Wednesday 4 March 2015

ரமணஜோதி 85

ரமணஜோதி 85

நல்லறிவு-2


புல்லறி வேதுரை நல்லறி வேதுரை
புல்லிட வேயரு ளருணாசலா
சென்ற மடலில் இந்த சுலோகத்தில் வரும் நல்லறிவு என்றால் என்ன என்பதை ஆராய்ந்துகொண்டிருந்தோம்.
பகவத் கீதையில் சாங்கிய யோகம் அத்தியாயத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அளித்த அருளுரைகள் நல்லறிவின் விளக்கமாக அமைகிறது என்று கண்டோம்
பகவத் கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அருளிய அறிவுரைகளை தொடர்ந்து பார்ப்போம்.
இரண்டாம் அத்தியாயம் பதின்மூன்றாம் சுலோகத்தில் கீதாசாரியன் கூறுகிறான்:
தேஹி னோ: அஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா!
ததா தேஹ-அந்தரப்ராப்திர் தீரஸ்தத்ர முஹ்யதி !!”
எவ்வாறு நம் உடல் இளமையும்,யௌவனமும்,மூப்பும் அடைகிறதோ அது போல் ஒரு நாள் அது உயிரற்றதாகி ஜடமாகி விடுறது .இது ஒரு அவஸ்தா பேதம்தான்.
பால்யத்திலும்,கௌமாரத்திலும்,யௌவனத்திலும்,வயோதிகத்திலும் எப்படி ஆத்மா ஒன்றேயுள்ளதோ அது போல் உடலின் உபயோகம் தீர்ந்ததும் அந்த ஆத்மா வேறு உடலைத் தேடிப் போகிறது. அதற்கு யாரும் வருந்தவேண்டியதில்லை.
ஞானியாகப்பட்டவன் –இந்த உண்மையை உணர்ந்தவன், மனக் கலக்கம் அடைவதில்லை.
நாமும் அதே போல் ஒரு மன நிலையை அடைய பழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும். அதுவே நல்லறிவிற்கு இலக்கணம். மாற்றங்கள் எல்லாம் உடலிற்குத் தான்; ஆத்மாவிற்கல்ல என்ற உண்மையை அறிவது தான் நல்லறிவு.
ஆத்மா நித்திய பொருள்; உடல் அனித்தியம்.இது நல்லறிவு.
இதைதொடர்ந்து பகவான் கிருஷ்ணர் கூறுகிறார் எவனொருவன் இந்த உடலே தான் என்று எண்ணுகிறானோ அவன் நிச்சயமாக துன்பத்தை வரவழைத்துக் கொள்கிறான். பொருள்களை புலங்களின் வாயிலாக சேர்த்துக் கொள்வதால் இந்த பூதவுடலிற்கு இன்பதுன்பங்கள் வந்து சேரும்.
தான்( நான்) இந்த பூதவுடலிலிருந்து வேறுபட்டு ஆத்மசொரூபம் என்று உணர்ந்து கொண்டவனுக்கு துன்பங்களுமில்லை இன்பங்களுமில்லை.
. அவனுக்கு பூரண மனத்தெளிவு உண்டாகிறது. சஞ்சலங்கள் அறவே அற்றுப் போகின்றன..
அது நல்லறிவின் இலக்கணம்.
          யம் ஹி வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ப !
     ஸமது:கஸூகம் தீரம் ஸோ அம்ருதத்வாய கல்பதே !!
                     ப.கீ அத் 2 சுலோ 15
சிதோஷ்ணங்களை-சுகதுக்கங்களை ஒரு போல் எண்ணுபவனுக்கு எந்த சஞ்சலமும் கிடையாது; அவனை எதுவும் அசைக்காது.அவன் அமரனாகிறான்; சாகா வரம் பெற்றவனாகிறான்; ஆத்மசாக்ஷாத்காரம் அடைந்தவனாகிறான்.
ஆத்மா நித்தியமானது அதற்கு பிறப்பும் கிடையாது;இறப்பும் கிடையாது.
இருபத்தி ஐந்தாவது சுலோகத்தில் பகவான் சொல்லுவார்,” இவ்வாத்மா நம் புலன்களுக்கு தென்படாதது.கண்களால் காண முடியாதது; காதால் கேட்க முடியாதது; கைகளால் ஸ்பரிசிக்க முடியாதது. அவ்யக்தமானது. சிந்தித்து பார்த்து தெரிந்து கொள்ள முடியாத ஒன்று.ஆதற்கு விகாரங்கள் கிடையாது;அது மாற்றத்திற்கு உள்ளாகதது. இந்த உண்மைகளை புரிந்து கொண்டு விட்டால்,  உனக்கு துன்பங்கள் கிடையாது.”
          அவ்யக்தோஅயம சிந்த்யோஅயமவிகார்யோஅயமுஸ்யதே !
          தஸ்மாதேவம் விதித்வைனம் நானுசோசிதுமரஸி !!
