர் அவித்யா என்பது நைசர்கிகம் என்கிறார். நைசர்கிகம் என்றால் உடன் பிறப்பு என்று பொருள். நாம் பிறக்கும் பொழுதே அது நம்முடன் பிறந்து விடுகிறது. அது மனிதனின் பால பருவத்தில் உள்ளே உறங்கி கிடக்கிறது. அவன் அல்லது அவள் வளர வளர நான் எனும் அஹங்காரமும் வளர்ந்து கொண்டே போகிறது.
அவித்யை உண்டாவது மித்யாஞானத்தால்”’ மித்யா ஞானமென்றால் தவறான ஞானம். நாம் காண்பதெல்லாம் நித்யம்-சத்யம் என்ற தவறான அறிவு.அதை அறிவு என்று கூறுவதே தவறு.
நாம் பிறக்கும் பொழுது நம்முடன் ஒரு மனதும் பிறந்து விடுகிறது. மனது தான் சகல விதமான வேற்றுமைகளுக்கும் காரணம்.சிறிது-பெரிது, மேல்-கீழ், நல்லது-கெட்டது  சரி-தவறு உயர்ந்தவை-தாழ்ந்தவை இப்படி பல பல. இதில் எதுவும் உண்மையல்ல. இவையெல்லாம் அனித்யம் என்பது சாதாரணமாக நமக்கு புரிவதில்லை;தெளிவதில்லை.
மனதை ஒடுக்கிவிட்டால் அவித்யையும் அழிந்து விடும். அதற்கு தான் நம் முன்னோர்கள் ஜபம் தவம்,பிராணாயாமம்,சத்சங்கம் போன்ற பல உபாதிகளை அறிவுறுத்தியுள்ளார்கள். அவையெல்லாம் மனதை சிறிது காலத்திற்கு கட்டுக்குள் வைத்திருக்கும்;சந்தர்ப்பம் கிடைத்து விட்டால் அது கட்டவிழ்த்துக் கொண்டு ஓடி விடும். நிரந்தரமான தீர்வு ஞானம் பெறுவது தான். அது நான் யார் என்ற விசார மார்க்கத்தின் மூலம் மட்டும் தான் முடியும்.

அஹங்காரம் எப்படியுண்டாகிறது? அது புத்தியின் தாக்கத்தால் உண்டாகிறது. புத்தி அல்லது பேத புத்தி தான் அஹங்காரத்தின் மூல காரணம்.அதுவே தான் மமதையின் விளை நிலம் அஹந்தை அல்லது அஹங்காரமானது மேகங்கள் எப்படி சூரியனை மறைக்கிறதோ அப்படி ஞான சூரியனான
சுத்த சித்- மறைக்கிறது.
அதெல்லாம் சரி; ஆனால் ஏன் இந்த அஹந்தை உண்டாக வேண்டும்?
ஒரு முறை ஒரு ஞானி அரசனிடம் விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.அரசன் கேட்டான், கடவுள் இருக்கிறார் என்றல் எங்கேயிருக்கிறார் காண்பியுங்கள்,பார்க்கலாம்
ஞானி சொன்னார், பதில் கூறுவதர்க்கு முன் எனக்கு ஒரு குவளையில் பாலும் இன்னொரு குவளயில் தயிரும் தர முடியுமா?
அரசன் பாலையும் தயிரையும் வரவழைத்தார்.

ஞானி கூறினார், இதோ இந்த குவளையில் பால் இருக்கிறது; இன்னொன்றில் தயிர் இருக்கிறது; 
இப்படி கூறிக்கொண்டே  பாலை எடுத்து தயிரிருந்த குவளையில் கவிழ்த்தார்..பிறகு கேட்டார், இப்பொழுது பாலை யாராவது காண்பிக்க முடியுமா? பால் இல்லை என்றும் கூற முடியுமா? அது போல் கடவுள் எங்கும் நிறைந்து இருக்கிறார்.உன்னிலும் இருக்கிறர்; என்னிலும் இருக்கிறார்.
அரசனுக்கு விஷயம் விளங்கிற்று;
இருந்தாலும் கேட்டார், கடவுள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்?
ஞாநி சொன்னார், மன்னா நீ சற்றே சிங்காதனத்தை விட்டு இறங்கி இங்கு வர முடியுமா?
மன்னனும் என்ன தான் நடக்கிறது பார்ப்போமே என்று சிங்காதனத்திலிருந்து இறங்கி ஞானி நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்தார்.
சரேலென ஞானி தாவிப் போய் சிங்காதனத்தில் உட்கர்ந்து விட்டார். அரசவையிலிருந்த எல்லோரும் நிலை குலந்து போனார்கள்.
சேவகர்கள் வாளை உருவிக்கொண்டு பாய்ந்து முன்னேறப் போனார்கள்.
அப்பொழுது ஞானி சொன்னார், மன்னா, ஒரு வினாடி முன் நீ இந்த சிங்காதனத்தில் அமர்ந்திருந்தாய். இப்பொழுது நான் அமர்ந்திருக்கிறேன். உன்னை அங்கே நிற்க வைத்ததும் என்னை இங்கே உட்கார வைத்ததும் கடவுள் தான். இந்த விளையாட்டைத் தான் கடவுள் நிரந்தரம் செய்து கொண்டிருக்கிறார்.
கடவுளின் இந்த விளையாட்டைத்  தான் பகவான் ரமணர் சூது என்று கூறுகிறார்.
இதே கருத்தை பட்டினத்து பிள்ளையார் (பட்டினத்தார்) கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:


கன்னிவன நாதா !. கன்னிவன நாதா !
தாயாகித் தாரமாய்த் தாழ்ந்த நாள் போதாதோ?
சேயாய்ப் புருடனுமாய்ச் சென்ற நாள் போதாதோ?

