Monday 23 February 2015

ரமணஜோதி 71.

ரமணஜோதி 71.

சிருங்கார பக்தி

          நீநா னறப்புலி நிதங்களி மயமா
          நின்றிடு நிலையரு ளருணாசலா
 இந்த சுலோகத்தில்,.சிருங்கார பாக்தி மூலம் அத்வைத சித்தாந்தத்தை மற்றுமொரு முறை விளங்க வைக்கிறார் பகவான்
“என்னை நெருக்கமாக அணைத்துக் கொண்டு--- ‘நீ’  ‘நான்: என்ற பேதமில்லாத வாறு அணைத்துக்கொண்டு--  எனக்கு நிரந்தரமான ஆனந்தத்தை அளிப்பாய் அருணாசலா” என்கிறார்  பகவான் 
சிருங்கார ரசத்தில்  நாயகன் நாயகியை ஆலிங்கனம் செய்யும் போது அங்கு ‘நீ’ நான்’ என்ற பேதம் மறைந்து விடும். .அவர்கள் ஈருடல் ஒன்றாய் இணையும் போது ஏற்படும் ஆனந்தக் களிப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஆனால் அந்தக் களிப்பு தாற்காலிகமானதே. இணைந்த உடல்கள் பிரிந்தே ஆக வேண்டும். அந்த இன்பம் முடிவிற்கு வந்தே ஆக வேண்டும்.
அப்படியில்லாமல் நான் யார் என்ற விசார மார்க்கத்தின் வழியாக நாம் எப்பொழுது பரமாத்மாவை அடையாளம் கண்டு கொள்கிறோமோ அந்த பரமாத்மாவே நாம் என்று புரிந்து கொள்கிறோமோ அப்பொழுது நமக்கு ஏற்படும்  பேரின்பத்தற்கு எல்லையும் கிடையாது; முடிவும் கிடையாது.

