Wednesday 14 January 2015

ரமணஜோதி 53

ரமணஜோதி 53

வரட்டியினுள் இரத்தினம்
திரும்பியகந்தனைத் தினமகக் கண் காண்
டெரியுமென் றனையென் நருணாசலா
பகவான் ரமணர் கூறுகிறார்,” அருணாசலா, ,நீ “என்னை உள்    நோக்கிப் பார்;என்னை அடைவாய்” என்றாய். ஆனல் அதை எப்படி செய்வது ? அதற்கு உன் அருள் வேண்டும்”.
தினமும் நாம் உள்முகமாக பார்க்க வேண்டும் என்கிறார் பகவான். உன்(ள்) முகமாக பார்ப்பது என்றால் என்ன?
இந்த வெளி உலகமெல்லாம் நம் மனோ சிருஷ்டி தான். இந்த உலகமெல்லாம் கற்பனையே. தினமும் நான் யார் என்ற விசாரணையை மேற்கொண்டால் நமக்கு புரியும், தாண்டவராயன் பிள்ளை ‘கைவல்ய  நவனீத’த்தில் கூறியது போல், ‘கவருடைய புவனமெல்லாம் கற்பிதமே” என்று.
“யானே எங்குமாம் பிரமம்” என்று தெரியும் அப்படிப் புரிந்து கொண்டுவிட்டால், பரபிரம்மத்தை நம்முள்ளேயே காண முடியும் என்கிறார். பகவான்.
இதற்கு இடையூறாக இருப்பத்ல்லாம் நமது புலன்களே. இந்தரியங்களால் தூண்டப்பட்டு நம் கவனம் புறம் நோக்கிப் பாய்கிறது. அதை தடுத்து நிறுத்த முடிந்து விட்டால் நாம் பரமனை அடைய முடியும்.அதற்கு விடா முயற்சி வேண்டும்.
 இந்தக் கருத்தை பகவான் ஸ்ரீ அருணாசல பஞ்சரத்னத்திலும் வலியுறுத்துகிறார்.
     அருணிறை வானவமுதக் கடலே
          விரிகதிரால் யாவும் விழுங்க்---மருண
          கிரிபரமான் மாவே கிளருளப்பூ நன்றாய்
          விரி பரிதியாக விளங்கு
அருணகிரியாம் பரமாத்மா தனது ஒளிக்கதிர்களால் ‘நான்” யார் என்ற ஞானத்தை நமக்கு வெளிவாக்கி நமது உள்ளத் தாமரயை மலர வைக்கிறான் என்று பகவான் பஞ்சரத்தினத்தின் முதல் சுலோகத்திலேயே கூறுகிறார்.
பரமாத்மா ஒளியைத்தான் வழங்குகிறான்; மலர வேண்டியது நமது முயற்சியால்த் தான்.பரமனின் ஒளிவெள்ளம் எல்லாருக்கும் ஒரு போல் தான் கிடைக்கிறது.அதை பயன் படுத்துவது அவரவர் பொறுப்பு.ஆகவே தான் சிலருக்கு ஆத்மசக்ஷாத்காரம் எளிதில் கிடைக்கிறது சிலருக்கு தாமதமாக கிடைக்கிறது.
பரமன் தனது அருளொளியை ஜீவாத்மாக்களின் மீது பரவ விடுவதால் தான் ஜீவாத்மாக்கள் முக்தியடைய முடியும்.
நமது முயற்சி என்பது வெளியுலக வாசனைகளிருந்து மனதை உள்முகமாக திருப்புவதில் தான் உள்ளது.அதற்கு வேண்டியது வைராக்யம்.
