Sunday 22 March 2015

ரமணஜோதி 100

ரமணஜோதி 100


மீகாமன்


     மீகாம னில்லாமன் மாகாற் றலைகல
               மாகாமற் காத்தரு ளருணாசலா
மீகாமன் என்றால் கப்பலை ஓட்டுனர் அல்லது நடத்துனர்.. நடுக்கடலில் ஒரு கப்பல், ஓட்டுனரும் நடத்துனரும் இல்லாமல் சிக்கிக்கொண்டால் என்ன கதியாகும்? ஓட்டுனர் இல்லாதது மட்டுமல்ல, அங்கு ஒரு புயல் காற்று அடித்தால் கப்பலின் நிலைமை என்னாகும்? ஈசன் அருள் கிடைக்காத மனிதாத்மாக்களின் நிலைமையும் இதே போல் தான்.
இந்த மாயையினால் உருவான பிரபஞ்ச ஸாகரத்தில் ஆசைகள் எனும் திமிங்கலுங்களும் சுறா மீன்களும் ஏராளம்.ஏராளம்.அவைகளிடம் சிக்கிக் கொண்டாலோ நாம் தப்பிக்கவே இயலாது. அப்படி தப்பித்துக் கொண்டாலும் கடலினுள்ளிலுள்ள சுழல்களில் சிக்கி அங்கேயே உழன்று கொண்டிருக்க வேண்டியது தான்.ஆகவே தான் பகவான் அருணாசலனின் அருளை வேண்டுகிறார்.
இதே போல்த் தான் தாண்டவராயன் பிள்ளையும் கைவல்ய நவனீதத்தில் வேண்டுகிறார்.
           வாராயென் மகனே தன்னை மறந்தவன் பிறந்தி றந்து
          தீராத சுழற்காற் றுற்ற செத்தைபோற் சுற்றிச் சுற்றிப்
          பேராத கால நேமிப் பிரமையிற் றிரிவன் போதம்
          ஆராயுந்த ந்னைத் தானென் ற்றியுமவளவுந் தானே
                     கை.ந.இரண்டாம் பாகம் தத்துவ விளக்கபடலம்
                     சுலோ 19
தன்னை மறந்தவன் என்ற வார்த்தைகள் மூலம் அந்த பரமாத்மாவை மறந்து விட்ட்வர்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, அவர்கள் இவ்வுலகிலிருந்து முக்தியடைய முடியாதவதர்களாகி விடுவார்கள் எங்கிறார் பிள்ளை. அவர்கள் ‘புனரபி ஜனனம்,புனரபி மரணம்’ பிறந்தும் இறந்தும் இந்த சம்சார சாகரத்தில் கிடந்து உழல்வார்கள். சுழலிக்காற்றில் அகப்பட்டுக்கொண்ட ஒரு வைக்கோல் துரும்பு போல் அல்லாடுவார்கள்..இந்த சுழற்சியிலிருந்து மோக்ஷம் அடைவதற்கு ஒரே வழி நான் யார் என்று விசாரித்து அறிந்து ஆத்ம ஸாக்ஷாத்காரம் அடைவது தான்.
இதே போல் மலையாள கவிஞர் துஞ்சத்து எழுத்தச்சன் ‘ஹரி நாம
கீர் த்தனம்என்ற நூலில் கூறியுள்ளது நினைவுகூரத்தகுந்தது.
          ஓம்காரமாயப் பொருள் மூன்னாய் பிரிஞ்சுடனெ-
     யாங்காரமாயதினு தான் தன்னெ ஸாக்ஷியது
     போதம்வருத்துவதினாளாயினின்ன பர-
     மாசாரியரூப; ஹரினாராயண நம: !
