Monday 23 February 2015

ரமணஜோதி 76

ரமணஜோதி  76

சரணாகதி  2
நேசமி லெனக்குன் னாசையைக் காட்டிநீ
மோசஞ் செயாதரு ளருணாசலா
“அருணாசலா, நான் மிகுந்த பிராயாசைக்குப் பின் இகலோக விஷய வாசனைகளிலிருந்து விடுபட்டு உன்னிடம் அடைக்கலம் ஆக வந்திருக்கிறேன்; உன்னுடைய அரூளால், எனக்கு உன் மீது ஈடுபாடு உண்டாய் அது பக்தியாய் மாறி, நான் வந்துள்ளேன். இப்பொழுது நீ என்னை ஏற்றுக்கொள்ளாவிட்டால் என் கதி என்னவாவது?”
இந்த சுலோகம் மூலம் பகவான் இரண்டு உண்மைகளை தெள்ளத் தெளிவாக கூறுகிறார்:
1.       பரமன் அருளில்லாமல் யாரும் பக்தனாகி விட முடியாது.
2.       பகதனானாலும் பரமன் அருள் இல்லாமல் ஆத்ம சாக்ஷாத்காரம் நேட முடியாது. 
  ஒருவன் பரமன் அருளால் பக்திக்கு ஆட்படும் பொழுது,தானாகவே விஷய வாசனைகள் பலமிழந்து வைராக்யம் திடப்படுகிறது. வைராக்யம் திடப்பட, பரமனிடமுள்ள பக்தி வலுப்பெறுகிறது.வாசனைகளை விடவேண்டும் என்றும் சொல்லும்பொழுது பகவான் ரமணர் கூறுவார்:‘வாசனைகள் இரண்டுவிதம்; சுவாசiனை மற்றும் குவாசனை.இவைகளில் ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை .சிலரில் சில நேரங்களில் இதில் ஒன்று மேலோங்கி நிற்கும்.முதலில் சுவாசனைகளை போற்றி வளர்க்க வேண்டும்; ஆனால் அவைகளையும் ஞானம் மூலம் இல்லாமலாக்கி விடவேண்டும்’
பகவான் மேலும் கூறுவார்:
வாசனைகள் இதயத்தில் அடக்கி வைக்கப் பட்டுள்ளது. அங்கிருந்து அவை கிளம்பி புத்தியில் ஆத்ம சக்தி மூலம் பிரகாசிக்கின்றது. இதயத்தில் அவை அணு உருவத்தில் மிகவும் சூக்ஷ்மமாக இருக்கிறது. புத்தி எனூம் சினிமாத்திரையை அடையும் பொழுது அவை வளர்ந்து தானாகவே இயங்கக்கூடிய சக்தியைப் பெறுகிறது. மனோசக்தி அதன் மீது ஆதிக்கம் செலுத்தும்பொழுது வாசனைகள் அதன் விளையாட்டை ஆரம்பிக்கிறது. ஆத்மாவின் கட்டுப்பாட்டிலிருந்து அவை சுதந்திரம் அடைந்து  தன்னிச்சையாக செயல்பட ஆரம்பிக்கிறது.அது தான் சம்சார இன்ப துன்பங்களின் ஆரம்பம்.
பகவான் மேலும் சொல்வார்:
அமைதியாக இருந்தால் அருணாசலனின் அருள் கிடைக்கும். நம் மனமும் அமைதியாக இருக்கும்படி தூண்டும். ஆனால் அதே மனம் அங்கும் இங்கும் அலை பாயும். ஒரு இடத்தில் நிற்காது..எல்லா வேதங்களும் ஸ்ருதிகளும் ,ஸ்ம்ரிதிகளும் புராணங்களும் மன அமைதியின்             அவசியத்தை எடுத்து உரைக் கின்றன; குருமார்கள் மாற்றி  மாற்றி வலியுறுத்துகிறார்கள். நமக்கும் புரிகிறது மனம் அமைதியடைந்து விட்டால் ஆத்ம சாக்ஷாத்காரம் அடைந்து விடலாம் என்று. ஆனால் முடிவதில்லை.  நாம் மீண்டும் மீண்டும் மாய வலையில் சிக்கிகொள்கிறோம். ஆகவே தான் பகவான் சொல்கிறார், அருணாசலனின் அருள் இல்லாமல் எதுவும்  நடவாது என்று.
இந்தக் கருத்தை கூறி விட்டு தாயுமானவரின் உடல் பொய்யுறவுஎன்ற பாடல் தொகுப்பிலிருந்து ஐந்தாம் பாடலையும் 52 ஆவ்து பாடலையும் மேற்கோள் காட்டுவார்:
          ஏதுக்குச் சும்மா இருமனமே என்றுனக்குப்
          போதித்த உண்மைஎங்கே போகவிட்டாய்-வாதுக்கு
          வந்தெதிர்த்த மல்லரைப் போல் வாதாடினாயேயுன்
          புத்தியென்ன போதமென்ன போ ! உடல் பொய்யுறவு பாடல் 5
          சும்மா இருக்க சுகமுதய மாகுமே
          இம்மாயா யோகமினி ஏனடா – தம்மறிவின்
          சுட்டாலே யாகுமோ சொல்லவேண்டாங்கன்ம
                          சிறுபிள்ளாய் நீ !
                           பாடல் 52
அதே போல் பாயபுலி என்ற பாடல் தொகுப்பிலிருந்து 36 ஆவது பாடலும் நினைவில் கொள்ளத் தக்கது என்பார் பகவான்.
          சும்மா விருக்கச் சுகஞ்சுகம் என்று சுருதியெல்லாம்
          அம்மா நிரந்தரஞ்ச் சொல்லவுங் கேட்டும் அறிவின்றியே
          பெம்மான் மவுனி மொழியையுன் தப்பிஎன் பேதமையால்
          வெம்மாயக் காட்டில் அலைந்தேன் அன் தோஎன் விதிவசமே
    