நோயுண்ண வேமெலிந்து நொந்த நாள் போதாதோ?
பேயுண்ணப் பேயாய்ப் பிறந்த நாள் போதாதோ?

ஊனவுடல் கூன்குருடா யுற்ற நாள் போதாதோ?
ஈனப் புசிப்பு விளைந்த நாள் போதாதோ?

பட்ட களைப்பும் பரிதவிப்பும் போதாதோ?
கெட்ட நாள் கெட்டேனென்றுகேளாதும் போதாதோ?

இன்னும் என்னை ஏன் அழைத்துக் கொள்ள மாட்டேனெங்கிறாய்? என்று கேட்கிறார் பட்டினத்தார்.

பிறகு உருகி வேண்டுகிறார்:

கடைக் கண்ணருள் தாடா,கன்னிவன நாதா !

இப்படி என்னை சோதியாமல் உன் சோதியுருக் காட்ட அருணாசலா என்று பகவான் ரமணர் வேண்டுகிறார்.
ஜோதி என்றால் தீபம் அல்லது ஒளி. இந்து மதத்தில் தீபம் ஏற்றுவது எல்லா கர்மங்களுக்கும் ஆரம்பமாக உள்ளது. ஒளி ஞானத்தைக்குறிக்கிறது.அது இருளை அகற்றி பிராகாசத்தை உண்டுபணுகிறது.
அதனாலேயே தீபம் எற்றும் பொழுது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறுகிறோம்:

சுபம் கரோதி கல்யாணம்,ஆரோக்ய தான ஸம்பதஹ
சத்ரு புத்தி வினாசாய
தீப ஜோதிர் நமோஸ்துதே

பிரஹதாரண்ய உபனிஷத்தில் பிரம்மத்தை- பரமாத்மாவை ஜோதியாக உபமித்துள்ளார்கள் நமது ரிஷிவரியர்கள்.

யஞவல்க்யரிடம் ஜனகர் கேட்கின்ற கேள்விகளும் பதில்களுமாக் இந்த விஷயம் வெளிப்படுகிறது.
ஜனகரின் முதல் கேள்வி:
ஒரு மனிதனுக்கு எது ஒளி தருகிறது? அவனுக்கு எந்த ஒளி கர்மங்களை செய்வதற்கான சக்தியைக் கொடுக்கிறது?
யஞவல்க்யர்:
சூரியன் கொடுக்கின்ற ஒளி தான் எல்லா விதமான ஜீவராசிகளுக்கும் செயலாற்றுவதற்கான சக்தியை அளிக்கிறது.
ஜனகர்:
சூரியன் மறையும்பொழுது?
யஞவல்க்யர்:
சந்திரன்
ஜனகர்:
சந்திரன் மறையும் பொழுது?
யஞவல்க்யர்:
அக்னி
ஜனகர்:
அக்னியும் இல்லையென்றால்?

அஸ்த இத ஆதித்ய, யஞவல்க்ய, சந்த்ரமசி அஸ்தம் இதே,சாந்தே அக்னவு,,கி-ஜோதிர் எவாயம் புரு இதி?

யஞவல்க்யர்:
ஒலி,பேச்சு உனக்கும் உதவும்
ஜனகர்:
அதுவும் பயன் படவில்லையென்றால்?
இதர்க்கான பதில் கூறும்பொழுது தான் யஞவல்க்யர் சொல்கிறார் உன் ஆத்மாவே சுயம் பிரகாசமான ஜோதி தான். நம்முள் இருக்கும் ஆத்ம ஒளி நமக்கு வழிகாட்டும் என்கிறார்.
இதே கருத்தை சாந்தோக்ய உபனிஷத்திலும் நாம் காண்கிறோம்( 3:13:7)
விண்ணுலகத்திற்கும் மேலே, எல்லா உலகங்களுக்கும் மேலே யாருமே இல்லாத இடத்தில் கூட,ஒளிர்ந்து கொண்டிருக்கிற ஒளி தான் ஆத்ம ஜோதி.பிரகாசமானது; எங்குமே இருக்க கூடியது;அது இருக்கின்ற இடத்தில் அவித்யா இருக்காது;இந்த உலகமே பிரம்மத்திலிருந்து உற்பத்தியானது.ஆகவே எல்லாவற்றிலும் பிரம்மம் உள்ளது. எல்லாமே பிரம்மம் தான்.(சாண்டொக்யொபனிஷத் 3.14.1a)
கேனோபனிஷத் கூறுகிறது:
ஆத்மா காதின் காது,;கண்ணின் கண்;
மனதின் மனது;பேச்சின் பேச்சு;
உயிரின் உயிர்;ஆத்மா நமக்கு தெரிந்தவைகளிருந்து வேறானது;
நமக்கு தெரியாததும் அல்ல;

இதே கருத்தை பகவான் ரமணர் வேறொரு விதமாக அக்ஷர மண மாலையில் கூறியுள்ளார்.

கண்ணுக்குக் கண்ணாய்க் கண்ணின்றிக் காணுனைக்
காணுவ தெவர்பா ரருணாசலா

இப்படிப்பட்ட பிரமனை எனக்கு காட்டு ,அருணாசலா, என்று பகவான் வேண்டுகிறார். அதாவது என்னுள் உள்ள ஒளியை நான் காணுமாறாகட்டும் என்கிறார். அந்த ஒளியை நான் காண்முடியாமல் வேடிக்கை காட்டினது போதுமப்பா, உன்/என் ஜோதி உருவை காண்பி அருணாசலா என்கிறார் பகவான்






No comments:

Post a Comment