                ப.கீ.அத் 2 சுலோ 25
ஆத்மா இந்திரியங்களுக்கு விஷயமாகாது;ஆகவே மனதிலும் படியாது.அதனால் அதை அவ்யக்தம் அசிந்த்யம் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. காற்று, நீர்,நெருப்பு, நிலம் ஆகிய நாங்கு பூதங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை. ஆனால் ஆகாயம் மாறாதது;எல்லையில்லாதது.ஏனென்றால் ஆகாயத்திற்கு அவயவங்கள் இல்லை.ச்சிதாகாசமாகிய ஆத்மாவிற்கும் அவயவம் இல்லை.
இப்படி பகவத் கீதஈ பூராவும் நல்லறிவுக்கான இலக்கணங்கள் விவரிக்கப் பட்டுள்ளன.
பகவான் ரமணர் கூறியுள்ள உபதேசங்களும் நல்லறிவுக்கு சரியான விளக்கங்களே. குறிப்பாக மஹரிஷியின் ‘உபதேச உந்தியார் ‘ மற்றும் ‘உள்ளது நாற்பது” நூல்களில் அவர் அருளிய உபதேசங்கள் ஈடு இணையில்லாதது. முக்கியமாக ‘உள்ளது நாற்பதிலுள்ள உபதேசங்களை கொஞ்சம் பார்ப்போம்.
‘உள்ளது நாற்பது’ மஹரிஷி 1928 லிருந்து 1930-கள்  வரையான காலங்களில் அவ்வப்போதாக இயற்றிய நாற்பது சுலோகங்களின் தொகுப்பே.
முருகனார் பகவானிடம் முக்தியடைவதற்கு என்ன மார்க்கம் என்றும் உண்மையின் நிஜ உருவம் என்ன என்று கேட்டதற்கு பகவான் அளித்த பதில்களே இந்த தொகுப்பு.
     முருகனார் கேட்கிறார்:
          மெய்யினியல்புமதை மேவுந்திறனுமெமக்
          குய்யும் படிமுருக நேதுகெனப்—பொய்யுலகின்
          கள்ளமறு மாற்றாற் கனரமணன் கட்டுரைத்தா
          நுள்ளது நாற்பதுவந்து.
 ‘உள்ளது என்றால் எது ஒன்று இருக்கின்றதோ அதுஇருக்கின்றது என்று பொருள். அந்த உள்ளதைக் குறித்து பகவான் நாற்பது சுலோகங்கள் இய்ற்றினார்.அவைகளே நல்லறிவு.
இந்த நல்லறிவை சாங்கோபங்கமாக பகவான்  மங்கல சுலோகத்திலேயே தந்து விடுகிறார்.அதன் விவரணம் தான் மற்ற நாற்பது சுலோகங்களும்.
அப்படி என்ன சொல்லுகிறார் பகவான் மங்கல சுலோகத்தில்?
பகவான் கேட்கிறார்—
உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ” உள்ளது அல்லாமல் அது இருக்கின்றது என்ற உணர்வு எப்படி ஏற்படும்?
உள்ளதைக் குறித்துள்ள அறிவு ஒரு அறிவே அல்ல ;நான் இருக்கின்றேன் என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டுமா? அதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை.
இரண்டாவது வரியில் சொல்லுகிறார்,
உள்ள பொருள் உள்ளல்-அற உள்ளத்தே உள்ளதல்”
மேற்கூறிய வார்த்தைகள் மூலம் “ சிந்தனையேதுமற்ற உள்ளாத்தில் அந்த உள்ளது வசிக்கிறது” என்று விளக்குகிறார்.ஆத்மா உள்ளது என்பதை உணருவதற்கு உள்ளத்தில எந்த சிந்தனையும் தேவையில்லை. ஏனென்றால் உணருவதும் உணரப்படுவதும் ஒன்றேயல்லவா?
“உள்ளது” ‘நான்’ ஒன்றே; நான் என்பது தான் ஆத்மா; அந்த ஆத்மாவிற்கு விசார விகாரங்கள் கிடையாது. பகவத் கீதையிலும் இதையே தான் கூறப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட ‘உள்ளதை” எப்படி உணருவது? அடுத்த இரண்டு வரிகளில் பகவான் விளக்குகிறார்.
ஒரு கேள்வியுடன் துவங்குகிறார் தனது சுருக்கமான விளக்கத்தை,
உள்ள பொருள் உள்ளல் எவான்?” உள்ளதை-ஆத்மாவை எப்படி நாம் உள்ளிலாக்குவது?மனதிலாக்குவது ? எப்படி உணர்ந்து கொள்வது ? தன்னை தானே எவ்வாறு த்யானம் செய்வது?
அதற்கு அவரே பதில் கூறுகிறார்:
          “உள்ளத்தே உள்ளபடி உள்ளதே உள்ளல் உணர்வாயே”
