Sunday, 28 December 2014

ரமணஜோதி 45

ரமணஜோதி  45

ஆனந்த நடனமாடுவோமே


சொல்லாது சொலிநீ சொல்லற நில்லென்று
சும்மா விருந்தா யருணாசலா
முந்தைய அஞ்சலில் பகவான் அருணாசலனிடம்,"என்னை ஏற்றுக்கொண்டு ஆத்ம சாக்ஷாத்காரம் பெற உதவில்லையென்றால் என் கதி என்னாகும்?.கண்ணீரால் கரைந்து உருகி நைந்து போய்விடுவேன். ஆகவே நீ தான் என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று பக்தியின் பரமோன்னத நிலைக்குச் சென்று விண்ணப்பிக்கிறார் பகவான் ரமணர்.. அதற்கு அந்த அருணாசலன் என்ன பதில் கூறினான் தெரியுமா? மௌனம் தான் அவனது பதில்.  
சில சூழ் நிலைகள் சிந்தனைக்கும் வார்த்தைக்கும் அப்பாற்பட்டவையாக இருக்கும்..அதே போல் சில தத்துவங்களை விளக்குவதற்கும் சொற்கள் கிடையாது.
ஆகவே தான் பகவான் ரமணர் மௌனத்தை தன் மொழியாக வரித்துக் கொண்டார்.
தக்ஷிணாமூர்த்தியும் இதே மௌன பாஷையை உபதேச மார்க்கமாக எடுத்துக் கொண்டார்.மௌனம் என்பது பேசாமல் இருப்பது அல்ல;அதையும் கடந்த ஒரு விதமான ஒரு அமைதிப் பாதை.சீடனானாலும் பக்தனானாலும் சரி பகவான் அவனை கை பிடித்து அழைத்துக் கொண்டு போவது இந்தப் பாதையில் தான்.
பகவத் கீதையில் ஆத்ம சாக்ஷாத்கரம் அடைந்தவனைக்குறித்து பகவான் கிருஷ்ணர் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:

யோகசன்யஸ்தகர்மாணாம் ஞானஸம்சின்னஸம்சயம்!
ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்னந்தி தனஞ்சயா!!
                                      .கீ தை அத். 4 சுலோ 41
யோகத்தால் கர்மத்தை விட்டு,ஞாநத்தால் சம்சயங்களைக் களைந்து ஆத்ம சொரூபத்தில் ஐக்கியமாகி விட்டவனை கர்மங்கள் கட்டுப்படுத்த மாட்டா.
மீன் சேற்றுக்குள் புதைந்திருந்தாலும் சேற்றின் அழுக்கு அதன் மீது படிவதில்லை.ஓயாது கர்மம் செய்யினும் அதில் கட்டுபடாதவன் யோகி. இந்த உலகத்தையும் அதன் சிருஷ்டி ரகசியங்களையும் முழுவதுமாகத்  தெரிந்துகொண்டு எல்லா விதமான சந்தேகங்களும் நீங்கி ஏகமே அனேகமாகத் தென்படுகிறது ;எல்லாவற்றுள்ளும் இருப்பது ஒன்றே தான் என்ற வெளிவு ஏற்படுகிறது.
அப்படிப் பட்ட நிலையில் அந்த ஜீவனுக்கு ஒரு அலாதியான அனுபவம் ஏற்படுகிறது. அப்பொழு தென்படும் அமைதியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அதனால்த் தான் ரமணர் “பேசாமல் சும்மாயிரு“எங்கிறார். வார்த்தையால் கூறாமல் தனது மௌன மொழியில் நமக்கு தெரிவிக்கிறார்.
உனக்கு சொல்ல வேண்டியது ஒன்ற்மில்லை என்று அறிவுறுத்துகிறார் என்றும் கொள்ளலாம்
இதையே பகவான் கிருஷ்ணர் கீதையில் அர்ஜுனனுக்கு கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

