Friday 30 January 2015

ரமணஜோதி 62

ரமணஜோதி 62

மாயா---தோற்றமும் ஏற்றமும்


தேடா துற்றநற் றிருவருணிதியகத்
தியக்கந் தீர்த்தரு ளருணாசலா
பகவான் தனக்கேற்பட்ட அனுபவத்தை நினைவு கூறுவதுடன்  மனதிலேற்படும் கலக்கத்தை நீ தான் தீர்த்தருளவேண்டும், அருணாசலா என்று வேண்டுகிறார் இந்த சுலோகத்தில்.
பகவானுக்கு ஞானம், எந்த விதமான சாதனைகளும் செய்யாமல் ஒரு நாள் திடீரென்று ஏற்பட்டது. திருவண்ணாமலை எங்கிருக்கிறது என்றுகூட தெரியாமல் இருந்த வெங்கட ராமனை இழுத்து வந்து ரமண மஹரிஷியாக்கியது அந்த அருணாசலனின் கிருபை தான்.
‘உனது அருளெனும் நிதியை அளித்து உள்ளத்தில் எற்படக்கூடிய அவித்யை எனும் மாயையை நீக்கிவிடு அருணாசலா,’ என்கிறார் பகவான்.
இந்த மாயா என்றால் என்ன? சற்று விவரமாக பார்ப்போம்.’
மாயா என்ற வார்த்தை ரிக்வேதத்தில் எழுபது முறையும் அதர்வ வேதத்தில் ஏறக்குறைய இருபத்தியேழு முறையும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் மாயா என்ற பதம் ஆதி சங்கரன் பயன்படுத்திய அர்த்தத்தில் வேதங்களில் பயன்படுத்தபடவில்லை அதாவது மாயா தான் அவித்யையின் மூல காரணம் என்று வேதங்களில் சொல்லப் படவில்லை.வேதங்களில் மாயா என்ற பதம் ப்ரஞ்சா, ஞான விசேஷம் என்ற பொருளிலும் சக்தி,அசாதரணமான திறன் என்ற பொருளிலும் தான் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது
வருணனின் அசாமான்யமான சக்தியை மாயா என்று ஆரம்பகால வேத இலக்கியங்கள் கூறுகின்றன.வருணன் மட்டுமல்ல,இந்திரன்,அக்னி,ஏனைய தேவதைகளும் மாயா சக்தி பெற்றிருந்ததாக வேத புத்தகங்கள் கூறுகின்றன.
புராணங்களை எடுத்துக் கொண்டால் வைஷ்ணவ சித்தாந்தப் படி விஷ்ணுவின் ஒன்பது சக்திகளில் ஒன்று மாயா.
சங்ககால தமிழ் இலக்கியங்களில் கிருஷ்ண பகவானை மாயோன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
துர்காவை மாயோள் என்றும் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன .விஷ்ணுவின் சர்வசக்தியும் அவள் பெற்றிருப்பதாலும்,எல்லையில்லாத படைப்பாற்றல் பெற்றிருப்பதாலும் துர்காவை விஷ்ணுமாயா என்று சங்ககால புலவர்கள் வருணித்தார்கள்.
அதர்வ வேதத்தில் மாயாவை அசுர சக்தியோடு இணைத்து கூறியுள்ளார்கள்.யஜுர்வேதத்தில் மாயாவை பூமித்தாயோடு இணைத்து சொல்லியுள்ளார்கள்.
உபனிஷத காலங்களில் தான் மாயா என்கின்ற  சொல் விரிவான பொருளில். பேசப்பட ஆரம்பித்தது.
மாயா மனோவிருத்தியுடனும் பௌதிக பொருள்களின் சிருஷ்டியுடனும் சம்பந்தப் படுத்தபட்டது இந்தக் காலத்தில்.மாயா சக்தி ஆசார அனுஷ்டானங்களுடன் இணைந்தது.
ஸ்வேதாஷ்வதர உபனிஷத்தில் மாயாவை பிரகிருதி இயற்கையன்னை) என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் பிரகிருதி மஹேஷ்வரனின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
