தக்ஷிணாமூர்த்தி கதை
பகவான் ரமணர் ஆதி சங்கரர் அருளிய
தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தை தமிழில் செய்யுள் வடிவத்தில் தந்துள்ளார்.
அந்த ஸ்தோத்திரத்தின் ஒன்பது சுலோகங்களையும்
, ‘உலகம்’, ‘காண்பான்’, ‘காட்டுமொளி’ என்று
பிரிவுகளாக தந்துள்ளார்.
தக்ஷிணாமூர்த்தி ஸ்தோதிரம் அத்வைத
சித்தாந்தத்தின் மூலக் கருவை உட்கொண்டிருப்பது தான் அதன் முக்கியத்துவத்திற்கு
காரணம்.
மூலம்
விஸ்வம் தர்பணத்ரிசியமானநகரீதுல்ய
நிஜாந்தர்கதம்
ப்ரஸ்னயன்னாத்மனி மாயயா பஹிரிபோதபூதம் யதா
நித்ரயா
ரமணர் கிருதி
உலகுகண்ணாடி யூர் நே ருறத்தனு ளக்னானத்தால்
வெளியினிற் றுயிற்கனாப் போல் விளங்கிடக்
கண்டு ஞான
நிலையுறு நேரந் தன்னை யொருவனா யெவனேர்
காண்பன்
றலையுறு குருவா மந்தத் தக்ஷிணாமூர்த்தி
போற்றி.
இந்த உலகம் ஒரு கண்ணாடியை போன்றது.அதில்
காண்பதெல்லாம் நமது மனதினால் சிருஷ்டிக்கப் பட்டவை. அதாவது மாயை. தன்னைத் தவிர
வேறெதுவும் சத்யமில்லை. அதை உணர்த்தவல்ல தக்சிணாமூர்தி தான் தலையான குரு.
இப்படி துவங்குகின்ற தக்சிணாமூர்தி
ஸ்தோத்திரம் பத்தாவது ஸ்லோகத்தில் இப்படி முடிகிறது.
மூலம்
ஸர்வாத்மத்வமிதி ஸ்புடீக்ருதமிதம் யஸ்மாதமுஷ்மின்
ஸ்தவே
தேனாஸ்ய ஸ்ரவாத்ததர்த்தமனனாத்த்யானாச்ச
ஸ்ங்கீர்தனாத்
ஸ்ர்வாத்மத்வமஹாவிபூதிஸஹிதம் ஸ்வாதீஸ்வரத்வம்
ஸ்வத
:ஸித்தயேத்த்த்புனரஷ்டதா பரிணிதம் சைஸ்வர்ய
ம்வ்யாஹதம்.
ரமணர்
மண்புன லனல்கால் வான் மதிகதி ரோன்பு மானு
மென்றொளிர் சராச ரஞ்சே ரிதுவெவ நெட்டு
மூர்த்த
மெண்ணுவார்க் கிறைனி றைந்தோ நெவனின் நியஞ்சற்
றின்றாந்
தண்ணருட் குருவா மந்தத் தக்ஷிணா மூர்த்தி
போற்றி
இந்த சுலோகத்தில் பகவான் ஆன்மாவின் எங்கும்
நிறைந்துள்ள(All pervasivness) தன்மையும் அதன் உண்மை நிலையையும்
விளக்கிகூறுகிறார்.
அதன் முன்னுரையில் தக்ஷிணாமூர்த்தி உருவான
மூல கதையை சுருக்கமாக கூறியிருக்கிறார்..ஒரு முறை பக்தர்கள் அந்தக் கதையை
விரிவாகக் கூறும்படி பகவானிடம் வேண்டினார்கள். அந்த வேண்டுதலை ஏற்று பகவான்
கீழ்க்கண்டவாறு சொன்னார்.
“ பிரம்மா தன் படைப்பை துவங்கிய பொழுது, தன்
மானச புத்திரர்களான சனகன்,சனத் குமாரன்,முதலிய நால்வரையும் ஸ்ருஷ்டி கர்மத்தில்
ஈடுபடும்படி கூறினார்.