துவக்கமே மிகவும் சக்திவாய்ந்ததாக –பொருள் பொதிந்ததாக இருக்கிறது. ஓம்காரம் மூன்றாக பிரிந்து--அதாவது அ,உ,ம் என்ற மூன்று எழுத்துக்களின் கூட்டு தான் ஓம் என்று முன்பொரு மடலில் குறிப்பிட்டிருந்தேன்—அது போல ஒம் என்ற சொல்லைப் பிரித்து மூன்று அக்ஷரங்களாக கூறும்போது ஏற்படுகின்ற தாக்கத்தை விளக்குகிறார் கவிஞர்.
அ என்று சொல்லும்பொழுது நாம் வாய் நன்றாக திறந்து உச்சரிக்கிறோம். அது விஸ்தாரமான ஸ்தூல பிரபஞ்சத்தை குறிக்கிறது.
‘உ’ என்று சொல்லும்பொழுது உதடுகள் சிறிது நெருங்கி மூடிக்கொள்ள ஆரம்பிக்கிறது.இது ஸூக்ஷ்ம பிரபஞ்சத்தைக் குறிக்கிறது.
‘ம்’ என்று உச்சரிக்கும் பொழுது வாய் நன்றாக மூடிக்கொள்கிறது.அது ஸூக்ஷ்மேதரமான பிரபஞ்சத்தைக் குறிக்கிறது.
அதற்கு பிறகோ, ஒரு சாந்தமான அமைதி; எந்த உணர்ச்சிகளுக்கும் இடமில்லாத அமைதி. அது தான் பிரம்மம்.
இந்த பிரம்மம் தான் ஸூக்ஷ்மேதரவும்,சூக்ஷ்மவும், ஸ்தூலவுமான பிரபஞ்சத்தை பிரதிபலிக்கின்றது.
ஆகவே,அது தான்-பிரம்மம்;அது தான் எல்லாம்.
‘ஓம்’ காரத்திற்கு முன்னும் பின்னும் அமைதி-நிசப்தம் தான்.
இந்த ஒம்கார ரூபமான துரீயாவஸ்தை தான் சுஷுப்தியாகவும்,சொப்னாவஸ்தையாகவும்,ஜாக்ரத்தாகவும் உரு மாறுகிறது.
இந்த பரம்பொருளின் ஸ்தூல உருவம்தான் ஸத்வ-ரஜஸ்- தமோ குணங்களும்.
‘அ’காரம் உலக சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும், ’உ’காரம் எல்லோருக்கும் பாதுகாவலனான விஷ்ணுவும், ‘ம’காரம் ஸம்ஹார மூர்த்தியான சிவனையும் குறிக்கிறது.
ஆதியும் அந்தமுமில்லாத, ‘இது’ தான் என்று அறுதியிட்டு உறுதி கூறமுடியாததுமான, எதன் மீது எந்த ஒரு குண நலன்களையும் ஆரோபிக்க
முடியாததுமான அந்த ஸத்தியம் தான் ‘ஒம்’காரம் எனப்படும் பிரம்மம்
அந்த பிரம்மம் எதிலும் பற்றில்லாமல்,எல்லாவற்றிற்கும் ஸாக்ஷி மாத்திரமாய் நிற்கின்ற அடிப்படை தத்துவம் தான்.
ஸாங்கிய ஸாஸ்திரத்தின் அடிப்படையில் விவரிக்க இயலாத இந்த அடிப்படை தத்துவம் சூக்ஷ்ம-ஸ்தூல பிரபஞ்சமாக விரிவடையக்கூடியதாக இருக்கிறது; அது சத்துவ-தமோ குணங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது.
காபில சாஸ்திரப்படி நம்முள் சுயம் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் ‘போதம்’ தான் இந்த பிரம்மம்;அதுவே சத்துவ ரஜஸ்,தமோ குணங்களின் சேர்க்கையால் ‘விஷயங்களால் மூடப்பட்டிருக்கின்ற ஸ்தூல சூக்ஷ்ம பிரபஞ்சத்தை சிருஷ்டிக்க வல்லதாகவும் இருக்கிறது. ஆனால் இப்படி நடக்கின்ற பிரபஞ்ச சிருஷ்டியில் பிரம்மத்திற்கு, அல்லது நமது போதத்திற்கு எந்த பங்குமில்லை;அது வெறும் சாக்ஷி மாத்திரம் தான். நம் ‘போத’ ஸ்வ்யம் பிரகாசமானதாக இருக்கிறது.
