Sunday, 28 December 2014

ரமணஜோதி 41



ரமணஜோதி 41

முக்தியெனும் ஆனந்த சாகரம்


சுகக் கடல் பொங்க சொல்லுணர்வு அடங்கச்
சும்மா பொருந்திடு அங்கு அருணாசலா

சீரையெல்லாம் அழித்து நிர்வாணமாக உன்னை அடைந்த என்னை,உன் அருட் சீரை அளித்து என்னை உன்னில் அடைக்கலம் ஆக்கிகொண்டாய், அருணாசலா..அப்படி உன்னில் நான் லயித்து விட்ட பின்னால் நான் அனுபவிக்கின்ற ஆனந்தம் ஆழ் கடலின் அமைதியைப் போன்றது. ஆழ்கடலில் எந்த விதமான சலனமும் இராது அது போல் என் மனமும் எந்த விதமான ஆசா பாசங்களுமில்லாமல்,விருப்பு வெறுப்பு இல்லாமல் நிர்குணமாகிவிடும். அப்பொழுது என்னுடைய எல்லா இந்திரியங்களும் செயலிழந்து நிச்சலனமாகிவிடும். நீ மட்டும் தான் என்னுடன் ஐக்கியமாகி இருப்பாய், அருணாசலா, என்று பகவான் கூறுகிறார். அங்கே கொடுக்கல் வாங்கலுக்கு எந்த இடமும் இல்லை. எந்த விதமான செயல்களும் இல்லாமல் சும்மா’ இருந்துவிடுவோம், அருணாசலா,.
அஞானிகளுக்கு சும்மா’ இருப்பது மிகவும் கஷ்டம்.ஆனால் ஆத்ம சாக்ஷாத்காரம் அடைந்து விட்டாலோ சும்மாஇருப்பது சகஜ நிலையாகிவிடும்.
பகவான் மதுரையில் இந்தமாதிரியான சுகக் கடலை அடைந்து ஆத்மானுபூதி பெற்றார். அதன் பின் திரு அருணை வந்து அண்ணாமலையார் சன்னிதியிலும்,பாதாள லிங்க குகையிலும் மற்று பல இடங்களிலும் வசித்த பொழுது சகல விதமான இந்திரிய செயல்களையும் இழந்து பேசக் கூட இல்லாமல்,குளியாமல் கண்களை திறக்காமல் அந்த சுகக் கடலில் மூழ்கியிருந்தார். தேக உணர்வே இல்லாமல் இருந்தார். சில குறும்புக்கார சிறுவர்கள் கற்களை எறிந்து அவரை துன்புறுத்திய பொழுது கூட பகவான் அசையவில்லை.சேஷாதிரி ஸ்வாமிகள் வந்து அவரை காப்பாற்ற வேண்டி வந்தது.
பல மாதங்களுக்குப் பின் பொன்னுசாமி என்ற பக்தனின் மனைவி ஒரு நாள் அவரை தர தர என்று இழுத்துக் கொண்டு போய் தலயில் சீயக்காய் வைத்து தேய்த்து குளிப்பாட்டும் வரை அவர் ஜடாமுடி தாரியாகவே இருந்தார். அடுத்த ஸ்நானம் குருமூர்த்தத்தில் ஒருவருடம் கழித்து நடந்தது. அதுவும் பகவானாக் விரும்பி செய்த ஸ்நானமில்லை. மீனாக்ஷி எனும் பக்தையால் கட்டாயமாக செய்விக்கப்பட்ட ஸ்நானம். அதே போல்த் தான் க்ஷவரமும் ஒன்றரை வருடத்திற்கு பின் நடந்தது, இப்படிப்பட்ட பரமானந்த சுகம் ஆத்ம சாக்ஷாத்காரத்தினால் தான் கிடைக்கும்.
மேற் கண்ட அனுபவத்தை இந்த வரிகளில் பகவான் நினைவு கூறுகிறார் போலும்.
இந்த நிலையை உபனிஷத்துக்களில் விவரமாக குறிப்பிட்டுள்ளார்கள்.
சாண்டோக்யோபனிஷத்தில் (அத்.6 சு 2 ) உத்தாலகர் ஸ்வேதகேதுவிற்கு உபதேசிக்கும் பொழுது சத் வித்யாஎன்பதை குறித்து கூறுகிறார்.
சிருஷ்டியின் ஆரம்பத்தில் வெறும் அமைதி மட்டும் தான் இருந்தது. பிரமம் மட்டும் தான் இருந்தது. இரண்டாவதாக ஒன்றும் இருந்ததில்லை.அந்த இயற்கையின் சத் ரூபத்திலிருந்து தான் இந்த உலகம் உண்டானது. அந்த நேரத்தில் ஒரு விதமான அமைதி சூழ்ந்திருந்தது அது தான் சத் சித் ஆனந்தம்.அந்த மாதிரியான ஒரு ஆழ் கடலிலிருந்து தான் உலகம் உண்டானது. அதனால்த் தான் தத் த்வமசி.
