Sunday 22 March 2015

ரமணஜோதி 102

ரமணஜோதி 102

அவித்யா நிர்மார்ஜனம்


          மூக்கிலன் முங்காட்டு முகுரமா காதெனைத்
          தூக்கி யணைத்தரு ளருணாசலா
“முக்கில்லாதவன்—குறைபாடுள்ளவன்-முன்னால் முகம் பார்க்கும் கண்ணாடியை காண்பித்தால் அவன் அழகாய்விடமாட்டான்.அவனது குறை நீங்கி விடாது.அது போல் அவித்யை எனும் மாயையால் ஆவரணம் செய்யப்பட்டுள்ள ஜீவன்களிடம் நீ அவித்யையில் மூழ்கியிருக்கிறாய்; உன்னால் முக்தியடைய இயலாது என்று சொல்வதில் என்ன பயனும் இல்லை;ஆகவே அருணாசலா, எனது அவித்யை நீக்கி ஆத்மசாக்ஷாத்காரம் அடைவதற்கு அருள்வாய்” என்று பகவான் உருக்கமாக வேண்டுகிறார் இந்த சுலோகத்தில்.
அவித்யை நீங்குவதற்கு என்ன வழி?
ஒரு முறை பங்களூரிலிருந்து ஆசிரமத்திற்கு வந்த ஒரு பக்தர் பகவானிடம் கேட்டார்: “சுவாமி, முக்தி பெற எவ்விதமாக தியானம் செய்ய வேண்டுமென்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன்;ஆதலால் சாதனா மார்க்கம் என்னவென்று தாங்கள் அனுக்கிரகித்து என்னை கரையேறச் செய்யவேண்டும்”
“நீ இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார் பகவான்.
“ ஒன்றும் செய்யவில்லை;சுவாமி. அதனால்த் தான் எப்படித் தியானம் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.”” என்றானவன்.
“ தியானம் எதற்கு செய்ய வேண்டும்? முக்தியென்றால் என்ன? எதை சாக்ஷாத்கரிக்க வேண்டும்? இந்த எண்ணம்.உனகெப்படி வந்தது.?” என்று கேள்விகளாக அடுக்கிக் கொண்டே போனார் பகவான்.
பகவானிடம் சமீபத்திலிருந்து பக்தி செலுத்திவந்த ஆசிரம வாசிகள் சொல்லுவார்கள், ‘பகவானிடம் யாரும் ஏதோ நாமும் கேள்வி கேட்க வேண்டுமே என்பத்ற்காக கேள்வி  கூடாது. அப்படிக் கேட்டூவிட்டால் சுலபமாக தப்பித்துக் கொள்ள முடியாது.பகவான் கேட்கின்ற பதில் கேள்விகள் அப்படியிருக்கும்”
அந்த பங்களூர் பக்தருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை“. அவனைப் பார்த்த பகவான்,’அவனை ஏதோ ஒன்று வாட்டுகிறது என்று புரிந்துகொண்டு விட்டார். கருணைனிறைந்த தாயுள்ளம் கொண்ட பகவான் மீண்டும் தொடர்ந்தார்
“எண்ணங்களையெல்லாம் விலக்கிக் களைவதற்காக குலதெய்வத்தின் மீது மனதை நிறுத்தித் தியானிப்பதோ அல்லது ஸ்வரூபமாகிய ஆத்மாவின்மீது மனதை வைத்து ஆத்ம விசாரம் செய்வதாலோ வெளி விஷயங்களெல்லாம் படிப்படியாக விலகி தியானம் ஒன்றே நிலைத்து நிற்கும். தியானம் தனியாக செய்யத் தேவையில்லை .தானாகவே தியானம் ஸ்திரமாக நிலைத்து விடும் .எது இருக்கிறதோ அதுவே தியானம். வெளி விஷயங்களை விடுவதே முக்தி. முக்தியை ‘பெறுவது’ என்று ஒன்றில்லை.மனதை சலனமறச் செய்வதற்குத் தான் பிராணாயாமம் போன்ற வழிகளை சொல்லியிருக்கிறார்கள். பிராணாயாமம் என்றால் வெளியே அலையும் மனதை அகமுகமாக்கி நிறுத்துவது தான் .சற்று மூச்சை அடக்கினால் மனம் உள்ளே நிற்கிறது. ஜபதபங்களுக்கெல்லாம் முன்னாலேயே பிராணாயாமம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள் .மூச்சை சற்று அடக்குவதால் ஆன்ம விசாரணைக்கு அனுகூலமாக இருக்கும்.இஷ்ட தேவதா தியானமோ அல்லது ஆத்ம தியானமோ செய்தால் மூச்சு தானாகவே அடங்குகிறது.அப்படி செய்ய செய்ய ,அந்த தியானமே ‘தான்’ என்று நிலையாகிறது.அந்த நிலையில் தியானம் செய்பவனென்றும் செய்யப்படுவனென்றும் இரண்டில்லை. எல்லாம் இயற்கையாக ஒருவனுடைய ஸ்வரூபமாகி விடுகிறது.”
எவ்வளவு எளிதான விளக்கம்!
பகவான் இன்னொரு பக்தரிடம் கூறினார்:” பாருங்கோ,ஈஸ்வரன் என்றோ ,ஆத்மா என்றோ எந்த பெயரில் அழைத்தாலும் அவன் எங்கும் எப்பொழுதும் கண்கூடாகவே உள்ளான்..அவன் முன் வபந்து நிற்பானென்று எதிர்பார்க்கிறார்கள்.என்ன செய்வது?அவனில்த் தான் நாமிருக்கிறோம்,ஆனாலும் அவனை எங்கே எங்கேயென்று தேடுகிறோம்.இந்த நான் என்கிற துளி அகந்தை பண்ணுகிற விஷமத்தனம் இத்தனையும்.”என்றார்.
