Monday 23 February 2015

ரமணஜோதி 72

ரமணஜோதி 72

அணுவும் நானே அண்டமும் நானே


நுண்ணுரு வுனையான் விண்ணுரு நண்ணிட
                    வெண்ணலை யிறுமென் றருணாசலா
“ என்னுள் ‘நான், நான்’ என்று ஒளிர்ந்துகொண்டிருக்கும் இந்த ஜீவ சைதன்யம் விண்ணளவு பரந்து விரிந்துகிடக்கும் பரமாத்மாவுடன் எப்பொழுது இணைய முடியும்,அருணாசலா ?  எண்ண அலைகள் மனதில் என்று ஓயும்? எண்ணங்கள் அலையடிப்பது நின்றால்த் தானே ‘நான்; அழிய முடியும்? நான் அழிந்தால் தானே நான் உன்னிடம் லயிக்க முடியும் அருணாசலா? அதற்கு அருளருணாசலா” என்று பகவான் இந்த சுலோகத்தில் வேண்டுகிறார்.
‘நான்’ என்பது மிகவும் சூக்ஷ்மமான =நுண்ணுருவானது. நீயோ விண்ணைப் போல் பரந்து விரிந்து சர்வ வியாபியாக இருக்கிறாய். எப்படி நாம் ஒன்றாவது? என்று கேட்கிறார் பகவான்/
இந்த சுலோகத்தில் பகவான் இரண்டு வலிமையான கருத்துக்களை மறை பொருளாக வைத்துள்ளார்.
‘நுண்ணுரு’ ‘விண்ணுரு’ என்ற இரு பதங்களின் மூலம் கால தேச வித்தியாசங்கள் நம் மனதில் எழும் சிந்தனைகள் மூலமுளவாவது தான்; எண்ண அலைகள் தான் ‘நான்’ (அஹம்)..அந்த எண்ணங்கள் அழிந்தால் ‘நான்; ‘நீ’ என்ற வேறுபாடு மறைந்துவிடும்,
இந்தக் கருத்துக்களை உள்ளது நாற்பதில் மேலும் விளக்குகிறார் பகவான்
நானுதியா துள்ளநிலை நாமதுவா யுள்ளநிலை
நானுதிக்குந் தானமதை நாடாம---- நானுறுதியாத்
தன்னிழப்பைச் சார்வதெவன் சாராமற் றானதுவாந்
தன்னிலையி நிற்பதெவன் சாற்றுதி----முன்னர்
எழும்புமஹந்தை யெழுமிடத்தை நீரில்
விழுந்த பொருள் காண வேண்டி ---முழுகுதல் போற்
உள். நா 27-28
‘நான்’ எனும் அஹந்தை உதியாத நிலை தான் நாம் ‘அது’வாகவுள்ள நிலை.ஆதாவது நான் எனும் சிந்தை இல்லாதபோது நாம் அது வாக –பிரம்மமாக—சுத்த சைதன்யமாக இருக்கிறோம். ஆகவே உண்மையன ‘நான்; யார் என்று தெரிய வேண்டுமென்றால்-பிரம்மம் யாது என்று தெரிய வேண்டுமென்றால் எப்பொழுது எங்கிருந்து ‘நான்’ உதிக்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டும்..அப்படி விசாரித்துத் தெரிந்து கொண்டால் தான் ‘நான்; அழிய முடியும். அந்த ‘நான்’ அழிந்தால் தான் பிரம்மனைக் காணமுடியும்
இந்த பூதவுடல் தான் நான் என்ற எண்ணம் உள்ள வரை மனம் வெளி நோக்கிச் செல்லத்தான் செய்யும்.விஷய வாசனைகள் வளரத்தான் செய்யும். ஒன்றன் பின் ஒன்றாக எண்ண அலைகள் நம்மை அலட்டத்தான் செய்யும்.
அஹந்தை எழும் இடம் என்று பகவான் குறிப்பிடுவது கால—தேசங்களின் வரையறைக்கு உட்பட்ட ஒரு ‘இடத்தை’ யல்ல.
‘நான்; உதித்த பின் தான் காலம் தேசம் என்ற எண்ணங்கள் உண்டாகின்றன .நான் இல்லையென்றால் ‘நான் இங்கே யிருக்கிறேன் என்பதற்கோ நான் நாளை வருகிறேன் என்பதற்கோ பொருளில்லை. நானே இல்லை.அல்லது நான் (  நானும் பிரம்மமும் ஒன்று என்பதால்-அஹம் நாஸ்தி—அஹம் ப்ரம்மாஸ்மி ) எல்லாயிடத்திலும் இருக்கிறேன்,எப்பொழுதும் எங்கும் இருக்கிறேன்; பிறகு எப்படி ‘இங்கு’ நாளை’ என்பதெல்லாம் வரும்?
     தேஹாபிமான பாசேன
     சிரம் பத்தோ அசி புத்ரக
     போதே அஹம் ஞான கட்கேன
     தன்னி க்ரித்ய சுகீ பவ:
                அஷ்டாவக்கிர கீதை 1.14
அஷ்டவக்கிரர் ஜனக மஹாரஜாவின் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் கூறுகிறார்:
“குழந்தாய், நீ நீண்ட நெடுங்காலமாக,உன் சூக்ஷ்ம ஸ்தூல சரீரங்கள் தான் ’நான்’ என்ற அஹந்தை எனும் பாசக்கயிற்றால் கட்டப் பட்டிருக்கிறாய். ‘நானே’ பிரம்மம்’ என்ற அறிவாகப்பட்ட வாளால் அந்தக் கயிற்றை அறுத்தெறி. நீ நித்திய சாந்தி பெறுவாய்.’
