Thursday 26 February 2015

ரமணஜோதி 79

ரமணஜோதி 79

ஸகலம் வசுதைவகம்


       நோக்கியே கருதிமெய் தாக்கியே பக்குவ
           மாக்கிநீ யாண்டரு ளருணாசலா
‘நான் பக்குவப்பட்டுவிட்டேன்; என்னை ஏற்றூக்கொண்டு காத்தருளருணாசலா
என்று முன்னால் கண்ட சுலோகங்களில் பகவான் வேண்டுகிறார்.
பகவான் ஏன் வேண்டவேண்டும் என்று நம்மில் சிலருக்கு சந்தேகம் உண்டாகலாம்.
இதற்கான பதிலை ஒரு சந்தர்ப்பத்தில் தன்னை நாடி வந்தவர்களிடம் பகவானே கூறியுள்ளார்.
ஒரு சந்தர்ப்பத்தில் பேராசிரியர்  சுவாமினாதன் சில வடமொழி புலவர்களுடன் பகவானைக் காண வந்திருந்தார். அவர்கள் பகவான் முன்னிலையில் யோகவாசிஷ்டத்தைக் குறித்து திவீரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பகவான் சாதாரணமாக இம்மாதிரி விவாதங்கள் நடக்கும்பொழுது அதிகமாக தலையிடமாட்டார்.யாரவது ஏதாவது கேட்டால் மிகவும் யோசித்து ஒரு சில வார்த்தைகளில் பதில் சொல்வார்.
மேற்கூறிய விவாதம் நடந்துகொண்டிருக்கும்பொழுது ஒரு அறிஞர் பகவானிடம் கீழ்க்கண்டவாறு கேட்டார்:
“ராமாயணத்தில்  வரும் ஸ்ரீ ராமன் மஹாவிஷ்ணுவின்  அவதாரம் அல்லவா? அவன் எல்லாம் அறிந்த சர்வஞானியல்லவா? அப்படிப்பட்ட பூரண முக்தனான ஸ்ரீ ராமன் வசிஷ்டரிடம் பாலிசமான கேள்விகள் கேட்பதாக யோக வாசிஷ்டத்தில் வருகிறதே? அப்படி கேள்வி கேட்கின்ற ஸ்ரீ ராமன் முக்தனா? இல்லை முமுக்சுவா? ( முமுக்சு என்றால் ஞானம் பெறுவதில் ஆர்வம் உடையவன்)”
இந்த முறை பகவான் சிறிதும் யோசிக்கவும் இல்லை; நேரமும் எடுத்துக் கொள்ளவில்லை. பகவான் ப்ளீரென பதில் சொன்னார்
“ வசிஷ்டர் சொன்னது முக்த ராமனுக்குமில்லை; முமுக்சு ராமனுக்கும் இல்லை ஓய் ! அது உமக்கும், எனக்கும் தான் ஓய் !”
அதே பதில் தான் நமது சந்தேகத்திற்கும் பதில். பகவான் ரமணர் பிரார்த்திப்பது நமக்காகத் தான்.
முன்னால் “நான் பக்குவமாய்விட்டேன் என்னை எடுத்துக் கொள்” என்று சொன்ன பகவான் ரமணர் இந்த சுலோகத்தில் கூறுகிறார்:
“ அப்படி நான் பக்குவப் படவில்லை என்று நினைத்தால், நீ தான், அருணாசலா, என்னை பக்குவப் படுத்த வேண்டும். கண்ணால் கடாட்சித்தோ, மனதால் அனுக்கிரகித்தோ, என்னை ஸ்பரிசித்தோ அருளவேண்டும்”
முன்னால் ஒரு மடலில் குரு தீக்ஷை அளிக்கின்ற முறைகளைக் குறித்து குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது அதே முறைகளை பரமனின் அருள் பெறுவதற்கும் பகவான் ரமணர் குறிப்பிடுகிறார்.
பகவானின் உபதேசங்கள் நமக்கு இரண்டு மார்க்கங்களை காண்பிக்கின்றன.
ஒன்று ‘நான் யார்’ என்ற விசார மார்க்கம்;
இன்னொன்று பூரண சரணாகதி மார்க்கம்.
பூரண அத்வைதியான பகவான் ரமணர் பூரண சரணாகதி மார்க்கத்தை உபதேசிக்கிறார் என்றால், அவர் அத்வைதத்தை மறந்து துவைதத்திற்கு மாறிவிட்டார் என்று அர்த்தமா? யார் யாரிடம் சரணாகதியாவது? இருப்பது ஒருவனே என்றால் சரணாகதி எப்படி சாத்தியம்?