எவ்வள்வு பெரிய தத்துவத்தை எவ்வள்வு எளிமையாக சொல்லியிருக்கிறார் பகவான்.
இதே கருத்தை அஷ்டாவக்கிர முனிகள் ஜனகருக்கு உபதேசம் செய்கின்ற பொழுது சொல்கிறார்,” ஜனக, நீ ஏற்கனவே முக்தனாகத் தான் இருக்கிறாய்.ஆனால் நீ பந்தனத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாய். அந்த நினைப்பு தான் பந்தனம்.அந்த நினைப்பை விட்டொழி, நீ முக்தனாகிவிடுவாய்”.
                   முக்தாபிமானி முக்தோஹி பத்தோபத்தாபிமானியபி
                   கி வதந்தீஹ சத்யேயம் யா மதிஹ: ஸா கதிர்பவேத்
                           அ.வ் கீ சுலொ 11
பகவத் கீதையில் 12 ஆம் அத்தியாயத்தில் பகவான் கிருஷ்ணர் இவ்விஷயம் குறித்து விளக்குகிறார்:
                   மய்யாவேஸ்ய மனோ யே மாம் நித்யயுக்தா உபாசதே !
                   ஸ்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா: !!
                                ப. கீ அத்த்.12 சுலோ 2
யாரொருவன் என்னிடத்தில் மனதை வைத்து சிரத்தயுடன் என்னை உபாசிக்கிறானோ அவனிடம் நான் இருப்பேன் என்கிறார் கிருஷ்ணர். மனம் ஒருமுகமாக பகவானிடம் நிலைத்து நிற்க வேண்டும்.பகவான் என்பது யார்? நம்முள்ளேயிருக்கும் ஆன்மா தான்.அது புரியாவிட்டாலும் சகுண பிரம்மமாக நமது இஷ்ட தெய்வத்தில் மனதை நிலைக்க செய்தால் வெளி விஷயங்களில் நமக்குள்ள நாட்டம் குறையும்.
இந்த தெய்வத்தைதான் தியானிக்க வேண்டும் ;அந்த தெய்வத்தைத் தான் தியானிக்க வேண்டும் என்பதில்லை.இதை கிருஷ்ணர் கீதையின் ஏழாம் அத்தியாத்தில் தெளிவு படுத்தியுள்ளார்.
                   யோ யோ யாம் யாம் தனும் பக்த:ஸ்ரத்தயார்சிதுமிச்சதி !
                   தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம் !!
எந்தெந்த பக்தன் எந்தெந்த தேவ வடிவத்தை சிரத்தையோடு அர்ச்சிக்க விரும்புகிறானோ,அந்த விருப்பம் நிறைவேற நான் துணையாயிருப்பேன் “ என்கிறான் கிருஷ்ணன் இந்த சுலோகத்தில்.
தேவை  பக்தி; வெளி விஷயங்களை விடுதல்.எந்த ஒரு வடிவத்தைக் கற்பனை செய்து கொண்டாலும் கடவுளுக்கு சம்மதமே.
எட்டாம் அத்தியாயத்தில் எட்டாம் சுலோகத்தில் பகவான் கூறுவார்:
                   அப்யாஸயொகயுக்தேன சேதஸா நான்யகாமினா!
                   பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்த்தானுசிந்த்யன்  !!
பார்த்தா, வெளி விஷயங்களில் மனதை செலுத்தாமல்,என்னை நினைத்து ஒருமுகமாக தியானம் செய் நீ சுயம் பிரகாசமான அந்த பரம புருஷ்னை காண்பாய். தொடர்ந்து தியானம் செய்து வந்தால் தானாக வெளி விஷயங்கள் அடங்கி மனம் ஒருமுகப்பட்டு நம்முள்ளேயுள்ள பிரம்மத்தை காண்போம் என்பது இதன் பொருள். இதையே தான் பகவான் ரமணரும் அந்த பங்களூர் பக்தனுக்கு கூறினார்.
இதேமதிரியான ஒரு வேண்டுகோளை எழுத்தச்சனும் ‘ஹரி நாம கீர்த்தனத்திலும்’ முன் வைக்கிறாற்.
                   ஆனந்தசின்மயஹரே! கோபிகாரமணா!
                   ஞானென்ன பாவமது தோண்ணாய்கவேணமிஹ
                   தோன்னுன்னதாகிலகிலம் ஞானிதென்னவழி
                   தோன்னேணமே வரத !யனம:!
நித்ய சாந்தியை அளிக்கும் நாராயணா, எனக்கு நான் எனும் அஹந்தை உண்டாகாமலிருக்க வேண்டும்;அப்படியே உண்டானாலும்,நானே அகிலம் (உலகம்-பிரபஞ்சம்) என்ற வெளிப்பாடு உண்டாகணுமே” என்கிறார் இந்த கவிஞர்.
இந்தமாதிரியான ஞானத்தை எனக்கு அளிப்பாய்,அருணாசலா; இல்லையேல் .என் வாழ்வு இருள் சூழ்ந்ததாகிவிடும். எனக்கு முக்தி கிடைக்காது என்று சொல்லும் பகவான் ரமணர், நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளையும் அந்த பங்களூர் பக்தனுக்கு அளித்த உபதேசம் மூலம் வழங்கியுள்ளார்.


No comments:

Post a Comment