அதே சாண்டோக்யோபனிஷத்தில்(அத்.6,சுலோ 24)சனத்குமாரன் நாரதர்க்கு சத் சித் ஆனந்தத்தை விளக்கும்பொழுது கூறுகிறார்:
பரமானந்த நிலையில் ஒருவன் ஒன்றையும் கேட்பதில்லை;ஒன்றையும் பார்ப்பதில்லை;ஒன்றும் புரிவதும் இல்லை;புரிந்துகொள்ள முயற்சியுமில்லை;அந்தமாதிரியான ஆனந்த்திற்கு ஆதியுமில்லை;அந்தமுமில்லை.
அந்த மாதிரியான நிலை அடைவதை பூமா வித்யா என்று உபனிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
அந்த மாதிரியான நிலையை அடைவது தான் மோக்ஷம். ஞானத்தினால் மோக்ஷம் கிடைப்பதில்லை.ஞானம் அடைவதே முக்தி. நான் யார் என்று உணர்ந்து விட்டால் அதுவே ஞானம் அதுவே முக்தி. எல்லாம் பிரமம் என்று தெளிந்து மற்றவையெல்லாம் மனதின் கற்பனை என்று உணர்ந்து விட்டால் நாம் முக்தியடைந்தவராகிறோம்
அந்த மாதிரியான முக்தி கிடைத்து விட்டால் சுகக் கடல் பொங்கிடும்; ஆனந்த சாகரத்தில் திளைத்திடலாம்.
இது ஒருமாதிரியான சுய மறுப்பு(self contadictory) போல் தோன்றுகிறதல்லவா.?
ஆத்ம சாக்ஷாத்காரமாகிவிட்டால் உணர்வுகளுக்கு ஏது இடம்? எவ்விதமான உணர்வும் இல்லாத நிலையல்லவா அது? ஆம்;அந்த நிலையை அடைந்த பிறகு எந்த விதமான மகிழ்ச்சிக்கோ துக்கத்திற்கோ இடமில்லை. ஆனால் அதற்கு முன் நினைத்து பார்க்கும் பொழுது உண்டாகின்ற உணர்வுகளைத் தான் இங்கே விவரிக்கப் பட்டுள்ளது.
பர சொரூப ஆன்ம நிலை அல்லது நிர்வாணம் ஒருவிதமான சுயம்பிரகாசமான நிலை தான். ஆனால் சூனியம் அன்று.  இங்கு பகவான் புத்தரிடமிருந்து மாறுபடுகிறார். புத்தர் இந்த நிலையை சூனியம் என்று கூறினார். பகவான் இதை பேரின்ப நிலை என்கிறார்.
இதை பகவான் உள்ளது நாற்பது 12-ம் சுலோகத்தில் இப்படி கூறியுள்ளார்:
அறிதற்கு அறிவித்தற்கு அன்னியம் இன்றி
அவிர்தலால் தான் அறிவாகும் பாழ் என்று அறி
தெரிந்துகொள்வதற்கு ஒன்றுமில்லை;தெரியப்படுத்துவதற்கும் ஒன்றுமில்லை; என்று அறிந்துகொள்வதுதான் சத் சித் ஆனந்தம் எப்படி அறிந்து கொள்கிறோமென்றால் ஸ்புரணம் மூலம்அவிர்தலால்--- அறிந்துகொள்கிறோம். அதுவே சுயம் பிராகாசிப்பால் அறிந்துகொள்கிறோம். சுயமே ஆனந்தமாக ஸ்புரிக்கிறது/
இந்தக் கருத்தையே மாணிக்க வாசகரும் கீழ்க் கண்ட வரிகளில் கூறியுள்ளார்.
உரை மாண்ட உள்ளொளி உத்தமன் வந்துளம் புகலுங்
கரைமாண்டகாமப் பெருங்கடலைக் கடத்தலுமே
இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத்
துரைமாண்ட வாபாடித் தேணோக்கம் ஆடாமோ


பேச்சு மூச்சற்ற சுயம் பிரகாசமான உத்தமன்-அதாவது ஆத்மா---பிரமனிடம் அடைக்கலம் ஆகும்பொழுது நாம் அந்த அகண்ட காமக் கடலை கடந்து விடுகிறோம்;ஐம்புலங்களால் அலைக்கழிக்கப் பட்ட அந்த இந்திரிய பறவை அழிந்துவிட நான் என்ற அகந்தை அழிந்து விட  நாம் முக்தி அடைந்த விதத்தை பாடி ஆனந்த நடனமாடுவோமே என்கிறார் மாணிக்க வாசகர்.

No comments:

Post a Comment