 அவர் கருணை மிகுந்து, நமது சக்தியின்மையை உணர்ந்து, புரிந்துகொண்டு விசாரமார்க்கம் மிகுந்த கடினமானது; அது பலரின் சக்திக்கு மீறினதாக இருக்கும் ;அதனால் பக்தி மார்க்கத்தின் ஒரு அங்கமான பூரண சரணாகதியை ஏற்றுக்கொள்ள சொல்கிறார்.
இதே கருத்தை பகவத் கீதையிலும் காணலாம்.
கீதாச்சாரியன் கூறுகிறான்:
           பஹூனாம் ஜன்மனாமந்தே ஞானவான்மாம் ப்ரபத்யதே !
           வாஸுதேவ ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: !!
                           ப.கீ.அத்.7 சுலோ 19
‘பல பிறவிகளுக்குப் பிறகே “ யாவும் வாசுதேவ சொரூபம்”: என்ற ஞானம் பெற முடியும்.அதற்கு பின் தான் நீ என்னை வந்தடைய முடியும் அது மிகவும் துர்லபம்.’
‘வாசுதேவ’ என்பதன் பொருள்—பிரத்தியகாத்மன், எதிலும் ஊடுருவி நிலைத்திருப்பவன், என்பது.
சர்வம் என்ற வார்த்தை மூலம் கீதாசிரியன் சரம், அசரம், மனிதர்கள் ,மற்ற எல்லா ஜீவ ராசிகள் எல்லாவற்றையும் குறிப்பிடுகிறான்.
ஒருவன் ஞானம் பெற்று விட்டால் பரமனே எல்லா சராசரங்களிலும் நிறைந்து நிற்கிறான் என்கின்ற சுவானுபவம் அடைகிறான். ஆனால் அப்படிப்பட்ட வெளிப்பாடு உண்டாவதற்கு பல் பிறவிகள் பிடிக்கின்றன. காண்பதனைத்தும் பரமாத்ம சொரூப்மாக தென்படும்போது அவன் ஞானியாகிறான். இம்மாதிரியான மகோன்னத நிலை அடைந்தவர்கள் சிலரே.
மற்றவர்களுக்கும் மோக்ஷ மார்க்கம் வேண்டுமல்லவா? அதற்கான ஒரு மார்க்கம் தான் பூரண சரணாகதி.
ஒரு முறை பகவான் பூரண சரணாகதியை குறித்து விளக்கம் அளித்தார்.அது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.
ஒரு பகதர் நீண்ட நாட்களாக பகவானை தரிசிக்க திருவண்ணாமலை வந்து பொய்க்கொண்டிருந்தார். அவர் ஒரு முறை வந்தபோது பகவானிடம் ,தான் சமீபத்தில் சமாஸ்ரயணம் ( வைஷ்ணவ தீக்ஷை) பெற்றுக்கொண்டதை கூறிவிட்டு வைஷ்ணவ சம்பிரதாயங்களைக் குறித்து சொல்லலானார்.
அப்பொழுது பகவான் சொன்னார்:
“அவர்கள் 9வைஷ்ணவ) சம்பிரதாயத்தில் சாயூஜ்யத்தை (இறைவனுடன் ஒன்றிவிடுதல்) ஒப்புக்கொள்வது கிடையாது. வைகுண்டத்தில் மஹாவிஷ்ணு இருப்பார்; அவரைச் சுற்றி இந்த முக்தி அடைந்தவர்கள் உட்கார்ந்து சேவிப்பார்கள்;என்கிறார்கள். எல்லாருக்கும் வைகுண்டத்தில் எப்படி இடம் இருக்கும்?--------அது மட்டுமில்லை; சமாஸ்ரயணம் செய்யும்பொழுது “அனைத்தையும் குருவிற்கு அர்ப்பணம் செய்கிறேன் “  என்று ஒரு மந்திரம் இருக்கிறதாம் அந்த மந்திரத்தை சொல்லி  குருவிற்கு  தக்ஷிணை கொடுத்தால் போதுமாம்; எல்லாம் அர்ப்பணம் ஆகிவிடுமாம்.- --------