அஹமாத்மா குடாகேச ஸர்வபூதாசயஸ்தித: !
அஹமாதிஸ்ச மத்யம் பூதானாமந்த ஏவ !!
“எல்லா உள்ளத்து உறையும் ஆத்மா நானே;உயிர்களின் ஆதியும் இடையும்,அந்தமும் நானே” என்கிறார் கிருஷ்ணர்.
இதில் வியாசமுனிவர் உபயோகப்படுத்தியிருக்கும் ;குடாகேசா; என்ற சொல் மிகவும் ஆழமான வேதாந்த தத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது.
குடாகேசன் என்றால் தூக்கத்தை வென்றவன் என்று பொருள். நாம் எல்லோருமே ஜாக்ரத் அவஸ்தையில்க் கூட ஒரு வித தூக்கத்தில் தான் இருக்கிறோம்.எப்பொழுது நான் யார் என்று புரிந்து கொள்கிறோமோ அப்பொழுது நாம் விழித்துக் கொள்கிறோம்.ஆத்ம போதம்,ஆத்ம சாக்ஷாத்காரம் அடைந்து விட்டால் நமது தூக்கம் மயக்கம் மறைந்துவிடும்.எல்லோர் உள்ளிலும் பரமனேயிருக்கும்பொழுது விருப்பு வெறுப்புக்களுக்கு ஏது இடம்? விருப்பு வெறுப்புக்கள் இல்லையென்றால் சண்டை சச்சரவுகள் ஏது? அப்பொழுது நாம் பெறுகின்ற ஆனந்தம் சொல்லிலடங்கா;சொல்லவும் முடியா.

பகவான் ரமணர் இயற்றிய கீழ்க் கண்ட பாடல் ஜீவாத்மா-பரமாத்மா உறவை துல்லியமாக விளக்குகிறது:
வேடன் கைபட்ட புறவு விடப்படின்
காடும் கடந்துவிடும் என்னின்-நாடியகம்
வேடந்தான் வேறு அகல வேறான அக்காடும்
வீடாய் ஒடுங்கிவிடும்
இந்த பாடலில் பகவான் குறிப்பிடும் புறாவை போன்றது தான் நம் நிலையும்
இந்த மாயையான வேடனின் கையிலிருந்து நாம் விடு பட்டாலும்,பிராரப்த கர்மம் முழுவதையும் அனுப்வித்து தீரும் வரை இந்த உடலெனும் காட்டிலேயே தான் இருந்தாக வேண்டும்.
அதே போல் ஆத்மசாக்ஷாத்காரம் அடைந்து விட்டாலும் நாம் இந்த உலக வாழ்க்கையிலிருந்து பிரிந்து செல்ல முடியாது.அதுவரை இந்த உடலே நான் என்று எண்ணியது போக இந்த உடலும் நான் தான்,இந்த உலகிலுள்ள எல்லா சராசரங்களும் நான் தான்;ஏனென்றால் எல்லாவற்றிலும் –என்னிலும் உன்னிலும் –இருப்பது ஒரே பிரம்மம் தான் என்ற வெளிப்பாடு காரணம் நம் கண்ணோட்டம்தான் மாறுபடும்.
உள்ளது நாற்பது நூலிலும் பகவான் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்;
உடல் நானே தன்னை உணரார்க்கு உணர்ந்தார்க்கு;
உடலளவே நான்,தன் உணரார்க்கு-உடல் உள்ளே
தன்னுணர்ந்தார்க்கு எல்லை அறத் தான்ஒளிரும்
                             நான் இதுவே
இன்னவர்தம் பேதமென எண்.