அப்படிப்பட்ட ஆனந்தத்தை எனக்கு அருளவேண்டும் என்று அருணாசலனிடம் வேண்டுகிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்
இத்தருணத்தில்  நாலாயிரம் திவ்யப்ரபந்தத்தில் முதலாமாயிரத்தில் ஐந்தாம் பத்தில் 464-465 ஆம் பாசுரங்களில் பெரியாழ்வார் கூறியுள்ளதை நினைவில் கொள்வது சாலப் பொருந்தும்.
பறவை யேறு பரம் புருடா , நீ என்னை கைக்கொண்டபின்
பிறவியென்னும் கடலும் வற்றிப் பெரும்பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக்காடு,தீக் கொளீ வேகின்றதால்
அறிவையென்னும் அமுதவாறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே
கருட வாகனத்தில் சஞ்சரிக்கும் பரம புருஷனாகிய நீ என்னை ஆட்க்கொண்ட பின் மறு பிறவியெனும் கடல் வற்றிப் போய் நான் உன்னோடு ஐக்கியமாகிவிடுவதால் இகலோகத்தில் நான் செய்துள்ள பாபங்களெல்லாம் வெந்து வெண்ணீறாகிவிடுகிறது. ஞானம் எனும் அறிவு என்னுள் அமுத ஊற்றாக பெருகுகிறது..
எம்மனா ! என்குலத்தெய்வமே ! என்னுடைய நாயகனே !
நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்வுலகினில் ஆர் பெறுவர் ?
நம்மன்போலே வீழ்தமுக்கும் நாட்டிலுள்ள பாவமெல்லாம்
கம்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே !
 நான் உன்னோடு ஐக்கியமானதால்  நானடைந்த நன்மைகள் இந்த உலகினில் யார் பெறுவார் ? ஆத்ம சாக்ஷாத்காரம் அடைவதால் பாபங்களெல்லாம் அழிந்து விடுகின்றன என்று பெரியாழ்வார் பாடுகிறார்
 பகவான் ரமணர் இயற்றிய் ஸ்ரீ அருணாசல பதிகம் நூலிலும் சிருங்கார ப்க்தியை நாம் காணலாம்.
அன்புரு வருணா சலவழன் மெழுகா
யகத்துனை நினைமூதுநைமூ துருகு
மன்பிலி யெனக்குன் நன்பினை யருளா
தாண்டெனை யழித்திட லழகோ
வன்பினில் விளைய் மின்பமே யன்ப
ரகத்தினி லூறுமா ரமுதே
யென்புக லிடனின் நிட்டமென் னிட்ட
மின்பதற் கென்னுயி ரிறையே.
அன்புருவாகிய அருணாசலா, என்னை ஆட்க்கொண்ட பின் கைவிடுவாயே ஆனால் அனலிலிட்ட மெழுகு போல் உருகி இல்லாதாகி விட மாட்டேனோ ? என்னை உன் அன்பினால் ஆட்கொண்டு விட்டால் பிறகு,என்னிஷ்டமே உன்னிஷ்டமல்லவா? ஆகவே நான் விரும்பும் உன் பூரண அருளெனும் அமுதை தந்து என்னை தன்யனாக்கமாட்டாயா? உன் அருளினால் விளையும் அன்பே இன்பமல்லவா? அப்படிச் செய்யவில்லையென்றால் அது உனக்கு அழகோ?” என்று காதலி காதலினடம் செல்லமாக கோபித்துக் கொள்வது போல் இந்த சுலோகத்தை இயற்றியுள்ளார் பகவான் ரமணர்.
.ஸ்ரீ அருணாசல பதிகத்தில்  பகவான் மேலும் கூறுவார்:
          தலைவநீ யென்னைக் களவினிற் கொணர்மூதுன்
               றாளிலிமூ நாள்வரை வைத்தாய்
          தலைவநின் றன்மை யென்னவென் பார்க்க்த்
                   தலைகுனி சிலையென வைத்தாய்
          தலைவநான் வலைமான் றனைநிக ராதென்
                   றளர்வினுக் கழிவுநாடி டுவாய்
          தலைவனா மருணாசலவுள மேதோ
                   தமியனார் தனையுணர் தர்கே
“ அருணாசலா, நீ என்னை என்னையறிமலையே ஆட்க்கொண்டு உன் காலடியில் இருத்திக் கொண்டாய். உன் பாதாரவிந்தங்களில் சரணடைந்திருந்தும் உன் குணங்கள் யாவை,நீ எப்படிப் பட்டவன் என்று கேட்போருக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லையே? என்ன பதில் சொல்ல? உன்னை விளக்க, சொல் கிடைக்காமல் நான் சிலை போல் தலை குனிந்து நிற்பது உனக்கு அழகோ,அருணாசலா? வேடனின் வலையிலகப்பட்ட மான்பேடை போல் நான் திரு திரு என்று விழித்துக்கொண்டிருக்கிறேனே? எனது இந்த பலவீனத்தை,அறியாமையை அழித்து எனக்கு முக்தியளிக்க மாட்டாயா?” என்று பகவான் அருணசலனனிடம் கெஞ்சி—கொஞ்சி---கேட்கிறார்.
இந்த சுலோகத்தின் மூலம் பகன் இரண்டு உண்மைகளை வெளிக்கொணருகிறார்.
முதலாவதாக என்னதான் ஞானியானாலும் பரமனின் முன்னால் அவன் ஒரு பேதையே. பரமனின் குணாதிசயங்களை புரிந்து கொள்ளவோ விவரிக்கவோ இயலாது.
இரண்டாவது உண்மை என்னவென்றால் இந்த ஞானம் எனப்படுவது ஒரு அறிவல்லல, ஒரு அனுபூதி;அனுபவம்.அதை அனுபவித்துத் தான் அறிந்து கொள்ள முடியும். பிறர் சொல்லித் தெரிந்துகொள்ள முடியாது எனப்படுவதாகும்.

அதனால்த்தானோ என்னவோ பகவான் பல நேரங்களில் மௌனமாக இருந்து மானசீக தீக்ஷையின் மூலம் பக்தர்களுக்கு உபதேசம் அளித்தார்
அதே கருத்தை அக்ஷரமண மாலையிலும் வெளிப்படுத்துகிறார் பகவான்..


2 comments:

  1. Very nice blog on spirituality . I like the posts very much.

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot for the encouragement. I am attempting to share what I have learnt from others.with.Bhagavan"s grace .Thank you once again

      Delete