மேலும் பதினேழாம் சுலோகத்தில் அஷ்டவக்கிரர் குறுவார்:
‘     நிரபேக்ஷோ நிர்விகாரோ
     நிர்பர சீதளாசய:
     அகாத புத்தி ரக்ஷுப்தோ
     பவ சின்மாத்ர வாசன:
           அ.வ்.கீ 1.17
எந்தபந்தமும் இல்லாத நீ -ஜீவாத்மா தேஹ பந்தத்தால் எல்லையில்லாத ஆசாபாசங்களுக்கு அடிமையாகிறாய் .நீ புலன்களின் வாசனைகளுக்கு இரையாகிறாய். நீ கேவல மானிடனாய்த் தீருகிறாய். உன் மனம் சதா சர்வகாலமும் எதையோ வேண்டி தவித்துகொண்டிருக்கிறது. நிம்மதியிழந்து அசாந்தனாய் இருக்கிறாய். கோபத்திற்கும் குரோதத்திற்கும் இரையாகிறாய். இந்த இஹலோக அறிவுதான் ஞானம் என்ற ‘நுனிப்புல்’அறிவிற்கு ஆளாகிறாய். இதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே மார்க்கம் ‘நானே பிரம்மம்” என்ற உண்மையான ஞானம் பெறுவது தான்.அதன் மூலம்  நீ நிர்விகாரனும் பற்றற்றவனும் பூரணனும் மனசாந்தியுடையுவனுமாய்த் தீருவாய்.”
இதே கருத்தை ஆதி சங்கரரும் ஆன்மபோதம் என்ற நூலிலும் கூறியுள்ளார்:
     தத்யுக்தமகிலம் வஸ்து வ்யவஹாரஸ்ததன்வித:
     தஸ்மாத்சர்வகதம் ப்ரம்ம க்ஷீரே ஸர்பிரிவாகிலே
                ஆன்ம போதம் 59
உலகிலுள்ள எல்லாபொருள்களிலும் அது ( ப்ரம்மம் ) நிறைந்து நிற்கிறது.
ஆதனால் எல்லா உலக விவகாரங்களும் அதை சார்ந்தே நடக்கின்றன. பாலில் எவ்வாறு வெண்ணை மறை பொருளாக உள்ளதோ அது போல் எல்லாவற்றிலும் பிரம்மம் மறை பொருளாக இருக்கிறது.
     அனண்வஸ்தூலமஹ்ரஸ்வமதீர்கமஜவ்யம்
     அரூபகுணவர்ணாக்யம் தத்ப்ரம்மேத்யவதாரயேத்
                ஆ.போ 60
அந்த பிரம்மம் அணு உருவிலோ ஸ்தூலவடிவிலோ அல்லாமலும் பிறப்போ இறப்போ இல்லாததும் மாற்றமில்லாததும் உருவம்,மணம்,ருசி,குணம் எதுவும் இல்லாததும் ஆக இருக்கிறது.
ஒரு முறை பகவான் தனது பக்தர்களிடையே விஞ்ஞானத்தைக் குறித்து நடந்து கொண்டிருந்த விவாதத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.
விவாதம் முடிந்தவுடன் பகவான் கூறினார், “ எது எப்படி இருப்பினும் ‘தான்’ என்பதற்குப் பிறகு தான் எல்லாமே இருக்கின்றன. ‘தான்’ இல்லையென்று யாரும் சொல்லமாட்டார்கள். கடவுள் இல்லையென்று சொல்லும் நாஸ்திகன் கூட நானிருக்கிறேன் என்று ஒப்புக்கொள்கிறான். அதனால், வருகிற விஷயமெல்லாம் தன்னிலிருந்து தான் வர வேண்டும்.தனக்கு வேறாக ஒன்றுமில்லை. “ அணோரணியான் மஹதோ மஹீயான்’என்று சுருதி சொல்லுகிறது.’மஹத்துக்கு மஹத்தாக இருப்பது அது (பிரம்மம் ) தான்’.’மஹத்துக்கு மஹத்தாக இருப்பது அதுவேல;அணுவுக்கு அணுவாக இருப்பதும் அதுவே.”
அப்பொழுது ராமமூர்த்தி எனும் அன்பர் கேட்டார்,” இந்த அணுவுக்கும் மஹத்துக்கும் வேறுபாடு  எதைச் சார்ந்து வருகிறது?
“தேகத்தைச் சார்ந்து தான் வருகிறது.---ஆனால் எல்லாவற்றிர்கும் அடிப்படை மனித மனம் தான்.இத்தனை விதமான தோற்றங்கள் (அணுவாகவும் மஹத்தாகவும்) தோன்றுவதற்கு காரணம் மனம் தான்.  மனம் பிறந்தால் எல்லாம் பிறக்கிறது. பஞ்சபூதங்களானாலும் அதற்க்ப்பாலுள்ள சக்திகளானாலும் ஏதானுலும் மனம் பிறந்தால் அவை பிறக்கும் .மனம் அடங்கினால் எல்லாம் அடங்கி விடுகிறது. எல்லாவற்றிற்கும் அதுவே காரணம்” என்றார் பகவான்.
உபதேசவுந்தியாரில் பகவான் கூறுவார்
:”எண்ணங்க ளேமனம்  யாவினு நானெனு
மெண்ணமே மூலமா முந்தீபற
யானா மனமென லுந்தீபற.”
மனம் என்பது எண்ணங்களின் குவியலே.  இந்த எண்ணக்ளுக்கெல்லாம் மூல காரணம் இந்த பூதவுடலே நான் எனும் எண்ணமே. நான் எனும் எண்ணம் இல்லாவிட்டால் மற்ற எண்ணங்களே உதிக்காது. (இங்கு குறிப்பிடுகின்ற  நான் சத் சித்தான ‘நானல்ல” )


No comments:

Post a Comment