நமது விவகார பிரபஞ்சத்தில், ஒளி அல்லது பிரகாசம் சூரிய –சந்திராதிகள், அக்னி, அல்லது வேறு பொருள்களின் சேர்க்கையில் உளவாகும் ஒருவித சக்தி எனத் தெரிந்து கொண்டிருக்கிறோம். இந்த நமக்கு வெளியிலுள்ள சக்தி சேகரிப்புகளிலிருந்து வருகின்ற ஒளி ஒரு பொருளின் மீது விழுந்து அது நமது கண்களிலுள்ள கண்மணி( Retina ) யில் தலிகீழாக அந்தப் பொருளின் பிம்பத்தை உண்டு பண்ணி நமது மூளயின் மூலம் சரியான உருவில் அந்த பொருள்களை காண்கிறோம் என்று விஞ்ஞானம் நமக்கு கற்று தந்துள்ளது.
ஆனால் கண்களை மூடிக்கொண்டு இருள் சூழ்ந்த ஒரு அறையில் படுத்து உறங்கும்பொழுது காணுகின்ற எந்த ஒரு வெளி சக்தியின் உதவியுமில்லாமல் பிரகாசமான காட்சிகளை சொப்னங்களாக காணுகின்றோம். அங்கே பிரகாசம் –ஒளி எங்கிருந்து வந்தது ?. அது நமது போதத்திலிருந்து வந்த ஒளி தான்.
இதை நமது முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். ஆகவே தான் சூரியனும் சந்திரனும் அக்னியும் இல்லையென்றாலும் ஒளி இருந்துகொண்டே இருக்கும் என்று சொன்னார்கள். ஜனக-யாஞ்யவால்க்கிய சம்வாதத்தில் இந்த உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது
இந்த சம்வாதம் பீரிஹதாரண்ய உபனிஷத்தில் வருகிறது.யாஞ்யவல்கியர் சிறந்த ஞானி .மஹாராஜா ஜனகரின் சபையை அலங்கரித்திருந்த வித்வாங்களில் முக்கியமானவர். ஜனகரின் குரு என்று கூட கூறலாம்.ஜனகரே சிறந்த ஞானி.இவர்களுக்குள் நடந்த விவாதங்கள் எல்லாமே மிகவும் சுவாரசியமானது.அதிலும் இந்த விவாதம் மிகவும் முக்கியமானது.
ஜனகர் கேட்டார்:” மஹரிஷிவரியரே,விசுவ புருஷனின் பிரகாசம் எங்கிருந்து வருகிறது?
முனிவர் கூறினார்:” சந்தேகமில்லாமல் சூரியனிடமிருந்து தான்,மன்னா.சூரியனின் வெளிச்சத்தில் தான் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் அமர்கின்றன,நடக்கின்றன,செயலாற்றுகின்றன.இதில் உனக்கென்ன சந்தேகம், அரசே?”
“முனிசிரேஷ்டரே, சூரியன் மறைந்த பிறகும் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் செயலாற்றுகின்றனவே;அது எப்படி?”
முனிவர் சொன்னார்,” சூரியன்மறைந்தால் சந்திரன் உதிக்கின்றான். நிலவின் ஒளி நமக்கு உதவுகின்றன,.”
“ சில நேரங்களில் சூரியனும் சந்திரனும் இருவருமே மறைந்து விடுகிறார் கள்;அப்பொழுது?”
“நிச்சயமாக நாம் உருவாக்கும் அக்னி நம்மை சஹாயிக்கின்றது.”
“ நெருப்பும் இல்லையென்றால்---?”
“ ஒலி இருக்கிறது.ஒலியின் மூலம் நாம் திசைகளை கண்டறியமுடியும்.தடங்கல் இல்லாமல் செயலாற்ற முடியும்.”