ஆனால் அவர்களுக்கு அதில் ஈடுபாடு இல்லாததால்
மறுத்து விட்டார்கள்..
அவர்கள் தங்களுக்கு யாராவது ஞானோபதேசம்
செய்வார்களா என்று தேவர்களிடமும்,முனிவர்களிடமும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது அங்கு வந்த நாரத முனி, “பிரம்மாவை
விட சிறப்பாக யார் ஞானோபதேசம் செய்ய முடியும்.அவரிடம் போய் பிரம்மோபதேசம்
பெறுங்கள்” என்று
அறிவுறுத்தினார்.
“அப்படியே செய்கிறோம் “ என்று
கூறி நாலு பிரம்ம குமாரர்களும் தேவர்கள் புடை சூழ ஸத்ய லோகத்திற்கு சென்றார்கள்.
சத்ய லோகம் சென்ற அவர்களுக்கு மிகுந்த
ஏமாற்றமே காத்திருந்தது.
அங்கே பிரம்மாவின் முன்னால் அமர்ந்து ஸரஸ்வதி
தேவி வீணை வாசித்து கொண்டிருந்தார்கள்.
பிரம்ம,’ஆஹா,ஆஹா” என்று
ஆனந்தத்துடன் தாளம் போட்டுக்கொண்டிருந்தார்.
ஒரு பெண்மணியின் இசையில் லயித்து போயிருக்கும்
பிரம்மனால் தங்களுக்கு ஞானோபதேசம் அருள முடியாது
என்ற முடிவிற்கு வந்த சனக குமாரர்களை வைகுண்டலோகம் போகலாம், அந்த சாக்ஷத்
நாராயணனிடமே உபதேசம் பெறலாம்” என்று
நாரதர் கூற சனக குமாராதிகள் வைகுண்டம் வந்தடைந்தார்கள். அங்கு இன்னும் பெரிய
ஏமாற்றம் காத்திருந்தது.
வைகுண்ட நாதரின் மாளிகைக்குள் எல்லோரும்
அனுமதி இல்லாமல் செல்ல முடியாததால்,எங்கும் எப்பொழுதும் செல்லக் கூடிய சலுகை
பெற்றுள்ள நாரத முனி மட்டும் உள்ளே சென்றார். போன வேகத்திலேயே திரும்பியும் வந்து “இங்கே
ஒன்றும் வேலைக்காகாது. ஸத்ய லோகத்திலாவது தேவி பிரம்மனின் முன்னால் அமர்ந்து வீணை
வாசித்துக் கொண்டிருந்தார். இங்கேயோ மஹாலக்ஷ்மித் தாயார் திருமாலின் பாதங்களை
பிடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாராயணனா
ஞனோபதேசம் செய்யப் போகிறார்.?” என்று
சொல்லி, கைலாயத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கே மஹாதேவன் அர்த்த நாரீஸ்வரராக நிறைந்த
சபையில் தாண்டவமாடிக் கொண்டிருந்தார்.
விஷ்ணு மத்தளம்
போட்டுக்கொண்டிருந்தார்,பிரம்மா தாளம் போட்டுக் கொண்டிருந்தார்.
இவராலும் காரியம் ஆகாது என்று முடிவு கட்டி
சனக,சனத் குமரர்கள் அங்கிருந்து போக ஆரம்பித்தார்கள்.
இதையெல்லாம் ஞான திருஷ்டியில் அறிந்த சிவ
பெருமான்,பார்வதி தேவியை அங்கேயே விட்டு விட்டு ஞான வேட்கையால் தவித்துக்
கொண்டிருக்கும் அந்த குமாரர்களைத் தேடி போனார்.