உரிமை எடுத்துக் கொண்டு பகவான் பரமனிடம் பிரார்த்திக்கிறார்.’நீ என்னை கைவிடலாகாது என்று.
தாயுமானவரும்  இதே கருத்தை தனது எங்கு நிறைகின்ற  பொருள்’  என்ற பத்தாவது பாடலில் கூறுவார்:.
 
அவனன்றி யோரணுவும் அசையாதெ னும்பெரிய
      ஆப்தர்மொழி யொன்றுகண்டால்
   அறிவாவ தேதுசில அறியாமை ஏதிவை
      அறிந்தார்கள் அறியார்களார்
மௌனமொ டிருந்ததார் என்போ லுடம்பெலாம்
      வாயாய்ப் பிதற்றுமவரார்
   மனதெனவும் ஒருமாயை எங்கே இருந்துவரும்
      வன்மையொ டிரக்கமெங்கே
அவனுடைய அருள் இன்றி அணுவும் அசையாது. அப்படியிருக்க அவன் அருள் இன்றி எப்படி  நான் உன்னில் லயிக்க முடியும் இந்த மனம் ஏன் மாய வலையில் சிக்கி தவிக்கிறது? ஞானிகள்  எல்லாம் அறிந்திருந்தும் மௌனிகளாக இருக்கின்றனர்.  நான் மட்டும் ஏன் இப்படி உடம்பெலாம் வாயாய் பிதற்றுகின்றேண்? என்று அங்கலாய்க்கிறார் தாயுமானவர்.
பகவான் ரமணர் இப்படி உரிமையுடன் கேட்பது போல் ‘நடராஜ பத்து ‘ என்ற நூலில் முனிசாமி முதலியார் என்ற புலவர்  முதலில் பரமனை புகழ்ந்து பாடுகிறார்:பிற்கு நிந்திப்பது போல் வேண்டுகிறார்:
“        மன்னாதி பூதமொடு விண்ணாத் அண்டம் நீ
               மறை நான்கின் அடிமுடியும் நீ
   மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
                     மண்டலமிரண்டேழும் நீ
மானாடமழுவாட மதியாட புனலாட மங்கை
                                  சிவகாமியாட,
         கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
                             குஞ்சரமுகத்தானாட
       நீ இப்படி சுகமாக விண்ணுலகிலிர்க்கிறாய்.
      உண்டுண் டுறங்குவதைக் கண்ட தேயல்லாது
                                 ஒரு பயனடைந்திலேனைத்
    தட மென்ற மிடிகரையில் பந்த பாசங்களெனும்
          தாபரம் பின்னலிட்டுத்,
தாயென்று சேயென்று நீயென்று நானென்று
          தமியேனை யிவ்வண்ணமாய்
இடையென்று கடைனின்று ஏனென்று கேளா
          திருப்பதுன்னழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
          தில்லை வாழ் நடராசனே
எவ்வளவு அழகாக அத்வைத சித்தாந்தை வெளிக்கொண்ருகிறார் கவிஞர் முனிசாமி முதலியார். அதே நேரத்தில் சிவகாமி நேசனை கடிந்தும் கொள்கிறார்.’ நீ மட்டும் பூத கணங்கள் சூழ, மானாட மயிலாட என்று ஆனந்தமாயிருக்கிறாய்
,நானோ,இந்த உலகில் ,தாயென்றும் சேயென்றும், நானென்றும்,நீயென்றும் பாசக்கயிற்றால் கட்டப் பட்டு அல்லாடிக் கொண்டிருக்கிறேன்,
இது உனக்கழகோ ?’ என்று ஈசனிடம் முறையிடுகிறார்.
பக்தியின் மகோன்னத நிலையை அடந்தவர்களெல்லாம் ஞானம் பெற்றிருந்தாலும் கூட நமக்காக அந்த பரமனிடம் வாதாடுகிறார்கள். நமக்கருளி நம்மை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறார்கள்.

பகவான் ரமணர் இவர்களுக்கெல்லாம் மேலே பரமனின் அருள் பெற்று சிறுவயதிலேயே ஞானியாகியிருந்தாலும் கூட மணமாலையின் இந்தக் கண்ணி மூலம் நமக்காக அருள் வேண்டி வாதாடுகிறார்.

No comments:

Post a Comment