பகவான் ரமணர் பரமாத்மாவின் அருளொளியையும்,உலக மாயைகளையும் சினிமாக் காட்சிகளோடு ஒப்பிடுவார். திரையரங்குகளில் பகல் காட்சி நடக்கும் பொழுது செயற்கையாக இருளை உண்டு பண்ணி,புரொஜக்டர் மூல சிறிது ஒளியை ஃபிலிம் நாடக்களின் மீது செலுத்தும் பொழுது நாம் வித விதமான காட்சிகளையும் மனிதர்களையும் மற்றவைகளையும் திரையில் காண்கிறோம்.திரை அரங்குகின் கதவுகள் திறந்து சூரிய ஒளி அரங்கிற்குள் பாயுமேயானால் திரையின் மீது தெரிந்து வந்த காட்சிகள் மறைந்து போகும். திரையரங்குகளில் பகல் காட்சி நடக்கும் பொழுது உள்ளேயிருக்கும் காணிகளைப்போல் தான் ஜீவாத்மாக்களும்.இருளில் மாய ஜாலக்காட்சிகளை உண்மை என்று எண்ணி அதில் வரும் மனிதர்களோடு சுகத்தையும் துக்கத்தையும் அனுபவிக்கிறோம். திரையரங்கின் கதவுகள் திறக்கப்படும் போது நாம் நிஜ உலகிற்கு வருகிறோம் .அது போல அருணசலனின் ஒளிவெள்ளம் நம் மீது விழும் போது நாமும் நிஜத்தை உணருகிறோம்.
பஞ்சரத்னத்தின் இரண்டாவது சுலோகத்தில் இன்னும் சற்று விளக்கமாக பகவான் கூறுகிறார்; ‘இந்த சித்திரமும் அருணாசலனே உண்டுபண்ணுவது தான்’ என்று.
          சித்திரமா மிதெல்லாஞ் செம்மலையே நின்பாலே
          யுத்திதமாய் நின்றே யொடுங்கிடுமா ---நித்தியமு
          நானென் றிதய நடித்திடுவை யாலுன்பேற்
          தானிதய மென்றிடுவர் தாம்
சினிமாப் படம் எப்படி திரையில் எழுந்து திரையிலேயே மறைகிறதோ அது போல் உலக சித்திரங்களெனும் மாயை அருணாசலனெனும் திரையில் தான் தோன்றி. இருந்து  மறைகிறது. அதாவது நமது உள்ளத்தில் தான் இவையெல்லாம் தோன்றுகிறது ,நடக்கிறது ,மறைகிறது. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றன்றி,வேறில்லையென்பதால் இதெல்லாம்  நிகழ்வதும் அருணாசலனால்த் தான்.ஆகவே தான்,அருணாசலா,உன் பெயர் தான் இதயம் என்பர்.
குருவாசக கோவை 85 ஆவது சுலோகத்தில் பகவான் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்: “ஆன்மாவே பல ரூபத்திலும் நாமத்திலும் காணப்பட்டாலும்,ஆன்மா எதையும் செய்வதில்லை. அது சிருஷ்டி,சம்ரக்ஷணை,சம்ஹாரம் (ஆக்கல்,காத்தல், அழித்தல்  )இவைக்கு காரணமாக இருக்கிறது.”
நான் எனும் பிரம்மம் ஒரு  நிமித்த காரணமாக இருக்கிறது.அருணாசலத்தை பகவான் ஞான செம்மலை என்கிறார்.அது எல்லாவற்றையும் அழிக்க வல்ல ஃஞானாக்னி.
:இந்த ஞானாக்னி எல்லோர் உள்ளத்திலும் உள்ளது.ஆனால் அதை அறிந்து கொள்ளாமல், நாம் தான் என்றோ எரிந்து சாம்பலாகப்போகும் இந்த உடலை நான் என்று எண்ணிக்கொண்டு இகலோக வாழ்வில் ஈடுபடுகிறோம்;அதனால் இன்ப துன்பத்திற்கு ஆளாகிறோம்.
இந்த இடத்தில் ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது.
சோழர்கள் கோலோச்சி வந்த காலம்.சோழ நாட்டின் மிக பிரபலமான துறைமுகம் காவேரி பூம்பட்டினம். இந்த நகரம் பூம்புகார் என்ற பெயரிலும் அறியப்பட்டு வந்தது. காவேரித்தாய் கடலன்னையில் கலக்கும் இடமிது.
