ரமணஜோதி 43
பர வித்யா-அபர வித்யா
செப்படி வித்தைகற் றிப்படி மயக்குவிட்
டுருப்படு வித்தைகாட் டருணாசலா
இந்த சுலோகத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இரு சொற்றொடர்கள் ‘செப்படி வித்தை’ என்பதும் ‘உருப்படு வித்தை’என்பதும் தான்
செப்படி வித்தை காண்பிப்பவர்கள் செய்யும் மாயாஜாலங்கள் சிறிது நேரத்திலேயே மறைந்து விடும்.அவை உண்மை அல்ல.அனித்தியமானவை. தாற்காலிகமாக ஒரு மயக்கத்தை உண்டு பண்ணும்;
நடப்பவை உண்மையானவை போல் தோன்றும். அப்படித்தான் இந்த இகலோக வாழ்க்கையையும் நித்யமென்று நம்புகிறோம். இந்த இகலோக வாழ்க்கையின் மேன்மைக்காக பலதையும் கற்றுத் தெரிந்து கொண்டு ஞானம் கிடைத்து விட்டதாக எண்ணி மயங்குகிறோம். ஆனால் இந்த வித்தை எதுவும் நிரந்தரமான சாந்தியை நமக்கு அளிக்காது.
பகவான் ரமணர் ‘உள்ளது நாற்பதில் கூறுகிறார்:
ஞானமாம் தானே மெய் நானாவாம் ஞானம்
அஞ்ஞானமாம்
நான் யார் என்றறிதலே உண்மையான ஞானம்;மற்ற எல்லா அறிவும் அஞ்ஞானமே.
ஆன்ம போதத்தில் பகவான் மீண்டும் கூறுகிறார்:
அறியாமைக்குப்பகை யன்றதனாற் கன்ம
மறியாமை தன்னை யகற்றா-தறிவே
தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில் ஆதி சங்கரடர் கூறியதை பகவான் கீழ்க் கண்டவாறு மொழி பெயர்த்துள்ளார்.:
வித்துளை முளை போல் முன்னம் விகற்பமில் இச்சகம்பின்
கற்பித மாயா தேய கால கர்மத்தாற் பற்பல்
சித்திரம் விரிப்பான் யாவன் சித்தனும் மாயிகன் போற்
சத்தியாற் குருவாமந்த தக்ஷிணாமூர்த்தி போற்றி
கருவிலிருக்கும் பொழுது எந்த வேற்றுமையும் தெரியமலிருந்து,பின் இந்த உலகின் மாயா ஜாலங்களில் சிக்கி அல்லல் படுகிறோம்.அந்த அல்லல்களிலிருந்து விடுபடுவதற்காக மேலும் பல பல வித்தைகளை கற்றுகொண்டு மேலும் துன்பங்களை வாங்கிக்கொள்கிறோம்.
இதிலென்ன ஆச்சரியமென்றால் செப்படி வித்தை காட்டுபவன் தன்னுடைய இந்திர ஜாலத்தில் மயங்குவதில்லை.கடவுள் எப்படி தன்னுடைய திருவிளையாடல்களால் பாதிக்கப் படாமல் இருக்கிறாரோ அது போல்.
ஆனால் நாமோ செப்படி வித்தகளை ஒன்றுக்குமேல் ஒன்றாக கற்றுக் கொண்டு அதில் நாமே மயங்கி மீளமுடியாமல் தவிக்கிறோம்.
முண்டகோபனிஷத்தில் ஷௌனகா என்ற சீடன் அங்கிரச முனிவரிடம் கேட்கிறான்:
“முனிவரியா,என் மீது கருணைகூர்ந்து கூறவேண்டும்,’எதை நாம் தெரிந்துகொள்வதின் மூலம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறோம்.’
இது மிகவும் முக்கியமான கேள்வி. நமது பல சந்தேகங்களுக்கு விடை தேடும் கேள்வி.
அறிவிற்காக கல்வி கற்பவெரெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
இன்றைய உலகிலும் நாம் ஆரம்ப கல்வியில் எல்லாவற்றைக் குறித்தும் சிறிது சிறிது தெரிந்து கொள்கிறோம். கல்வியின் உயரங்களுக்கு போகும் பொழுது நமது கல்விக்களம் குறுகிகொண்டே வருகிறது.அதனால்த்தான் மருத்துவத்தில் இன்று பல சிறப்பு மருத்துவர்கள் தோன்றியுள்ளார்கள்.கை,கால்,கண்,காது சிறப்பு மருத்துவர் என்பது போக சுண்டு விரலுக்கு ஒரு மருத்துவர்,பெருவிரலுக்கு ஒரு மருத்துவர் என்று வந்தாலும் கூட ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஆனால் அதில் தவறேதுமில்லை.அறிவு வளர வளர மனிதனுக்கு தெரிய வருகிறது நாம் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அதிகம் என்று.
இதைத்தான் நம் முன்னோர்கள் கீழ்க்கண்டவாறு கூறினார்கள்:
‘கற்றது கைமண்ணளவு, கற்க வேண்டியது கடலளவு’’ என்று.