.ஸாங்கியகாரிகா தான் முதன் முதலாக பிரகிருதியை பெண்ணாக சித்திரித்தது.
ப்ரம்மவைவர்த்த புராணத்தில் பிரகிருதியை ராதா என்று அழைத்தார்கள்.பிரம்மத்தின் சைதன்யத்தின் மூலகாரணம் இந்த பிரகிருதிதான் என்று சொல்லப்பட்டது.பிரம்மனின் சத்துவ குணங்களின் உருவகமாக பிரகிருதி சித்திரிக்கப் பட்டது.
இந்த காலங்கள் எல்லாம் கடந்து வேதாந்த காலகட்டம் வந்த பொழுது மாயா என்ற வார்த்தை பிரம்ம தத்துவத்தை விளக்குவதற்காக ஒரு தனி உருவமும் இடமும் கைக்கொண்டது.
இந்த பிரபஞ்ச சிருஷ்டியின் இரகசியத்தை விளங்க வைக்கவும் மானவ சமுதாயத்திற்கு சம்சார சுழற்சியிலிருந்து விடுதலை நேடிக் கொடுப்பதற்கு ஒரு மார்க்கமாகவும் மாயா உருபெற்றது.
மனித இனத்தின் இகலோக வாழ்வும் மனோவிருத்தியும் ஒரு மாபெரும் பிரபஞ்ச சத்தியத்தின் ஒரு சிறு பகுதிதான் என்பதை அறிந்துகொண்ட ஞானிகள் அந்த பிரபஞ்ச சத்தியத்தை விளக்குவதற்கு மாயா என்ற தத்துவக் கண்ணியை அடையாளம் காட்டினார்கள்.
நம்மை இந்த இஹலோகவாழ்வுடன் பிணைப்பது இந்த உடலே நான் என்ற எண்ணமும் அதனால் எழுகின்ற அஹங்காரமும் தான். அந்த அஹங்காரத்திலிருத்து உண்டாகின்ற விஷய வாசனைகளும் விஷய வாசனைகள் காரணமாக மனிதர்கள் செய்து கூட்டுகின்ற கர்மங்களும் தனி மனித வாழ்வையும் இந்த சமஷ்டி வாழ்வையும் பாதித்து துன்பம் கொடுப்பதையும் கண்ட ஞானிகள் வேத உபனிஷத்துக்களையும் சுருதி,ஸ்மிருதிகளையும் மானவ சமுதாயத்திற்கு பயன்படும்படி வியாக்கியானித்தார்கள். அவர்களது வியாக்கியானம் மனிதனது துன்பத்தைத் துடைத்து சாந்தியையும் நிரந்தரமான ஆனந்தத்தையும் பெறுவதற்கு பெரிதும் உதவியாக பரிணமித்தது.
இந்த சந்தர்ப்பத்தில்தான் மாயா என்ற தத்துவம் முழு உருப் பெற்றது.
நித்ய நிரந்தரமான  பிரம்மத்தை மறைத்து நமக்கு அனித்தியமான விஷய வாசனையை உண்டுபண்ணுகின்ற ஒரு வகையான சக்தியாக மாயா உருவகபடுத்தப் பட்டாள்.
மாயா என்றால் ஒரு விதமான பிரமை என்று வேதாந்திகள் விளக்கினார்கள்.அந்த மாயா மோஹினியின் வலையில் அகப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அதுவே சத்யம் என்று தோன்றுகிறது.
நாம் கனவு காணும்பொழுது கனவில் நடப்பவையெல்லாம் நிஜம் என்றே தோன்றும்-கனவிலிருந்து விழித்து எழும் வரை.
முதன் முதலாக இந்த மாயா தத்துவத்தை விளக்கியது ஆதி சங்கர பகவத் பாதாள் தான்.
இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.பாரதத்தின் தார்சனிக (தொலை நோக்குப்பார்வை கொண்ட) கலக்சாரத்தில் மட்டும் தான் கடவுளை மனிதனுக்குள்ளேயே பார்க்கின்ற ஒரு அடிப்படை தத்துவத்தைக் காண முடிகிறது. எல்லா ‘செமட்டிக் ( Semetic) மேற்கத்திய மதங்களிலும் கடவுளை நமக்கு அன்னியமான ஒன்றாய்த்தான் நம்புகிறார்கள்.