ஆத்மாவை அறியாதவனுக்கும் அறிந்த ஞானிக்கும் ‘உடல் நானே’ என்ற உணர்வு ஒரேபோல் உள்ளது. முன்னவர் “உடலே நான் என்று எண்ணுகின்றனர்; பின்னவர் “உடலும் நானே” என்று எண்ணுகின்றனர்.’
இதே கருத்தை நாம் பகவத் கீதை பதிமூன்றாம் அத்தியாயம் 12-ஆம் சுலோகத்திலும் காண்கிறோம்:
ஞேயம் யத்தத்ப்ரவக்ஷயாமி யஞ்சாத்வா அம்ருதம்ச்னுதே
அனாதிமத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தன்னாசதுஸ்யதே
பகவான் கிருஷ்ணர் சொல்கிறார்: “அறியத்தக்கது எது,எதை அறிந்தால் ஒருவன் சாகாத்தன்மை அடைகிறான்,அது தான் ஆதியில்லாத பர பிரம்மம்.
அதை குறிக்கும் பொழுது,’உளது,இலது’ என கூட கூற முடியாதது”
பரபிரமம் தோன்றியுள்ளது, மறைந்து விட்டது என்று கூற முடியாது.அதற்கு தோற்றமும் கிடையாது ;மறைவும் கிடையாது. அதை பரோக்ஷானுபவத்தில் அறிய முடியாது. அபரோக்ஷானுபவத்தில் மட்டும் தான் அறிய முடியும்.
இதே உண்மையை பஜ கோவிந்தத்திலும் சங்கர பகவத் பாதாள் கீழ் க்கண்ட வாறு  கூறியுள்ளார்:
நளினீதள கத ஜலம் அதிதரளம்
தத்வத் ஜீவிதம் அதிசய சபலம்
வித்தி வ்யாத்யபிமான கரஸ்தம்
லோகம் ஷோகஹதம் ச சமஸ்தம்
மேலோட்டமாக பார்க்கும்பொழுது இதன் பொருள் எல்லொருக்கும் தெரிந்த உண்மை:
தமரையின் மீதுள்ள நீர்த் திவலை.எப்பொழுதும் இங்கும் அங்கும் அலைந்து கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்கும்.அதே போல் ஜீவாத்மாவின் இருப்பும் நிலயற்றதாக இருக்கிறது.எப்பொழுது இலையிலிர்ந்து கீழே விழுந்து விடுமோ என்பது போல்
பரமன் இந்த உலகை தன் உருவகமாகவே படைத்துள்ளார். இந்த உலக வாழ்க்கையெனும் தாமரை இலைய்லிருந்து அந்த நீர்த் திவலை விழுந்து விட்டால் அது அடஹன் மூலமான தண்ணீர் தேக்கத்தில் சேர்ந்து விடும்.ஜீவாத்மா பரமாத்மாவில் லயித்து விடும்
இந்த உண்மை பகவத் கீதையின் நாலு சுலோகங்களில் சூக்ஷ்மமாக காணப்படுகிறது
அஹம் சர்வஸ்ய ப்ரபவோ மத்த: சர்வம் ப்ரவர்த்தே!
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவசமன் விதா !!
பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:
நானே அனைத்திற்கும் பிறப்பிடம்;யாவும் என்னிடமிருந்தே விரிகின்றன;இதை அறிந்த ஞானிகள் என்னை அன்புடன் வாழ்த்துகின்றனார்.
மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம் !
கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச !1
தங்கள் மனதையும் வாழ்வையும் என்னில் லயிக்கவிட்டு, தான் ( நான்) யார் என்று ஒருவருக்கு ஒருவர் விளக்கிகொண்டு வாழ்வின் இன்பத்தை நுகர்கின்றனார்.
தேஷாம் சததயுக்தானாம் பஜதாம்.ப்ரீதிபூர்வகம் !
ததாமி புத்தியோகம் தம் யேன மாமுபயாந்தி தே!!
உள்ளன்போடும் உறுதியுடனும் பரமனை நினைப்பவர்க்கு பகவானின் சொரூபத்தையும் சிருஷ்டி தத்துவத்தையும் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் உண்டாகும்.இது தான் புத்தி யோகத்தின் பயன் என்று பகவான் சூக்ஷமாக புரிய வைக்கிறார் பகவான் கிருஷ்ணர்.
தேஷாமேவானுகம்பார்த்தமஹம்க்ஞானஜம் தம: !
நாசயாம்யாத்மபாவஸ்தோ ஞாதீபேன பாஸ்வதா !!
அன்பர்களது அந்தக்கரணத்தில் நீங்காது குடியிருந்து மெய் ஞான விளக்கால் அஞ்ஞான இருளை அகற்றிவிடுகிறான்.
இதையே தான் ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படி கூறுகிறார்:
தாணாக்காரன் தனது விளக்கின் வெளிச்சம் எவர் மீது படும் படி திருப்புகிறானோ (அவர்கள்மட்டும் தான்) அவரை பார்க்கமுடியும்.ஈசுவரன் தீருமானிக்கும் வரை யாரும் அவரைப் பார்க்க முடியாது.”
அவ்வாறு நிகழும்பொழுது ஏற்படுகின்ற அனுபூதியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்கிறார் பகவான் ரமணர்.

இதையே மஹாகவி பாரதியார் எப்படி கூறியிருக்கிறார் தெரியுமா?

அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

பரமாத்மாவானது தன்னையே குறுக்கிக்கோண்டு ஒரு நெருப்புப் பொறியாக சைதன்ய பொட்டாக ஜீவாத்மாவில் குடிகொண்டிருக்கிறது.அதை நீங்கள் அடையாளம் கண்டு கொண்டு விட்டால் அந்தப் பொறி ஒரு காட்டுத் தீயாகி சிறியது பெரியது என்றில்லாமல் எல்லா ஆசைகளையும் சுட்டு பொசுக்கி விடும்.அப்படி பொசுக்கி விட்டால் பிறகு என்ன? தத்தரிகிட தத்தரிகிட என ஆனந்த நடனம் தான்.

இந்த நிலைமை தான் அருணாசலன் என்னை அங்கீகரித்துவிட்டால், பேசாமல் சும்மா இருந்தாலும் கூட ஜிவாத்மா பரமத்மாவைக் கண்டு விட்டால் ஆனந்த நடனம் தான்.

No comments:

Post a Comment