அங்கிரச முனிவர் இந்த மாதிரியான ஒரு கேள்வியை கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
அவர் சொன்னார்:
ஞானம் என்பதை இருவகையாக பிரிக்கலாம்: 1 பர வித்யா 2.அபர வித்யா ஏன் இரு விதமாக பிரிக்க வேண்டுமென்றால் இரண்டிற்கும் வெவ்வேறு மாதிரியான அணுகுமுறை தேவைப்படுகிறது.
இந்த வார்த்தைகளின் பொருள் ஒன்று மேலானது இன்னொன்று சிறிது தரத்தில் தாழ்ந்தது என்றிருந்தாலும் கூட உபனிஷத்துகள் அந்த மாதிரி கருத வில்லை.இரண்டுமே தெரிந்து கொள்ளவேண்டியவையே.இரண்டும் வெவ்வேறான அறிவு என்று தான் கூறுகிறது.
ஒருவன் பூரண ஞானியாக வேண்டுமென்றால் பர வித்யாவை நாட வேண்டும். ஷௌனகா ஏன் பூரண ஞானம் அடையவில்லை என்றால் அவர் அபர வித்யைக்கான அணுகுமுறையை பின் பற்றியதினால் தான்.
அபரவித்யா நமது புலன்களினால் உணரக்கூடிய எல்லாவிதமான பொருட்களைக் குறித்துள்ள அறிவைத் தரக் கூடியது. இந்த உலகத்தில் நாம் கற்றுக் கொள்வது எல்லாம் அப்படிப்பட்டவை தான்.வேத வேதாந்தங்கள் கூட அப்படிப்பட்டவைதான்..
பர வித்யா நாசமில்லாத ஆதியும் அந்தமும் இல்லாத ஆன்மாவைக் குறித்தது அதாவது‘நான் யார்’ என்று அறிந்து கொள்வது.
அக்ஷரத்தைக் குறித்து தெரிந்து கொள்வது பர வித்யா.அக்ஷரமென்றால் க்ஷத்மில்லாதது; நாசமில்லாதது என்று பொருள் என்று நமக்கெல்லாம் தெரியும்.
பகவான் ரமணர் அபர வித்ய பெறுவதை விட்டு பர வித்ய பெறுவதற்கு நீ தான் உதவ வேண்டும் ஆருணாசலா என்று கூறுகிறார்.
இந்த இடத்தில் ஆதி சஞ்சரைக் குறித்துள்ள ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது.
ஆதி சங்கரர் காசியின் தெருக்களில் நடந்து போய்க்கொண்டிருக்கும் பொழுது ஒரு வயதான மனிதர் ஒரு சம்ஸ்கிருத இலக்கண் புத்தகத்தை படித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அவருக்கு கண் கூட சரியாகத் தெரியவில்லை போலும். மிகவும் கஷ்டப்பட்டு படித்துக்கொண்டிருந்தார். தள்ளாத வயதில் இலக்கணத்தை தெரிந்து இவர் என்ன செய்யப் போகிறார் என்று சங்கரருக்கு ஐயம் எழுந்தது.மரணம் வாசல்க் கதவை தட்டிக் கூப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது இந்த இலக்கண படிப்பு எதற்கு என்று எண்ணிய சங்கரருக்கு ஒரு விதமான தார்மீக ரோஷம் பொங்கிவந்தது.அதன் விளைவு தான் நாம் இன்று படித்து பயன் பெறும் ‘பஜ கோவிந்தம்’.
முதல் நாலு வரிகளிலேயே அவரது கோபம் நமக்கு புலனாகிறது
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் மூடமதே !
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே மரணே
நஹி நஹி ரக்ஷதி டக்ருஞ்கரணே
ஏய் ! மூடா! கோவிந்தனை பஜனை செய்! கோவிந்தனை பஜனை செய்.! மரணத்தின் தலைவாயிலில் நிற்கும் உனக்கு எதற்கு இலக்கணப் படிப்பு?
கலைவாணி சங்கரர் மூலம் நமக்கெல்லாம் அறிவுறுத்துகிறார்:
நீங்கள் படித்த கல்வியும் சம்பாதித்துள்ள தனமும் வாசித்த அறிந்த நூல்களும் உங்களது கடைசி காலத்தில் உதவ மாட்டா.
உன் உள்ளத்திலிருக்கும் கோவிந்தனை கண்டு பிடி;அவன் நாமத்தை ஸ்மரி;அது தான் யமனிடம் செல்லுபடியாகும்.உனது பாண்டித்தியம் காலனிடம் செல்லாது.
மனிதனை மாயவலையில் சிக்க வைக்கின்றவைகளில் முக்கியமான ஒன்று ‘நான் மெத்தப் படித்தவன் என்ற ஆத்மாபிமானம்’.அதனால் உண்டாகின்ற புகழாசை மனிதனை இந்த மாய வலையிலிருந்து தப்பிக்க விடாமல் கஷ்டப்படுத்தும்.