அவர்களது நம்பிக்கை பரலோகத்திற்கு போகும்பொழுது சுவர்க்க ராஜ்ஜியம் கிடைக்கவேண்டும்;அதற்காக நாம் இங்கு உண்மையாக நல்லவனாக நடந்துகொள்ளணும் என்ற ஒரு பயமுறுத்தலை அடிப்படையாக கொண்டிருக்கும் பொழுது, நாம் நம்முள் பிரம்மனை தரிசிக்கிறோம்,மற்றவர்கள் உள்ளிலும்,ஏன், மற்ற எல்லா ஜீவ ராசிகளின் உள்ளிலும் பிரமனை தரிசிக்கிறோம்.ஆகவே நமது இகலோக விவகாரங்கள் நமக்கு மட்டும் நல்லது பயப்பதாக இருந்தால் போதாது, சகல ஜீவராசிகளுக்கும் நன்மை பயக்க வேண்டும்,ஒரு சாந்தியும் சமாதானமும் நிறைந்த சமுதாயத்தை உருவக்குவதற்கு ஏதுவாக வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது  பாரத தார்சனிக கலாச்சாரம்.
இந்த தத்துவ சம்ஹிதைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பது இந்த மாயா தத்துவம் தான்.
சத்என்பது ஒன்று தான். பிரம்மம் மட்டும் தான் சத் என்றால் வேறு ஒன்றும்ஸத்ஆக இருக்க முடியாது. .ஆனால் அந்த நிஜம் எல்லோருக்கும் தெரிந்துவிட்டால் உலகம் நிச்சலாமாகிவிடும்.அப்படி ஆகவிடாமல் தடுப்பது மாயா சக்தி. மாயா பிரம்மனை சுற்றி ஒரு இருள் வலயத்தை சிருஷ்டித்து நம்மை மயக்கத்தில் ஆழ்த்துகிறது.இன்னொரு புறம் அதே மாயா நாம் காணும் இந்த மாயா லோகத்தை சிருஷ்டித்து நமக்கு தாற்காலிகமாக சுகத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது.அந்த சுகத்தின்-சந்தோஷத்தின் மறுபக்கம் துக்கமும் துன்பமும் தான் என்பதை மறக்கடிக்கிறது. இந்த மாயா வலயத்திலிருந்து தப்பிப்பது தான் முக்தி அல்லது மோக்ஷம் எனப்படுகிறது
மாயா என்பது அவ்யக்தம் –அதிருஸ்யம்.ஆனால் மாயையினால் உண்டாகின்ற இந்த உலகமும் உலகனுபவங்களும் வ்யக்தமும் திருஸ்யமுமாயுள்ளது.
பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா பல இடங்களில் பிரகிருதி அல்லது மாயா,அதன் குணங்கள் குறித்து பரமர்சித்துள்ளார்.கடந்த சில மடல்களில் இவை பற்றி கண்டோம். மீண்டும்  ஒரு முறை சில  சுலோகங்களைப் பார்ப்போம்
பிரகிருதியும் புருஷனும் சங்கமிக்கும்பொழுது தான் சகல சராசரங்களும் இந்த பிரபஞ்சத்தில் ஜனிக்கின்றன.
யாவத்ஸஞ்சாயதே கிஞ்சித்ஸத்வம் ஸ்தாவரஜங்கமம் !
க்ஷேத்ரக்ஷேத்ரக்ஞ் ஸ்ம்யோகாத் தட்வித்தி பரதர்ஷப !!
                     ப்.கீ அத்.13 சுலோ 26
பிரகிருதி முக்குணபரிமாணமுடையது.பிரகிருதியின் முக்குணங்களான சத்,ராஜஸ்,,தமஸ் என்ற முக்குணங்களின் தாக்கத்தின் காரணமாக ஜீவ ராசிகள் பல கிரியைகளை செய்கின்றன. ஆனால் ஜீவாத்மாவோ நித்ய சைதன்யமான தான் தான் இந்த கருமங்களையெல்லாம் செய்கிறோம் என்று எண்ணுகிறது. இந்த மயக்கத்தினால் துன்பமடைகிறது. இது தான் மாயா.
மேற்கூறிய கருத்தை 29 வது சுலோகத்தில் காணலாம்.
          ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணானி சர்வச: !
          ய:பஸ்யதி ததாத்மானமகர்தாரம் ஸ் பஸ்யதி !!