“அர்ப்பணம்”  என்பது இத்தனை சுலபம் என்று நினைப்பது வெறும் பிரமை. அர்ப்பணமென்றால் மனம் தன்னில் அடங்கி அதனுடன் ஐக்கியமாகவேண்டும். அப்படி  ஆவதற்கு சுய பிரயத்தினமும், ஈசுவர கிருபையும் இருந்தாலன்றி முடியாது.  ஈசுவர சக்தி தானாகப் பிடித்துக்கொண்டு  அகத்தே இழுத்துப் போகவேண்டும். அப்பொழுது தான் அனைத்தையும் நம்மால் அர்ப்பிக்க முடியும். நாம் என்ன அர்ப்பிப்பது? தானாகவே அர்ப்பணமாகிவிடும். இப்படிப்பட்ட பூரண சரணாகதியைச் சாதிக்கும் வரை அல்லாடிக்கொண்டே, பிரயத்தினம் செய்துகொண்டேயிருக்க வேண்டும். முயற்சி பண்ணிக்கொண்டேயிருந்தால் கடைசியில் எப்போதோ பலன் கிடைக்கும்.-------அர்ப்பணம் அர்ப்பணம் என்கிறார்களே,’நான்’ என்று ஒன்று இருந்தால் தானே அர்ப்பிக்கலாம்? நான் யாரென்று தெரிந்துகொள்ளும்வரை அவர்கள் சொல்லும் சர்வசமர்ப்பணம் நடக்காது. அதை தெரிந்து கொண்டாலோ இருப்பது ஒரே பொருள் தான். நான் எனும் மனது அடங்கும். அது தான் சரியான அர்ப்பணம்.”
பூரண சரணாகதிக்கு பல படிகள் உண்டு என்று பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளது,
முதலில் துன்பத்திற்கு ஆளாகிறவர்கள் அவரவர்கள் மனோ நிலைக்கு ஏற்ப கடவுளை உபாசிக்கிறார்கள். எல்லா தெய்வங்களும் பரமனின் அம்சமே. எதுவுமே சர்வேசுவரனுக்கு அன்னியமானவை அல்ல. லட்சியம் எவ்வளவு பெரியதோ அவ்வளவுக்கவளவு அதை அடைவதும் கடினம். மனபரிபாகத்திற்கேற்ப ஆசையும் வடிவெடுக்கிறது. அவைகளை நிறைவேற்றுவதற்கான உபாயங்களும் மாறுபடுகின்றன.
           கர்மைஸ்தைஸ்தைர்ருதக்னானா: ப்ரபத்ய்ந்தோந்தேவதா: !
           தம் தம் நியமமாஸ்தாய ப்ர்க்ருத்யா நியதா: ஸ்வயா !!
                           ப.கீ அத் 7 சுலோ 20
“எந்த பக்தன் எந்த உருவில் என்னை வழிபட்டாலும்,நான் அவனது பக்தியை அசையாததாக ஆக்குகிறேன் “ என்கிறார் பகவான் கிருஷ்ணர் அடுத்த சுலோகத்தில்.
           யோ யோ யாம் யாம் தனும் பக்த: ஸ்ரத்தயார்சிதுமிச்சதி !
           தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம் !!
                                           சுலோ 21
அதே அத்தியாய்த்தில் 28ஆம் சுலோகத்தில் பகவான் கூறுவார்:
“புண்ணிய  கருமங்களை செய்கின்ற ஜனங்களின் பாபங்கள் முடிவடையும் பொழுது  துவைதத்திலிருந்து விடுபடுகிறார்கள் அவர்கள் உறுதியுடன் என்னை வழிபடமுடிகிறது.”
சுயநலமற்ற  கருமங்களெல்லாம் புண்ணிய கருமங்களே. நெடுனாள் நிஷ்காமிய கருமம் புரிந்து, மனதை தூய்மையாக்கினால் மட்டுமே பூரண சரணாகதியாக முடியும்.
வெற்றி தோல்விகளுக்கிடையிலும் மாறாத பகி பூண்டொழுகினால் மட்டுமே பூரண சரணாகதியாகமுடியும்.

இப்படி தூய்மையாவதற்கு ஈசன் அருள் பூரணமாக வேண்டும்.அதையே தான் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில் வேண்டுகிறார். 

No comments:

Post a Comment