சங்கரர் எல்லா மோஹங்களிலும் மிகவும் வலிமை வாய்ந்ததாக இந்த ‘பாண்டித்திய மோஹத்தை’ குறிப்பிட்டு அதை முதலில் விட்டொழி என்கிறார். இந்த மாதிரியான அறிவு வேறு; ஞானம் வேறு என்று கூறாமல் கூறுகிறார்.
அதன் பின் தான் பொருளசையை குறிப்பிடுகிறார்.
மூட:! ஜஹீஹி தனாகமதிறுஷ்ணாம்
குரு சத்புத்திம் மனஸி விதிறுஷ்ணாம்
யல்லபஸே நிஜகர்மோபாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்.
ஏய்,மூடா! பொருள் சேர்ப்பதிலுள்ள ஆசையை விட்டொழி;
ஆசையின்மை எனும் சத் புத்தியை நாடு; உன் முயற்சியால் நீ ஈட்டுகின்ற தனம் மட்டும் தான் உன்னிடம் தங்கும்;உனக்கு உதவும்.
தனம் திருப்தி தராது.சேர்க்க சேர்க்க ஆசையை அதிகரிக்கத்தான் உதவும்.அந்த மாதிரியான திருஷ்ணயிலிருந்து நீ என்று விடுபடுகிறாயோ அன்று தான் முக்தி என்று ஆதி சங்கரர் கூறுகிறார்.
இதையே தான் திரு வள்ளுவரும் திருக்குறளில் கூறுகிறார்:
இறல் ஈனும் எண்ணாதுவேகின் பிறல் ஈனும்
வேண்டாமை எனும் செருக்கு
பின் வருபவற்றைப் பற்றி சிந்திக்காமல்,பொருள் ஈட்டுவதிலுள்ள ஆசையை வளர்த்துக் கொண்டால், நஷ்டம் தான் உண்டாகும். பிறன் பொருளுக்கு ஆசைப் படாமல் இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தியடைந்தால்,உனக்கு ஆனந்தம் உண்டாகும் என்று வள்ளுவர் பெருமானும் கூறியுள்ளார்.
மனிதன் செப்படி வித்தைகளை பயன் படுத்துவது புகழுக்காகவும் பொருளுக்காகவும் மட்டுமல்ல.பொருளும் புகழும் அடைவதே தனது பெண்ணாசையால் தூண்டப்பட்டுத்தான்.
ஆதி சங்கர பகவத் பாதாள் பஜகோவிந்தத்தில் இந்த ஆசையை கண்டிக்கிறார்.
நாரீஸ்தனபர நாபீதேசம்
திறுஷ்ட்வா மா கா மோஹாவேசம்
ஏதன்மாம்ஸவஸாதி விகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம்
மாதர்களின் மார்பகங்களையும் நாபிப்பகுதிகளையும் கண்டு சபலம் கொள்ளாதீர்;அவையெல்லாம் வெறும் மாமிச பிண்டங்கள்தான். அதனால் உண்டகின்ற விகாரமும் உனது ஸ்தூல சரீர சம்பந்தமானது தான். கண்களை அங்கும் இங்கும் அலைய விடாதீர்கள்.அது உங்களுக்கு துன்பத்தையே தரும் என்கிறார் சங்கரர்.
இம்மாதிரியான அனித்தியமான ஆசைகளுக்கு தான் உங்கள் அபர வித்யா ஞானம் உதவும்.
பர வித்யயாகட்டும் நீ யார் என்று உனக்கு புரிய வைத்து, ஆத்மசாக்ஷாத்காரம் அடைவதர்க்கு வழிகாட்டும்
அதைத் தான் பகவான் இந்த சுலோகத்தில் உருப்படு வித்தை சொல்லிக்கொடு ,அருணாசலா என்கிறார்.
உரு என்றல் பரமன்,ஆத்மா என்றொரு அர்த்தம் உண்டு.அந்த உருவில் ஐக்கியமாவதற்கான வழியைக் காட்டு அருணாசல் என்கிறார் பகவான்.
எனக்கு இந்த மாய வலையிலிருந்து விடுபடுவதர்க்கான மார்க்கத்தை காண்பி அருணாசலா என்கிறார்.
பகவான் என்றுமே சித்திகளை மதித்ததில்லை.தனக்கு ஏதும் சித்திகள் இருப்பதாகவும் கூறினதில்லை.ஆனால் சித்தர்களுக்கு சில சித்திகள் உண்டு என்பதையும் மறுத்ததில்லை.சித்திகளினால் உண்டாகின்ற பலன் தாற்காலிகமானவை என்பதை பகவான் பலமுறை அழுத்திக் கூறியுள்ளார்.
ஆகவே நிரந்தரமான் சாந்தி கிடைக்க வேண்டுமென்றால் பர வித்யை கற்றுக் கொண்டு நான் யார் என்ற விசார மார்க்கத்தின் மூலம் ஆத்ம சாக்ஷாத்காரத்தை நாம் அடைய வேண்டும் என்கிறார்.பகவான்
No comments:
Post a Comment