பதிமூன்றாம் அத்தியாயம் 30 ஆவது சுலோகதில் பகவான் கூறுகிறார்:
    
யதா பூத்ப்ருதக்பாவமேகஸ்தமனுபஸ்யதி !
தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா !!
மாயையின் காரணமாக தனித் தனியாக இந்த உலகில் காணப்படும் பொருள்கள் ஒரே பொருளிலிருப்பதையும்,அந்த ஒரே பொருளிலிருந்து அவை பலதாவதை நாம் புரிந்து கொண்டுவிட்டால் நாம் இந்த மாயா வலயத்திலிருந்து விடுபட்டுவிடுவோம். ஆத்மா செயலற்றதென்றும் எல்லாமே பிரகிருதியினால் செய்யப்படுகின்றன என்பதை புரிந்துகொண்டால் அவன் பிரம்மமாகிறான்.
மீண்டும் பதினெட்டாம் அத்தியாயம் 61-வது சுலோகத்தில் கூறுகிறார்:
          ஈஸ்வர: ஸர்வபூதானாம் ஹ்ருத்தேசே அர்ஜுனா திஷ்டதி !
          ப்ராமயன் ஸர்வபூதானி யந்த்ராரூடானி மாய்யா !!
பரமன் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறான்.ஆனால் எல்லா ஜீவராசிகளையும் சம்சார சாகரம் எனும் கடலில் இந்த பூத உடல் எனும் யந்திரத்திலேற்றி தத்தளிக்கவிடுகிறான்.ஆடுவது இந்த பௌதிக உடலும் மாயா பிரபஞ்சமும் தான் ;ஆத்மா அல்ல என்பதை புரிந்துகொண்டு விட்டால் துன்பமேது இன்பமேது?
          நாஹம் ப்ரகாச: ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ருத: !
          மூடோ அயம் நாபிஜானாதி லோகோ மாமஜமவ்யயம் !!
யோக மாயையினால் ஆவரணம் செய்ய்யப்பட்டுள்ள ஜீவன்கள் பரமனை அறிவதில்லை.ஆதியும் அந்தமுமில்லாத-இறப்பும் பிற்ப்பும் இல்லாத பரமன் மாயையினால் பாதிக்கப்படுவதில்லை.
இந்த மாயாவலயத்திலிருந்து வெளிவர வேண்டுமென்றால் அந்த அருணசலனை சரணடைவதை தவிர வேறு வழியில்லை. ஆகவேதான் பகவான் அருணாசலனிடம் பிரார்த்திக்கிறார்:,’ உன் அருளைத் தந்து எனது மனமயக்கத்தை தீர்த்தருளருணாசலா
 ‘தேடா துற்றநற் றிருவருணிதியகத்
தியக்கந் தீர்த்தரு ளருணாசலா



No comments:

Post a Comment