அங்கு சிவனேயர் என்றொரு வணிகர் தனது இல்லாள் நயனக்கலையுடன் வாழ்ந்து வந்தார்.அவர் சிறந்த பக்திமான்; செல்வந்தர், தான தருமத்திற்கு பெயர் போனவர். அவர்களது இல்வாழ்க்கையின் வெற்றியின் அடையாளமாக ஒரு ஆண்குழந்தை பிறந்தது.
அவர் வசித்து வந்த ஊருக்கு அருகில் திருவெண்காடு என்ற புகழ் வாய்ந்த சிவ க்ஷேதிரம் உள்ளது.சிறந்த பக்திமானான சிவனேயர் திருவெண்காட்டு ஈசனின் நாமத்தையே தன் மகனுக்கு இட்டு திருவெண்காடர் என்று அழைக்கலானார்.
திருவெண்காடருக்கு ஐந்து வயதான பொழுது சிவனேயர் சிவனடி சேர்ந்தார். திருவெண்காடர் செல்வ செழிப்பில் வளர்ந்தாலும் தந்தையைப் போலவே மிகவும் பக்தியுடையவரகவும்,கலை இலக்கிய உணர்வு உள்ளவராகவும் வளர்ந்து வந்தார்.அவருக்கு பதினாறு வயதானவுடன் அன்றைய வழக்குப்படி சிவக்கலை என்ற பெண்ணை மணம் முடித்து வைத்தனர் பெரியோர்கள்.
குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட திருவெண்காடர் வியாபாரத்தின் மூலம் மேலும் நிறைய செல்வம் ஈட்டினார். கடல் கடந்து வாணிபம் செய்தார். தொட்டதெல்லாம் பொன்னானது.
ஆனால் மழலை செல்வம் இல்லாத ஒரு குறையால் திருவெண்காடர்-சிவக்கலை தம்பதியர் மிகவும் துன்பத்திற்கு ஆளானார்கள்..
அதே ஊரில் சிவ சாருமர் என்ற இன்னொரு சிவ பக்தர் வாழ்ந்து வந்தார்..அவர் சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதையே தனது தலையாய கடமையாகக் கருதினார். சிவனடியார்களுக்கு உணவும் தான தருமங்களும் செய்து செய்து அவர் மிகவும் ஏழ்மையில் வாடி வந்தார்.அவரது இல்லாள் சுசிலா அம்மையாரும் அவருக்கு உறுதுணையாக இருந்து ஏழ்மையை பங்கிட்டு வந்தார்கள்.
கருணையே உருவான அருணாசலேசுவரர்-அந்த ஊரில் மருதுவாணர் என்ற பெயரில் அறியப்பட்டு வந்திருந்தார்—தனது பக்தர்களான இரு தம்பதிகளின் குறைகளை தீர்ப்பதற்கு ஒரு திருவிளையாடகலை அரங்கேற்றினார்.
ஒரு நாள் சிவனேசர்-சுசீலா தம்பதியரின் கனவில் மருதவாணர் தோன்றி,’’ நாளை உங்கள் வீட்டின் முன்னாலுள்ள வில்வ மரத்தின் நிழலில் ஒரு மழலையை காண்பீர்கள்.அதை எடுத்துக்கொண்டு போய் திருவெண்காடர் என்ற செல்வந்தரிடம் கொடுங்கள்.உங்கள் கஷ்டங்கள் எல்லாம் நீங்கும்” என்று கூறி மறைந்தார்.
அதே இரவில் திருவெண்காடரின் கனவில் சிவபெருமன்,தோன்றி ” நாளை சிவனேயர் –சுசீலா என்றொரு தம்பதியினர் ஒரு குழந்தையை உங்களிடம் கொண்டு வருவார்கள்.அதை பெற்றுக் கொண்டு,அவர்களுக்கு வேண்டிய செல்வம் கொடுக்கவும்”, என்று கூறி மறைந்தார்.
அப்படிக்கிடைத்த குழந்தைக்கு மருத வாணன் என்ற பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்தார்கள் திருவெண்காடர் தம்பதிகள்.