“ அதுவும் இல்லாவிட்டால்?”
“, அரசே, மகிழ்ச்சி.  நீ இப்பொழுது தான் சரியான கேள்விக்கு வந்திருக்கிறாய். எதுவுமே இல்லாவிட்டாலும் ஆத்மன் இருக்கிறான்.”
“ ஆத்மன் என்றால் என்ன?”
“ஆத்மன் உன்னுள்ளேயே இருப்பவனும், பலவகையான பிராணன்களால் சூழப்பட்டவனும் அவனே பிரகாசமாக இருப்பவனும், அறிவின் இலக்கணமாகவும் இருக்கிறான்.உன் கர்மேந்திரியங்கள் செயலிழந்தாலும் வெளியுலக பிரகாசங்கள் அஸ்தமித்தாலும்,உன்னால் செயலாற்ற முடியும் ஆத்மாவின் உதவியுடன்.”
யாஞ்யவல்கியர் தொடர்ந்தார்:” ஆத்மா என்ப்படுவது ஒரே இடத்தில் இருந்து கொண்டு எங்கும் சஞ்சரிக்கக் கூடியது.”
இந்த ஆத்ம சைதன்யம் எல்லோருள்ளேயும் சதா சர்வ காலம் ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது.மனம் பல இடங்களில் அலைந்தாலும் வேதனைப்பட்டாலும் ஆத்மா பாதிக்கப் படுவதில்லை.வேதனையை உணருவதும் இல்லை.ஆத்மா வெறும் ஸாக்ஷி மாத்திரமாய் நிலை கொள்கிறது.
இப்படிப்பட சைதைன்யத்தை,சுயம் பிரகாசமான ஆத்மாவை,போதத்தை உணருவதற்கான சக்தியை எனக்கு அளிக்கவேண்டும்,ஹரி நாராயணா
என்று எழுத்தச்சன் வேண்டுகிறார்.
இதே போதத்தை தான் ஆத்மாவைத்தான்,பிரம்மத்தை தான் பகவான் ரமணர் மீகாமன் என்று விவரிக்கிறார்.
இந்த மீகாமன் நிர்மலமும் நிராகாரனும் நிர்குணனும் ஆக இருக்கிறான்.இதைத்தான் சாந்தோகிய உபனிஷத்தில் ஆறாம் அத்தியாயத்தில் உத்தாலக முனிவர் தன் புத்திரனும்,சீடனுமான ஸ்வேதகேதுவிற்கு பிரம்ம வித்யை உபதேசிக்கின்ற பொழுது கூறுகிறார்:
ஸதேவஸௌமியேதமக்ர ஆஸித்.” என்றும் ,”ஏகமேவாத்விதீயம்” 
அதாவது ஆதியில் ஸத் ஒன்று மட்டும் தான் இருந்தது.அதுவே பலதாக தோன்றும் மாயையை ஏற்படுத்திற்று.அது நம்முடைய மனப்பிராந்தியே தவிர,நிஜமல்ல.
அதே அத்தியாயத்தில் மஹரிஷி மீண்டும் கூறுவார்:
யதா ஏகேனைவ ம்ருத்பிண்டேன ஸர்வம் ம்ருண்மயமவுஞாதம்
            விஞாதம் ஸ்யாத்வாசாரம்பணம் விகாரோ நாமதேய:
குடம், பானை,சட்டி என்று வித விதமான உருவததை மனம் எனும்  கலைஞன் படைத்தாலும் அவை எல்லாமே மண் தான்.பெயர் தான் மாறுகிறது.
அவை வெவ்வேறு என்று நமது மனம் பிராந்தி கொள்கிறது.இந்த பிராந்தியை விலக்கிக் கொள்ளவேண்டுமென்றால் அந்த மீகாமனின் உதவி வேண்டும்.அதைத்தான் வேண்டுகிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்.


No comments:

Post a Comment