சிவ பெருமான், கருணையால் உந்தப் பட்டு, ,சனக
குமாரர்கள் போகிற வழியிலுள்ள மான சரோவர் ஏரியின் வட திசையிலுள்ள ஆல மரத்தினடியில்
தக்ஷிணாமூர்த்தியாக ஒரு இளைஞன் உருவில் சின் முத்திரை தரித்து தென் திசை நோக்கி
அமர்ந்துகொண்டார்.
சனகாதிகள் அங்கு வந்த பொழுது அவரது மௌனமே
காந்தக்கல் போல் அவர்களை ஈர்த்தது. அவர்கள் அவர் முன்னால் சென்று கை கூப்பி
நின்றார்கள்.
அந்த மௌன நிலையிலேயே
அவர்களுக்கு தக்ஷிணாமூர்த்தியான சிவபெருமான் ஆத்ம சாக்ஷாத்காரம் அளித்தார்.”
“சின் முத்திரை” என்றால்
கட்டை விரலையும் ஆள்க்காட்டி விரலையும் இணைத்து ஒரு வளையம் உண்டாக்குவதாம்.
சபரிமலையில் தர்ம சாஸ்தா தவக்கோலத்தில் சின் முத்திரை காட்டி அமர்ந்திருக்கிறார். ஆள்க்காட்டி
விரல் கட்டை விரலின் மத்தியை தொட வேண்டும் .ஆட்காட்டி விரல்‘அஹங்காரத்தையும்
கட்டை விரல் ஆன்மாவையும் பிரிதிபலிக்கின்றன. இரண்டு விரல்களுக்குமான இடைவெளி மாயயை
குறிப்பிடுகிறது. அஹத்தை அழீத்து எப்பொழுது ஆன்மா பரமான்மாவில் லயிக்கின்றதோ
அப்பொழுது ஆன்மசக்ஷாத்காரம் ஏற்படுகிறது என்று பொருள். இந்த முத்திரை “தத்துவமசி” என்ற
தத்துவத்தையும் குறிப்பிடுகிறது.
இந்தக் கதை “சிவரஹசியம்” பத்தாவது
காண்டம்,இரண்டாவது அத்தியாயத்தில் “ தக்ஷிணாமூர்த்தி
ப்ராதுர் பாவம்”என்ற தலைப்பில் உள்ளது..
தக்ஷிணாமூர்த்தியின் மௌனமே ரமணரின்
மொழியாகவும் இருந்தது.
இந்த மௌனத்தைக் குறித்து பகவான் ரமணர் ஒரு
கதை கூறுவார்.
தத்துவ ராய ஸ்வாமிகள் தனது குருவான
ஸ்வரூபானந்த ஸ்வாமிகள் மீது ஒரு ‘பரணி’ இயற்றினார்.அதை
தன் சீடர்கள் மற்றும் தேர்ந்த பண்டிதர்கள் முன்னால் பாடிக்காண்பித்தார்.அவர்களிடம்
அந்த பரணியைக் குறித்து மதிப்பீடு செய்ய்யுமாறு கேட்ட்டுக் கொண்ட பொழுது அவர்கள்
கூறினார்கள், “ பரணி
என்பது சிறந்த போர் வீரர்களை புகழ்ந்தும் பாராட்டியும் பாடப்படுகிற ஒன்று. அதுவும்
ஆயிரக்கணக்கான யானைகளை போரில் கொல்ல வல்லமையுடையவர்களை பாராட்டி பாடக்கூடியது.
ஞானிகளையோ சன்யாசிகளையோ பற்றி பாடுவது முறையாகது.” என்றார்கள்.
கடைசியில் அவர்கள் ஸ்வரூபானந்த ஸ்வாமிகளிடமே
சென்று தீர்ப்பு சொல்லுமாறு கேட்பது என்று முடிவு செய்து ஸ்வாமிகளிடம்
சென்றார்கள்.
தத்துவராயர் தங்கள் வந்த விஷயத்தை குருவிடம்
விளக்கிக் கூறினார்.
குரு தன் முன்னால் உட்கார்ந்திருந்த
எல்லாரையும் பார்த்தார்.