மருது வாணன் தனது பதினாறாவது வயதில் கடல் கடந்து வியாபரத்திற்காக அன்னிய தேசம் சென்றான்.
மகன் நிறைய செல்வங்களுடன் திரும்பி வருவான் என்று காத்திருந்தார்கள் சிறிதே வயதான திருவெண்காடரும் அவரது மனைவியும்.
மருதவாணன் வந்தான் நிறைய மூட்டைகளுடன்.
திருவெண்காடரும் மனைவியும் மூட்டைகளை அவிழ்க்க ஆரம்பித்தார்கள். மூட்டைகளில் வெறும் வறட்டி மட்டும் தான் இருந்தது.
சிறந்த சிவ பக்தராக இருந்த திருவெண்காடருக்கே சினம் வந்தது.
“வியாபாரம் செய்து பொருளீட்டி வா என்று அனுப்பி வைத்தால் இப்படி வரட்டியைக் கொண்டு வந்திருக்கிறாயே” என்று கூறி ஒரு வரட்டியை தூக்கி வீசி எறிந்தார். வரட்டி உடைந்து சிதறியது.;அதிலிருந்து முத்துக்களும் இரத்தினங்களும் கூடவே சிதறி விழுந்தன. .திருவெண்காடரும் மனைவியும் இன்னும் சில் வரட்டியை உடைத்துப் பார்த்தார்கள். எல்லாவற்றின் உள்ளிலும் இரத்தினங்களும் முத்துக்களும் இருந்தன.
மகன் கூறினான்,’ இந்த சாம்பலாக போகக்கூடிய வரட்டியினுள் எப்படி முத்துக்களும் இரத்டினங்களும் இருக்கிறதோ அது போல் நம் ஒவ்வொருவர் உள்ளேயும் இரத்தினங்களைப் போல் பிரகாசிக்கின்ற பரமன் குடியிருக்கிறான்.அவனை மறந்து காணமுடியாமல் நாம் இந்த வறட்டி போன்ற உடலை ‘தான்’ என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோமே;அதன் சுக வாழ்க்கைகாக பொன்னும் பொருளும் சேர்க்கின்றோமே; இதற்கு ஏதாவது அர்தமுண்டா ?” என்று கூறி தன் தாய் தந்தையரிடம் ஒரு பெட்டியை கொடுத்து விட்டு மறைந்து போனான் மருத வாணன்
பெட்டியை திறந்து பார்த்த தாய் தந்தையர் மற்றொரு அதிர்ச்சிக்குள்ளானார்கள். அதனுள்ளே ஒரு காதறுந்த ஊசியும் ஒரு சிறு குறிப்பும் தான் இருந்தன.. அந்த குறிப்பில் ,”காதறுந்த ஊசியும் கடை வாழ்க்கைகு உதவுமோ?’ என்று எழுத்ப் பட்டிருந்தது..
திருவெண்காடருக்கு அந்த நொடியில் ஞானோதயம் உண்டாயிற்று.
“ஒவ்வொரூ சர-அசரத்தினுள்ளும் அந்த பரமாத்மா ஒளிர்ந்து கொண்டிருக்கின்றான்.அவனை கண்டுகொள்ளமல்  இன்றோ நாளையோ எரிந்து சாம்பலாகி பஞ்ச பூதங்களுடன் சேர வேண்டிய சரீர-இந்திரிய சுகங்களை தேடி அலைந்தோமே;எவ்வளவு மூடத்தனம்!”
அன்றே தனது எல்லா செல்வங்களையும் குடும்பத்தையும் விட்டும் சிவனை தேடி பாடிக்கொண்டு போகலானார்.அவர் தான் பிற்காலத்தில் பட்டினத்தார் என்று அறியப்படலானார்.

நாம் பட்டினத்தார் ஆகவில்லையென்றாலும் நம்முள்ளே எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் பரமனை தேடி செல்வோம்   நிச்சயம் ஒரு நாள் இல்லையென்றால் இன்னொரு நாள் நாம் ஆத்ம சாக்ஷாத்காரம் அடைவோம்.

No comments:

Post a Comment