உணருவதற்கு தனியாக சிந்தனையொன்றும் தேவையில்லை. நாம் அதுவாகவே இருக்க வேண்டியது தான்.- ‘உள்ளபடி  என்ற வார்த்தை தான் இங்கு முக்கியம். எந்த விசாரமும் இல்லாமல் என்பது ஆத்மாவின் இயற்கை இலட்சணம்.
இப்பொழுது நாம் அந்த மங்கல சுலோகத்தை முழுமையாக பார்ப்போம்:
உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ வுள்ளபொரு
ளுல்ளலற வுள்ளத்தே யுள்ளதா—லுள்ளமெனு
முள்ளபொரு ளுள்ளலெவ நுள்ளத்தே யுள்ளபடி
யுள்ளதே யுள்ள லுண்ர்வாயே--- யுள்ளே
ஆகவே முக்தியடைவதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே –நித்தியமான-உள்ளதான—உண்மையை—அதைத்தவிர வேறொன்றும் உண்மையல்ல என்ற உண்மையை---அறிய வேண்டும். அந்த அஹம் ஒன்றே சத்யம்; மற்றவையெல்லாம் மித்யா என்ற மஹா வாக்யத்தின் பொருளை உணர வேண்டும்.
பிரம்மம் சத்யம்; ஜகன் மித்யா
என்ற ஆதி சங்கரரின் மஹாவாக்யத்தை   நினைவில் கொள்வோம்.
ஆத்மாவே பிரம்மம்.ஆகவே அதுவே உண்மை.
பகவான் தன்னுடைய “ நான் யார்” என்ற நூலில் பதின்மூன்றாம் பாராவில் இந்த உண்மையை விளக்கியுள்ளார்:
எவனொருவன் ஆத்ம நிஷ்டையில் மூழ்கி ,வேறு எந்தவொரு சிந்தனைக்கும் இடம் கொடாமல், ஆத்ம சிந்தனை மட்டுமாக இருக்கிறானோ அவன் பரமாத்மாவிடம் பூரண சரணாகதியடைந்தவனாகிறான். அப்படி சரணாகதி அடைவது மூலம் நாம் நமது முழு பொறுப்பையும் அவனிடம் ஒப்படைத்து விடுகிறோம். உலகம் முழுவதையும் தாங்கி நடாத்திக்கொண்டு வருகின்ற பரமேசுவர சக்தி –பரமாத்மா—எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான்.பிறகு நாம் எதற்கு இப்படி செய்ய வேண்டுமா,அப்படி செய்ய வேண்டுமா என்று சிந்திக்க வேண்டும்? நாம் பரமாத்மாவிடம் நம்மையே ஒப்புவித்த பிறகு நாம் ஆனந்தத்தை மட்டும் அனுபவிப்போம்.நமது பாரம் முழுவதும் சுமப்பவன் அவனே. ரயிலில் ஏறின பிறகு நமது பெட்டி-படுக்கைகளை நம் தலையில் வைத்து ஏன் சுமக்க வேண்டும்? அதை ரயிலில் ஒரு மூலையில் இறக்கி வைத்து விட வேண்டியது தானே?
எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு எளிதாக விளக்கியுள்ளார்,பகவான்?
இரண்டாவது மங்கல சுலோகமும் முக்கியமானதே.
          மரணபய மிக்குளவம் மக்களர ணாக
          மரணபவ மில்லா மகேசன்---சரணமே
          சார்வர்தஞ் சார்வொடுதாஞ் சாவுற்றார் சாவெண்ணஞ்
          சார்வரோ சாவா தவர்நித்தர்---பார்வை சேர்
மரண பயம்  னம்மை பீடித்து ஆட்கொள்ளுகிறது.அந்த மரணபயத்தை விட்டு பரண பாவமே இல்லாத மகேசனை சரணடைவோம். மித்யா நானுக்குத் தான் மரண பவம்.ஆன்மாவிற்கோ-பரமாத்மாவிற்கோ  மரணபவம் கிடையாது.ஆத்ம பரமாத்மாவில் லயித்துவிட்டால் நமக்கும் மரண பயம் தேவையில்லை.
முதலாவது சுலோகத்தில் விசார மார்க்கம் மூல நான் யார் என்று புரிந்து கொண்டு உணர்ந்துகொண்டு,தன்னை விட்டு வேறொன்று இல்லை என்ற ஞானம் பெற்றுவிட்டால் நாம் முக்தனாகி விடுகிறோம் என்கிறார் பகவான்.
இரண்டாவது சுலோகத்தில் பக்தி மார்க்கம் உபதேசிப்பது போல் பூரண சரணாகதி அடைந்து விட்டால் எஞ்சியிருப்பது ஆனந்தமே என்கிறாற் பகவான்.

உள்ளது நாற்பதில் கூறியுள்ளா முக்கியமான உபதேசங்களின் விவரங்களை அடுத்த மடலில் பார்க்காலாம்.

No comments:

Post a Comment