பிறகு ஒன்றும் சொல்லாமல் மௌனமாகி விட்டார்.
சீடர்களும் பண்டிதர்களும் மௌனமாக
அமர்ந்திருந்தார்கள்.பகல் போயிற்று,இரவு வந்தது; மறு நாள் வந்தது,போனது;நாட்கள்
ஒன்றொன்றாக உதிர்ந்தன .யாருக்கும் எந்த விதமான எண்ணங்களும் தோன்றவேயில்லை.
எல்லோரும் மௌனமாகவே அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எதற்காக வந்தோம் என்ற சிந்தனை கூட இல்லாமல்
அமர்ந்திருந்தார்கள்.
மூன்று நான்கு நாட்கள் கழித்து குரு தன் மனதை
சிறிது அசைத்தார்.அவ்வளவு தான் வந்திருந்தவர்கள் எல்லாம் அவரவர் சிந்தனா சக்தியை
திரும்பப் பெற்றார்கள்.
அப்பொழுது அவர்களுக்கு புரிந்தது ஆயிரம்
யானைகளை அடக்குவதை விட எவ்வளவு கடினமானது, பலருடைய
மனதை அடக்கி, “நான்” (ego)
என்ற அஹத்தை அழிப்பது
என்று.
ஆகவே அத்தகைய மஹான் மீது பரணி பாடுவது
மிகவும் பொருத்தமே என்று ஒத்துக்கொண்டார்கள்.
ரமணர் அடிக்கடி சொல்வார், “ மொழி
என்பது நமது எண்ணங்களை மற்றவர்களுக்கு புரியவைப்பதற்கான வழிமுறைகளில் ஒன்று தான்.
அதன் உபயோகம் மனதில் சிந்தனை எழுந்த பின் தான் உண்டாகிறது. ஆனால் எந்த சிந்தனையும்
எழுவதற்கு முன்னால் ‘நான்’ எழுந்து
விடுகிறது.
ஆகவே இந்த ‘நான்’ தான்
எல்லா உரையாடல்களுக்கும் ஆணிவேராக உள்ளது. நாம் எந்த சிந்தனியுமில்லாமல் மௌனமாக
இருந்து விட்டால் அடுத்தவர் நம்மை உலக மொழியான மௌனத்தின் மூலம் புரிந்து
கொண்டுவிடுவார்கள்.”
மேலும்
பகவான் கூறுவார், “ வாய்
வார்த்தைகள் கருத்து பரிமாற்றத்திற்கு தடையே ஆகும்”.
ஒரு முறை ஸ்ரீ நாராயண குரு கேரளாவிலிருந்து
ரமணாசிரமத்திற்கு வந்திருந்தார். பகவான் முன் வந்து அமர்ந்த நாராயண குருவிடம்
ரமணர் ஒரு வார்த்தைகூட பேசவே இல்லை சாப்பாட்டு நேரத்தில் மட்டும், “வாருங்கள்
சாப்பாட்டிற்கு செல்வோம்” என்று
கூறுவார்.. இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்து விட்டு திரும்பிய நாராயண குரு
தேவன் கூறினார் “நன்
இது வரை இந்த மாதிரியான ஒரு வாழும் நிர்விகல்ப சமாதியடைந்த ஒரு மஹானைப்
பார்த்ததேயில்லை.”
யாரோ ஒருவர் கேட்டார் “நீங்கள்
இருவரும் பேசிக் கொள்ளவேயில்லையாமே?”
குரு தேவன் கூறினார்,”
வாய் திறந்து பேசினால்த் தான் பேச்சா? எங்கள்
பாஷையில்(மௌன்பாஷை) நிறையப் பேசினோம்”.
குருவின் அருளால் எப்படி மிக குறுகிய
நேரத்தில் ஸத்-சித்-ஆனந்தத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதை பகவான் அஷ்டாவக்ர –ஜனக
சம்வாதம் உருவான கதை மூலம் விளக்கியுள்ளார்.அதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment